ஈழம் உருவாகுமா? ஒரு யதார்த்தமான கருத்து...
1. நெடுநாட்களாக விசாரணை செய்யப்படாமல் சிறப்பு முகாமில் அடைந்துகிடக்கும் ஈழத்தமிழர்களை க்யூ பிராஞ்ச் காவல் கொடுமையிலிருந்து விடுவிக்க அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்களிடம் யாதொரு தெளிவான செயல்திட்டமுமில்லை.
2. ஒரு அகதி முகாமிலுள்ள தமிழ் பெண்களை க்யூ பிராஞ்ச் காவலர்களே வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளியிருப்பது பற்றி எந்தக் கட்சிகளிடமும் எதிர்வினைகளில்லை.
3. தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியுள்ள பல ஈழ தமிழர்களுக்கு அருகாமையிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து நேரடியாகவும் மறைமுகமானதுமான நெருக்கடிகள் இருக்கிறது. எல்லா காவல் நிலையத்திலிருந்தும் இப்படியானவர்களின் தகவலை பணத்தால் திரட்டிக்கொள்ளும் வலிமை இங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இருக்கிறது.
4. இங்குள்ள தமிழ் அகதிகளுக்கு வாடகை வீடு தரவோ, வங்கிக் கணக்கு துவங்கவோ, வேறு ஏதேனுமொரு அவசியமான உதவிக்கு நேர்மையாக உதவவும், தைரியமாக அணுகி உதவி கேட்கவும் எந்த இயக்கமும் ஏற்பாடு செய்திருப்பதாய் தெரியவில்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அவர்கள் பயந்து வாழவேண்டும்படியான நிலைதான் உள்ளது.
5. திபெத் அகதிகளுக்கு கிடைக்கும் உரிமையும், சலுகையும் தமிழ் அகதிகளுக்கு இங்கே கிடைக்கவில்லை. இந்த ஆதங்கம் எல்லா இயக்கத் தோழர்களுக்கும் இருந்தாலும் அதை செயலளவில் பெற்றுத்தரும் செயற்திட்டங்கள் யாருக்கேனும் இருப்பதாய்த் தெரியவில்லை.
6. மத்திய அரசோ, மாநில அரசோ ஈழத் தமிழர் பிரச்சனைகளை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. அல்லது தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களைக் கண்டு அச்சப்படவில்லை.
7. செய்தித்தாளில் வரும்படியான அளவுக்கோ அல்லது நாலு பேருக்குத் தெரியும்படியான அடையாளப் போராட்டங்கள்தான் இங்கே எல்லா இயக்கங்களாலும் நடத்தப்படுகிறது.
8. முன்னர் நடத்திய போராட்டத்தினால் எந்த விளைவும், மாற்றமும் ஏற்படாதபோது மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான போராட்டங்கள் அறிவிக்கப்படுகிறது, நடத்தப்படுகிறது. எல்லா கட்சிகளும் இப்படியே இருப்பதால் இதனால் யாதொரு இயக்கத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வருவதில்லை என்றே தோன்றுகிறது.
9. தம்மை நாடி வந்த ஈழ மக்களுக்கு இங்கே ஒரு விடிவைத்தர முடியாத நமது இயக்கங்கள் இலங்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
10. நம் தலைவர்களால் மேடையில் பேசப்படும் வீராவேசப் பேச்சுகளுக்கு நமது உளவுத்துறையோ அல்லது இங்கிருக்கும் ஆளுங்கட்சிகளோகூட அஞ்சாதபோது மகிந்த-கோத்தபயக்கள் எப்படி அஞ்சுவார்கள்?
11. முன்னெப்போதும் இல்லாதவகையில் ஈழம் தற்போது எல்லாவகையிலும் சூறையாடப்படுகிறது. இன்னும் இங்கே கற்பனாவாதமே கொடிகட்டிப் பறக்கிறது. சிங்கள இனவாதிகள் நம்மை ஏளனத்தோடு பார்க்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதே உண்மை.
12. தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.
13. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அலுவலகங்களிலும் தமிழ் இல்லை.
14. தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ் ஒரு பொருட்டே இல்லை.
15. தமிழ் மீனவர்கள் சாவதைப் பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. ஆனால் இந்திய ராணுவ மையங்கள் ஏராளமாக தமிழ்நாட்டில் இருப்பது என்ன நோக்கத்திற்காக?
16. இந்தியாவையோ, தமிழ்நாட்டு அரசையோ மயிரளவுக்குக்கூட மதிக்காமல் காஞ்சி மக்கள் மன்றம் வரை சென்று உளவு பார்த்து திரும்புகிறது இலங்கை தூதரக / புலனாய்வுத்துறை வாகனம்.
இன்னும் எழுதுவதற்கு ஓராயிரம் கொடுமைகள் இருக்கிறது. ஆனால் தட்டிக்கேட்கத்தான் தமிழனுக்கு வலிமையில்லை.
தானே அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்று போராடுகிறார் ஜெயலலிதா....
இழந்துபோன அரியணையை மீண்டும் கைப்பற்ற போராடுகிறார் கருணாநிதி....
சினிமா விளம்பரத்தையே மூலதனமாகக்கொண்டு முதல்வர் அரியணையைப் பெற்றுவிட போராடுகிறார் விஜயகாந்த்....
தன் கட்சியை வலுவாக்கிக்கொள்ள போராடிக்கொண்டேயிருக்கிறார் வைகோ....
அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறார் திருமா....
சாதிக் கட்டுமானம் தன்னிடமிருந்து வழுவிவிடக் கூடாதென்று போராடிக்கொண்டிருக்கிறார் ராமதாஸ்....
புலிகளின் மீதான தமிழ் இளைஞர்களின் மரியாதையை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் சீமான்....
குழப்பத்தையே கொள்கையாகக்கொண்டு, தேசிய இனங்களை மதிக்காமல் இல்லவே இல்லாத; போகவே முடியாத ஊருக்கு வழி ஏற்படுத்த போராடுகிறார்கள் பொதுவுடைமைவாதிகள்....
கொள்ளையடிப்பதற்கான இசை நாற்காலிப் போட்டியில் இடம்பிடிக்க போராடுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள்....
இந்தக்கட்சியும் இங்கே இருக்கிறது என்பதற்காகப் போராடுகிறார்கள் பா.ஜ.க வினர்....
ஆக, இங்கே தமிழுக்காகவும் தமிழீழத்திற்காகவும் இதுவரையில் நடத்தப்பட்ட போராட்டங்களினால் விளைந்த பயன் என்னவென்று தெரியவில்லை.
இந்த எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால்கூட இந்திய மத்திய அரசோ, இலங்கை அரசோ தமிழர்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை. தமிழ், இந்திய ஆட்சி மொழியாகவும் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, ஆளாளுக்கு வெவ்வேறு திசையில், வெவ்வேறு வழியில் போராடிக்கொண்டிருப்பது நியாயமா? இதனால் கட்சி நடத்தும் இவர்களைத் தவிர தமிழ் மக்களுக்கு ஏதேனும் பயனிருக்கிறதா? உலகத்தமிழ் மக்களின் நிலைமையின்மீது இவர்களுக்கு உண்மையான கரிசனமும் அக்கறையும் இருந்தால் இப்படி தனித்தனியாய் செயற்பட முடியுமா? ஒரு பிரச்சனைகளின் அடிப்படையில்கூட இவர்கள் இணைந்து செயலாற்றாமல் இருப்பது எப்படி?
யார் பெரியவர்கள்? எந்த இயக்கம் பெரியது? என் தலைமையில்தான் மற்றவர்கள் இருக்கவேண்டும் – இம்மதிரியான உணர்விலிருந்து வெளியேறி மாற்றத்தையும், தமிழர்களுக்கெதிரான கொடுமைகளையும் மனதில் கொண்டு எப்போது செயல்படுவார்கள் நம் தலைவர்கள்?. இவர்கள் கோமாளித் தலைவர்கள் இல்லை என்பதை நாம் எப்படி நிரூபிப்பது? இல்லாவிடில் இவர்களை நம்பி பொருளையும், நேரத்தையும் இழக்கும் இளஞர்களுக்கு சமூகத்தில் என்ன மரியாதை? அதனால் தமிழ் சமூகத்திற்கு என்ன பயன்?
ஆதலால் தமிழர்களே...
எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் ஈழம் அமையும். ஆனால் தற்போது அதற்கான நம்பிக்கை ஓளி புலம்பெயர் தமிழர்களிடமிருந்துதான் தெரிகிறது. ஈழம் உருவானதென்றால் அது இலங்கையில் பிறந்த தமிழர்களாலேதான் நடக்கும். இங்கிருப்பவர்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. இங்கே யாராவது ஈழம் அமைத்துக் காட்டுகிறேனென்றால் அவர்கள் நம்மை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கிறார்கள் அல்லது நாம் அவர்களிடம் ஏமாந்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை ஒப்புக்கான அடையாளப் போராட்டங்களைத் தவிர்த்து, உண்மையான வலுவான செயற்திட்டம் நம்மவர்களால் செயற்படுத்தப்பட்டாலொழிய....
(நண்பர்களே... எந்தவொரு இயக்கத்தையும் குறைசொல்லும் நோக்கில் இதை எழுதவில்லை. எனக்குத் தோன்றிய கருத்தை பதிவு செய்கிறேன். – விநாயகமூர்த்தி மாசிலாமணி)
No comments:
Post a Comment