"இந்த சமூகம் இன்னமும் தேறவில்லை என்பதற்கான பல உதாரணங்களுள் ஒன்று, 'தினமணி' இன்னமும் விற்பனையாகிக் கொண்டிருப்பது"
30.7.16
நீதி... நியாயம்...
"அப்பாவி, ஏழை, வலுவற்றவன் ஆகிய மூன்று தரப்பினர் மட்டுமே காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் நீதி கிடைக்குமென நம்பிக் கொண்டிருக்கிறார்கள்ந; எதிர்பார்க்கிறார்கள்"
திரைப்பட தணிக்கைக் குழு
"Cinema Censor Board" - என்பதை "அரை முட்டாள்கள் குழு" என்றும் மொழி பெயர்க்கலாம்.
23.7.16
ஈர்ப்பும் எதிர்ப்பும்...
"எது உனக்கு அறிவுரை சொல்லவில்லையோ, எது உன்னை கட்டாயப்படுத்தவில்லையோ, எது உன்னை உச்சக்குரலில் அழைக்கவில்லையோ, எது உன்னை மன்றாடவில்லையோ, எது உனக்கு விளக்கம் தரவில்லையோ அதை எதிர்த்து நிற்பது கடினம்"
- டபிள்யூ.பி.யீட்ஸ்
"சினிமா ஓர் அற்புத மொழி" - எம்.சிவகுமார்
"சினிமா ஓர் அற்புத மொழி" - எம்.சிவகுமார்
ஒரு பழைய புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தேன். நீண்ட நாட்கள் படிக்காமல் வைத்திருந்தேன். நேற்றுதான் வாசித்தேன். அருமையான 18 தலைப்புகள், அருமையான கட்டுரைகள்; கருத்துக்கள்.
சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு பகல் நாட்பொழுதுகளைக் காட்ட முடியும் ஆனால் தொடர்ச்சியாக வெவ்வேறு இரவு நாட்களைக் காட்டவியலாது, இடையில் ஒரு பகலைக் காட்டினாலொழிய. சினிமா என்பது இன்றைக்கு உலக மக்கள் யாவருக்கும் ஒரு மொழியாகவே மூளையில் பதிந்துள்ளது.
"காலம்" என்பது சினிமாவில் மட்டுமே சுருங்கி விரிகிறது.
எம்.சிவகுமார் அவர்களின் பரந்துபட்ட உலக அறிவையும் சினிமா அனுபவத்தையும் தாங்கிய இந்தச் சிறிய புத்தகம், சினிமா என்னும் "மொழி"யை பல மேற்கோள்கள் மற்றும் உதாரணங்களுடன் ஆழமாய் விளக்குகிறது.
இப்புத்தகம் பற்றிய கிழக்கு பதிப்பக எழுத்தாளர் மருதன் அவர்களின் விமர்சனம் இதோ...
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பேல பெலாஸ் என்னும் மார்க்சிய சிந்தனையாளர் 1946ம் ஆண்டு, பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். சினிமா கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவானதையொட்டி பொன்விழா ஒன்று நடத்தப்படவேண்டும் என்பது இவர் ஆதங்கம். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பேராசிரியருக்கு சினிமா மீது பெரிய மரியாதை இல்லை. கவிதை, கதை, ஓவியம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்தை சினிமாவுக்கு அளிக்க அவர் தயாராக இல்லை. சினிமா மக்களுக்கான ஒரு கலை வடிவம் அல்ல என்று அந்தப் பேராசிரியர் கருதியி்ருக்கிறார். இந்த எண்ணம் தவறானது என்பதை சுட்டிக்காட்ட பேல பெலாஸ் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி அனுப்பினார்.
'சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதை பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. மாறாக, துரதிருஷ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொள்கிறது. மக்களின் மனோநிலையை, கருத்துகளை சினிமா உருவாக்குகிறது. சினிமா குறித்த தேர்ந்த ரசனை மக்களுக்கு இல்லை. அது அவர்களுக்கு தரப்படவில்லை. சினிமா பற்றிய அறிவு, ரசனை அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சினிமா சக்தியின் முன் அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.'
எம். சிவகுமார் எழுதிய 'சினிமா ஓர் அற்புத மொழி' என்னும் புத்தகத்தின் முகப்பில் இந்தக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (சவுத் விஷன், முதல் பதிப்பு டிசம்பர் 2003, விலை ரூ.55, மக்கள் பதிப்பு, ரூ.25). எம். சிவகுமார் எழுதிய இந்தக் கட்டுரையிலும் பேல பெலாஸின் மேற்கண்ட கடிதம் இடம்பெற்றுள்ளது.
மௌனப் படம் தொடங்கி இன்று வரையிலான சினிமாவின் வளர்ச்சியை சுருக்கமாக விவரிக்கிறது 'சினிமா ஓர் அற்புத மொழி'. சினிமாவின் பங்களிப்பு, அடிப்படைத் தொழில்நுட்பம், திரைக்கதை, படத்தொகுப்பு, அரசியல், அழகியல் என்று பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது இந்நூல்.
ஓவியம், மொழி, இசை ஆகிய வடிவங்கள் எப்போது எங்கே தோன்றின என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாது. நாம் வாழும் காலத்தில் தோன்றி, வளர்ந்து, செழிப்புற்ற ஒரே கலை வடிவம் சினிமாதான் என்கிறார் பேல பெலாஸ். மற்ற கலை வடிவங்களுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை (அல்லது அதைவிட கூடுதலாக) சினிமாவுக்குக் கொடுக்கவேண்டும் என்கிறார் இவர்.
இவர் எதிர்பார்த்ததைவிடவும் பல மடங்கு கூடுதல் முக்கியத்துவத்தை சினிமா இன்று பெற்றுள்ளது. பார்த்தோம், ரசித்தோம், வந்தோம் என்பதோடு சினிமாவின் தாக்கம் முடிந்துவிடுவதில்லை. நம் விருப்பு, வெறுப்புகளை; நடை, உடை, பாவனைகளை; சிந்திக்கும், செயல்படும், புரிந்துகொள்ளும் முறையை தீர்மானிக்கும் சக்தியாக சினிமா திகழ்கிறது. சினிமாவுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சிக்கும் இது பொருந்தும்.
இந்த காட்சி ஊடகங்களால் நாம் அடைந்த நன்மை என்ன? விளம்பரப் படங்கள் குறித்து நோம் சாம்ஸ்கியின் கூற்று இது. 'விளம்பரப் படங்கள், அவை வியாபாரம் செய்யும் பொருட்களை விற்பதில்லை. மாறாக, அப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அப்படங்களைப் பார்ப்பவர்களை விற்கிறது. '
புத்தகத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பு இது. பிரபல ஜெர்மன் இயக்குநர் ஒருவர் Circle of Deceit என்னும் படத்தை எடுத்தார். இப்படம் பாலஸ்தீனப் போரை பின்னணியாகக் கொண்டது. இப்படத்துக்கு உண்மையான ராணுவ வீரர்கள் துணை நடிகர்களாக பயன்படுத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட காட்சியின் போது அந்த துணை நடிகர்கள் (ராணுவ வீரர்கள்) இயக்குநரிடம் சொன்னார்கள். 'வேண்டுமானால் ஜன்னல் வழியாக மறைந்திருந்து தெருவில் செல்வோர் யாரையாவது உண்மையிலேயே சுடுகிறோம். நீங்கள் படம் எடுத்துக்கொள்ளுங்கள்.'
17.7.16
"நாளை மற்றொரு நாளே" - ஜி.நாகராஜன்
முந்தைய நாள் போதையின் தொடர்ச்சியாக தான் கண்ட கனவிலிருந்து தத்தித் தடவி விழித்தெழ முயல்வதிலிருந்து அவனது அன்றைய தினம் தொடங்குகிறது. நண்பனின் மனைவி ராக்காயி மோகனாவாக மாறி ‘தொழிலுக்கு’ இறங்கத் தயார் என்று அவனிடம் அறிவிக்கிறாள். முத்துசாமியை சந்திக்கிறான், அவனுக்கு கைம்பெண் ஒருத்தியை ‘ஏற்பாடு’ செய்கிறான், இடையில் சாராயக் கடையில் ஒரு சில்லுவண்டி தகராறில் ஈடுபடுகிறான், முந்தைய நாள் போதையில் நெறி பிரண்ட ஒரு ‘பெரிய மனிதனை’ மிரட்டி காசு பிடுங்குகிறான், தேவி லாட்ஜில் இளைப்பாறி சூடான சோஷலிச விவாதத்தை வேடிக்கை பார்க்கிறான், தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் ‘சேர்த்துக் கொண்ட’ மீனாவிற்கு வேறு ஏற்பாடு செய்ய தரகர் அந்தோணியை சந்திக்கிறான், வீடு திரும்பும் வழியில் ரோட்டில் ஒரு சில்லறை தகராறில் இழுபட்டுக்கொண்டிருந்த தன்னுடைய நீண்டநாள் பகையாளி சோலை பிள்ளையின் மரணத்தை சாத்தியப்படுத்தி, அந்தக் கொலைக்கு சாட்சியாகி சிறைகம்பிகளை ஊடுருவும் வெளிச்சத்தில் அன்றைய தினத்தை மங்கலாக நினைவுகூர முனைவதோடு அவனுடைய அன்றைய தினம் முடிவடைகிறது.
கந்தனின் ஒரு நாளை நம்முன் காட்டும் நாகராஜன், அதனூடாக மெல்லிய நினைவுகளாக பல கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்கிறார். காதலில் நசிந்து தூக்கிட்டு மரணித்த அண்டை வீட்டு பரமேஸ்வரன், கடும் காய்ச்சல் வந்து மரித்துப்போன அவனுடைய மகள் கீதா, கந்தனிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய மகன் சந்திரன், அவனை வளர்த்த ஆயிஷா பீவி, காய்கறி மார்கெட் மொத்த வியாபாரி சுப்பையா செட்டியார், அவருடைய ஆசைநாயகி ஆங்கிலோ இந்திய ஐரீன் என பல துணைபாத்திரங்கள் நினைவுகள் வழியாகவே கட்டமைக்கப்படுகின்றன.
லாரியின் நுனி மோதி மூளை பாதித்து கபே கபே என்று உளறி அரற்றும் அண்டைவீட்டு சிறுமி ஜீவா அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உளறளற்ற வெறும் மௌனத்தில் அடங்குகிறாள். பத்து ரூபாய் காசிற்காக இளமை காலத்தில் நிர்வாணமாக ஓடிய அந்தோணி அதற்குபின் தான் கண்டடைந்த மகத்தான ஞானவாக்கியத்தை கந்தனுக்கு போதிக்கிறார், ‘இந்தப் பணமே ஒரு மானங்கெட்ட விஷயம்’. கருப்பையா டிரைவரின் சாட்சியக்கதை ஒன்று இடையில் ஓடுகிறது, தேவி லாட்ஜ் உருவான கதையும் குறுக்கே விழுகிறது. ஏட்டு ‘பொடியன் பொன்னுசாமி’ போட்ட பொய் வழக்குக்காக முதன் முதலில் கோர்ட்டில் தானே வாதாடிய நினைவு வந்து மீள்கிறது.
சோஷலிச- கம்யுனிச விவாதங்கள் நாவல் முழுவதும் அவ்வப்போது வெவ்வேறு குரல்களின் வழியாக எள்ளல் தொனியில் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. புரட்சி எழுச்சியில் உலகை புரட்டிவிட முடியும் என கனவு காணும் முத்துசாமிக்கும் நாவலின் நாயகன் கந்தனுக்கும் நடக்கும் உரையாடல் இது:
“இந்தச் சமுதாயத்துலே எத்தனையோ கொடுமைகள் நடக்குது” என்றான்.
“நாமும் கொஞ்சம் கொஞ்சம் கொடுமைகள் செய்யலாங்கறே, இல்லே?” என்றான் கந்தன்.
“நாமா ஒன்னும் கொடுமைகள் செய்யலே, சமுதாய அமைப்பு நம்மை அப்படிச் செய்ய வைக்கறது”
“உம்”
“உதாரணமா- அண்ணே, கோவிச்சுக்காதீங்க- நீங்க செல தப்புப் பண்றீங்க இல்லே;, அதுக்கெல்லாம் என்ன காரணம்?”
“கொளுப்பு தான்”
“இல்லண்ணே வறுமைதான் காரணம்”
சாமானிய மனிதன் அறிந்திடாத வேறோர் உலகம் உண்டு, அங்கு மீறல்கள் இயல்பாகவும், ஒழுக்கம் மீறல்களாகவும் பார்க்கப்படும். நாகராஜனின் புனைவுலக மாந்தர்கள் மீறல்களை தங்கள் இயல்பாக கொண்டவர்கள், அது சார்ந்த எந்த நியாயப்படுத்தலும் அவர்களுக்கு தேவையில்லை. தங்கள் நிலைக்காக எவரையும் அவர்கள் நொந்துக்கொள்வதில்லை. சவரம் செய்யும் சிறுவனின் கை உராயும்போது கந்தனுக்கு ஆம்பிளைத்தனமான ஆசை முளைக்கிறது. கோவில் நிலத்தில் இயங்கும் தேவி லாட்ஜில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு முதலில் பொங்கி பின்னர் சமரசத்திற்கு வந்து ‘சகல வசதிகளையும்’ அனுபவிக்கத் துணியும் கோவில் தர்மகர்த்தா, கல்யாணமான பெண் என்றால் ஒரு ரேட், ஆகவில்லையென்றால் ஒரு ரேட் என கணக்கு வைத்து கருக்கலைப்பு செய்யும் டாக்டர் என்று புனித பிம்பங்களை உடைப்பதில் நாகராஜனுக்கு ஒரு அலாதியான இன்பம் போலிருக்கிறது.
எது அறம்? எது ஒழுக்கம்? தன் மனைவியை அவளுடைய இசைவோடு தொழிலுக்கு அனுப்புகிறான் கந்தன், நண்பனின் மனைவியை அவனுக்குத் தெரியாமல் அவளுடைய விருப்பத்தின் பேரில் தொழிலில் ஈடுபடுத்தத் துணிகிறான், ஏமாற்றி காசு பறிக்கிறான், தக்க சமயத்தில் தன்னுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்ள சூழலைப் பயன்படுத்திக் கொள்கிறான், ஆனால் அதே கந்தன் காசுக்காக ஆசைப்பட்டு கருத்தடை ஆபரேஷனுக்கு ஒரு இளைஞனை பிடித்துக்கொடுத்த தரகனை சாராயக்கடையில் சாத்துகிறான், உடல்நிலை நொடிந்து கொண்டிருக்கிறது என்றுணர்ந்து மனைவிக்கு மாற்று ஏற்பாடு செய்கிறான். மனிதனுடைய வாழ்வு சல்லித்தனத்திற்கும் மகத்துவத்திற்கும் இடையில் ஊசாலடிக் கொண்டிருக்கிறது. மகத்துவத்தின் ஒவ்வொரு பாய்ச்சலுக்குப் பின்னும் சல்லித்தனத்தின் சம அளவிலான விசை இருக்கிறது என்பது பௌதிக விதி போலும்.
மிக நுட்பமான பகடிகளும், அங்கதங்களும் சிதறிக்கிடக்கும் இந்த நாவலை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உக்கிரமாகவும் அதேநேரம் பகடிகளுக்கும் அங்கதங்களுக்கும் குறைவில்லாமலும் சித்தரித்த மற்றொரு முக்கிய படைப்பான ஜெயமோகனின் ஏழாம் உலகத்துடன் இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. மாங்காட்டு சாமியும், ராமப்பனும் ஏழாம் உலகத்தை சமூக தளத்திலிருந்து ஒரு ஆன்மீக தளத்தை நோக்கி மெல்லக் கொண்டு சென்றார்கள். கந்தனுக்கு ஆன்மீகத்தை பற்றியும், கடவுளை பற்றியும், மீட்சியை பற்றியும் கவலையில்லை, அது அவனுக்குத் தேவையும் இல்லை, ஏனெனில் அவன் அன்றைய நாளுக்காக மட்டுமே வாழ்பவன்.
நாகராஜனின் உலகத்திலும் அனுபவங்களால் முதிர்ந்த ஞானி ஒருவர் உண்டு, அவர் தரகர் அந்தோணி, எனினும் அவர் வேறு வகையான மனிதர். சூழ்ச்சியே மனிதனை மனிதனாக்குகிறது, பிற மிருகங்களில் இருந்து அவனை வேறுபடுத்தி, வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பதே அதுதான் என்று நம்பும் மனிதர் அவர். பல நுண்ணிய சித்திரங்களை தன்னுடைய நாவலில் அளிக்கிறார் நாகராஜன், சாராயக் கடையில் பய பக்தியுடன் எதிரில் நிற்கும் சீடனுக்கு வேதாந்தம் போதிக்கும் சாராய சாமியார், கொத்து வேலைக்காக காத்திருக்கும் அனைவரையும் ஏற்றிக் கொண்டு போகும்போது, முதிர்ந்த கிழவரும், இளம் கர்பிணி சிறுமியும் மட்டும் எஞ்சி இருப்பார்கள். வேலைக்கு செல்ல முடிவெடுத்து நின்ற முதிய கிழவரை வந்து ஒரு குழந்தை "தாத்தா வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று அழைக்கும், இந்த ஒற்றைவரியின் வழியாக அந்த கிழவரின் வாழ்க்கை கதையையும் அன்றைய நிலையையும் சொல்லிச் செல்கிறார் நாகராஜன்.
நடனமாடும் பவுண்டேய்ன்களைப் (dancing fountains) பார்த்திருப்போம், ஒரே மாதிரிதான் அது ஒவ்வொரு முறையும் ஆடும், ஆனால் அதற்குப் பின்னணியில் தாளகதியை மாற்றி வெவ்வேறு நிகழ்வுகளாகக் காட்டுவார்கள். அதைப்போல்தான் வாசிப்பின் அனுபவங்களை பகிர்தல், ஒவ்வொருவரும் நிகழ்வுகளைத் தான் உணர்ந்த தாளகதியின் லயத்தில் பதிவு செய்வது அதன் வெவ்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக இருக்கும்.
மனிதனின் அன்றாடம் சலிப்பூட்டுவது, திருப்பங்கள் ஏதுமற்ற மந்தமான பயணம், ஆனால் அந்த அர்த்தமற்ற அன்றாடங்களின் தொகுப்பில், நாம் கடந்து வந்த தூரத்தைத் திரும்பி நோக்கினால் அதன் விரிவு நமக்கு பிரமிப்பாகத் தென்படலாம். இந்த நாவலில், கந்தனின் ஒரு நாள் என்பது ஒரு சட்டகம். சட்டகத்திற்குள் சிறைபட்ட நதியின் முப்பரிமாண ஓவியம் போல், அதன் அத்தனை நீர்குமிழ்களும், சுழிப்புகளும், நீரலைகளும் துல்லியமாக தென்படுகின்றன. அடுத்த நொடி அவையாவும் கரைந்து போயிருக்கக்கூடும், ஆனால் இந்த ஓவியத்தின் காலமற்ற ஒற்றை நொடியில் அவை உறைந்து நிற்கின்றன. அதற்கு முன் அங்கு எத்தனையோ குமிழிகள் தோன்றி மறைந்திருக்கும், இனியும் தோன்றும், அவையும் இவை போலிருக்கும், ஆனால் இவையல்ல. நாளை மற்றொரு நாளே - அந்த நாள் ஒவ்வொரு நாளுமாய் அதன் சட்டகத்தில் பூரணமாக நிறைந்து வழிகிறது.
கந்தன் தன்னுடைய மகள் கீதா ஆசையாக விளையாடிக் கொண்டிருக்கும் பலூனை சிகரெட்டால் சுட்டு ‘டப்பென்று’ உடைக்கிறான். அழுது அரற்றுகிறாள், இப்போதே தனக்கு பலூன் வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்கிறாள். மெல்ல சமாதானம் செய்து வெளியேறுகிறான் கந்தன், மீண்டும் வீட்டிற்கு வரும்போது அனலாகக் கொதிக்கிறது அவளது உடல், ஓரிருநாளில் வில்லென வளைந்து மரணமடைகிறாள். “குழந்தைகள், ஆசையா ஒன்ன வச்சிருக்கும்போது அத அழிக்கக்கூடாது’ என்று பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் சொல்லும்போது அப்படி இருக்குமோ என்று யோசிக்கிறான்.
நாகராஜனின் இந்த நாவலின் மையப்படிமமாக இந்த நிகழ்வையே நான் காண்கிறேன். விளையாடிக்கொண்டிருக்கும் பலூன் உடைந்து அழும் குழந்தை, ஒரு பொருளின் அழிவை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் கந்தன், தன்னைப் போலவே அக்குழந்தையும் அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறான். கந்தன் பிறர் போற்றும் எதையும் பொருட்படுத்துவதில்லை, சமூக பொதுஅறங்களும் விழுமியங்களும் விளையாட்டுக்குச் சுட்டு உடைக்கப்பட வேண்டிய ஊதிப்பெருத்த பலூன், அவ்வளவுதான்.
அந்தோணி, கந்தனிடத்தில் சொல்லும் அறிவுரை ஒன்றுண்டு, “தம்பி ஏமாத்தறவங்களும் ஏமார்றவங்களும் இருக்கிறதுதான் உலகத்தின் தன்மை; அதன் அழகுன்ட்டுக்கூட எனக்குப் படுது.” ஆம் ஒருவகையில், இதுதான் நாகராஜனின் படைப்புகளின் தன்மையும் அழகும்கூட.
7.7.16
"கடவுளைப் பார்த்தவனின் கதை" – லியோ டால்ஸ்டாய்
"கடவுளைப் பார்த்தவனின் கதை" - லியோ டால்ஸ்டாய்
எஃபிம் ஒரு பணக்கார விவசாயி. இவரைவிட வசதி குறைந்தவர் எலிஷா போட்ராஃப். இருவரும் ஜெருசலேமிலுள்ள அவர்களின் கடவுளைக் காண கிராமத்தைவிட்டுப் புனிதப் பயணம் போகிறார்கள்.
பாதி வழியில் திரும்புகிறார் எலிஷா. ஜெருசலேம் சென்று திரும்பி வருகிறார் எஃபிம்.
உண்மையில் யார் கடவுளைக் கண்டார்கள்? என்பதை இக்கதையில் சொல்கிறார் லியோ டால்ஸ்டாய்.
நீங்கள் போய்க்கொண்டே இருங்கள் வந்துவிடுகிறேன் என்று வழியில் அருகிலிருக்கும் குடிசைக்குச் செல்லும் எலிஷா, அங்கே ஒரு வயதான கணவன் மனைவியும் ஒரு சிறுவனும் சிறுமியும் நெடுநாள் பட்டினியால் உயிர் ஒடுங்கும் நிலையில் இருப்பதைப் பார்க்கிறார். தன்னிடமிருந்த ரொட்டித் துண்டுகளை அவர்களுக்கு கொடுத்து தேற்றுகிறார். அவர்கள் விவசாயிகள். வறட்சியால் இப்படி ஆகிவிட்டதாக அவர்கள் சொல்லும் கதை அவரை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. தன் புனிதப் பயணத்திற்கான பணத்திலிருந்து அவர்களின் வயலை மீட்டு ஒரு குதிரையும் வாங்கித் தருகிறார். மேலும் உணவுக்கான பொருட்களையும் வாங்கித் தருகிறார். அவர் கடவுளைக் காண எண்ணியிருந்த புனித நாளில் அவர்களுடன் உள்ளூர் தேவாலயத்திலேயே வழிபட்டுவிட்டு மேற்படி செல்ல பணம் இல்லாத காரணத்தால் திரும்பி தன் ஊருக்கு வந்துவிடுகிறார். வழியில் பணத்தை தொலைத்துவிட்டதாக வீட்டில் சொல்கிறார்.
கப்பல் ஏறும் தருவாயில் இனியும் எலிஷாவுக்காக காத்திருக்க இயலாது என்ற நிலையில் தன் புனிதப் பயணத்தை தொடர்கிறார் எஃபிம். வழியெல்லாம் வராமல் போன தன் நண்பரைப் பற்றியே நினைக்கிறார். அங்கே பயணத்தில் ஒரு பக்தன் எஃபிமுக்கு அறிமுகமாகிறான். தன் பணம் தொலைந்துவிட்டதாக அவன் சொல்வதை எஃபிம் நம்பவில்லை. ஏனோ அவனை அவருக்குப் பிடிக்கவில்லை. அவனிடமிருந்து விலகிக்கொள்கிறார். எல்லா சடங்குகளையும் பக்தியாய் முடிக்கிறார். அங்கே கூட்ட நெரிசலில் எலிஷா மாதிரி ஊரு ஆளைத் தொடர்ந்து 3 நாளாய் பார்க்கிறார். தனக்கு முன் எப்படி வந்திருக்க முடியும் என்று அவரைப் பற்றியே யோசிக்கிறார். மேலும் பயணத்தில் பல சிறு சிறு இடர்ப்பாடுகள் நேர்கிறது. ஆறு வாரம் ஜெருசலேத்திலேயே தங்கி ஊர் திரும்புகிறார். வழியில் எலிஷா தண்ணீர் குடிக்கச் சென்ற குடிசைக்குச் சென்று அவரைப் பற்றி கேட்க நினைக்கிறார். அங்கிருக்கும் சிறுவர்கள் இவரை மிகவும் உபசரிக்கிறார்கள். ஒரு வழிப்போக்கரை இப்படி உபசரிக்கும் அவர்களை வியக்கிறார். அவர்கள் அனைவரும் எலிஷாவைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
ஒரு வருடம் கழித்து ஊருக்குள் வருகிறார் எஃபிம். பொறுப்பற்ற முறையில் வாழ்ந்த தன் மகன் தன்னுடன் சண்டையிடுகிறான். அவனைப் பற்றி ஊர் தலைவரிடம் புகார் செய்யச் செல்லும் வழியில் எலிஷா வீட்டுக்குச் சென்று பார்க்கிறார். அவர் மகிழ்ச்சிகரமாக தேனீ வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு விஷயம் புரிகிறது...
“கடவுள் மேல் ஒருவனுக்கு உண்மையிலேயே பக்தி இருந்தால்; கடவுளின் விருப்பப்படி அவன் நடக்க நினைத்தால்; அவன் முதலில் செய்ய வேண்டியது, அவன் வாழும் காலத்திலேயே மற்றவர்களின் மேல் அன்பு செலுத்தி அவர்களுக்கு தன்னால் இயன்ற நல்லவைகளை செய்ய வேண்டும். புனிதப்பயணம் போவதால் மட்டும் கடவுளை நெருங்கிவிட முடியாது”
"மானுட வாசிப்பு" – தொ.ப. –வின் தெறிப்புகள்
"மானுட வாசிப்பு" - தொ.ப. -வின் தெறிப்புகள்
(செவ்வி: தயாளன் & ஏ.சண்முகானந்தம்)
அரசியல், மதம், சாதி, பண்பாடு, புழங்கு பொருள் பண்பாடு, உணவு, ஆய்வு ஆளுமைகள், சித்தர் இலக்கியம், கல்வி, மொழி, சுற்றுச்சூழல், தலித்தியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம், நாட்டார் வழக்காற்றியல், கோவில், அழகர் கோவில், பாரதியார், சமூகம், கடவுள் மற்றும் தெய்வம் என்ற சகல விஷயங்கள் பற்றியும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு கண்ணோட்ட கருத்துக்களை இந்நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது.
கடவுள் வேறு தெய்வம் என்பது வேறு – ஏன் குலதெய்வக் கோயில்கள் மட்டும் வடக்கு பார்த்து உள்ளன? – சமணம் வேரூன்றாமைக்கு காரணம் என்ன? – தமிழர் சமயம் எது? – தமிழர்கள் பிறர் போல் இங்கிருந்து இடம் பெயராமைக்கான காரணம்? – ராஜராஜன் என்ன சாதி? – தமிழ் பிராமணர்கள் உண்டா? – ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் பற்றி..? – மஞ்சுவிரட்டு – தாலி – திருநீறு பூசுவது – குங்குமம் வைப்பது – தை, சித்திரை தமிழ் வருடப் பிறப்பு எது? – திருவள்ளுவர் சமணரா? சைவரா? – தெய்வங்களுக்கு மாலை அணிவிப்பதேன்? – தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான தலைமை இல்லை – தூய தமிழ்ச்சாதி இருக்கிறதா? –களப்பிர்ரகள் காலம் இருண்ட காலமா? - நாட்டுப்புறத் தெய்வங்கள் மலையாளத்திலிருந்து வந்தவைகளா? – காளி என்ற பெயரின் அர்த்தம்? – சைவ மடங்கள் சாதி மடங்கள்? – சாதி இறுக்கம் அதிகமான காலம் பல்லவர் காலமா? ராசராசன் காலமா? – அழகர் முதலில் தேனூர் ஆற்றில் இறங்கியதை திருமலை நாயக்கர்தான் மாற்றினார் – பண்பாட்டு ஆய்வாளர் என்ற முறையில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? – இவைகள் மட்டுமன்றி இன்னும் ஏராளமானவைகளைப் பற்றின தொ.ப அவர்களின் செவ்விகளை உள்ளடக்கியுள்ளது இப்புத்தகம்.
தமிழ்ச்சமூகத்தைப் பற்றின தேடல் உள்ளவர்களுக்கு ஒரு அருமையான புத்தகம். கண்டிப்பாய் படியுங்கள்...
3.7.16
"குறத்தி முடுக்கு" - ஜி.நாகராஜன்
“குறத்தி முடுக்கு” – ஜி.நாகராஜன்
தங்கம் 20 வயது இளம்பெண். நடராஜன், அவளது அக்காள் கணவரின் தம்பி. அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இருப்பினும் தங்கத்துடனும் கணவனாக வாழ்கிறார். தங்கத்தின் பேராசையால் வங்கியில் கையாடல் செய்துவிட்டு அவர் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக தங்கமும் நடராஜனும் குறத்தி முடுக்குக்கு வந்து சேருகிறார்கள். மதுரையில், அதுவொரு பாலியல் தொழில் நடக்கும் பகுதி. தங்கம் பாலியல் தொழிலாளியாகிறாள். அங்கு அவளுக்கு அத்தானாக மாறும் நடராஜன் அடுத்தவர்களை ஏமாற்றி வாழும் வாழ்க்கையை மேற்கொள்கிறான்.
தங்கத்திற்கு வாடிக்கையாளராகச் செல்லும் பத்திரிகையாளர் ஒருவர் அவள் மீது காதல் கொள்கிறார். அவளும் அவரிடம் தாராளமாக நடந்துகொள்கிறாள். ஒரு கட்டத்தில் அவளது அத்தான் நடராஜனின் அனுமதியுடன் அவளைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார் பத்திரிகையாளர். திருமணம் நடைபெறாமல் போகிறது. தங்கத்தை விபச்சார வழக்கில் போலிஸ் பிடித்துச் செல்ல, “அவள் விபச்சாரியல்ல; நாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்” என்று நீதிமன்றத்தில் அவளுக்காக சாட்சி சொல்கிறார் பத்திரிகையாளர். தங்கம் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். அதன் பின்னர் அவள் குறத்தி முடுக்கில் காணாமல் எங்கோ சென்று விடுகிறாள். பத்திரிகையாளருக்கு மிகவும் ஏமாற்றமாகிறது.
நெல்லையிலிருந்து தன் பத்திரிகை வேலையை திருவனந்தபுரத்திற்கு மாற்றிச் செல்லும் அவர், அங்கு குடிசைகள் நிறைந்த பகுதியின் ஒரு குழாயடியில் தங்கத்தைப் பார்க்கிறார். அங்கு நடராஜன் கூலி வேலை செய்ய அதன் வரும்படியில்தான் இருவரும் பிழைப்பதாக சொல்கிறாள். அத்துடன் தன்னால் தன் அத்தான் நடராஜனின் குடும்பம் பாழான கதையை கண்ணீருடன் சொல்கிறாள். அடுத்த முறை வரும்போது பார்ப்பதாக பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து தன் அறைக்கு வருகிறார் பத்திரிகையாளர். குறத்தி முடுக்கில் தங்கம் செழிப்பாக வாழ்ந்ததையும், அவளுடனான தன் நினைவுகளையும் எண்ணிப் பார்க்கிறார்.
இதுதான் கதை.
முன்னம் அவள் மீது இருந்த ஈர்ப்பைவிட இப்போது காமமற்ற; எதையோ இழந்த ஒரு உணர்வில் தவிக்கிறார். “வசதி கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வைப்பாட்டியாக வாழ்வார்கள்” என்று குறத்தி முடுக்கைப் பற்றி முன்னர் அவர் நினைத்தது தவறென்று உணர்கிறார்.
குறத்தி முடுக்கில் வாழ்வது பிடிக்காமல் தூக்கு மாட்டிக்கொள்ள முயலும் பெண் ஒருத்தி, அத்தருவாயிலும் தன் தரகனுக்கு பயந்து வாடிக்கையாளருடன் நேரம் கழித்துவிட்டு மீண்டும் தூக்குக்கு முயல்கிறாள்.
தனது பரந்த அனுபவங்களை மிகவும் தேர்ந்த முதிர்ச்சியான பார்வையுடன் இக்கதையைப் பகிர்கிறார் எழுத்தாளர். நாம் ஏற்றுக்கொண்ட எல்லா கற்பிதங்களையும் எளிமையாக கேள்விக்குள்ளாக்குகிறார்.
1963-ல் வெளியானது இக்கதை. ஜி,நாகராஜன், தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கியமான ஆளுமை என்பதை இக்கதையை வாசிக்கும்போதே இயல்பாய் உணர முடிகிறது.
கதையின் ஒரு பகுதி...
// “என்ன சார், அந்தப் பொண்ணைப் போய்க் கல்யாணம் செய்துக்கணுங்கறீங்க” என்கிறார் இன்ஸ்பெக்டர்.
“தங்கமான பொண்ணு சார்...” என்கிறேன்.
“தங்கமானது சரிதான். கெட்டுப் போனதில்லையா?” என்கிறார் இன்ஸ்பெக்டர்.
“நானும் கெட்டுப் போனவன்தான் சார்...” என்கிறேன். //
மாக்கள் சமூகம்...
"சுவாதி கொலை"
கொலை என்பது ஒரு வன்முறை. குற்றம். சமூக அநீதி. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத; ஆதரிக்க முடியாத ஒன்று.
கொலையை கொலையாகப் பார்க்காமல் அதில் ஜாதியையும் மதத்தையும் நுழைப்பது படு கேவலமான கீழ்த்தரமான வன்முறை.
ஜாதி என்ற ஒன்றின் காரணமாக நிகழும் வன்முறைகளை ஜாதியின் பேரால்தான் அடையாளப்படுத்தப்படும்; அடையாளப்படுத்த முடியும். இதுவொரு சாதாரண அடிப்படை அறிவு.
ஒரு பெண் கொல்லப்பட்டால் பெண்ணியவாதிகள்தான் போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், பெண்ணியவாதிகளை கேலியாய் எழுதுவதும் மிக மிக கேவலமான மனநிலை.
நாடு பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கொலையாளியின் அம்மாவையும் சகோதரியையும் படம் பிடிக்கும் பத்திரிகையாளின் மனநிலை...
கொலையானவரின் ஜாதி பார்க்கும் மனநிலை...
கொன்றவனின் ஜாதி பார்க்கும் மனநிலை...
இனி அரசாங்கம் இப்படி ஒன்றைச் செய்யலாம்; அதாவது சிறையிலிருக்கும் கொலை மற்றும் கூலிப்படை, திருட்டுக் குற்றவாளிகள், பெண் பாலியல் தொழிலாளிகள், பாலியல் தரகர்கள் என அனைவரின் ஜாதிகளையும் ஆராய்ந்து கணக்கெடுத்து புள்ளி விவரம் வெளியிட்டுவிடலாம்.
2.7.16
"கீதாரி" - சு.தமிழ்ச்செல்வி
"கீதாரி" - சு.தமிழ்ச்செல்வி
10 மணிக்கு படிக்க ஆரம்பித்து இந்த நாவலை 01:47க்கு முடித்து வைத்தேன்.
படிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனசு மிகவும் கணக்க ஆரம்பித்துவிட்டது. கடைசிப் பக்கம் வரையிலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
தோழர் ச.பாலமுருகன் அவர்களின் "சோளகர் தொட்டி"யும், தோழர் தியாகு அவர்களின் "கம்பிக்குள் வெளிச்சங்கள்" தொடரில் வரும் சிறைக்கதிகளின் கதைகளும் தஸ்லிமா நஸ்ரினின் "லஜ்ஜா"வும் முன்னர் என்னை தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.
எவ்வளவோ புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு மன அழுத்தத்துடனும் கண்ணீருடனும் ஒரு நாவலைப் படித்த நினைவில்லை.
எழுத்துக்கள்தான் எவ்வளவு வலிமையானது...!! எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் எழுத்தாளுமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. என் வாழ்நாள் வரை மறக்க முடியாத எழுத்துக்கள்.
கீதாரியின் 70 வது பக்கம் வருகையில் எனக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டது. மேற்படி தொடர இயலாமல் சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே தொடர்ந்தேன்.
"ஆடுகளும் ஆட்டிடையர்களும் இனி ராமு கீதாரியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என் வாழ்நாள் முழுதும்"
1.7.16
இன்றைய சினிமாவின் நிலை
பல மாதங்களாய் வருடங்களாய் கஷ்டப்பட்டு படமெடுத்து அது நன்றாக இருக்கிறது என்று பேர் எடுத்தாலும் ஒரு வாரத்திற்கு மேல் திரையரங்கில் படமில்லை. கிடைப்பதும் குறைவான திரையரங்குகளே.
திருட்டு டிவிடி, ப்ளாக் டிக்கெட், படத்தை வெளியிடும் & தொலைக்காட்சிகளுக்கு வாங்கி விற்கும் இடைத்தரகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்குகூட படம் எடுக்க பணம் முதலீடு செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை.
இதையெல்லாம் முறைப்படுத்த யார் முயற்சி எடுக்கிறார்கள் தெரியவில்லை. செங்கல்பட்டு பூந்தமல்லி தாண்டினால் தெரியாத நடிகனெல்லாம் கோடிகளில் சம்பளம் கேட்கிறான்.
முந்தைய படத்தின் வசூலை எடுத்துக்காட்டி நடிகர்களின் சம்பளத்தை கட்டுப்படுத்தக்கூட இங்கு எந்த சங்கமும் வலுவாய் இருப்பதாய் தெரியவில்லை.
சமூக அவலங்களைக் கண்டு திரையில் பொங்கும் படைப்பாளிகள் சினிமாவுக்குள் நடக்கும் சுரண்டல்களை கண்டும் காணாமல் கடந்துவிடுகிறார்கள்.
நஷ்டத்தில் அழிந்துபோன தயாரிப்பாளர்களின் படங்களின் நகைச்சுவை காட்சிகளை மீண்டும் மீண்டும் போட்டு சம்பாதிக்கின்றன தொலைக்காட்சிகள். அதில் குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்தால்கூட உதவியாக இருக்கும்.
ஒரேமுறை முதலீடு செய்துவிட்டு தொடர்ந்து கோடிகளில் பணம் அள்ளும் Qube-காரன் கூட படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் குரலை பொருட்படுத்துவதில்லை.
டிவி தொடர்களில் நடக்கும் சீரழிவுகளைவிட சினிமா மோசமாகப் போய்விடவில்லை. இதற்கு "சென்சார் போர்டு" காமெடி வேறு.
பாராட்டு பெறும் சிறிய பட்ஜெட் படங்களால் பணம் ஈட்ட இயலவில்லை.
எல்லா தொழிலிலும் போட்டி இருக்கத்தால் செய்யும். அதை முறைப்படுத்தவே சங்கங்கள். கேள்விப்பட்டவரையில் 'உங்களை யாரு படம் எடுக்கச் சொன்னது?' என்று கேள்வி கேட்க மட்டுமே ஒரு சங்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
நிர்வாகத் திறமையற்றவர்களால் அந்த சங்கம் மட்டுமல்ல; அந்த தொழிலும் சீர் கெடுகிறது.
Subscribe to:
Posts (Atom)