10.12.15

ஏய் அமெரிக்கா - ஆதனூர் சோழன்

இப்புத்தகத்தை நேற்று படித்தேன். ஆதனூர் சோழன் என்பவர் 2007-ல் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

பொதுவாக நாம் அமெரிக்கா என்று பரவலாக அறியப்படுவது ஐக்கிய அமெரிக்க கூட்டு நாடுகள் பற்றித்தான். ஆனால் அமெரிக்கா என்பது ஒரு கண்டத்தின் பெயர். அக்கண்டம் முழுமைக்கும் பல்வேறு சிறு நாடுகள் இருக்கின்றன. நாம் அறிந்த வல்லரசு அமெரிக்க நாட்டுக்கும் அவைகளுக்கும் தலைகீழான அரசியல் சூழல் இருக்கிறது. முக்கியமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் எனப்படும் வெனிசுலா, பெரு, பொலிவியா, நிகரகுவா, பராகுவே போன்ற நாடுகளின் அரசியல் நிலைமைகளை இப்புத்தகத்தில் அருமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

கி.பி. 1500 வரையில் இந்த அமெரிக்கக் கண்டம் பற்றி உலகின் பிற பகுதியினருக்குத் தெரியாது. தொடர்பும் கிடையாது. ஆனாலும் அதற்கு முன்னரே பல்லாயிரம் வருடங்களாக அங்கு மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். உலகம் முழுமைக்கும் காலணிப்படுத்தி சுரண்டியதில் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கும் பெரும் பங்குண்டு. உலகின் 85% பூர்வகுடி மக்களைக் கொன்று, அவர்களின் சொந்த மண்ணிலேயே அவர்களை சோற்றுக்கு திண்டாட வைத்த பெரும் புண்ணிய நாடுகள் இவை. இம்மூன்று நாட்டு மொழிகளும் லத்தீன் மொழியிலிருந்து பிறந்தவையே. இதில் பிரிட்டன் ஆக்ரமித்த அமெரிக்கப் பகுதி ஆங்கிலோ அமெரிக்கா என்றும், ஸ்பெயின் போர்ச்சுகல் ஆக்ரமித்த பகுதி லத்தீன் அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகிறது.

சோஷலிசம் வரும்வரையில் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களுக்கு படிப்பறிவில்லை. தங்கள் உழைப்பும் தங்கள் நாட்டு வளமும் சுரண்டப்படுவது அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒட்டுமொத்த அமெரிக்க கண்டத்திற்கும் தன்னை ராஜாவாக்கிக்கொண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளை சுரண்டிக்கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்க நாட்டின் கொட்டம் கியூபப் புரட்சிக்குப் பின்னர் ஆட்டம் காண ஆரம்பித்தது.

ருஷ்ய புரட்சிக்குப் பின்னர் உலக வரைபடம் நிறைய மாறியது. சோஷ்லிசம் உலகம் முழுமைக்கும் ஏற்றுமதியானது.

கியூபப் புரட்சிக்குப் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகள் விழித்துக்கொண்டது. சேகுவேராவின் திட்டம் முறியடிக்கப்பட்ட பின்னரும் சோஷலிசம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. தான் சுரண்டும் எல்லா நாடுகளிலும் தனக்கு கீழ்ப்படிந்த பொம்மைகளை அதிகாரத்தில் அமர்த்தி சுரண்டிக்கொண்டிருந்த அமெரிக்க வல்லரசு, இந்த குட்டி நாடுகளிடம் தத்தளிக்க ஆரம்பித்தது.

ருஷ்ய வீழ்ச்சிக்குப் பின்னர் இனி சோஷலிசம் அவ்வளவுதான் என்று உலக முதலாளிகள் கொக்கரித்த வேளையில் லத்தீன் அமெரிக்காவின் சூழ்நிலைகள் அவர்களுக்கு விடை சொன்னது.

ஹூகோ சாவேஸ் என்ற ஒரு மகத்தான தலைவனின் வருகைக்குப் பின்னர் சிதறிக்கிடந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டது. எல்லா நாடுகளும் "மக்களுக்காகவே அரசு" என்று இயங்க ஆரம்பித்தது. வழக்கம்போல அமெரிக்கா தன் நரித்தனத்தை காட்டியும் மக்கள் மாற்றத்தின் பக்கம் நின்றனர். நிலைமைகள் மாறியது. தற்போது அதன் எல்லா நாடுகளும் முற்றிலுமாக சோஷ்லிச நாடுகளாக மாறியுள்ளதா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் சோஷலிச மலர்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டு மக்களின் வாழ்வின் நிலை மாறியுள்ளது.

இப்புத்தகம் வெளியிடப்பட்ட காலத்தில் சாவேஸ் உயிருடன் இருந்தார். ஆனால் நான் இதைப் படிக்கும் நாளின் இரண்டாண்டுக்கு முன்பு அவர் இறந்துபோயிருந்தார் என்பது பெரும் வருத்தமான செய்தி. அதைவிட வருத்தமான செய்தி என்னவெனில், இரண்டு நாட்களுக்கு முன்பு வெனிசுலாவில் நடந்த தேர்தலில் சாவேஸின் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. துல்லியமான நிலைமை தெரியவில்லை. வேறு கட்சிகளுக்கு தோல்வி என்றால் அது வெறும் தோல்விதான், ஆனால் சோஷலிசக் கட்சிகளுக்கு தோல்வி என்பது ஒரு சுய ஆய்வு.

சோஷலிசம் (சமவுடைமை) வெல்லுமா என்றால்..., எதிர்காலத்தில் இந்த பூமியில் பிறந்து வாழப்போகும் எல்லா மனிதர்களின் நல்வாழ்வுக்கும் இதுதான் தீர்வு.

"சோஷலிசம் வென்றாகவேண்டும்"

No comments:

Post a Comment