15.12.15

இது மரணமா? படுகொலையா?

இதற்கு பேர் மரணம் என்றால் "கொலை / படுகொலை" என்பதன் அர்த்தம்தான் என்ன?

வெள்ளத்தால் பாதிக்கப்படாத மக்களுக்குக்கூட நிவாரணம் வழங்கப்பட கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்படையாத பகுதியில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கப்போகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு சுமார் 3000 ரூ வழங்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.

இந்த மோசமான சகதியிலும் விடுமுறை எடுக்காமல் துப்புரவு பணி செய்யும் ஊழியர்களுக்கு இந்த 3000 ரூ என்பது 10 நாட்கள் உழைப்புக்குப் பின்னர் கிடைப்பது. எப்போதுமே தகுந்த பாதுகாப்பு முறையில்லாமல் மிகவும் கீழ்த்தரமான முறையில்தான் நடத்தப்படுகிறார்கள் அவர்கள். இவ்வாறான உழைப்பவர்களையும் எளியவர்களையும் 'ஏதோ பாவம் செய்தவர்கள்' என்றபடி பார்க்கும் பார்வையிலேயே மக்களின் பொதுப்புத்தி இருக்கிறது.

எந்த மக்களின் சுற்றுப்புற சுகாதார வாழ்க்கைக்காக இவர்கள் தங்களை வருத்திக்கொள்கிறார்களோ அம்மக்கள் இவர்களை ஒரு பொருட்டாய் எண்ணுவதேயில்லை. குப்பைத்தொட்டி வைக்கப்பட்ட இடங்களில் சிறுநீர்கழிப்பதையும் எச்சில் துப்புவதையும் சென்னையில் நீங்கள் சர்வ சாதாரணமாகக் காணலாம். மேலும் தெருக்களில் குப்பை வண்டி வரும்போது மாடியிலிருந்து குப்பையை வீசி எறிபவர்களும், அநாகரீகமாக இவர்களை அழைத்து குப்பை எடுக்கச் சொல்லும் மனிதர்களையும் காணலாம். அவ்வளவையும் பொறுத்துக்கொண்டு அமைதியாய் தங்கள் பணி செய்யும் இவர்களை அரசும் தன் பங்குக்கு விருப்பம்போல் சுரண்டுகிறது.

ஒருநாள் குப்பையை கூட்டிய நடிகர்களைக் கொண்டாடிய ஊடகங்களும் மக்களும், அதில் 1000-ல் ஒரு பங்காவது இவர்களையும் கொஞ்சம் சக மனிதர்களாய் மதித்து கொண்டாடலாம்.

இதுவரையில் மழை வெள்ளத் துப்புரவுப் பணிச்சுமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

"உழைக்கிறவன் முட்டாள், உழைக்காமல் சம்பாதிக்கிறவன் அறிவாளி" என்பதான கருத்து உருவாகி நெடுங்காலமாகிவிட்டது. எல்லா உடல் உழைப்புக்காரர்களும் முட்டாள்களாகப் பார்க்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். விவசாயிகளும் இதில் அடக்கம்.

ஒரு நாடு இக்கட்டான சூழலில் அகப்படும்போதுதான் அந்த அரசின் திறமை வெளிப்படவேண்டும். இயற்கை மீதோ அல்லது எதன் மீதோ சாக்குபோக்கு சொல்வதற்கு ஒரு அரசாங்கம் எதற்கு?

அரசு எந்திரத்தின் மானம் மரியாதையைக் காப்பாற்றியது அரசியல்வாதிகளுமல்ல அதிகாரிகளுமல்ல, தன்னார்வலர்கள்தான். தன்னார்வலர்களை அரசாங்கமே தேர்ந்தெடுத்து ஊதியம் கொடுத்து களத்தில் இறக்கியிருக்கலாம். நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவர் விஷப்பூச்சி கடித்து இறந்துள்ளார். அவர் குடும்பத்திற்கு என்ன செய்யும் அரசு? யார் அவருக்காக நீதி கேட்கப்போவது?

2000 கோடி நிதியில் கணிசமான பணத்தை ஒதிக்கி சென்னையை சுற்றியுள்ள அத்தனை ஏரி குளங்களையும் தூர் வாறலாம். கூவத்தை சீர் படுத்தலாம். பாதிப்படைந்த தன்னார்வலர்களுக்கு நிவாரணம் வழங்கலாம்.

துப்புரவு பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற நல்ல ஊதியம் தந்து அவர்களையும் மனிதர்களாக கவுரவமாக நடத்தலாம்.

ஆழ்ந்த வருத்தங்கள்.

No comments:

Post a Comment