13.2.16

ஸ்ரீராமஜெயமே தீர்வு

தான் வாழும் கிராமத்தில் அல்லது பகுதியில் அல்லது தன்னைச் சுற்றி நடக்கும் எந்தவொரு அநீதிகளுக்கு எதிராகவும் வாள் சுழற்ற சிறிதளவுகூட முயற்சிக்காமல்; எந்நேரமும் இந்த நாட்டையும் சமூகத்தையும் மாற்றிப்போட முகநூலில் மட்டும் முயற்சித்து கருத்தும் விமர்சனமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் பல அறிவுடையோர்.

எழுதுகிறவன் எழுதுகிறவற்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிறார் மாவோ.

"அச்சமில்லை அச்சமில்லை" என்று விடுதலைக்காக அனல் கக்கி பாட்டெழுதிய பாரதி, போலிசு தேடி வந்ததும் புதுவைக்கு ஓடினார் ஒளிந்துகொள்ள. இறுதியில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்.

மன்னிப்பு கேட்டால் விடுதலை என்ற சூழலில் பகத் சிங் தூக்கு மேடைக்குப் போனார்.

பாரதியின் அச்சமில்லை பாடலைப் படித்து சிலாகித்து வளர்ந்த நம்மால் ஒரு உள்ளூர் கவுன்சிலரைக்கூட எதிர்க்க இயலவில்லை.

உப்புக் கடலில் கலக்கும் நதிநீர் போலவும் கிழவிக்கு கட்டிய பட்டாடை போலவும் அறிவு இங்கே ஜீவனற்று விரவிக் கிடக்கிறது.

இந்த சமூகத்தில் அறிவாளிகள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அநேகமானவர்களின் எழுத்துக்கள் நம் "தேசியக் கவியைப்" போன்றேதான் இருக்கிறது.

மாத வருமானத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடாதபடி மாற்றத்தைக் கொண்டுவரக் கருத்து எழுதும் இத்தகு போராளிகள், கொஞ்சம் தினசரி போராட்டங்களைக் கண்டறிந்து தமக்கு உடன்பாடுள்ள ஒன்றிலாவது பங்கெடுத்தால் இந்தச் சமூகம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டதாக இருக்கும்.

எந்த போராட்டங்களிலும் கலந்துகொள்ள இயலவில்லை என்றாலோ, எந்த அநீதிகளுக்கு எதிராகவும் சிறிதுகூட பங்களிப்பு செய்ய இயலவில்லை என்றாலோ... தினமும் 1000 முறை ஸ்ரீராமஜெயம் எழுதப் பழகலாம். எதையும் செய்ய முயற்சிக்காமல் கருத்து மட்டும் சொல்லத் துடிக்கும் மனநோய்க்கு ஒருவேளை இது மருந்தாகலாம்.

No comments:

Post a Comment