"இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென்?
தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே"
'சுவேதாரண்யன்' என்ற பெயருடன் பூம்புகாரில் வாழ்ந்த பெரும் வணிகனுக்கு "மருதபிரான்" என்ற மகனாய் வந்து சேர்ந்து வளர்ந்து ஆளாகி கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வரும்போது மாட்டுச்சாணியின் சாம்பல்களை குவித்து வந்து "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என செல்வம் குவிப்பது பயனற்றது என்ற ஞானத்தை உணர்த்திவிட்டுச் சென்றானாம் சிவன். இது நடந்ததாக வரலாறு சொல்வது 11-ம் நூற்றாண்டில். அதன் பின்னர் 'சுவேதாரண்யன்' என்ற அந்த பெரும் வணிகன் தன் உடைமைகள் பொன் பொருள் உறவுகள் அனைத்தும் துறந்து பட்டினத்தாராக காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து வாழ்வின் நிலையாமை பற்றி மக்களுக்காகப் பல பாடல்களைப் பாடி சிவனடி சேர்ந்தார்.
11-ம் நூற்றாண்டில் வந்துபோன சிவன் அதன்பின்னர் ஏனோ வரவில்லை. உலகமே; இந்தியாவே கார்ப்பரேட்களால் சூறையாடப்படும் இந்த காலசூழலில் இதேபோல் தனியார் முதலாளிகளுக்கு வாரிசாய் பிறந்து ஞானம் போதித்தால் நல்லது. யாரேனும் மெய்யான பக்தர்கள் நாட்டின் நிலையை அவருக்கு உணர்த்த முயற்சிக்க வேண்டும்.
பட்டினத்தாருக்கு ஞானம் போதித்த சிவன், அம்பானி அதானிகளுக்கும் லாப வேட்கை கொண்ட எல்லா வணிகர்களுக்கும் கொஞ்சம் வகுப்பெடுக்க வேண்டும். இல்லையேல் இனி இம்மண்ணில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரம் என்னாவது? சுவேதாரண்யனை மட்டும் அப்படி அலையவிட்டது ஒருதலைப்பட்சமாகிவிடும் அல்லவா? இது சிவனுக்கு அழகா? இது நீதியா? இப்படி எண்ணுவது பிழையா?