30.1.16

தேசியக்கொடி எரிப்பு

தேசிய கொடியை எரிப்பது என்பதும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்ட வடிவம்தான். தேசியத்தின் மீதான உணர்வு கட்டுப்பாட்டினால் மட்டும் வரக்கூடாது. இயல்பாக எழ வேண்டும். இந்த நாட்டில் இதற்கான யோக்கியமான சூழல் இன்னும் ஏற்படவே இல்லை. கடலோரக் காவற்படையோ இந்திய கப்பற்படையோ சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களைக் காக்க இதுவரையிலும் முயற்சிக்கவில்லை. அவர்களுக்கோ, மத்திய அரசுக்கோ இவர்களும் குடிமக்க்கள்தான் என்ற எண்ணமே இல்லை. இதுவரையில் 1000 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்றைக்கும் அடி உதை சம்பவம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. யார் எதிர்ப்பையும் இந்தியா கண்டுகொள்ளாமல் ஈழத் தமிழர்களை அழித்தது. நம்மைக் கண்மூடித்தனமான தேசிய உணர்ச்சியில் ஆழ்த்திவிட்டனர், அதனாலே அவர்கள் தமிழர் எதிர்ப்பைக் கண்டுகொள்வதில்லை. விருப்பமானபோது கொடியைத் தூக்கிப் பிடித்தால் விருப்பமில்லாதபோது எரிப்பதில் என்ன தவறு? மீனவர்களுக்காக போராடும் ஒரு சமூக அக்கறையுள்ள இளைஞன் இதையன்றி வேறு எவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்துவான்? இதற்கான காரணம் என்ன என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும். பரப்ப வேண்டும்.

ந்தத் தம்பி தொடர்ந்து தமிழர் பிரச்சினைக்கும், மீனவர்களுக்காகவும் போராடுகிறவர்.

25.1.16

கற்பழிக்கப்படும் நீதி தேவதை

இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருந்திருந்தால் இப்பெண்கள் இவ்வாறான முடிவை தேடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

அரசு நிர்வாகம் என்பது ஆதிக்க சக்திகளின் அடியாட்படை. நீதிமன்றமும் காவல்துறையும் பணக்காரர்களுக்கானது, சகல பலமும் உள்ளவர்களுக்கானது என்பதை தினசரி நாட்டு நடப்புகள்; செய்திகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கல்வி, அறிவையும் தெளிவையும் தைரியத்தையும் இங்கே வளர்க்கவில்லை. மாறாக ஒரு பொய்யான; மோசடியான கவுரவத்தைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த கவுரவம் பொருளாதார வலுவற்ற வர்க்கங்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.

14.1.16

போகி 2016

அரைவேக்காடு அரசியல் பார்வை / செயல்படும் திறனற்ற புரட்சிவாதிகள் / சேவை மனோபாவமற்ற அறிவாளிகள் / சுயவிளம்பரப் பிரியர்கள் / முகநூல் போராளிகள் / சம்பிரதாய நட்புகள் உறவுகள் / etc....

இந்தச் சங்கிலிகளிலிருந்து விடுபட்டு ஒதுங்கிச் செல்ல தீர்மானிக்கிறேன்.

என் வாழ்வின் உண்மையான முதல் #_போகி யாக இன்றைய நாளை உணர்கிறேன்.

யாராருக்கு "நன்றி" சொல்வது எனத் தெரியவில்லை.

11.1.16

வியாழன் கோள்

இந்த அதிகாலை நேரத்தில் கீழ்வானத்திற்கும் சற்று மேலாக நட்சத்திரங்களுக்கு நடுவே பிரகாசமாகத் தெரிவதுதான் வியாழன் கோள். இன்னும் 4 மாதத்திற்கு இதை இரவில் வெறும் கண்ணால் காணலாம். பொதுவாக வருடத்திற்கு 6 மாதங்கள் இவ்வாறு காணலாம்.

(நீங்கள் தொலைநோக்கி வைத்து பார்த்தாலும்கூட அதன் மேல் Jupiter என்றோ வியாழன் (அ) குரு என்றோ பெயர் இருக்காது)

என் கைபேசியிலிருந்து வியாழன் கோளை எடுத்த படம் இது.

குருவை வாராவாரம் வணங்கும் பலரிடமும் இந்தக் கோளை நேரடியாகக் காட்டியுள்ளேன். கும்பிடுவதானால் இதைப் பார்த்து நேராகக் கும்பிட்டுக்கொள்ளுங்கள் என்றேன். யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள். கோயிலுக்குப்போய் கும்பிட்டால்தான் கிளர்ச்சி என்பதாகப் பதிந்துவிட்டது பக்தர்களுக்கு.

அறிவியல் மாநாட்டையே "ஆன்மீக மாநாடாக" நடத்தும் அதிசய விஞ்ஞானிகள் மற்றும் அறிவாளிகள் வாழும் நாடன்றோ இது...?

விஞ்ஞானிகளே இங்கு இப்படியென்றால் சாமானிய மனிதர்களை என்னவென்பது?

நம் நாட்டில் அறிவியலுக்கு அவ்வளவு மரியாதை.

9.1.16

விலைவாசி

ஊரிலுள்ள மரங்களையெல்லாம்
நினைவுக்கு கொண்டுவந்தது
காய்கறிக் கடையில் கேட்ட
முருங்கைக்காயின் விலை

வெள்ள நிவாரணம் கிடைக்க...?

கேள்வி :
வெள்ள நிவாரண நிதி ரூ 5000 கிடைக்காதவர்கள் என்ன செய்வது?

பதில் :
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்த வருடமும் வெள்ளம் வரும். இதேபோல் பாதிப்பு நடக்கும். நிலைமை எதுவும் மாறாமல் நிர்வாகமும் இப்படியேதான் இருக்கும். அப்போது தவறாமல் வாங்கிக் கொள்ளுங்கள்.

மாடு அரசியல்

கைதாகும் மீனவர்களைப் பார்த்து
சிங்களன் சிரிக்கிறான்

மாட்டுக்கறி
சல்லிக்கட்டு
.
.
.
.
.
மாடுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது
மத்திய அரசு

6.1.16

நிகழ்காலத்தில் பாக்கியவான்

"2016 பொறந்துடுச்சா"

சாதாரணமாய் இப்படிக் கேட்பவர்கள் நிறையபேர் இருக்கலாம். அவர்கள் பாக்கியவான்கள். அநேகமாக அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்களாகவே இருக்கக்கூடும்.

அய்யா திருவாரூர் தங்கராசு

இந்த சமூகத்தில் பரவிக்கிடந்த அறியாமைக்கும் மூடத்தனத்திற்கும் எதிராக தம் வாழ்நாளை அர்ப்பணித்த பெரும் கலைஞன்; கருத்தாளர் அய்யா திருவாரூர் தங்கராசு அவர்களின் நினைவு தினம் இன்று.

புராணங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர். அதன் பொய் புரட்டு பித்தலாட்டங்களை நையாண்டியாய் அம்பலப்படுத்தியவர். பல நாடகங்களை இயற்றி நடத்தியவர். பட்டிதொட்டியெல்லாம் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பகுத்தறிவு, சுயமரியாதை பிரச்சாரம் செய்தவர். தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழிவற்ற பெரும் படைப்பான "இரத்தக்கண்ணீர்" திரைப்பட ஆசிரியர்.

மறைவதற்கு முன்னதாக இவரைப் பேட்டியெடுத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது தந்தை பெரியார் திராவிடர் கழகம். படித்துவிட்டு மனம் கலங்கினேன். இந்தப் பிற்போக்கு சமூகத்தை சீர்படுத்த எவ்வளவு பேர் எவ்வளவு அளப்பரிய தியாகம் செய்துள்ளனர் என்பது மெய்சிலிர்க்க வைத்தது.

"நன்றி உணர்வு கொண்ட தமிழர்களால் எக்காலமும் போற்றப்பட வேண்டிய மாமனிதர் அய்யா திருவாரூர் தங்கராசு"

3.1.16

எதிரி நண்பன்

அடி ஞானப்பெண்ணே...

அடி ஞானப்பெண்ணே......

நாவினாலே வந்த வாழ்வும் இனோவாவும்
நாவினாலே போனது ஞானப்பெண்ணே...!!

- இப்படிக்கு
நாஞ்சில் சம்பத்