நேற்று கன்னிமாரா நூலகத்தில் இப்புத்தகத்தைப் படித்தேன். அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இன்றைக்கும் ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் என்போர் அரிதாகத்தான் இருக்கிறார்கள். எதிர்கால வாழ்வின் மீதான மக்களின் பேராசையை பயத்தை பொருளாக மாற்றும் இந்த வித்தை உலகின் எல்லா நாடுகளிலும்; எல்லா மதங்களிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் இதற்கு எதிரான பிரச்சாரங்களும் வலுவாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் மனிதன் குழந்தையிலிருந்தே பெரும்பாலும் வலதுசாரி கண்ணோட்டத்திலேயே வளர்க்கப்படுவதாலும், உலகின் 95% வீத மக்களின் மூளை காலங்காலமாக மதவாதிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாலும் இவ்வாறான நம்பிக்கையிலிருந்து மக்களால் விடுதலை பெற இயலவில்லை. பொருளாதார பலவீனமான வாழ்க்கைச் சூழல் அவர்களை பலவாறான பயங்கலந்த கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. மிக்க பொருளாதார பலம் இருப்பவர்களும் 'உள்ளது போய்விடுமோ, போனால் என்னாவது?' என்ற பயத்தாலேயே எல்லாவற்றையும் நம்புகின்றனர்.
சூரியன் ஒரு நட்சத்திரம். சந்திரன் ஒரு துணைக்கோள். ஆனால் ஜோதிடம் இவைகளை கிரகம் என்றுதான் சொல்கிறது. அதுமட்டுமல்ல, எல்லா கிரகத்தையும் வர்ணாசிரமப்படி
குரு, சுக்கிரன் - பிராமண ஜாதி
சூரியன், செவ்வாய் - ஷத்ரிய ஜாதி
சந்திரன், புதன் - வைசிய ஜாதி
சனி - சூத்திர ஜாதி
ராகு, கேது - சங்கிரம ஜாதி
என்றும், ஆண் பெண் அலி என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் மொழி, நிறம், குணம் என்றும் வகுத்திருக்கிறார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு கூசாமல் "ஜோதிடம் ஒரு அறிவியல்" என்று கதை விடுகிறார்கள். தங்கமுலாம் பூசுகிறார்கள்.
காட்டுமிராண்டி காலத்து மனிதர்களைப்போலவே பலரும் இன்னமும் இயற்கையை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கை எல்லோருக்கும் பொதுவானது. அது யாரையும் நண்பனாகவோ எதிரியாகவோ கருதவில்லை. நமக்கு எதிராக இயங்குவது அதன் வேலையுமல்ல, நோக்கமுமல்ல. நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதெல்லாம் அறியாமை. எவ்வளவுதான் படித்தவராக இருந்தாலும்கூட இவ்வாறான மூட நம்பிக்கைகளைப் பொருத்தவரை அவர்கள் எதையும் தவிர்க்கவோ அல்லது எதிர் கருத்துக்களை அறியவோ துளியும் தயாராயில்லை.
"ஜோதிடம் ஒரு அறிவியல்" என்ற எண்ணம் உங்களுக்கும் இருக்கலாம். அது சரியா? தவறா? என்று சுய பரிசோதனை செய்துகொள்ள ஒரு அருமையான எளிமையான புத்தகம் இது. ஜோதிடம் தொடர்பான எல்லா விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்து அலசியுள்ளார் ஆசிரியர். விலை 50/- ரூபாய்தான். பாரதி புத்தகாலயம் வெளியீடு. இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் யாவும் 'தீக்கதிர்' நாளிதழில் தொடராக வெளியானவை. இப்புத்தக ஆசிரியர் தோழர் அருணன் அவர்கள் நிறைய முற்போக்கு நூல்களை எழுதியவர்.
No comments:
Post a Comment