30.6.16

"கெடை காடு" - ஏக்நாத்

"கெடை காடு" - ஏக்நாத்
(பக்கம்-200, விலை-170ரூ)

இளம்பிராயத்தில் நீங்கள் யாரேனும் மாடு மேய்த்திருந்தால் இந்த நாவல் உங்களுக்கு ஒரு சுகமான அனுபவம். 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் அய்ம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞன் உச்சிமகாளி. மாடு மேய்ப்பதில் கெட்டிக்காரன். ஊரில் பிறர் மாடுகளுக்கு பால் கறக்கும் வேலையையும் செய்து வருகிறான். பிழைக்க வேறு வழியில்லாததால் இவனைப்போல இன்னும் பல இளைஞர்களும் அந்த ஊரில் மாடு மேய்க்கிறார்கள். அவனும் அவர்களும் மேய்ச்சல் சமூகமான இடையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இயல்பிலேயே அத்தொழிலில் நன்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

பருவ வயதினனான உச்சிமகாளி ஊரில் ஏழெட்டு காதல் முயற்சியில் ஈடுபடுகிறான். எதுவும் கூடிவரவில்லை. அவன் காதலிக்க முயற்சிக்கும் பெண்களுக்கெல்லாம் கூடிய விரைவில் கல்யாணம் கூடி வந்துவிடுகிறது. வெறுத்துப்போகிறான். இனி ஊரில் காதலிக்க பெண்களே இல்லை எனும்படியாகிப்போனதாக யோசிக்கும் நிலையில் ஊரில் இருப்புகொள்ள முடியாமல் கவலைப்படுகிறான்.

மேய்ச்சலுக்கு வழியில்லாமல் புல்லறுந்துபோகும் கோடையில் ஊரில் உள்ள எல்லா மாடுகளையும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள "குள்ராட்டி" எனும் இடத்திற்கு மந்தையாக அனுப்பி வைப்பார்கள் ஊராட்கள். எப்பேர்ப்பட்ட கோடையிலும் அங்கு புல்லுக்கும் தண்ணீருக்கும் பஞ்சமிருக்காது. கோடையென்றாலும் குளிர் விடாது. குளிர் ஆட்டி என்பதே நாளடைவில் அந்த இடத்திற்கு "குள்ராட்டி" என்று பெயராகிறது. 

அங்கு மாடுகளை மொத்தமாக கிடை போட்டு மடக்கி மேய்ப்பார்கள். மலையில் புலி, சிறுத்தை, ஓநாய், செந்நாய், கரடி, விஷப்பூச்சிகள் தொல்லைகள் அதிகம். அதுமட்டுமில்லாது வன அதிகாரிகளின் தொல்லை வேறு. 75 மாடுகள் மேய அனுமதி வாங்கி 100 மாடுகள் மேய்ப்பார்கள். சமயத்தில் அந்த வன அதிகாரிகள் ஒரு மாட்டைக்கூட லஞ்சமாகக் கேட்பார்கள். வழுக்குப் பாறையை எல்லாம் கடந்துதான் அங்கு போய்ச் சேர முடியும். மாடுகள் அங்கு போய்ச்சேருவதே பெரும் சிரமப்பாடு. மாடுகளுடன் 5 அ 6 பேர்கள்தான் வருவார்கள் மேய்க்க. ஒருமுறை வருபவர்கள் ஒருவாரம் தங்கியிருக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து அடுத்த குழு வந்ததும் இவர்கள் மலையிறங்கி ஊருக்குப் போய்விடலாம். அந்த ஒரு வாரம் ஊரில் என்ன நடக்கிறது என்பதை வருபவர்கள் சொன்னால்தான் உண்டு. 

ஊரில் இருப்பு கொள்ள முடியாத உச்சிமகாளி அந்த வருடம் தான் குள்ராட்டிக்குப் போவதாக வீட்டில் சொல்கிறான். அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அதுமட்டுமில்லாது அவனது அப்பா செண்பகக்கோனும் அம்மா புண்ணியத்தாயியும் பேசிக்கொள்வதில்லை. பக்கத்து ஊரான தட்டாம்பட்டிக்காரியுடன் அவன் அப்பா தொடுப்பு வைத்துக்கொண்டதை மழைக்கு அங்கு ஒதுங்கிய அவன் அம்மா 12 வருடத்திற்கு முன்பு பார்த்துதான் பிரச்சினைக்குக் காரணம். செண்பகக்கோனின் அம்மா அனச்சிக் கிழவிதான் இருவருக்கும் நடுவாக இருக்கிறாள்.

உச்சிமகாளி இதுவரையில் அம்மாவைப் பிரிந்து இருந்ததே இல்லை. முதல் முறை மலைக்குப் போவதாக அவன் கேட்டதும் அனுபவம் வரட்டும் என்பதற்காய் வீட்டில் ஒப்புக்கொள்ள, 5 பேர் குழுவுடன் ஒருவாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் 150 மாடுகளை ஓட்டிக்கொண்டு குள்ராட்டிக்குப் புறப்படுகிறார்கள். மாடுகளைப் பிரியும் சோகத்தோடு எல்லாரும் வழியனுப்பி வைக்கிறார்கள்.

மலையில் ஒரு வாரம் தங்கும் உச்சிமகாளி பரவசமான அனுபவத்தை அடைகிறான். ஊரில் முன்னர் நடந்த நிகழ்வுகளையெல்லாம் அசைபோடுகிறான். சந்தோஷமாய் மாடு மேய்க்கிறார்கள். 

ஊரில் ராமசுப்பு என்பவன் படும் அக்கிரமக்காரன். ஊரே அவனுக்கு நல்ல கதி வராது என்று சபிக்கிறது. எல்லோரும் உறவுக்காரர்கள்தான். ஆனாலும், பெண்கள் குளிப்பதை மறந்திருந்து வேடிக்கை பார்ப்பது, படுக்க அழைப்பது, பிடிக்காதவர்களை பஞ்சாயத்தில் அசிங்கப்படுத்துவது, ஊரைவிட்டுத் தள்ளி வைப்பது, அடாவடி செய்வது, இப்படியான ஆள் என்பதால் ராமசுப்பு என்றாலே யாருக்குமே ஆகாது.

ஊரில் பல பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு பஞ்சாயத்தில் அசிக்கப்படும் ராமசுப்பு இனி ஊரில் சுற்ற முடியாது என்பதால் அடுத்த வாரம் சிலருடன் குள்ராட்டிக்கு வருகிறான். ஏற்கெனவே குள்ராட்டியில் இருக்கும் நொடிஞ்சானுக்கும் அவனுக்கும் பழைய பகையொன்று பாக்கி இருக்கிறது. 

அம்மாவையும் ஊரையும் காணும் ஆவலில் மலையிலிருந்து ஊருக்குத் திரும்புகிறான் உச்சிமகாளி. அம்மா தன் இளவயதில் மாடு மேய்ததாகச் சொன்ன இடங்களையெல்லாம் வேடிக்கையாகப் பார்த்துப் போகிறான். மாடுகளைப்பற்றி ஆட்கள் விசாரிக்கிறார்கள். வீட்டில் அம்மா கோழியடித்து குழம்புவைத்து தருகிறாள். நண்பர்களுடன் வழக்கமாக கூடும் கருவேலப்பறை அருகே போய் குள்ராட்டி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறான்.

சுவரசியமில்லால் போன கிராமம் இப்போது அவனுக்கு ஏதோ விசேஷமாக இருக்கிறது. சீக்கிரம் கல்யாணம் செய்யலாம் என வீட்டில் பேசுகிறார்கள்.

குள்ராட்டி மலையில் வயிறுமுட்ட சாராயம் குடித்துவிட்டு 'கல்யாணியின் மாட்டை ஏதாவது செய்ய வேண்டும்' என்று வெறியோடு பேசுகிறான் ராமசுப்பு. 

கல்யாணி ஒரு விதவை. அவன் படுக்க அழைத்து அசிங்கப்படுத்தி அனுப்பிய உறவுக்காரி. கோயில் கொடையை ராமசுப்பு வசூலிப்பதால் கொடுக்க மறுக்கிறாள். பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கியதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் 'சாதி சனம் வேண்டாமென்று' தன் உழைப்பை நம்பிப் பிழைக்கிறாள். 

"அவளை ஏதாவது பண்ணனும்லெ" என்று போதையில் திருப்பித் திருப்பிச் சொல்லியபடி தலை கவிழ்கிறான் ராமசுப்பு. 

அவன் தலை கவிழ்வதை நொடிஞ்சானும் கேசரியும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.



19.6.16

வழிகாட்டி பறவை

அப்பாக்களின் கண்ணீரைப்
பார்த்தவர்கள் அபூர்வம்

யாரும் கண்டுபிடித்துவிட முடியாதபடி
கண்ணீர் கசியாமல்
மவுனமாய் அழுகிறார்கள்
அப்பாக்கள்

அம்மாக்களின் கண்ணீர்
அக்கணமே புரிந்துவிடும்
அப்பாக்களின் கண்ணீரோ
நெடுங்காலம் கடக்கும்

இறந்த பின்னும்
அவர்கள் 
நம்மைக் கைவிடுவதுமில்லை
விட்டு விலகுவதுமில்லை

சாகும்வரையிலும்
நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பாக்கள்

நம் வாழ்வின்
நல்லதும் கெட்டதுமான முடிவுகளை
அவர்களே எடுக்கிறார்கள்

நாம் "ஞானம்" அடைந்த
தருணம் உண்டெனில்
நம் அப்பாக்களின் கண்ணீரை
உணர்ந்த தருணமன்றி
வேறொன்றுமில

இன்னமும்
"ஞானம்" கிடைக்கப்பெறாதவர்கள்
அப்பாக்கள் திட்டியதை
அசைபோட்டுப் பாருங்கள்

15.6.16

வாங்கிய புத்தகங்கள்

சென்னையில் நடந்து முடிந்த 39 வது (2016) புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய நூற்கள் :

01. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – ஜான் பெர்க்கின்ஸ்
02. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மாத்தவ்
03. ராஜ விளையாட்டு – ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க்
04. நியாண்டர்தால் மனிதன் – இடாலோ கால்வினோவின்
05. வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – எஸ்.எஸ்.ராஜகோபாலன்
06. ஊடகங்களை நாம்பலாமா? – புதிய கலாச்சாரம்
07. எங்கள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்
08. பகுத்தறிவாளர்கள் படுகொலை – கீழைக்காற்று
09. தகவல் பெறும் உரிமைச் சட்டைக் கையேடு – எஸ்.பி.நெடுமாறன்
10. அடிமையின் மீட்சி – புக்கர் டி.வாஷிங்டன்
11. தூக்குமேடையில் தோழர் பாலு – ஆர்.நல்லகண்ணு
12. வாஸ்து; வளர்ந்து வரும் மூடநம்பிக்கை – எஸ்.ஏ.பெருமாள்
13. பாலைவளநாடு; துபாய் பயணக் கட்டுரை – இரா.ஜெயப்பிரகாசம்
14. ஈரோட்டுப்பாதை சரியா? – ப.ஜீவா
15. நொடிக்கு நொடி – ஆர்னிகா நாசர்
16. கல்வி எனப்படுவது... – லதா ராமகிருஷ்ணன்
17. பெருங்காற்று – ச.பாலமுருகன்
18. வர்ணமும் வர்க்கமும் – ராகுல சாங்கிருத்தியாயன்
19. அடக்குமுறையும் எதிர்ப்புக் குரல்களும் – தி.ஜெயசுதா
20. தமிழில் காப்பியங்கள் – ச.சுபாஷ் சந்திரபோஸ்
21. பால் ஒரு உயிர்க்கொல்லி – இயல்வாகை
22. இதுவல்லவோ கதைகள் – கீழைக்காற்று
23. ஒரு துளி நரகம் – ஆர்னிகா நாசர்
24. அமெரிக்கா; வந்தேறியவர்களின் வளநாடு – இரா.ஜெயப்பிரகாசம்
25. கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் – இரா.பாரதிநாதன்
26. செவ்வி – தொ.பரமசிவன்
27. தெய்வம் என்பதோர்... – தொ.பரமசிவன்
28. மானுட வாசிப்பு – தொ.பரமசிவன்
29. ஏழு தலைமுறைகள் – அலெக்ஸ் ஹேலி
30. ஊரார் வரைந்த ஓவியம் துரை.குணா
31. பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு – புலியூர் முருகேசன்
32. அரசியல் பழகு – சமஸ்
33. வியக்க வைக்கும் நிகழ்வுகள் – ரா.வேங்கடசாமி
34. எது காதல்? - புதிய கலாச்சாரம்


11.6.16

"ஊரார் வரைந்த ஓவியம்" - துரை.குணா

"ஊரார் வரைந்த ஓவியம்" - துரை.குணா

இக்கதையை எழுதி வெளியிட்டதற்காக இந்த எழுத்தாளரை ஊரைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள். புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு ஊரைச் சேர்ந்த அவரை இன்னமும் ஊருக்குள் வரவிடவில்லையாம். 

இம்மாதிரியான மிரட்டலுக்கு உள்ளான எழுத்தாளர்களின் வெளியீடுகளைத் தேடிச்சென்று நேற்று இரண்டு புத்தகங்களை மட்டும்தான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன், தாமதமாகச் சென்றதால்.

இக்கதையைப் பார்ப்போம்...

பூசாரித்தட்டில் சில்லறையைப் போட்டுவிட்டு திருநீறு எடுத்துப் பூசிக்கொள்கிறான் சாத்த ஊமை. முதலில் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துபோக பெற்றோருக்கு அவன் நான்காவதாகப் பிறந்தவன். சாத்த ஊமையை கீழ்ச்சாதியாகப் பார்க்கும் அந்தப் பூசாரி, பூசாரித் தட்டைத் தொட்டு அவன் திருநீறு எடுத்து வைத்ததை தாங்க முடியாமல் கன்னத்தில் அறைகிறார். 'ஊருக்காரன் மருவாதையே போச்சிடா' என்று இன்னொரு வயதானவரும் அவனை அடிக்க, அவனுடன் இருந்த சில இளைஞர்கள் பயந்து பின்வாங்கிவிடுகின்றனர். ஆனால் சாத்த ஊமை பயப்படாமல் அவர்களை நையப்புடைக்கிறான். 

ஊரில் இப்படி நடப்பது இதுதான் முதன்முறை என்பதால் சாத்த ஊமை தரப்பினரும் பூசாரித் தரப்பினரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

கம்யூனிஸ்டு கட்சி வந்ததிலிருந்துதான் ஊர் இப்படிக் கெட்டுப்போனதாக சாத்த ஊமை தரப்பு ஆட்களே சிலர் பேசுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியால்தான் "சாத்த ஊமை" என்கிற அவன் "ஜீவ பாரதி" என்று பெயர் மாறுகிறான்.

மறுநாள் ஊர்ப் பஞ்சாயத்து நடக்கப் போவதை எண்ணி சாத்த ஊமையின் பெற்றோர்கள் மிகவும் அஞ்சுகிறார்கள். 

அவன் அப்பா சங்கரன் ஊர் ஆட்களுக்கு விசுவாசமானவர். அவரது பங்காளிகள் ஒன்றுகூடி பஞ்சாயத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்வதை ஒதுக்கிவிட்டு கோபத்தோடு பையனைத் தேடுகிறார். 

பாடிருந்து பெற்ற மகன் ஊர்ப்பஞ்சாயத்தில் யார் கையால் என்னாவானோ என்று அஞ்சும் அம்மா மாரியாயி கெஞ்சி கூத்தாடி கணவனை சமாதானப்படுத்துகிறார். 

ஊரின் பிடி மண்ணையெடுத்து அப்பாவும் தன் பித்தளைத் தாலிக்கொடியைக் கழற்றி அம்மாவும் 'ஒரு கொறையும் வராது' என்று தைரியம் சொல்லி சாத்த ஊமையை எங்கேயாவது வெளியூருக்கு போய்விடும்படி இரவுப் பேருந்தில் அனுப்பி வைக்கிறார்கள். இதுவரை ஊரைத்தவிர வெளியுலகமே அறியாத சாத்த ஊமை பெற்றோர்களைப் பிரிந்து செல்லும் தவிப்புடன் விருப்பமே இல்லாமல் ஊரைவிட்டுக் கிளம்பிச் செல்கிறான்.

மறுநாள், ஊரில் செய்தி பரவுகிறது.

"வெள்ளரிக்கு வெக்க வெச்சிருந்த குருணா மருந்தை குடிச்சிப்புட்டு சங்கரனும் அவன் பொண்டாட்டி மாரியாயியும் செத்துக்கிடக்குறாங்க" என்று.

***

இதுதான் துரை குணா அவர்கள் எழுதிய கதை. வெறும் 36 பக்கத்தில் ஒரு கிராமத்தை; எளிய மக்களின் வாழ்க்கையை எழுத்தில் கொணர்ந்து நிறுத்துகிறார்.

இக்கதைக்கும் அவரை ஊரே எதிர்ப்பதற்கும் என்ன காரணம் என்று மீண்டும் கதையைப் புரட்டிப் பார்த்தேன். இதுதான் காரணமாக இருக்குமென நினைக்கிறேன். இதோ அந்த வரிகளை அப்படியே எழுதுகிறேன்.

//
"இருக்குற கள்ளப்பய பூறா பறத்தெரு போய் படுத்து புள்ளபெத்தா, அப்புறம் எப்புர்றா? கள்ளப்பய நம்மள அடிக்காம விடுவாங்கெ? நம்ம பெத்தப்புள்ளதான், நம்மள அடிக்கிறாங்கெனு நெனச்சி மனசுல வச்சிக்கிட்டு, ஒதிங்கிப் போய் தொலங்கடா"னு வேலுச்சாமி ராங்கியர் தலையிட்டு மத்துசம் பண்ணிவிட்டாரு.

பார்த்தியாடா... நம்ம நடத்தைய எப்படி குத்திக்காட்டி இழிவுபடுத்திப் பேசுரானேனு நெனைக்கும்போதே? ஏண்டா, நம்ம வூட்டுப்புள்ள அவென் வூட்டுல வளர்ருது, அவென் வூட்டுப்புள்ள நம்ம வூட்டுல வளர்ருது. 

அன்னிக்கி அவென் வூட்டுல பண்ணைக்கி இருந்தவனேல்லாம் ஒவ்வொருத்தியை கொக்கிப் போட்டு வெச்சிக்கிட்டு, அங்கயே குடிகெடந்தது இந்த ஊரு ஒலகத்துக்கு தெரியாதாயென்ன?
//


5.6.16

பகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா

"பகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா" - தெய்வச்சிலை

இன்று இப்புத்தகத்தை வாசித்தேன்.

முதன்முதலில் எனக்கு ஓஷோவை அறிமுகப்படுத்தியது ராணுவத்தில் பணிபுரியும் எனது அத்தை மகன் வாசுதேவன் ரேணு.

அறிவும் தேடலும் எவ்வளவு சுகமான போதை என்பதை ஓஷோவின் கருத்துக்களில் உணர்ந்திருக்கிறேன். தியானம், ஆன்மீகம், கடவுள் என்ற எல்லா பாழடைந்த கட்டிடங்களையும் குண்டுவைத்து தகர்த்தவர் ஓஷோ. ஓஷோவின் புத்தகங்களைப் படிப்பது என்பது எப்போதும் ஒரு அலாதியான உணர்வு. அவ்வப்போது என்னை முற்றுகையிடும் கவலைகளையும் மன அழுத்தத்தையும் விரட்டியடிக்க என் உதவிக்கு வரும் உறவுகளில் ஓஷோவும் ஒருவர். ஓஷோவைப் பகவானாக பார்க்க வைக்காமல் ஒரு தத்துவ ஆசிரியராகவே பார்க்க வைப்பவர் பெரியார்.

இப்புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்...

முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு கிறித்தவ மத வெறியர். நம் காலத்திலேயே இயேசு மீண்டும் உயிர் பெற்று வருவார்; சாத்தானுடன் இறுதிப்போரை நடத்துவார் என்றும் நம்பிக்கொண்டிருந்தவர். இவரது ஆட்சிக்காலத்தில் அதாவது 1981-ம் ஆண்டு அமெரிக்கா செல்கிறார் ஓஷோ. (1989-ம் ஆண்டுவரையில் ரொனால்ட் ரீகன்தான் அமெரிக்க அதிபராக இருந்தார்).

ஓஷோவைப் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே. இந்த நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவ போதகர். புதிய சந்நியாசம் என்ற இவரது பாதையில் “யாரும் வெளி உலக வாழ்க்கையை துறக்க வேண்டியதில்லை, மாறாக ஒவ்வொரு தலைமுறையும் தன் அடுத்த தலைமுறையின்மேல் சுமத்தும் நம்பிக்கை அடிப்படையிலான கட்டுமான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டும்” என்றவர். “கடவுள் என்பது ஆதாரமற்ற வெறும் வார்த்தை; அது மதகுருமார்களின் கண்டுபிடிப்பு” என்றவர்.

ஓஷோவின் கருத்துக்கள் உலகை உலுக்கியது. குறிப்பாக மதத்தின் பெயரால் மக்களை மயக்கி தங்கள் சொந்த வாழ்க்கையை சுகபோகமாகய் நடத்திக்கொண்டிருந்த மதத் தலைவர்களின் மனங்களில் ஓஷோ வில்லனாகப் பதிந்தார். அமெரிக்க மக்களோ இவரது கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். அமெரிக்காவின் வறண்ட நிலமான மத்திய ஓரேகானின் பகுதியில் 5000 பேர் தங்கும் அளவிலான “ரஜ்னீஷ்புரம்” என்ற குடியிருப்பு ஏற்படுத்தப்படுகிறது. வருடத்திற்கு 15,000 பேர் அங்கு வந்து கோடைக்காலத்தை கொண்டாடுகிறார்கள். ஊடகங்கள் இவரைக் கொண்டாடுகிறது. ஓஷோவும் அவரது ஆன்மீகக் குடியிருப்பும் பரபரப்பு செய்தியாக்கப்படுகிறது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி கிறித்தவ மற்றும் மதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் ஓஷோ. இவரது பிரச்சாரம் கிறித்தவ மதப் பிரச்சாரகர்களை மிரளச் செய்கிறது. தீவிர கிறித்தவரான ரொனால்ட் ரீகன் சும்மா விடுவாரா? இப்படியே போனால் கிறித்தவம் என்னாவது என்று கவலைப்பட்ட (உலக ரவுடி) அமெரிக்க அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சில ரகசிய கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. 

அவரைக் கொல்வது அல்லது நாடு கடத்துவது என்ற திட்டத்தின்படி 1985-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியன்று (28-10-1985) வடக்கு கரோலினா மாநிலத்திலுள்ள சார்லோட்டே எனும் இடத்தில், அமெரிக்க குடியேற்றச் சட்டத்தை மீறியதாக பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கைது ஆணை இல்லாமல் துப்பாக்கி முனையில் “ஓஷோ” கைது செய்யப்படுகிறார். அது பொய்க்குற்றம் என்பது பின்னர் வழக்கில் நிரூபிக்கப்பட்டது. அமெரிக்காவிற்குள் நுழைந்ததுமே கைது செய்யாமல் இத்தனை ஆண்டுகள் கழித்து கைது செய்யும்போதே அது பொய் குற்றச்சாட்டு என்பது புரிகிறதுதானே. 

கைது செய்யப்பட்ட ஓஷோ எங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்? எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்ற எந்தத் தகவலும் அவரது வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ரகசியமாக பல இடங்களில் அலைக்கழிப்படுகிறார். பின்னர் 08-11-1985 அன்று சிறையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுகிறார். அதன்பின்னர் ஒருவாரம் கழித்து 14-11-1985 அன்று அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்படுகிறார். பலநாடுகளிலும் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது: எச்சரிக்கப்படுகிறது. இறுதியில் இந்தியா திரும்பி வருகிறார். 

அதுவரையில் திடகாத்திரமாக இருந்த அவரது உடல், அமெரிக்க கைதுக்குப் பின்னர் படிப்படியாக நலம் குன்றுகிறது. வேகமாக முடி கொட்டுகிறது. பிரசங்கம் செய்வதை நிறுத்துகிறார். சிறு சிறு தொற்று நோய்கள் அவரை பீடிக்க, உடல் நலக்குறைவால் இறுதியில் 1990 ஜனவரி 19-ம் நாள் மாலை 5 மணிக்கு இயற்கை எய்துகிறார்.

“தாளியம்” என்பது கண்ணாடி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாம்பல் வண்ண உலோக மூலம். இது எலி விஷமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ரசாயனம். இதை உணவில் கலந்தால் மெல்ல மெல்ல நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் மெதுவாக ஆட்களைக் கொல்லும். இந்த விஷம்தான் அமெரிக்கச் சிறையில் உணவுப் பொருளில் கலக்கப்பட்டு ஓஷோவுக்கு அளிக்கப்பட்டது. 

ஓஷோ மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் அல்லது இவ்வுலகில் நாளை பிறக்கப்போகும் ஒவ்வொரு குழந்தையுமே அமெரிக்க கொலையாளிகளுக்கு ஒரு பரிசோதனை எலிதான். "நான் ஆண்டஜாதி... மெஜாரிட்டி... உயர்ந்த இனம்... மயிரு... மண்ணாங்கட்டி..." எல்லாமே அறியாமைதான்.

இறைவி

பெண் என்பவள் பெண்தான்; தெய்வமல்ல. பெண்ணை தெய்வம் என்று குறுப்பிடுவது அவர்களை ஏமாற்றும் பெரிய மோசடி.

பெண்ணை பெண்ணாக; சக மனிதராக உணரும்படி சொல்லித்தந்தாலே; குறிப்பிட்டாலே போதுமானது.

தங்களுக்காக வாழ்ந்துகொள்ள இயலாமல் அடங்கிக்கிடப்பவர்களை தியாகி என்பதும் இறைவி என்பதும் சாதுரியமான சுரண்டலின் முகமூடி மனோபாவம்.

பெண்ணை இயந்திரங்களாய் நடத்தும் சமூகத்தில் அவளை இறைவியாகப் போற்றுவதும்; இறைவியாகக் கொண்டாடச் சொல்வதும் பெண்ணுரிமையல்ல.

நான் "இறைவி" படம் பற்றிச் சொல்லவில்லை, இன்னும் படம் பார்க்கவில்லை.

1.6.16

ஜாதி / கிராமத்தின் வளம்

"நான் இந்த ஜாதி" என்று எப்போதும் பிறருக்கு தெரிவித்துக்கொண்டிருக்கும் ஒருவித மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் இன்றைய கிராமத்து தமிழ் இளைஞர்கள். இது ஓரளவு படித்த; அறிவுள்ள இளைஞர்களையும் பீடித்துள்ளது என்பது இம்மண்ணிலே வெட்கப்படத்தக்க ஒன்றாக இல்லாமல் பெருமைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நாட்டிலே பள்ளி, கல்லூரிகள் திறக்கும் காலகட்டத்திற்கு முன்னர் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதேகால ஜாதி மனநிலையில்தான் தடுக்கிவிழுந்தால் இவ்வளவு பள்ளி, கல்லூரிகள் எழும்பியிருக்கும் இந்நாளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கிராமங்களிலே இவற்றை கண்கூடாகக் காணலாம். 

"உன் யோக்கியதை என்ன?" என்று யாரும் எதிர் கேள்வி கேட்டுவிடாதபடி; தங்களை செம்மறியாட்டு மந்தைகளாக்கி ஒரு கட்சி சாயம்பூசி பட்டியில் மடக்கி வைத்துக்கொண்டு; எங்கேயோ "தலைவன்" என்ற பேரில் சுகபோகமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் ஜாதிக்காரன் ஒருவனுக்காக, சொந்த ஊரில் வாழ்நாள் முழுதும் உடன் வாழும் பிற மக்களை எதிரியாக பாவிக்கும் நோயால் பெருமைபட்டுக்கொள்கிறார்கள்.

"ஜாதிவெறி" என்ற ஒன்றைப் பொருத்தவரையில் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் வித்யாசம் தெரியவில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாகக் கவனிக்கிறேன். 

தன் அறிவை உணர இயலாத எல்லா செம்மறியாடுகளும் தானாய் போய் தன் ஜாதி பட்டியில் அடைந்துகொள்கின்றன. 

மாறாக, தன் சொந்தத் திறமையினால் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்த இயலும் என்ற நம்பிக்கையையும் தன் அறிவின் மீதான மரியாதையையும் கொண்டுள்ள இளைஞர்கள் மட்டும்தான் "தன் சுயஜாதி" வெட்டிப் பெருமையிலிருந்து விடுபட்டு விலகி நிற்கிறார்கள். எல்லோருடனும் இயல்பாய் அவர்களால் பழக முடிகிறது. 

ஒரு கிராமத்தின் வளம் என்பது அதில் வாழும் மனிதர்களின் அறிவும் உறவும்தான்.

இவ்வகையில் எனது கிராமம் வறுமைக்கோட்டுக்கு கீழேதான் உள்ளது.