26.2.16

இன்று வாங்கிய புத்தகங்கள்...

புதிதாக உடை வாங்கும்போதும் புத்தகங்கள் வாங்கும்போதும் உற்சாகமாக இருக்கிறது.

திரைப்பட பாடலாசிரியரும்; இன்றைய தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க கவிஞரும் எழுத்தாளரும்; கலப்பை பதிப்பக உரிமையாளரும் இலக்கியப் புத்தக விற்பனையாளருமான மதிப்பிற்குரிய நண்பர் கவிஞர் வே.இராமசாமி அவர்களிடமிருந்து இன்று நான் விலைக்கு வாங்கிய  நாவல்கள்...

01. கிடை - கி.ரா.
02. கீதாரி - சு.தமிழ்ச்செல்வி
03. கெடைகாடு - ஏக்நாத்
04. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகரஜன்
05. குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்
06. கோவேறு கழுதைகள் - இமையம்
07. செடல் - இமையம்
08. எங்கதெ - இமையம்
09. ஆறுமுகம் - இமையம்
10. தொடத்தொட தங்கம் - இந்திரா சௌந்தர்ராஜன்

24.2.16

திருமதி.நளினி தந்தையாருக்கு அஞ்சலி

ஆழ்ந்த இரங்கல்

ராஜீவ்காந்தி சாகடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் ஜோடிக்கப்பட்டு 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் திருமதி.நளினி அவர்களின் தந்தையார் திரு. சங்கர நாராயணன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார்.

த.பெ.தி.க வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன் மற்றும் சில தோழர்களுடன் சென்று மாலை அணிவித்து இன்று அஞ்சலி செலுத்தினோம்.

18.2.16

ரெக்கார்ட் டேன்ஸ்

"ரெக்கார்ட் டேன்ஸ்" என்பதற்கு தமிழ்நாட்டில் இன்னொரு பெயர் இருக்கிறது.

"சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்"

13.2.16

முதல் வெளிநாடு

என் சிறுவயதில் நான் பயணித்த முதல் வெளிநாடு; என் அத்தையின் கிராமம்.

ஆரணி வட்டம், அரியப்பாடி கிராமம்.

அத்தைவீட்டுச் சோறுண்டு விளையாடி கதை கேட்டு உறங்கிய முற்றம்; வளர்ந்தபின்னர் அத்தையுடன் சண்டையிட்டுப் பிரிந்து வந்த அதே முற்றம்.

மரணிக்கும் வரையிலும் மனதைவிட்டு நீங்காத பசுமையான நினைவுகள் பதிந்த அத்தை ஜெகதாம்பாளின் வீடு.

ஸ்ரீராமஜெயமே தீர்வு

தான் வாழும் கிராமத்தில் அல்லது பகுதியில் அல்லது தன்னைச் சுற்றி நடக்கும் எந்தவொரு அநீதிகளுக்கு எதிராகவும் வாள் சுழற்ற சிறிதளவுகூட முயற்சிக்காமல்; எந்நேரமும் இந்த நாட்டையும் சமூகத்தையும் மாற்றிப்போட முகநூலில் மட்டும் முயற்சித்து கருத்தும் விமர்சனமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் பல அறிவுடையோர்.

எழுதுகிறவன் எழுதுகிறவற்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிறார் மாவோ.

"அச்சமில்லை அச்சமில்லை" என்று விடுதலைக்காக அனல் கக்கி பாட்டெழுதிய பாரதி, போலிசு தேடி வந்ததும் புதுவைக்கு ஓடினார் ஒளிந்துகொள்ள. இறுதியில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்.

மன்னிப்பு கேட்டால் விடுதலை என்ற சூழலில் பகத் சிங் தூக்கு மேடைக்குப் போனார்.

பாரதியின் அச்சமில்லை பாடலைப் படித்து சிலாகித்து வளர்ந்த நம்மால் ஒரு உள்ளூர் கவுன்சிலரைக்கூட எதிர்க்க இயலவில்லை.

உப்புக் கடலில் கலக்கும் நதிநீர் போலவும் கிழவிக்கு கட்டிய பட்டாடை போலவும் அறிவு இங்கே ஜீவனற்று விரவிக் கிடக்கிறது.

இந்த சமூகத்தில் அறிவாளிகள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அநேகமானவர்களின் எழுத்துக்கள் நம் "தேசியக் கவியைப்" போன்றேதான் இருக்கிறது.

மாத வருமானத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடாதபடி மாற்றத்தைக் கொண்டுவரக் கருத்து எழுதும் இத்தகு போராளிகள், கொஞ்சம் தினசரி போராட்டங்களைக் கண்டறிந்து தமக்கு உடன்பாடுள்ள ஒன்றிலாவது பங்கெடுத்தால் இந்தச் சமூகம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டதாக இருக்கும்.

எந்த போராட்டங்களிலும் கலந்துகொள்ள இயலவில்லை என்றாலோ, எந்த அநீதிகளுக்கு எதிராகவும் சிறிதுகூட பங்களிப்பு செய்ய இயலவில்லை என்றாலோ... தினமும் 1000 முறை ஸ்ரீராமஜெயம் எழுதப் பழகலாம். எதையும் செய்ய முயற்சிக்காமல் கருத்து மட்டும் சொல்லத் துடிக்கும் மனநோய்க்கு ஒருவேளை இது மருந்தாகலாம்.

8.2.16

நாத்திகம் போலியா?

அநேக ஆன்மீக விஷயங்களைக் கடந்தபின்னர்தான் நாத்திகம் முளைக்கிறது.

நாத்திகவாதிகளின் மீதான வெறுப்பும், நாத்திககக் கருத்துக்களின் மீதான பண்பற்ற அணுகுமுறையும், விவாதங்களுமே வெளிப்படுத்திவிடுகிறது ஆன்மீகத்தின்; ஆன்மீகவாதிகளின் சாதாரண முகத்தை.

ஆன்மீகம், மிகப்பெரிய கற்பனை.

சற்று கேள்விகளிலிருந்தும் ஆன்மீகத்தை அணுகுங்கள். மனித அறிவிற்கு அதுவே அழகு.

முதலில் ஆன்மீகப் போர்வையில் மக்களின் அறிவை சீரழிக்கும் காட்டேரிகளை இல்லாதொழிக்க கடவுளிடம் சொல்லுங்கள்.

கடவுளுக்காகவும் மதங்களுக்காகவும் மட்டுமன்றி கொஞ்சமேனும் மக்களுக்காகவும் போராடச் சொல்லுங்கள் பார்ப்போம் சாமியார்களையும் ஆன்மீகவாதிகளையும்.

ஆன்மீக பூமி என்று கதையளக்க்கப்படும் இந்த நாடு சமூக ஒழுக்கத்தில், சுற்றுப்புற சுகாதாரத்தில், கல்வியறிவில், பாலியல் அணுகுமுறையில்; சமத்துவத்தில் இன்னும் மேல்நாடுகளைவிடக்  கீழாய் இருப்பதைக் கவனியுங்கள்.

1.2.16

தேசியக்கொடி எரிப்பு

தேசியக் கொடியை எரித்தது இந்தத் தம்பிதான். இந்த தம்பி பல போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுக்கிறவர். சமூக சேவைகளை செய்து வருபவர். "நான்_ஏன்_தேசியக்கொடியை_எரித்தேன்?" என்று இவர் வெளியிட்டுள்ள அறிக்கையை வாசிக்காமல் அதில் உள்ள நியாயத்தை உணரக்கூட சுய அறிவில்லாமல் 'அவனை வெட்டனும், கொல்லனும், புடுங்கனும்' என்று பலரும் தேசபக்தி முத்திப்போய் முகநூலில் பொங்குகின்றனர். ஒ

இவ்வளவு பேர் இன்னும் இந்திய அரசியலைப் பற்றிக்கூட தெரியாமல் இருக்கிறார்களே என்று ஆச்சர்யப்படும் அதேசமயத்தில், இப்படி தேசபக்தி முத்திப்போனவர்கள் இச்செயலைத் தாளமுடியாமல் தூக்கிலோ அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலையோ செய்துகொள்வார்கள் என்று யாரேனும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் எங்கும் நடக்கவில்லை.

இதனால் நமக்குத் தெரியவருவது யாதெனில், தேசபக்தி அந்தளவுக்கு மதிப்பில்லை என்பது இப்படி "ஆ... ஊ..." எனப் பொங்குபவர்களுக்கேத் தெரிந்திருக்கிறது என்பதுதான்.