27.8.17

சமூகத்தின் அவமானம்

இது 2017 ம் ஆண்டு.

அதாவது அறிவியல் மிகவும் வளர்ந்து அதை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலகட்டம். விண்வெளியை மனிதன் கைவசப்படுத்திக் கொண்டிருக்கும் காலம். பரந்து விரிந்து கிடக்கும் பூமியை மனிதன் தன் அறிவால் சிறிய பந்து போல் சுருக்கியுள்ள காலகட்டம்.

ஆனால் இங்கோ கூட்டமாய் சென்று அப்பாவி மக்களின் குடிசையை இன்னமும் ஜாதியின் பேரால் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதிவெறியை வளர்க்க கட்சிகள், தலைவர்கள், தொண்டர்கள். இத்தனை காவல் நிலையங்கள், இத்தனை நீதிமன்றங்கள் இருந்தும் இதெல்லாம் வெளிப்படையாக தொடர்ந்து நடக்கின்றன.

நாகரிகம் உள்ள, சிந்திக்கும் அறிவு உள்ள மனிதர்கள் யாரும் இதை எப்போதும் ஆதரிப்பதில்லை. இதையெல்லாம் நியாயமென்று எவன் பேசினாலும் அவன் மனித ஜென்மமே அல்ல.

தொடர்ந்து தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் தாக்கப்படுகின்றன; கொளுத்தப்படுகின்றன.

காஞ்சிபுரம் அருகே நல்லூரில் நடந்த இது ஏதோ இருதரப்பு மக்களுக்கிடையிலான பிரச்சினை மட்டுமல்ல. இன்றைய சமூகத்தின் அவமானம்.

இதைக் கண்டும் காணாமல், கண்டிக்காமல், தீர்வுக்கு வழி தேட முனையாமல், மாற்ற உழைக்காமல் எவர் தமிழ்த்தேசியம் பேசினாலும் அது ஏட்டு சுரக்காயே.

அனைத்து மக்களையும் அறிவுடையோர்களாக்கி, பூமியில் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு போக வைக்கும் கட்சியும் நற்சிந்தனை கொண்ட தலைவனும் ஆட்சியும் இங்கே ஏற்படும் காலம் எந்த காலமோ?

காட்டுமிராண்டிகளின் நாடு

"ஜாதி, மதம், பக்தி, காதல், புனிதம், பண்பாடு, கடவுள், விதி, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், கற்பு, சொர்கம், நரகம், சகுனம், சடங்கு, முன்பிறவி, மறுஜென்மம்....

இயற்கையை தவறாக விளங்கிக்கொண்டு இப்படி எதற்கும் பயனற்ற அற்ப காரணங்களால் தினமும் நடக்கும் தனி மனித படுகொலைகளின் மூலம் இந்தியா ஒரு காட்டுமிராண்டிகளின் நாடு என்பது உறுதிபட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கே இருக்கும் கோயில்கள், கல்வி நிலையங்கள் எல்லாமும் தொழில் நிறுவனங்களாக இருப்பதன் வெளிப்பாடுதான் இது.

இந்த நாட்டின் 70 ஆண்டுகால சுதந்திரம் இன்னும் மனிதர்களை மனிதர்களாக உணர்த்தி யாவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. எளிய மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.

20.8.17

பார்வை மாற வேண்டும்

சாதியை ஒழிக்க வழி என்ற அம்பேத்கரின் நூலை மிக ஆய்ந்து படியுங்கள். அவர் தெளிவாக விளக்கியுள்ளார். பிற மக்களை குறை சொல்வதால் எதுவும் மாறிவிடாது. அவர்களும் ஜாதி என்ற கற்பனையில் அறியாமையில் வாழ்கிறார்கள், தொடர் அறிவு பிரச்சாரம் ஒன்றே மாற்றத்திற்கு வழி என.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமையை யாவரும் ஏற்கும் நிலையை நோக்கி வழிகோல வேண்டும். ஒரே ஜாதியில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஜாதி வெறியர்களுக்கு எதிராக திருப்பி வெறிநாய்களை தனிமைபடுத்த வேண்டும்.

இயக்குநர் ரஞ்சித் அடிக்கடி சொல்வதைப்போல "கலந்துரையாடல்" நடக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள்  மட்டும் அல்லாது யாருக்கு அநீதி நடந்தாலும் வலுவாக குரல் கொடுத்து அவர்களுக்காகவும் போராடி கலக்க வேண்டும். எல்லோரையும் பொது அநீதிக்கு எதிராக திரும்பும் மனநிலைக்கு கொண்டுவர வேண்டும். ஆதிக்க ஜாதியில் பிறந்த ஜனநாயகவாதிகளை குறைசொல்வதை விட்டுவிட்டு அந்த எண்ணிக்கையை மேலும் கூட்ட வேலை செய்ய வேண்டும். அவர்களினூடாகத்தான் அங்கு ஊடுருவ முடியும்.

விமர்சனத்தை ஆக்கப்பூர்வமாக வைப்பதே மாற்றத்திற்கான வழி.

18.8.17

இட ஒதுக்கீடு

எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா, ஆனா எனக்கு சீட்டு கிடைக்கல, என்னை விட கம்மி மார்க் எடுத்த பொண்ணு டாக்டர் சீட் கிடைச்சிருச்சு. பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு முறை வரணும்

இந்த பதிவு எழுதிய தோழருடன் அந்தபக்கம் விவாதம் ஓடுது. ஆனா அது அவர் ஒருவர் மனநிலை மட்டுமல்ல. பல சங்கிகளும் அப்படி தான் பேசிட்டு திரியுங்க

எனக்கு கிடைக்கல என்பதில் எவ்வளவு வலி. ஆனால் பல நூறு ஆண்டுகளகாக செருப்பு அணியக்கூடாது, மேல் சட்டை அணியக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது. பண்ணையம் என்னும் அடிமை தொழில் தான் செய்யவேண்டும் என்று ஒடுக்கிவைக்கப்பட்ட அந்த சமூகத்தில் ஒரு பெண் டாக்டர் ஆவது அந்த சமூகத்திற்கே எவ்வளவு வலி நிவாரணி..

எதுக்கு பல நூற்றாண்டுகளா போகனும். இப்பவும் பல கிராமங்களில் இரட்டை குவளை இருந்துட்டு தான் இருக்கு. ஒடுக்கப்பட்ட பிரிவினரை வயசு வித்தியாசம் இல்லாமல் சிறுவன் கூட பெயர் சொல்லி அழைக்கும் அவலம். சாதி பெயருடன் கெட்டவார்த்தை சேர்த்து அழைக்கும் அவலம். ஊர் தெருவுக்குள் பிணம் எடுத்துசெல்லக்கூடாது. சாமி ஊர்வலம் அவர்கள் தெருவுக்கு வராது என்று எத்தனை பிரிவினைகள்

யாரோ ஒருத்தர் பொருளாதாரரீதியா வளர்த்துட்டாருப்பா, நீங்க அந்த வீட்டில் பெண் எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது பெண் கொடுக்கமுடியுமா? இப்போ உங்களுக்கு எது தடை? அதான் அவர்கள் பொருளாதாரரீதியா மேலே தானே இருக்காங்க. அப்போ தடை வேற சாதி/ அப்படி தானே. அது எந்த சாதியாக இருந்தாலும் நீங்கள் சாதி பார்ப்பீர்களேயானால் அந்த சாதிய சிந்தனை உங்களை விட்டு அகலும் வரை சாதியரீதியான இடஒதுக்கீடு இருந்தே தீரும்.

ஒரு சாதி மறுப்பாளன் ஏன் சாதியரீதியிலான இட ஒதுக்கீடு கேட்க வேண்டும் எங்கிறார்கள். சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை ஒடுக்கி வைத்து, தாழ்ந்தபட்டவர் என்ற மனநிலைக்கு தள்ளிய பொழுது அந்த புத்தி இருக்கவேண்டும். நான் சாதிமறுப்பாளனா ஆக்க்கரணமே உங்களை போன்ற ஆதிக்கசாதிவெறி பிடித்த சாக்கடைகள்

Raj Arun (வால்பையன்)

ஆன்மீகம் / அறிவியல்

ஒருவனை விஷப்பாம்பு தீண்டிவிட்டால் உடனடியாக ஆடுதீண்டாப்பாளையை தின்னக் கொடுத்து விஷத்தை முறிக்கச் செய்து அவன் உயிரைக் காப்பாற்றலாம். அதே அவனிடம் ஆடுதீண்டாப்பாளையை நினைத்துக்கொண்டே இருக்கச் சொன்னால் விஷம் முறியுமா? உயிர்தான் பிழைக்குமா?

உழைப்பவர்களும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களும்தான் இந்த பூமியின் எல்லா நல்ல / தீய விளைவுகளுக்கும் காரணம். இந்த உலகை; வாழ்க்கையை முழுமையாய் ரசிக்க மதங்களோ ஆன்மீகமோ தேவையில்லை. குறைந்தபட்ச அறிவியல் பார்வையே போதுமானது.

மத தத்துவங்கள் தங்கள் புரூடாக்களுக்கு ஒவ்வொரு தலைமுறையிலும் விதவிதமான முகமூடிகள் அணிந்துகொண்டே தப்பிப் பிழைத்து வருகிறது.

அறிவியலோ மிக நேர்மையாக தன் குறைகளை ஒப்புக்கொண்டு தன்னை புனரமைத்துக்கொண்டே இருக்கிறது.

"எண்ணங்களே வாழ்வை மாற்றும் என்பது ஆன்மீகம். எண்ணிக்கொண்டே இருப்பதனால் மட்டும் வாழ்க்கை மாறிவிடாது, அதன்மீது 'போதிய' உழைப்புச் சக்தியை செலுத்தினாலே மாறும் என்பது அறிவியல்."

அறிவியல் யதார்த்தமானது. ஆன்மீகம் யாதார்த்தத்திற்கு எதிரானது.

- வி மூ

17.8.17

'பாரதிராஜா' போலி மீட்பர்

'பாரதிராஜா' - போலி மீட்பர்
- B.R.மகாதேவன்,
பக்கம் 112, விலை 100 ரூ, நிழல் வெளியீடு.

ஒரு இயக்குநரை சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் அலுவலகத்தில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். படித்துவிட்டுத் தருவதாய் வாங்கி வந்தேன். வாசித்தேன்.

இதில் பாரதிராஜா அவர்கள் இயக்கிய "கருத்தம்மா, முதல் மரியாதை, மண் வாசனை, வேதம் புதிது, பதினாறு வயதினிலே" என்ற திரைப்படங்களைக் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குநரின்; கதாசிரியனின் கற்பனை உலகம். அதற்குள் சொல்லப்பட்ட நியதிகளை வைத்து மட்டும் ஒருவருக்கு பிடித்துள்ளது / பிடிக்கவில்லை அல்லது இன்னும் இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சனம் வைப்பது தவறில்லை. ஆனால் அவர் எப்படி இப்படி யோசித்திருக்கலாம்? இப்படித்தான் யோசித்திருக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு அவர்களே தனியாக படம் இயக்கலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை.

இப்புத்தகத்தில் முன்வைக்கப்படும் சில விமர்சனங்கள் யாதெனில்...

* பாரதிராஜாவின் படங்களில் இருப்பது அசலான கிராமங்கள் இல்லை. அவரது கற்பனையில் உருவான போலியான கிராமங்கள்தான். கதாபாத்திரங்களும் அவ்வாறே. கிராமத்துப் படங்களை அவருடைய படங்களை வைத்து அளவிடுதல் கூடாது.
* 16 வயதினிலே மிக சாதாரணமான படம்.
* அவசியமே இல்லாதபோதும் ஜாதி அடையாளங்களை கதாபாத்திரங்களுக்கு வெளிப்படையாக வைக்கும் வழக்கத்தை கொண்டுவந்தது அவர்தான்.
* இரவு பகல் காலங்கள் பெரும்பாலும் அவர் படங்களில் குழப்பமாகவே காட்டப்பட்டிருக்கும்.
* எந்தப் பிரச்சினையை முக்கியமாக எடுக்கிறாரே அதை நேர்மையாக அணுகாமல் அதிலிருந்து நழுவி வேறொரு முடிவுடன் வழக்கமான தன் அருளுரையுடன் படத்தை முடித்திருப்பார்.
* கிராமங்களில் ஜாதி சார்ந்த பிரச்சினைகளே இல்லாதபடி மறைத்திருப்பார்.
* வேதம் புதிது தெளிவான சிந்தனையில்லாத படம்.
* கருத்தம்மா - சிசுக்கொலையை அழுத்திச் சொல்வதிலிருந்து விலகி நிற்கும் படம்

இப்படி பலவாறாக மேற்சொன்ன படங்களைப் பற்றி விமர்சனம் வைக்கிறார் புத்தக ஆசிரியர். வெறும் விமர்சனம் மட்டும் வைக்காமல், அப்படங்களின் மையப் பிரச்சினை எதுவோ அதை இப்படிக் கையாண்டிருக்கலாம் என்றும் எழுதியிருக்கிறார். அதில் சில நன்றாகவும் இருக்கிறது.

நாம் மிகவும் ரசித்த படங்களை ஒருவர் எந்தக் கோணத்தில் விமர்சனம் வைத்திருக்கிறார் என்று அறியும் ஆவலே இந்தப் புத்தகத்தை வாசிக்க வைத்தது. சில ஏற்புடையதாகவும் பல ஏற்கத்தக்கதல்லாததாகவும் இருக்கிறது.

பல்வேறு விமர்சன கோணங்களை விரும்புபவர்கள் ஒருமுறை வாசிக்கலாம். விரயம் ஒன்றுமில்லை.

2.8.17

விவசாயிகளுக்கு தனுஷின் உதவி

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆளுக்கு 50 ஆயிரம் என 80 லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

முதலில் இதற்கு இந்த அரசு அசிங்கப்பட வேண்டும்.

தனுஷின் உதவியைப் பாராட்டுவோம். விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் ஏதேனுமாவது செய்பவர்களை விமர்சிப்பது நியாயமில்லை. அதே சமயத்தில் இது தனுஷின் அரசியல் முதலீடு ஆகாதவரையில் நல்லதே. இப்படி ஆராயாமல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் பொம்மையானதால்தான் விவசாயிகளுக்கு இந்த நிலை.

அரசியலுக்கு வருவது தனுஷின் பிறப்புரிமை. அதை இப்படி தொடர்ந்து விவசாயிகளுக்கான குரலாகவும் போராட்டங்களில் பங்கெடுப்பாகவும் மாற்றினால் நல்லதே.

கௌரவம்...?

"உனது சாவு செய்தி கேட்டுகூட வர நேரமில்லாமல் தவிர்க்கப்போகிறவர்கள் முன் நீ எவ்வளவு கௌரவமாய் வாழ்ந்தும் என்ன பயன்?

நீ நீயாகவே இரு"