31.12.15
த்தூ....
"கொடிய பயங்கரவாதி" முகிலன்
தமிழர்களுக்கு விலை மதிப்பில்லா ஊட்டச் சத்தாக விளங்கும் அரிய பொக்கிஷமான அணு உலைக் கழிவுகளை வேறு மாநிலங்களுக்கு கொடுக்காமல், பரந்த மனதுடன் தமிழகத்தில் மட்டும் வைத்து பாதுகாக்கும் இந்திய அரசின் நல்லெண்ணத்தை; தாய் மனப்பான்மையைப் புரிந்துகொள்ளாமல் அதை எதிர்த்து தொடர்ந்து போராடும் "கொடிய பயங்கரவாதி" தோழர் முகிலன் இவர்தான்.
நல்லவேளை, நம் எதிர்கால சந்ததியினர்களின் ஆரோக்கியமான வாழ்வை தடுக்க முனைந்த இவரை அமைதிக்காக பாடுபடும் காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டை முன்னேற்றியே தீர வேண்டும் என ஓயாமல் உழைக்கும் அனைத்துத் தமிழகக் கட்சிகளும் மவுனம் சாதிப்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இவர் எவ்வளவு பெரிய "கொடிய பயங்கரவாதி" என்று.
அணுக்கழிவுகளை கொஞ்சம் சென்னையிலும் கொட்டி சென்னை மக்களுக்கும் நீண்ட ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கச் செய்ய இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டில் இறைவனை வேண்டிப் பிரார்த்தித்து நாமாவது கோரிக்கை வைப்போம்...!!
ஜெய் ஹிந்த்...!!
நேற்று, மேற்கு வங்கத்தில் ரயிலில் பயணித்த ஒரு சிறுமியைக் கூட்டாக கற்பழித்து தங்கள் "தேசபக்தி"யை வெளிப்படுத்தியுள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு பகுதி பெண்களிடம் இவ்வாறாக அவர்கள் பலதடவை " தேசபக்தி"யை முன்னர் வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
28.12.15
த்தூ....
"மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா அவர்கள் எவ்வளவு நாகரீகமானவர் என்பதை பத்திரிகைக்காரர்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்"
27.12.15
விண்ணப்பம்
தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடியும்வரை; தற்போதைக்கு உலகில் எந்த நாடாவது இக்காரணத்தால் கருணை அடிப்படையில் அகதி அந்தஸ்து கொடுத்தால் தயவுசெய்து என் உள்பெட்டியில் தெரிவியுங்கள்.
முடியலடா கடவுளே
இனி தேர்தல் ஆணையத்துக்காரனுங்க தொல்லை தாங்க முடியாது. எல்லா தேர்தலையும் ரொம்ப யோக்கியமா நடத்துற மாதிரியே இப்பவும் பில்டப் குடுப்பானுங்க பாருங்க.
எண்ணிக்கை 1000
தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் 24 மணி நேரமும் இளையராஜாவின் பாடல் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
1000 என்ற எண்ணிக்கை என்பது அவருக்கு ஒரு சாதனையில்லை. அவர் அதுக்கும் மேல.
"எல்லாத் தமிழனையும் தாலாட்டிக் கொண்டிருக்கும் இரண்டாவது தாய்"
26.12.15
விசாரணை
விசாரித்த பின்னர் உண்மை தெரிந்தது.
சல்மான் கானிடம் கார் என்பதே கிடையாது. அவர் பல வருடங்களாக பேருந்தில்தான் பயணிக்கிறார். வேட்டைக்குப் போனால் ஆட்டோவில் மட்டும்தான் போவார்.
25.12.15
இதயங்கனிந்த பாராட்டு
விஜயகாந்த் ஒரு சிறந்த புரட்சியாளர். சமூகப் போராளி. தீவிரமான பொதுவுடைமைவாதி. மார்க்சும் ஏங்கெல்சும் பொதுவுடைமை சித்தாந்தத்தை உலகில் பிரகடனப்படுத்தியதே இவரைத் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக 2016-ல் அறிவிக்கத்தான். இதைப் புரிந்துகொண்ட தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளை பாராட்டுவோம்.
இந்த உயர்ந்த நோக்கத்திற்காகவே கட்சியை நடத்தும் வைகோ, திருமாவின் பெருந்தன்மையான பரந்த மனதையும் இதேபோல் பாராட்டுவோமாக.
அரசு வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு
குறைந்த செலவில் மசாஜ் செய்துகொள்ள விரும்புபவர்கள் சென்னை மாநகராட்சி வழங்கும் இந்த அரிய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது மாநகர எல்லைக்குள் குறைந்த பட்சம் 5 கி.மீ. தொலைவுக்குள் ஏதேனும் ஒரு மாநகரப் பேருந்தில் ஏறி பயணிக்க வேண்டும். இதன் மூலமாக நகரின் அனைத்து மக்களுக்கும் இச்சேவை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. நன்கு அனுபவமுள்ள பல ஓட்டுநர்கள் பணிபுரிவதால் உயிருக்கு அச்சப்படத் தேவையில்லை. நகரின் பல எலும்பு மருத்துவமனைகள் இச்சேவையைப் பாராட்டி வரவேற்றுள்ளன என்பது கவனிக்கத் தக்கது. மேலும் நடப்பு ஆண்டு மட்டுமல்லாது அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இச்சேவை தொடர்ந்து நடைபெறும் என்பதால் பொதுமக்கள் வாய்ப்புள்ளபோது நிதானமாகவே இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
24.12.15
உணர்தல்
"யாரையேனும் தொடர்ந்து அழைத்தும் அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை எனில், அவரது முகநூலின் கடைசிப் பதிவின் நேரத்தைப் பார்த்துதான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது, அவர் இன்னமும் உயிருடன்தான் உள்ளார் என்பதை"
பனி பொழியும் சென்னை மா நகரம்
மழை வந்துபோகும் ஒவ்வொரு முறையும் சமீப நாட்களாகவும் காலை, நண்பகல், மாலை என பகல் பொழுது முழுதும் சென்னை மா நகரின் அனைத்து சாலைகளிலுமே பனி பொழிகிறது. சற்று தூரத்தில் இருக்கும் எதுவுமே தெளிவாகத் தெரிவதில்லை. எங்கெங்கு காணினும் அவ்வளவு பனி. என்ன ஒரே குறையென்றால், இப்பனியை வெறுமனே பார்க்காமல் கண், வாய், மூக்கு, தலை என சகலத்தையும் மெல்லிய துணியால் போர்த்திக்கொண்டு ரசிப்பது நல்லது.
21.12.15
பெரும் அரக்கன்
" சாத்தான், பேய், பிசாசு மற்றும் புராணங்களில் படித்த அரக்கர்கள் எல்லாரையும்விட நிகழ்காலத்தில் பறக்கும் கொசுக்கள் மிகவும் மோசமானது.
வைரஸ்களை பரப்பும் வல்லமையும் கொடூரமும் அவர்களுக்கு இல்லை. அவர்களால் நமக்கு இப்போதைக்கு பிரச்சினையுமில்லை. "
20.12.15
சென்னை அழியப்போவுதாம்
இது என் அக்காளின் ஒரே மகள். பெயர் கலையரசி. 3-ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 15-ம் தேதி என்னை கைபேசியில் அழைத்து, "மாமா நாளைக்கி சென்னை அழியப்போவுதாம். கெளம்பி ஊருக்கு வா" என்று சொன்னாள். "யாரும்மா சொன்னது?" என்று கேட்டேன். "எல்லாரும் சொல்றாங்க, நீ கெளம்பி வர்றியா இல்லியா? அப்புறம் நீ போன் பண்ணா பேச மாட்டேன்" என்று சொன்னாள்.
என்ன சொல்வது என்று நெடுநேரம் யோசித்துவிட்டு பின்னர் "சரி" என்று வைத்துவிட்டேன்.
இன்று நான் அவளுக்கு போன் செய்து "சென்னையிலிருந்துதான் பேசறேன். என்னவோ சொன்னியேம்மா" என்று கேட்டேன்.
அவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.
19.12.15
இந்த சமூகத்தின் உண்மையான முகம்தான் எதுவோ?
எம்.ஜி.ஆர் நகர் சந்தை சாலையில் நட்ட நடுவில் ஒரு குப்பைத் தொட்டி. குப்பைகள் நிரம்பி கீழே சிதறிக்கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாயிருந்த நேற்று இரவு 7 மணியளவில் இது நான் கண்ட காட்சி. படித்தவனைப்போல் தோற்றம் கொண்ட ஒருவன் அந்த குப்பைகளின் மீது சுற்றியுள்ள மனிதர்களையும், குப்பை எடுக்கும் தொழிலாளியையும் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் சிறுநீர் கழிக்கிறான். யார் திட்டியதையும் அவன் பொருட்படுத்தவில்லை.
15.12.15
இது மரணமா? படுகொலையா?
இதற்கு பேர் மரணம் என்றால் "கொலை / படுகொலை" என்பதன் அர்த்தம்தான் என்ன?
வெள்ளத்தால் பாதிக்கப்படாத மக்களுக்குக்கூட நிவாரணம் வழங்கப்பட கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்படையாத பகுதியில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கப்போகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு சுமார் 3000 ரூ வழங்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.
இந்த மோசமான சகதியிலும் விடுமுறை எடுக்காமல் துப்புரவு பணி செய்யும் ஊழியர்களுக்கு இந்த 3000 ரூ என்பது 10 நாட்கள் உழைப்புக்குப் பின்னர் கிடைப்பது. எப்போதுமே தகுந்த பாதுகாப்பு முறையில்லாமல் மிகவும் கீழ்த்தரமான முறையில்தான் நடத்தப்படுகிறார்கள் அவர்கள். இவ்வாறான உழைப்பவர்களையும் எளியவர்களையும் 'ஏதோ பாவம் செய்தவர்கள்' என்றபடி பார்க்கும் பார்வையிலேயே மக்களின் பொதுப்புத்தி இருக்கிறது.
எந்த மக்களின் சுற்றுப்புற சுகாதார வாழ்க்கைக்காக இவர்கள் தங்களை வருத்திக்கொள்கிறார்களோ அம்மக்கள் இவர்களை ஒரு பொருட்டாய் எண்ணுவதேயில்லை. குப்பைத்தொட்டி வைக்கப்பட்ட இடங்களில் சிறுநீர்கழிப்பதையும் எச்சில் துப்புவதையும் சென்னையில் நீங்கள் சர்வ சாதாரணமாகக் காணலாம். மேலும் தெருக்களில் குப்பை வண்டி வரும்போது மாடியிலிருந்து குப்பையை வீசி எறிபவர்களும், அநாகரீகமாக இவர்களை அழைத்து குப்பை எடுக்கச் சொல்லும் மனிதர்களையும் காணலாம். அவ்வளவையும் பொறுத்துக்கொண்டு அமைதியாய் தங்கள் பணி செய்யும் இவர்களை அரசும் தன் பங்குக்கு விருப்பம்போல் சுரண்டுகிறது.
ஒருநாள் குப்பையை கூட்டிய நடிகர்களைக் கொண்டாடிய ஊடகங்களும் மக்களும், அதில் 1000-ல் ஒரு பங்காவது இவர்களையும் கொஞ்சம் சக மனிதர்களாய் மதித்து கொண்டாடலாம்.
இதுவரையில் மழை வெள்ளத் துப்புரவுப் பணிச்சுமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
"உழைக்கிறவன் முட்டாள், உழைக்காமல் சம்பாதிக்கிறவன் அறிவாளி" என்பதான கருத்து உருவாகி நெடுங்காலமாகிவிட்டது. எல்லா உடல் உழைப்புக்காரர்களும் முட்டாள்களாகப் பார்க்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். விவசாயிகளும் இதில் அடக்கம்.
ஒரு நாடு இக்கட்டான சூழலில் அகப்படும்போதுதான் அந்த அரசின் திறமை வெளிப்படவேண்டும். இயற்கை மீதோ அல்லது எதன் மீதோ சாக்குபோக்கு சொல்வதற்கு ஒரு அரசாங்கம் எதற்கு?
அரசு எந்திரத்தின் மானம் மரியாதையைக் காப்பாற்றியது அரசியல்வாதிகளுமல்ல அதிகாரிகளுமல்ல, தன்னார்வலர்கள்தான். தன்னார்வலர்களை அரசாங்கமே தேர்ந்தெடுத்து ஊதியம் கொடுத்து களத்தில் இறக்கியிருக்கலாம். நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவர் விஷப்பூச்சி கடித்து இறந்துள்ளார். அவர் குடும்பத்திற்கு என்ன செய்யும் அரசு? யார் அவருக்காக நீதி கேட்கப்போவது?
2000 கோடி நிதியில் கணிசமான பணத்தை ஒதிக்கி சென்னையை சுற்றியுள்ள அத்தனை ஏரி குளங்களையும் தூர் வாறலாம். கூவத்தை சீர் படுத்தலாம். பாதிப்படைந்த தன்னார்வலர்களுக்கு நிவாரணம் வழங்கலாம்.
துப்புரவு பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற நல்ல ஊதியம் தந்து அவர்களையும் மனிதர்களாக கவுரவமாக நடத்தலாம்.
ஆழ்ந்த வருத்தங்கள்.
13.12.15
அப்பாக்களை ஏமாற்றி
"அப்பாக்களை ஏமாற்றிவிட்டதாய் எண்ணிய பிள்ளைகள் காலம் கடந்து உணர்ந்துகொள்கிறார்கள் தான் ஏமாந்துபோனதை"
தீர்க்கதரிசி....!!!
நாஸ்டர்டாமின் குறிப்புகளை புரட்டிப் பார்த்தேன். மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். இப்போது 2016-ல் உலகம் அழிந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்கிறார்களே அதுமட்டுமல்ல, தி.நகரிலிருந்து திருவேற்காடு செல்லும் சென்னை மாநகரப் பேருந்தின் தடம் எண் 27C என்பதைக்கூட அவர் அப்போதே குறிப்பிட்டுள்ளார்.
நாஸ்டர்டாம் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி...!!!!
"மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை" - அருணன்
நேற்று கன்னிமாரா நூலகத்தில் இப்புத்தகத்தைப் படித்தேன். அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இன்றைக்கும் ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் என்போர் அரிதாகத்தான் இருக்கிறார்கள். எதிர்கால வாழ்வின் மீதான மக்களின் பேராசையை பயத்தை பொருளாக மாற்றும் இந்த வித்தை உலகின் எல்லா நாடுகளிலும்; எல்லா மதங்களிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் இதற்கு எதிரான பிரச்சாரங்களும் வலுவாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் மனிதன் குழந்தையிலிருந்தே பெரும்பாலும் வலதுசாரி கண்ணோட்டத்திலேயே வளர்க்கப்படுவதாலும், உலகின் 95% வீத மக்களின் மூளை காலங்காலமாக மதவாதிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாலும் இவ்வாறான நம்பிக்கையிலிருந்து மக்களால் விடுதலை பெற இயலவில்லை. பொருளாதார பலவீனமான வாழ்க்கைச் சூழல் அவர்களை பலவாறான பயங்கலந்த கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. மிக்க பொருளாதார பலம் இருப்பவர்களும் 'உள்ளது போய்விடுமோ, போனால் என்னாவது?' என்ற பயத்தாலேயே எல்லாவற்றையும் நம்புகின்றனர்.
சூரியன் ஒரு நட்சத்திரம். சந்திரன் ஒரு துணைக்கோள். ஆனால் ஜோதிடம் இவைகளை கிரகம் என்றுதான் சொல்கிறது. அதுமட்டுமல்ல, எல்லா கிரகத்தையும் வர்ணாசிரமப்படி
குரு, சுக்கிரன் - பிராமண ஜாதி
சூரியன், செவ்வாய் - ஷத்ரிய ஜாதி
சந்திரன், புதன் - வைசிய ஜாதி
சனி - சூத்திர ஜாதி
ராகு, கேது - சங்கிரம ஜாதி
என்றும், ஆண் பெண் அலி என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் மொழி, நிறம், குணம் என்றும் வகுத்திருக்கிறார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு கூசாமல் "ஜோதிடம் ஒரு அறிவியல்" என்று கதை விடுகிறார்கள். தங்கமுலாம் பூசுகிறார்கள்.
காட்டுமிராண்டி காலத்து மனிதர்களைப்போலவே பலரும் இன்னமும் இயற்கையை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கை எல்லோருக்கும் பொதுவானது. அது யாரையும் நண்பனாகவோ எதிரியாகவோ கருதவில்லை. நமக்கு எதிராக இயங்குவது அதன் வேலையுமல்ல, நோக்கமுமல்ல. நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதெல்லாம் அறியாமை. எவ்வளவுதான் படித்தவராக இருந்தாலும்கூட இவ்வாறான மூட நம்பிக்கைகளைப் பொருத்தவரை அவர்கள் எதையும் தவிர்க்கவோ அல்லது எதிர் கருத்துக்களை அறியவோ துளியும் தயாராயில்லை.
"ஜோதிடம் ஒரு அறிவியல்" என்ற எண்ணம் உங்களுக்கும் இருக்கலாம். அது சரியா? தவறா? என்று சுய பரிசோதனை செய்துகொள்ள ஒரு அருமையான எளிமையான புத்தகம் இது. ஜோதிடம் தொடர்பான எல்லா விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்து அலசியுள்ளார் ஆசிரியர். விலை 50/- ரூபாய்தான். பாரதி புத்தகாலயம் வெளியீடு. இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் யாவும் 'தீக்கதிர்' நாளிதழில் தொடராக வெளியானவை. இப்புத்தக ஆசிரியர் தோழர் அருணன் அவர்கள் நிறைய முற்போக்கு நூல்களை எழுதியவர்.
11.12.15
எதிர்பார்ப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் நிவாரணம் பெற்றுக்கொண்டவர்களும், புறங்கையை ருசித்த தொண்டரடிப்பொடிகளும் எதிர்பார்க்கக்கூடும் இன்னொரு தொடர் மழையை...
எதிர்பார்ப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் நிவாரணம் பெற்றுக்கொண்டவர்களும், புறங்கையை ருசித்த தொண்டரடிப்பொடிகளும் எதிர்பார்க்கக்கூடும் இன்னொரு தொடர் மழையை...
10.12.15
ஏய் அமெரிக்கா - ஆதனூர் சோழன்
இப்புத்தகத்தை நேற்று படித்தேன். ஆதனூர் சோழன் என்பவர் 2007-ல் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
பொதுவாக நாம் அமெரிக்கா என்று பரவலாக அறியப்படுவது ஐக்கிய அமெரிக்க கூட்டு நாடுகள் பற்றித்தான். ஆனால் அமெரிக்கா என்பது ஒரு கண்டத்தின் பெயர். அக்கண்டம் முழுமைக்கும் பல்வேறு சிறு நாடுகள் இருக்கின்றன. நாம் அறிந்த வல்லரசு அமெரிக்க நாட்டுக்கும் அவைகளுக்கும் தலைகீழான அரசியல் சூழல் இருக்கிறது. முக்கியமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் எனப்படும் வெனிசுலா, பெரு, பொலிவியா, நிகரகுவா, பராகுவே போன்ற நாடுகளின் அரசியல் நிலைமைகளை இப்புத்தகத்தில் அருமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
கி.பி. 1500 வரையில் இந்த அமெரிக்கக் கண்டம் பற்றி உலகின் பிற பகுதியினருக்குத் தெரியாது. தொடர்பும் கிடையாது. ஆனாலும் அதற்கு முன்னரே பல்லாயிரம் வருடங்களாக அங்கு மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். உலகம் முழுமைக்கும் காலணிப்படுத்தி சுரண்டியதில் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கும் பெரும் பங்குண்டு. உலகின் 85% பூர்வகுடி மக்களைக் கொன்று, அவர்களின் சொந்த மண்ணிலேயே அவர்களை சோற்றுக்கு திண்டாட வைத்த பெரும் புண்ணிய நாடுகள் இவை. இம்மூன்று நாட்டு மொழிகளும் லத்தீன் மொழியிலிருந்து பிறந்தவையே. இதில் பிரிட்டன் ஆக்ரமித்த அமெரிக்கப் பகுதி ஆங்கிலோ அமெரிக்கா என்றும், ஸ்பெயின் போர்ச்சுகல் ஆக்ரமித்த பகுதி லத்தீன் அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகிறது.
சோஷலிசம் வரும்வரையில் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களுக்கு படிப்பறிவில்லை. தங்கள் உழைப்பும் தங்கள் நாட்டு வளமும் சுரண்டப்படுவது அவர்களுக்குத் தெரியவில்லை.
ஒட்டுமொத்த அமெரிக்க கண்டத்திற்கும் தன்னை ராஜாவாக்கிக்கொண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளை சுரண்டிக்கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்க நாட்டின் கொட்டம் கியூபப் புரட்சிக்குப் பின்னர் ஆட்டம் காண ஆரம்பித்தது.
ருஷ்ய புரட்சிக்குப் பின்னர் உலக வரைபடம் நிறைய மாறியது. சோஷ்லிசம் உலகம் முழுமைக்கும் ஏற்றுமதியானது.
கியூபப் புரட்சிக்குப் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகள் விழித்துக்கொண்டது. சேகுவேராவின் திட்டம் முறியடிக்கப்பட்ட பின்னரும் சோஷலிசம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. தான் சுரண்டும் எல்லா நாடுகளிலும் தனக்கு கீழ்ப்படிந்த பொம்மைகளை அதிகாரத்தில் அமர்த்தி சுரண்டிக்கொண்டிருந்த அமெரிக்க வல்லரசு, இந்த குட்டி நாடுகளிடம் தத்தளிக்க ஆரம்பித்தது.
ருஷ்ய வீழ்ச்சிக்குப் பின்னர் இனி சோஷலிசம் அவ்வளவுதான் என்று உலக முதலாளிகள் கொக்கரித்த வேளையில் லத்தீன் அமெரிக்காவின் சூழ்நிலைகள் அவர்களுக்கு விடை சொன்னது.
ஹூகோ சாவேஸ் என்ற ஒரு மகத்தான தலைவனின் வருகைக்குப் பின்னர் சிதறிக்கிடந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டது. எல்லா நாடுகளும் "மக்களுக்காகவே அரசு" என்று இயங்க ஆரம்பித்தது. வழக்கம்போல அமெரிக்கா தன் நரித்தனத்தை காட்டியும் மக்கள் மாற்றத்தின் பக்கம் நின்றனர். நிலைமைகள் மாறியது. தற்போது அதன் எல்லா நாடுகளும் முற்றிலுமாக சோஷ்லிச நாடுகளாக மாறியுள்ளதா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் சோஷலிச மலர்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டு மக்களின் வாழ்வின் நிலை மாறியுள்ளது.
இப்புத்தகம் வெளியிடப்பட்ட காலத்தில் சாவேஸ் உயிருடன் இருந்தார். ஆனால் நான் இதைப் படிக்கும் நாளின் இரண்டாண்டுக்கு முன்பு அவர் இறந்துபோயிருந்தார் என்பது பெரும் வருத்தமான செய்தி. அதைவிட வருத்தமான செய்தி என்னவெனில், இரண்டு நாட்களுக்கு முன்பு வெனிசுலாவில் நடந்த தேர்தலில் சாவேஸின் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. துல்லியமான நிலைமை தெரியவில்லை. வேறு கட்சிகளுக்கு தோல்வி என்றால் அது வெறும் தோல்விதான், ஆனால் சோஷலிசக் கட்சிகளுக்கு தோல்வி என்பது ஒரு சுய ஆய்வு.
சோஷலிசம் (சமவுடைமை) வெல்லுமா என்றால்..., எதிர்காலத்தில் இந்த பூமியில் பிறந்து வாழப்போகும் எல்லா மனிதர்களின் நல்வாழ்வுக்கும் இதுதான் தீர்வு.
"சோஷலிசம் வென்றாகவேண்டும்"