17.10.17

ராஜராஜ சோழப் பறையனார்

ஒரு மன்னர் என்பவன் தான் விரும்பிய பெண்ணையோ அல்லது வேறு நாட்டு இளவரசியையோ மணப்பான். அவனுக்கு மொழி இனம் பிரச்சினையில்லை. நாட்டின் எல்லை விஸ்தரிப்பும் கவிழாத ஆட்சி அதிகாரமும் தான் குறி.

ராஜா குலங்கெட்டவன் என்றொரு மொழி உண்டு. எந்தவொரு ராஜாவையும் இன்ன குலம் என்று தீர்மானமாய் சொல்லவியலாது. ஏனெனில் எல்லாருமே கலப்பில் உருவாகி வரும் வம்சம்தான். சிலருக்கு ஆண் வாரிசு இல்லையென்று பெண் வழி வாரிசுக்கும் மன்னர் பதவி சென்றிருக்கும். இப்படிப் பார்த்தோமானால் எல்லா வரலாற்று மன்னர்களுக்கும் இந்த அளவுகோல் பொருந்தும்.

ராஜராஜனுக்கு வருவோம்.

ராஜராஜன் எங்கள் ஜாதியென தேவர், வன்னியர், பள்ளர், கோனார், முத்தரையர், உடையார் என்று பலரும் விளம்பரம் செய்கின்றனர். இதெற்கெல்லாமும் உறுதியான சான்று இல்லை. அன்றைக்கு அவர்கள் எந்தெந்த பட்டப்பெயர் வைத்திருந்தார்களோ அப்பெயரெல்லாம் பின்னாளில் ஜாதி ஆனதில் அவரும் அந்த ஜாதிக்காரனாகி விட்டார்.

எல்லோரிடமும் தெலுங்கும் கன்னடமும் கலிங்க கலப்பும் உண்டு.

நிற்க, இப்போது பறையர் சமூகத்தினரும் ராஜராஜனை சொந்தம் கொண்டாடுவதை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில், எந்த வரலாறு கிடைத்தாலும் அதை சாதுரியமாக தனதாக மாற்றிக்கொள்பவர்களுக்கு இதுவொரு கடிவாளமாக இருக்கும். உண்மையில் யாரிடமும் எதற்கும் ஆதாரமில்லை. இத்தனைநாளாய் யார் யாரோ அவனை சொந்தம் கொண்டாடியபோது கண்டுகொள்ளாதவர்கள் பறையர்கள் உரிமை கொண்டாடும்போது மட்டும் குதிப்பது ஏன்?

மேலும் எல்லா ஜாதியும் தன் ஜாதியென ராஜராஜனைக் கொண்டாடினால்தான் இந்த ஆண்டஜாதி பஞ்சாயத்து முடிவுக்கு வரும்.

எல்லோருக்கும் பொதுவான ஆளாய் ராஜராஜனும் மாறுவான்.

இவ்வகையில் இதை ஆதரிப்பது மொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் லாபமே.

No comments:

Post a Comment