1.10.12

மனசு வைக்குமா மழை ?!...

மனசு வைக்குமா மழை ?!...
( இதைப்பதிந்த நேரம் செப்டம்பர் 20, இரவு 2 மணி )

இந்த நேரம் சென்னையில நல்ல மழை பெஞ்சிட்டு இருக்கு. எனக்கு தூக்கம் வரல. ஏன்னா...,

எங்கப்பா 2000 வருசத்துலயும், அம்மா 2009 வருசத்துலயும் செத்துப் போய்ட்டாங்க. எங்களுக்கு கிராமத
்துல ஒரு ஆறு ஏக்கர் பூமி இருக்கு. தண்ணியில்லாத வானம் பார்த்த பூமி. எங்க தாத்தா வெட்டிவெச்ச கிணறு பாறையாப் போச்சி. மழைகாலத்துல அதுல தேங்குற தண்ணியில வருசம் ஒரு போகம் கேழ்வரகு, கம்பு, சோளம் பயிரிடுவாங்க. எங்கப்பா அம்மா உசுரோட இருக்கும்போது கடைசியா 1998 ம் வருசம் அதுல பாதி நிலத்துல நெல் பயிர் நட்டாங்க. அதுக்குப் பிறகு எங்க யாருக்கும் விவசாயம் தெரியாததால இத்தனை வருசமா எங்க நிலம் தரிசாவே கெடந்துச்சி. முள் செடிங்க அடர்த்தியா வளர்ந்து கிடக்கும். அப்பப்ப ஆளை வெச்சி வெட்டுவோம். ஊர்ல இருக்குற ஆடு, மாடுகளுக்கு இதுதான் மேய்ச்சல் இடமா இருந்துச்சி. இந்த சமயத்துல எங்க பக்கத்து நிலத்துக்காரங்க எல்லாரும் நல்ல விலை வருதுன்னு அவங்கவங்க எடத்த வித்துட்டாங்க. அத வாங்குன வாலாசாப்பேட்டை பாயி ஒருத்தரு எல்லாத்தையும் வீட்டு மனையாக்கிட்டாரு. எங்க தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா சம்பாதிச்ச எடத்த விக்க எங்களுக்கு விருப்பமில்ல. அத என்ன பண்றதுன்னும் தெரியாம அப்படியே விட்டுட்டோம். கடந்த சனவரி மாசம் ராணுவத்துல பொறியாளரா 25 வருஷம் வேலை பார்த்த அண்ணன், வேலைக்காலம் முடிஞ்சி ஓய்வுல வந்துட்டாரு. ரொம்ப சின்ன வயசுலேயே குடும்பத்த பிரிஞ்சி வேலைக்குப் போனவரு. அவரு ஒருத்தரு மட்டும் இல்லேன்னா 7 பேர் இருந்த எங்க குடும்பம் ரொம்ப தள்ளாடியிருக்கும். என்னை டிப்ளமோ மின்னணுவியலும், என் தம்பிய Msc, Mtech-ம் அவருதான் படிக்க வெச்சாரு. அடுத்தும் அரசாங்க வேலைக்கே போக நெனச்சவரு, தரிசா கெடக்குற நிலத்தை ஏதாவது பண்ணலாம்னு முடிவுபண்ணி, தண்ணி கெடைக்குமான்னு அஞ்சுதடவைக்கும் மேல சோதனை செஞ்சி பார்த்து, ஆழ்துளை கிணறு போட்டாரு. 3 எடத்துல போட்டதுல, ஒண்ணுத்துல மட்டும் 400 அடியில 1 அங்குல அளவுக்கு தண்ணி கிடைச்சிருக்கு. மழைக்காலம்தானேன்னு அந்த தண்ணிய நம்பி நிலம் முழுக்க உழுது குழி தோண்டி, மா, மாதுளம், கொய்யா, சப்போட்டா செடிகள் ஏறக்குறைய 1000 செடிகள் வெச்சிருக்கராம். எங்க நிலத்துல தண்ணி கிடைக்கனும்கிறது செத்துப்போன எங்க முன்னோருங்க எல்லாருக்கும் கனவாவே இருந்துச்சி. ஆனா வசதி இல்லாததால அவங்களால எதுவும் பண்ணமுடியாமப் போச்சி. இப்ப கிடைச்ச தண்ணியில தினமும் 200 செடிகளுக்குதான் தண்ணி பாய வெக்க முடியுதாம். எல்லா செடிகளுக்கும் ஒரு தண்ணி பாயவே ஒருவாரம் ஆகுதாம். இப்ப ஊர்ல மழையே பெய்யலையாம். ஒரு 200 செடிகள் காய்ஞ்சிட்டதுன்னும், மழை பெய்ஞ்சதும் மிச்சத்த வெக்கணும்னு சொன்னாரு. எங்க ஊருல பெய்யாத மழை இங்க இப்ப பெய்ஞ்சிகிட்டு இருக்கு. இந்த மழை எங்க ஊருலயும் பெய்யணும். எங்க அண்ணன் வெச்ச செடிங்க எல்லாம் நல்லா வளரணும். எங்க முன்னோர் காலத்துல ஒரு போகம் மட்டும் பசுமையா கிடந்த எங்க பூமி இனி எப்பவுமே பசுமையா இருக்கணும்.

மனசு வைக்குமா மழை ?!...

No comments:

Post a Comment