நீதிக் கட்சியும், அதற்குப் பின்னான திராவிட இயக்கமும் தமிழ்ச் சமூகத்துக்கான பல்வேறு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது, சமூகம், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் என்று அந்த இயக்கம் முன்னிறுத்திய பல்வேறு நன்மைகளுக்கான கருத்தியல் இன்று வரைக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாடுகளில் ஏதாவது ஒரு வகையில் உதவிக் கொண்டிருக்கிறது என்கிற அடிப்படை உண்மையை இந்த வறட்டு இணையக் கூச்சல்கள் ஒரு போதும் மறைத்து விட முடியாது என்பதை நமது இளைஞர்கள் உணர வேண்டிய காலம் இது.
வேறு எந்த அரசியல் முகாந்திரமும் இல்லாமல் நீர்த்துப் போய் இந்துத்துவ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் எல்லாச் சாதிகளும் திராவிட இயக்கம் என்கிற உயிர் காக்கும் படகிலேயே பயணம் செய்யத் துவங்கின. மொழிக்கான அரசியலில் தீவிரப் பங்கேற்பு நிகழ்த்தி உரிமைகளை நிலைநாட்டியது இதே திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் தான் என்பதை ஏனோ இன்றைய தமிழ்த் தேசியப் போராளிகள் நினைவில் கொள்வதே இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை சட்ட வடிவமாக்கி ஆட்சி அதிகாரத்தை நோக்கி மீண்டும் நகர்த்தியது இதே திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்களும் தான் என்று சொன்னால் காத்து கேட்காதது போல நகர்ந்து விடும் போராளிகள் நிறைந்த சமூகம் நமது சமூகம்.
பட்டியலிட முடியாத சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது திராவிட இயக்கங்களின் கருத்தாக்கம், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை உரிமைகளில் இருந்து ஆட்சி அதிகாரம் வரைக்கும் பல்வேறு தமிழ்ச் சாதிகளை நகர்த்திக் கரை சேர்த்த அதே திராவிட இயக்கத்தை புழுதி வாரித் தூற்றுவது என்பது இன்றைக்கு ஒரு நவநாகரீக அடையாளமாக மாறிப் போயிருக்கிறது. எந்த இயக்கத்தையும் விமர்சனம் செய்வதையோ அல்லது மீளாய்வுக்கு உட்படுத்துவதையோ குற்றமாகக் கருத முடியாது, அதே வேளையில் அடிப்படைப் புரிதல் இல்லாத முரணான புழுதி தூற்றும் படலத்தை ஆதரிக்கவும் இயலாது.
திராவிடம் என்பது தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த பல்வேறு சமூகப் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கிய ஒரு கருத்தாக்கம், அந்தக் கருத்தாக்கம் மிகுந்த கவனத்தோடும், அடிப்படைப் புரிதல்களோடும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், காலத்துக்கு தேவையான நன்மை விளைவிக்கும் மாற்றங்களை திராவிட இயக்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதும் கூடத் தமிழ் தேசியச் சிந்தனையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். மாறாக வரலாற்றுப் புரிதல்களும், அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத தமிழ்த் தேசியப் போராளிகளின் அடையாளமாக திராவிட எதிர்ப்பு அரசியல் இப்போது மாறி இருக்கிறது.
சமூக மாற்றங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு கருத்தாக்கத்தை நிலப்பரப்பு சாராத ஒரு போருடன் மட்டுமே ஒப்பீட்டளவில் நோக்குவதை ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது. தவறுகள் இழைக்காத தனி மனிதர்களும், இயக்கங்களும் இருந்ததுமில்லை இனி இருக்கப் போவதுமில்லை, தனி மனிதத் தவறுகளையும், இயக்கத்தின் கோட்பாட்டுத் தவறுகளையும் சரி செய்து காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை உள்ளீடு செய்து வழி நடத்திச் செல்லும் நிலை இல்லை என்றாலும் கூட மாற்றுக் கோட்பாடுகளுக்கான மாற்று இயக்கங்களுக்கான உள்ளீடுகளை வெற்றி பெற்ற இயக்கங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்வதே அரசியலில் சரியான வழிமுறையாக இருக்கக் கூடும், முற்றிலுமாக வேரறுப்போம், இலையருப்போம் என்று கூச்சலிடுவது நமது அரசியல் அறியாமையே வெட்ட வெளிச்சமாக்கும்.
வெள்ளைச் சட்டை அரசியல் செய்யும் ஒரு மனிதராக பெரியார் எப்போதும் இருந்திருக்கவில்லை என்கிற வரலாறே அறியாத பலர் தான் இன்று அவரைக் குறித்த அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அவருடைய காலத்தில் அவரது கண்ணுக்கு முன் நிகழ்ந்த பல்வேறு சமூகச் சிக்கல்களுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு போராளியாகவே கடைசி வரை இருந்தார் என்பதை அவரது வரலாற்றை அறிந்தவர்கள் உணரக் கூடும்.
காலராவினால் இறந்து போன தனது சக மனிதனின் பிணங்களை அவர் நோய்க்கு அஞ்சி வீதியில் விட்டுச் செல்கிற சுயநலவாதியாக இருக்கவில்லை, தன்னந்தனியாக தனது தோள்களில் பிணங்களைச் சுமந்து அடக்கம் செய்த அற்புதமான மனிதர் அவர், பெண்ணுரிமைகளுக்காகவும், மூட நம்பிக்கை மற்றும் பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்புக்காகவும் பல முறை அவர் தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறார், ஒரு போதும் குறிப்பிட்ட சாதிக்குக் கோடி பிடித்த தலைவராக அவர் இருந்திருக்கவில்லை, தமிழ்ச் சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் அவரது கோட்பாடு பயனளித்தது. பயனளிக்கிறது.
நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்கள், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், நூல்கள், தொடர்ந்து சமூகம் சமூகம் என்று இயங்கிய ஒரு மாமனிதரை விமர்சனம் செய்யும் போது ஒரு கணம் நின்று நிதானியுங்கள், சிறுநீரகம் செயலிழந்து கடுமையான வலி உங்களை வதைத்துக் கொண்டிருக்கும் போது, குழாய்களால் மருத்துவர்களின் உதவியோடு சிறுநீர் கழித்துக் கொண்டே "ஐயோ, அம்மா, வலிக்குதே, வலிக்குதே ஒலிபெருக்கியில் குரல் எழுப்பியபடி ஒரு சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், விடுதலைக்காகவும் உரையாற்ற முடியுமா???, அவர் தனது கடைசி களத்தில் அப்படித்தான் செய்தார்.
பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் உரியது, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள், தமிழ்த் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சாமானியர்கள், அறிவு ஜீவிகள் என்று யார் வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும், ஆனால் அந்த மனிதர் இந்த சமூகத்துச் செய்திருக்கும் அளப்பரிய சமூகப் பொருளாதார நன்மைகளையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நிராகரிப்பதென்பது வரலாற்றை மறுதலித்து வேறு திசையில் பயணிப்பது போன்றது.
தமிழ்த் தேசியத்தின் தேவைகள் அதிகரித்திருப்பதாக நம்பும் இளைஞர்கள், தமிழ்த் தேசியத்தின் மூலமாகவே நமக்கான உரிமைகளும், மேம்பாடும் நிலைத்திருக்கிறது என்று அதனூடே பயணிக்கும் இயக்கங்கள் தங்கள் இன்றைய இருப்பை திராவிடம் என்கிற கோட்பாட்டுக் கருவியின் வழியாகவே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த உன்மையிலிருந்துதான் தமிழ்த் தேசியம் தனது பயணத்தைத் துவக்க வேண்டும். — தி மைக் போராளீஸ் பொரட்சி..... உணர்கிறார்.
Arivazhagan Kaivalyam