'பாரதிராஜா' - போலி மீட்பர்
- B.R.மகாதேவன்,
பக்கம் 112, விலை 100 ரூ, நிழல் வெளியீடு.
ஒரு இயக்குநரை சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் அலுவலகத்தில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். படித்துவிட்டுத் தருவதாய் வாங்கி வந்தேன். வாசித்தேன்.
இதில் பாரதிராஜா அவர்கள் இயக்கிய "கருத்தம்மா, முதல் மரியாதை, மண் வாசனை, வேதம் புதிது, பதினாறு வயதினிலே" என்ற திரைப்படங்களைக் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குநரின்; கதாசிரியனின் கற்பனை உலகம். அதற்குள் சொல்லப்பட்ட நியதிகளை வைத்து மட்டும் ஒருவருக்கு பிடித்துள்ளது / பிடிக்கவில்லை அல்லது இன்னும் இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சனம் வைப்பது தவறில்லை. ஆனால் அவர் எப்படி இப்படி யோசித்திருக்கலாம்? இப்படித்தான் யோசித்திருக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு அவர்களே தனியாக படம் இயக்கலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை.
இப்புத்தகத்தில் முன்வைக்கப்படும் சில விமர்சனங்கள் யாதெனில்...
* பாரதிராஜாவின் படங்களில் இருப்பது அசலான கிராமங்கள் இல்லை. அவரது கற்பனையில் உருவான போலியான கிராமங்கள்தான். கதாபாத்திரங்களும் அவ்வாறே. கிராமத்துப் படங்களை அவருடைய படங்களை வைத்து அளவிடுதல் கூடாது.
* 16 வயதினிலே மிக சாதாரணமான படம்.
* அவசியமே இல்லாதபோதும் ஜாதி அடையாளங்களை கதாபாத்திரங்களுக்கு வெளிப்படையாக வைக்கும் வழக்கத்தை கொண்டுவந்தது அவர்தான்.
* இரவு பகல் காலங்கள் பெரும்பாலும் அவர் படங்களில் குழப்பமாகவே காட்டப்பட்டிருக்கும்.
* எந்தப் பிரச்சினையை முக்கியமாக எடுக்கிறாரே அதை நேர்மையாக அணுகாமல் அதிலிருந்து நழுவி வேறொரு முடிவுடன் வழக்கமான தன் அருளுரையுடன் படத்தை முடித்திருப்பார்.
* கிராமங்களில் ஜாதி சார்ந்த பிரச்சினைகளே இல்லாதபடி மறைத்திருப்பார்.
* வேதம் புதிது தெளிவான சிந்தனையில்லாத படம்.
* கருத்தம்மா - சிசுக்கொலையை அழுத்திச் சொல்வதிலிருந்து விலகி நிற்கும் படம்
இப்படி பலவாறாக மேற்சொன்ன படங்களைப் பற்றி விமர்சனம் வைக்கிறார் புத்தக ஆசிரியர். வெறும் விமர்சனம் மட்டும் வைக்காமல், அப்படங்களின் மையப் பிரச்சினை எதுவோ அதை இப்படிக் கையாண்டிருக்கலாம் என்றும் எழுதியிருக்கிறார். அதில் சில நன்றாகவும் இருக்கிறது.
நாம் மிகவும் ரசித்த படங்களை ஒருவர் எந்தக் கோணத்தில் விமர்சனம் வைத்திருக்கிறார் என்று அறியும் ஆவலே இந்தப் புத்தகத்தை வாசிக்க வைத்தது. சில ஏற்புடையதாகவும் பல ஏற்கத்தக்கதல்லாததாகவும் இருக்கிறது.
பல்வேறு விமர்சன கோணங்களை விரும்புபவர்கள் ஒருமுறை வாசிக்கலாம். விரயம் ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment