23.5.16

பிரபாகரன் வழியா? வரதராஜ பெருமாள் வழியா?

வரதராஜ பெருமாளும் தமிழ்த்தேசியம் பேசியவர்தான். அவர் வழி சிங்கள ஆதிக்கத்திற்குள் முதலமைச்சர் பதவி வாங்கும் தமிழ்த்தேசிய வழி.

பிரபாகரனும் தமிழ்த்தேசியத்திற்காக போராடினார். அவர் வழி அடினைத்தனமற்ற தனித்தமிழீழம் பெறும் வழி.

இந்திய தேர்தலுக்கும் பிரபாகரன் படத்துக்கும் என்ன தொடர்பு?

நாளை பிரபாகரன் பற்றி இந்திய நாட்டு மக்களும் இந்திய தமிழ் இளைஞர்களும் என்ன நினைக்கப் போகிறார்கள்?

காமராஜர் ஒரு இந்திய தேசிய கங்காணி. அவரை சீமானால் விமர்சிக்க முடியுமா?

இந்திய தேசியம் ஈழத்துக்கு எதிரி. அந்த இந்திய தேசியத்திற்கு கங்காணி வேலையை சிறப்பாக பார்த்தவர்களின் படங்களுடன் தலைவர் பிரபாகரன் படங்களையும் சேர்த்து அச்சிடுவதை மிகக் கேவலமாகப் பார்க்கிறேன்.

தமிழீழ தியாகம் உலகின் புரட்சிகர தனி வரலாறு. அதை தம் தேர்தல் அரசியலுடன் இணைப்பது பெரும் துரோகம்.

சீமான், வரதராஜ பெருமாள் வழியில் சென்றுகொண்டு பிரபாகரனை பேரை பயன்படுத்திக் கொள்கிறார். 

1970, 80 களில் கருணாநிதியின் மேடைப் பேச்சு தமிழர்களை கட்டிப்போட்டது. யதார்த்தம் வேறு. 

பிரபாகரன் மேடைப்பேச்சாளர்களை நம்பியதில்லை. உருவாக்கவுமில்லை.

டில்லி ஆதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு திட்டமோ செயற்பாடோ இல்லாமல் தாங்கள் மட்டுமே தமிழ்த்தேசியர்கள் என்பது பிழைப்புவாதத்தின் இன்னொரு முகம்தான்.

மேடைப்பேச்சுக்கு மயங்காத தமிழ் மக்களும்; செயற்திறன் கொண்ட ஆளுமையான தலைவனையும் எதிர்காலத் தமிழ்த்தேசியம் உருவாக்க வேண்டும்.

தமிழர்கள் டில்லியின் அடிமைகள் என்பதை மறைக்கும் பட்டுத்திரைதான் இந்திய தேர்தல்.

தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பது முதல்வர் பதவியோடு முடிந்துபோகிறதா?

10 ஆண்டுகள் தொடர்ந்து வீரிய பரப்புரை செய்து படிப்படியாக மத்திய அரசு அலுவலகங்கள் இங்கே செயல்படாத நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டாமா?

தன்னிச்சையாக கிளர்ந்து எழ வேண்டிய தமிழ் இளைஞர்களின் போராட்டம் பிரபாகரன் படத்தின் வழியாக சீமான் வந்தால் சரியாப்போகும் என்று மடைமாற்றப் பட்டிருக்கிறது.

இந்திய தேர்தலில் பங்கெடுக்காமல் இந்திய தேசிய எதிர்ப்பு பரப்புரையை படிப்படியாக அதிகரித்தால் அடுத்த தலைமுறையாவது இங்கே தெருவில் இறங்கும்.

இந்திய தேசியத்திற்கு எதிராக நாம் தமிழரால் நடத்தப்பட்ட போராட்டங்கள் என்ன?

வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் ஒரு கடைநிலை மாவோயிஸ்ட் போராளியின் அளவுக்குக்கூட இங்கே அறிவும் தொலைநோக்குப் பார்வையும் செயல்திறனும் தியாகம் செய்ய தயாரான அர்ப்பணிப்புத் தன்மையுடனும் எந்தத் தலைவனும் உருவாகவில்லை.

மேடைப்பேச்சுத் திறமையால் இதை மறைத்துக்கொள்கிறார்கள்.

ஒரு வி.ஏ.ஓ, ப.தலைவர், கவுன்சிலரை தெருவில் இழுத்துப்போட்டு அடிக்கும் தமிழ் இளைஞர்களை உருவாக்க வேண்டியதே இன்றைக்கு மிக முக்கியமான தேவையாக உள்ளது.

இதைத் தூண்டிவிடக்கூட நம் தலைவர்களின் மேடைப்பேச்சுகள் உதவவில்லையே என்று ஆதங்கப்படுகிறேன். இதுதான் என் ஆழ்ந்த வருத்தம். 

மே 17 இயக்கம் ஈழத்தமிழர் எவரிடமிருந்தும் 1 ரூ கூட நிதி வாங்குவதில்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

நாம் தமிழர் கட்சி இவ்வாறு அறிவிக்குமா?

உள்ளூர்களில் கட்டமைப்பை வலுப்படுத்துமுன்னர் உலக நாடுகள் அனைத்திலும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது?

ஈழத்தமிழர்களின் ஒவ்வொரு ரூபாய் பணமும் வாடும் இன்னொரு ஈழத்தமிழனுக்கே போய்ச் சேர வேண்டும்.

அந்தந்த நாடுகளில் புலிகளுக்காக ரகசியமாய் இயங்கும் குழுக்களுக்கான நிதி உதவியை இந்த வெளிநாட்டு நாம் தமிழர் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறைந்துள்ளதாம்.

சீமான்& அவர் தம்பி, மனைவி ஆகியோரின் சொத்துக்கணக்கை உடனடியாக அறிவித்து பின் ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை விட வேண்டும்.

செய்வாரா?

இந்தியத் தமிழனுக்கு உணர்வூட்ட ஈழத்தமிழன் பணம் எதற்கு?

22.5.16

வீரம் / பிறவி வீரம் / ஜாதி

வீரம் என்பது உழைக்கும் அப்பாவி மக்களை ஜாதியின் பேரால் சீண்டுவது அல்ல, அநியாயங்களை எதிர்ப்பதுதான்.

நாட்டில் நடக்கும் அநீதிகள், லஞ்சம், ஊழல், சுரண்டல், அதிகார வரம்பு மீறல் என்று எதையும் எதிர்த்து நிற்க இயலாத; அல்லது இவைகளைக் கண்டும் காணாததுபோல் வாழும் அட்டைக்கத்திகள் எல்லாம் தன் ஜாதியின் பேராலேயே தம்மை வீரனாய் காட்டிக்கொள்கின்றன. 

ஜாதிச் சண்டைகளுக்கு எவன் காரணமாக இருக்கிறானோ அவன்தான் அந்த ஊரின் முதல் அரைவேக்காடும் சமூக அறிவற்ற முட்டாளும்கூட. 

தமிழ்நாட்டில் நியாயத்திற்கு குரல் கொடுக்கும் உண்மையான வீரன்களைவிடவும், தங்களை பிறவி வீரன்களாக காட்டிக்கொள்ளும் ஜாதி அட்டைக்கத்திகள் அதிகம்.

உள்ளூர்களில் முதியோர் ஓய்வூதியத்தில் நடக்கும் கமிஷன் திருட்டுகளைக்கூட எதிர்த்துக் கேட்க தைரியமற்ற இவ்வாறான அட்டைக்கத்திகள், எப்போதும் தன் ஜாதி அடையாளத்தை கம்பீரமாகக் காட்டி அதனுள் தம்மை மறைத்துக் கொள்கின்றனர்.

எல்லா ஜாதி அமைப்புகளையும் என்றைக்காவது இந்த அரசாங்கம் தடை செய்யுமானால் அன்றையிலிருந்துதான் இந்த நாட்டைப் பிடித்த சனி நீங்கத் துவங்கும்.

19.5.16

"தொடத்தொட தங்கம்" - இந்திரா சௌந்தர்ராஜன்

"தொடத்தொட தங்கம்" - இந்திரா சௌந்தர்ராஜன் (பக்கம்-388)

16 வருடங்களுக்கு முன்பு தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் 42 வார தொடர்கதையாக இக்கதை வெளியானது. அப்போது நான் தீவிர பக்திமானாக இருந்தேன். அப்போது கோ.ஆண்டி என்கிற என் கிராமத்து மாமா ஒருவர் இக்கதையை வாசிக்கச் சொல்லி தொடர்கதை முழுமையும் தந்தார். பரவசத்துடன் மெய் சிலிர்க்க வாசித்தேன். ஆன்மீக உணர்வுகளைப் பற்றியும் அமானுஷ்ய சங்கதிகளைப் பற்றியுமான இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் எழுத்தைப் பற்றித் தனியே சொல்லத் தேவையில்லை. நான் 'கடவுள் மறுப்பாளனாக' இருக்கும் இப்போது இக்கதை எப்படித் தோன்றுகிறது என்பதற்காக மீண்டும் ஒருமுறை வாசித்தேன். ஆன்மீகத்தை திணிக்காமல் இயல்பாக ஒரு பக்திமானுக்கு இருக்கும் நம்பிக்கையின் அளவுகோலினூடேதான் இக்கதையை நகர்த்தியிருக்கிறார் எழுத்தாளர். 

இதில் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன்பும் "சொர்ணஜாலத் திரட்டுக் குறிப்பு" என்ற சித்தர்களின் ஓலைச்சுவடியிலிருந்து ஒவ்வொரு பாடலையும் எடுத்துப்போட்டு ஆரம்பித்திருப்பார். 

சொர்ணஜாலத் திரட்டு என்பது சித்து சக்தியால் ரசவாதத்தின் மூலமாக எப்படியான ஒரு உலோகத்தையும் தங்கமாக எப்படி மாற்றுவது என்பதைப் பற்றிய குறிப்புகள். இத்திரட்டில் தாமிரம் எப்போது தங்கமாக மாறும்; எந்த நேரத்தில் தேள் கடித்தால் விஷம் ஏறாது என்பதுமாதிரியான பல சித்தர் பாடல்கள் அடங்கிய குறிப்பு.

முன்னர் படித்தபோதே இந்தத் திரட்டின் 42 பாடல்களையும் தனியாக ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தேன். 16 வருடங்களாக அந்த டைரியையும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அப்பாடல்களில் சில வரிகள் மிகவும் வியப்பாக இருக்கும்.

கதை என்னவென்றால்...

ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பில் வசிக்கும் கந்தசாமி என்பவர் சிவபக்தர். 108 வது முறையாக சதுரகிரியில் இருக்கும் மகாலிங்க மலையைச் சுற்ற செல்லும்போது வழியில் ஒரு சாமியார் ஒரு தங்கச் சங்கிலியைக் கொடுத்து மலை ஆசிரமத்தில் ஒப்படைக்கச் சொல்லிக் கொடுக்கிறார். தன் 4 பெண்களை கரைத்தேற்ற வழிதெரியாமல் தவிக்கும் கந்தசாமிக்கு அந்தச் சங்கிலிமேல் சபலம் தட்ட அதை ஆசிரமத்தில் ஒப்படைக்காமல் வீட்டில் கொண்டு வந்து தன் மனைவியிடம் கொடுக்கிறார். கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கும் அவர் மனைவி உண்மை தெரிந்ததும் இது விபரீதம் என அறிந்து அந்தத் தங்கச் சங்கிலியை ஒப்படைக்க தனியாக மகாலிங்க மலை ஆசிரமத்திற்குச் செல்கிறார். அப்படிச் சென்றவர் திரும்பி வராமல் போகிறார். 

தன் மனைவியைத் தேடிக்கொண்டு மகாலிங்க மலைக்குச் செல்லும் கந்தசாமி வழியில் ஒரு வெள்ளை இளம்பெண்ணின் சடலத்தைப் பார்க்கிறார். தவறான எண்ணத்துடன் மலைக்கு வந்து யாரும் உயிருடன் திரும்ப முடியாது என்பது அவருக்குத் தெரியும். இருந்தும் அந்தச் சடலத்தில் இடுப்பில் ஒரு தங்க சாவிக்கொத்தைப் பார்த்ததும் அதை பத்திரமாகக் கொண்டுவந்து தன் அக்காள் மகன் வடிவேலுவிடம் சொல்லி ஒரு ஆச்சாரியிடம் சென்று அந்தத் தங்கத்தை சோதித்துப் பார்க்கச் சொல்கிறார். அது பச்சைப் பசுந்தங்கம் என ஆச்சாரி சொல்ல; அந்தச் சாவிக்கொத்து சாதாரணமானது எனச் சொல்லி கந்தசாமியை ஏமாற்றி எடுத்துக்கொள்கிறான் வடிவேலு. மலையில் ரசவாத வித்தையால் தங்கம் செய்யும் சாமியார்கள் நிறைய பேர் இருப்பதாக மேலும் கந்தசாமி மூலம் தெரிந்துகொள்ளும் வடிவேலு கந்தசாமியைத் தூண்டி விடுகிறான். கந்தசாமியின் மனைவி பூரணியைத் தான் தனியாக தேடிச்சென்று வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றவன் மறுநாள் மலை வழியில் சடலமாகிக் கிடக்கிறான்.

கந்தசாமியின் மனைவி பூரணி தங்கத்தை சாமியார்களிடம் ஒப்படைத்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது ஊமையாக வருகிறாள். மீண்டும் மலைக்குச் சென்றுவருவதாகச் சொல்லிவிட்டு காணாமல் போகிறாள்.

இந்நிலையில் சென்னையில் வசிக்கும் மீனா என்ற இளம்பெண் மீது இடிவிழ அவளுக்கு எதுவுமாகாமல் அபூர்வ சக்தி பெறுகிறாள். மின்சாரமோ விஷமோ அவளை பாதிக்கவில்லை. அவள் கை பட்டதும் பலர் நோய் குணமடைய இச்செய்தி தீயாய் பரவுகிறது. அவளது தந்தை கருணாகரண் ஒரு உயர் காவல்துறை அதிகாரி. 

மீனாவின் காதலன் பிரகாஷ் டாஸ்மாக்கில் பணிபுரியும் உயர் அதிகாரி. மீனாவைப்பற்றிக் கேள்விப்படும் ஒரு நாடி ஜோதிடரின் உதவியாள் அவளது கைரேகையை மாதிரி வேண்டுமென பிரகாஷிடம் உதவி கேட்கிறான். பின்னர் அதன் மூலமாக மீனாவின் எதிர்காலம் பற்றிய பல அபூர்வ செய்திகளை தெரிந்துகொள்கிறான்.

ரசவாதம் பற்றிய சுவடிகளையும் மீனாவையும் மலையிலிருக்கும் தங்க லிங்கத்தையும் கடத்த திட்டமிடுகிறது ஒரு வடநாட்டுக் கும்பல்.

ஓலைச்சுவடியில் இருப்பதாக அடுத்தடுத்து நடக்கும் 9 மர்ம மரணங்களும் முன் கூட்டியே மீனாவின் தந்தைக்கு போன் மூலம் மர்ம மனிதன் ஒருவனால் சொல்லப்பட அவ்வாறே நடக்கிறது. அவரும் இறுதியில் இறந்துபோகிறார். அவரது தங்கைதான் பூரணி. தன் அத்தை காணாமல் போனதும் மலைக்குச் சென்று ஊமையானதும் நவநாகரீகப் பெண்ணான மீனாவின் ஆர்வத்தை தூண்டுகிறது. அவளும் மலையைப் பற்றித் துப்பறிய தனியே கிளம்புகிறாள்.

மீனா மலைக்கு வந்து ஆசிரமப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் சித்தர்களின் விருப்பம் என சாமியார்கள் காத்திருக்க, தங்க லிங்கத்தையும் சொர்ண ரசவாத ரகசியத்தையும் மீனாவுடன் கடத்திச் செல்ல திட்டமிட்டு வடநாட்டுக் கும்பல் நெருங்கி வர... இறுதியில் என்ன நடந்தது? என்பதை மிக மிக விறுவிறுப்பாய் கதையை நகர்த்துகிறார் இந்திரா சௌந்தர்ராஜன்.

இக்கதையின் அத்தியாயங்களில் துவங்கும் "சொர்ண ஜாலத் திரட்டுக் குறிப்பு" பாடல்களை நீங்கள் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். நம் தமிழ் முன்னோர்களின் தேடல் & அனுபவ அறிவு உண்மையிலேயே சிலிர்க்க வைக்கும்.

குழந்தைகளின் கைமாறு

பெற்றோர்கள் குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள்.

மன அழுத்தம், குடும்ப நெருக்கடி, களைப்பு, சலிப்பிலிருந்து பெற்றோர்களை குழந்தைகள் காப்பாற்றுகிறார்கள்.

தேர்தல் முடிவு

பொழுது விடிந்ததும்
தமிழகத்தை இருள் கவ்வும்
தருமம் மறுபடி தோற்கும்

2.5.16

ஹார்மோன் பொம்மை

என்னை தவறாய் எண்ணாதே

முன்னர்
மணிக்கணக்கில் பேசியதற்கும்
இப்போது
பேசாமலே இருப்பதற்கும்
நான் காரணமல்ல

நான்
ஹார்மோன்களால் ஆட்டுவிக்கப்படும்
ஒரு பொம்மை