15.9.12

விநாயகன் சாமி கதை...

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்த பின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும். புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. கணபதி பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக்கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: 

கணபதியின் பிறப்பை வேறுவிதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்காநதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அந்தக் குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்தவில்லை. பிரம்மாவை வார்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனி பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், "கந்த புராணம்" இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது. கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

"சுப்ரபேத ஆகமம்" என்ற நூல் கூறுவதாவது; சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.
(ஏ.எ.கே. அய்யங்கார் எழுதிய, "பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)

2. விநாயகர் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான். ஞானசம்பந்தரும், "பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே" என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் "ஞான விநாயகர்" என்னும் கட்டுரையில்+ பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபியிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், "தன்னை நினையத் தருகிறான்" என்ற கட்டுரையில் பக்கம் 17)

(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்கடமுழுக்கு விழா மலர் 8+9+1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் பக்கம் 62)

5-ஆம் நூற்றாண்டில் விநாயகர்

வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோடொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர். யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.
(மறைமலைஅடிகள் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில்+ பக்கம் 190)

6. விநாயகரின் மனைவியர் பட்டியல்

விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர் க்ரு விக்கினத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)

7. யானைத் தலையர்

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)

(மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த "அபிதான சிந்தாமணி")

No comments:

Post a Comment