1.3.18

வாழ்க்கை சிக்கலானதா?

வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ்வது ; உண்மையில் மிக எளிமையானது.

எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கை கோட்பாடுகளுக்குள்ளும், விருப்பு-வெறுப்புகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் இருந்தாலே போதுமானது.

அப்படி சிக்கிக்கொள்ளாமல் இருக்க இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்ற சற்று ஆழமான & தெளிவான புரிதல் மட்டுமே தேவை.

உதாரணமாய்...

ஒரு காலத்தில் தமிழ்த்திரை உலகில் எம்ஜியார் & சிவாஜி கணேசன் என்ற இரு பெரும் நடிகர்கள் கோலோச்சினர்.

இவர்களுக்கென தனித்தனி ரசிகர் மன்றங்களும் இருந்தன.

இருவரின் ரசிகர்களும் ஏதாவதொரு டீக்கடை பெஞ்சில் நிச்சயமாய் சந்தித்துக் கொண்டிருப்பர்.

அப்போது அங்கு என்ன நடந்திருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்களேன்.

எம்ஜியார் பெரிதா? சிவாஜி பெரிதா? என வாய்ச்சண்டையில் ஆரம்பித்து அது கைச்சண்டையாய் மாறி போலிஸ், கேஸ் என பிரச்சனை திவிரமாகியிருக்குமா? இல்லையா?

இத்தகைய சண்டைகள் நிகழ்ந்திருக்காது என யாராவது மறுத்துக் கூற முடியுமா?

இப்போது அவர்கள் இருவருமே காலமாகிவிட்டனர்.

அவர்களின் ரசிகர்களிலும் பெரும்பாலோர் காலமாகிவிட்டனர்.

இன்னும் ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் அவர்களின் ரசிகர்கள் அனைவருமே காலமாகிவிடுவர்.

அவர்களுக்கு முன்னால் புகழ்பெற்ற நடிகர்களாய் இருந்த M.K தியாகராஜ பாகவதர், T. R. மகாலிங்கம், M.K. ராமசாமி போன்றோரை நம் தலைமுறையினர் மறந்து விட்டதைப் போல இன்னும் ஒரிரு தலைமுறைகளுக்குப் பிறகு இவர்களும் மறக்கப்படுவார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

அப்படி மறக்கப்படுவது உறுதியென்றானபின் அந்த டீக்கடை பெஞ்சில் நடந்த அடிதடி ரகளையில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? ஆழ்ந்து சிந்தியுங்கள்.

எதற்காக இந்தக் கொள்கை கோட்பாடுகள், விருப்பு வெறுப்புகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும்?

வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்.

சாட்சி பாவமாய் மாறி வாழ்க்கையை வேடிக்கை பார்க்கத்தொடங்கினால் வாழ்க்கையில் கொண்டாட்டத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை எனப் புரிந்துவிடும்.

வாழ்க்கையுடனான என்னுடைய அணுகு முறை இதுதான்.

கொள்கை கோட்பாடுகள், விருப்பு வெறுப்புகள், ஜாதி, மதம், இனம், தேசம்,மொழி என எந்தக் குறுகிய எல்லைகளுக்குள்ளும் என்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை.

நீங்கள் ரஜினி ரசிகரானால் நான் உங்களிடம் கமலைப் பற்றி பெருமையாகப் பேசுவேன் & vice versa

நீங்கள் ராமராஜனை வெறுத்தால் நான் அவரின் சிறப்புகளை பட்டியலிடுவேன்.

நீங்கள் வேதாத்திரி மகரிஷியை போற்றினால் நான் ஜக்கி வாசுதேவை வேண்டுமென்றே போற்றுவேன்.

நீங்கள் கடவுள் இல்லை என்று சொன்னால் நான் உண்டு என வாதிடுவேன்.

உண்டு என்றால் இல்லை என வாதிடுவேன்.

உருவ வழிபாடு தவறு என்று சொன்னால் சரி என ஆயிரம் காரணங்களைச் சொல்ல என்னால் முடியும்.

சரி என்று சொன்னால் தவறு எனச்சொல்ல ஆயிரம் காரணங்கள் உண்டு.

சைவமா? அசைவமா? எது சிறந்தது?

இந்துமதமா? கிறிஸ்துவமா? இஸ்லாத்தா? பௌத்தமா?

யார் எதை ஆதரித்தாலும் எதிர் வாதங்கள் என்னிடம் உண்டு.

நேற்று சைவம் என்று பேசியவன் இன்று அசைவம் என்று பேசுவேன்.

எனக்கு எதுவும் ஒரு பொருட்டில்லை.

ஏனெனில் எனக்கு எல்லாமே ஒரு விளையாட்டுதான். கொண்டாட்டம்தான்.

எனவே வாதங்களில் தோற்றுவிட்டாலும் நான் வருத்தப்படுவதில்லை.

எதுவும் அர்த்தமற்றவை என்பதை நான் தெளிவாய் அறிவேன்.

சுத்த சைவர்கள், ஆளில்லாத ஒரு தீவில் சில நாட்கள் மாட்டிக்கொண்டால் அங்கு கிடைக்கும் மீனைத்தவிர வேறு எதை உண்ண முடியும். அங்கு Survival தானே முக்கியம். சைவக் கோட்பாடு காற்றில் பறந்துவிடும்தானே?

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், பாலுறவு போன்றவை கிடைக்காவிட்டால் நீங்கள் எத்தகைய உயரிய அறநெறிகளை கடைபிடிப்பவராயினும், அவையனைத்தையும் கைவிட்டு ஒரு கொலை பாதகனாய் மாறிவிடுவீர்கள்.

ஒவ்வொரு வாதத்திற்கும் மறுக்கமுடியாத ஒரு எதிர்வாதம் நிச்சயமாய் உண்டு.

அப்படியெனில் இங்கு எது சரி? எது தவறு?

உங்களுடைய எந்தக்கொள்கையும் கோட்பாடுகளும் மரணப்படுக்கையில் வெகு நிச்சயமாய் உதவிக்கு வராது. உடனும் வராது.

ஜாதி, மதங்களைக் கொண்டு இங்கு ஆயிரமாயிரம் போர்கள் எந்தவித அர்த்தமும் இல்லாமல் நடந்தேறியிருக்கின்றன. நடந்துகொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மிக உக்கிரமாய் நடந்த சைவ, வைணவப் போர்கள் இன்று உங்களுக்கு முட்டாள் தனமாய் தெரிகிறதல்லவா?

"ஓம் நமச்சிவாயா"

எனச்சொல்லாமல்

"ஓம் நமோ நாராயணாய"

எனச்சொன்னதால் பெருமாள் சிலையோடு கட்டப்பட்டு கடலில் தூக்கியெறியப்பட்டான் ஒரு வைணவன்.

என்ன ஒரு மடத்தனம்? இதனால் யாருக்கு என்ன பிரயோசனம்?

இன்று அந்தத் தியாகத்திற்கு என்ன மதிப்பு?

வாழ்க்கையை கொள்கை கோட்பாடுகளுக்காக தியாகம் செய்வதைக் காட்டிலும் ஒரு முட்டாள்தனம் எதுவுமில்லை.

நமக்கு முன்னால் கோடான கோடி மக்கள் இங்கு வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் எத்தனையோ வேறுபட்ட ஜாதி, மதங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகளே இங்கு இல்லையே.

நாம் வாழ்ந்ததற்கான சுவடுகளும் நிச்சயமாய் இருக்கப்போவதில்லை.

உங்கள் சுவாசம், இதயத்துடிப்பு என எதுவும் நம் கையில் இல்லை.

ஆனால் அகந்தை மட்டும் தலைக்கேறி நிற்கிறது.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் இருப்பு ஒன்றே உண்மையானது.

இங்கு நீங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதைத் தவிர வேறு சாதிப்பதற்கு எதுவுமில்லை.

வாழ்க்கையை ஒரு குதிரைப் பந்தயம் போல வாழ்வதை நிறுத்துங்கள்.

உணர்வு ரீதியாய், உங்களுக்காய் வாழுங்கள்...

ஆடுங்கள். பாடுங்கள். கொண்டாடுங்கள்...

july 06, 2017

No comments:

Post a Comment