30.9.16

நட்புகளுக்கு...

நான் ஒரு இடதுசாரி தமிழ்த்தேசியவாதி. ஜாதி, மத, இன, மொழி வெறியனல்ல. "யாவரும் கேளிர்" என்ற உணர்வு கொண்ட மனிதன். எல்லாவித அடக்குமுறைகளுக்கும் எதிரான கருத்துடையவன் அவ்வளவுதான். சமூகத்தின் பெரும்பான்மையான பொதுக்கருத்தோடு என்னால் உடன்பட வாய்ப்பில்லை என்பதே என் எழுத்தின் பிரச்சினை. இது எனக்கொன்றும் பிரச்சினை அல்ல. மற்றபடி ஒரு வலதுசாரி தேசபக்தரைக் காட்டிலும் கூடுதலாகவே இந்த மண்மீதும் மக்களின் மீதும் அக்கறைப்படுகிறேன். நான் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்றோ சிந்திக்கக்கூடாது என்றோ யாரேனும் என் நட்பு வட்டத்தில் நினைத்தால் நட்பிலிருந்து விலகிக்கொள்வது நல்லது. உங்களுக்குப் பிடித்தமானவராக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. 

மகிழ்ச்சி

29.9.16

உலகின் போர் அரசியல்

01. ஹலோ இந்தியாவோட ஆளுங்கட்சியா?... நாங்கதான்... பாகிஸ்தான்ல இருந்து ஆளுங்கட்சி பேசறோம்....

02. ம்ம்... சொல்லுங்க...

01.  இங்க உள்நாட்ல நிம்மதியா ஜனங்கள ஏமாத்த முடியல, பதவியை அனுபவிக்க விடமாட்றானுங்க. ஏகப்பட்ட பிரச்சினை, குழப்பம், ஊழல். மதவாதிங்க தொல்லை வேற. என்ன பண்றதுன்னு தெரியல? 

02. இங்கயும் அதான் நிலைமை. எல்லா பக்கமும் கிழிச்சி தொங்க விட்றானுங்க. என்ன பண்றதுன்னு தெரியல?

01. பேச்சு வார்த்தைல பிரச்சினைய முடிச்சா இங்க எங்க கத? தப்பிக்க வேற வழி தெரியல. உங்ககூட சண்டைன்னாதான் எங்க நாட்ல தேசபக்தி பொங்குது. அப்பதான் ஜனங்க எதையும் கேள்வி கேட்காம தேசபக்தில மிதக்குறாங்க. நாங்களும் ஹீரோ ஆவறோம்...

02. இங்கயும் நாங்களும் அப்டித்தான். உள்நாட்ல பிரச்சினை வந்தா திசை திருப்ப வேற வழி தெரியல

01. அருணாச்சல்ல சீனா அத்துமீறி நுழையுது, இலங்கை ராணுவம் உங்க மீனவர்களை அடிக்குது, சுடுது. அதையெல்லாம் ஏன் கண்டுக்க மாட்றீங்க?

02. உங்க தீவிரவாதிகளை அழிக்காம விட மாட்டோம்... 

01. உங்கள நாங்களும் விட மாட்டோம். நியூக்ளியர் போடுவோம்...

20.9.16

கவனிக்க...

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோது சங்கராச்சாரியாரை "சங்கரராமன் கொலையாளி" என்று எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. "குற்றம் சாட்டப்பட்ட" என்றுதான் எழுதினார்கள். ஆனால் ராம்குமார் பிடிபட்டதும் "சுவாதி கொலையாளி" என்றே எல்லா ஊடகங்களும் எழுதின. "சமூகத்தில் பெரும்புள்ளி" என்பது மட்டும்தான் இதற்குக் காரணம் என்று யாரேனும் நினைத்தால் அவர்களின் அரசியல் அறிவைக் கண்டு வியப்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

19.9.16

பொங்குவதாகச் சொல்பவர்களுக்கு...

சிறைகள், நீதிபதிகள் எதற்கு? போலிசே எல்லோரையும் கொன்றுவிடலாமே...

இது ராம்குமார் என்ற தனிநபருக்காக பொங்குவதல்ல, அப்படி நினைத்தால் அது அவரவர் பார்வை. நீதிமன்றம் உறுதியாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படாத ஒருவருக்கு நேரும் முடிவு. நாளை இது யாருக்கும் நேரலாம். இந்த நாட்டிலே ஒருவன் தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கவே பல போராட்டங்கள் நடத்தவேண்டி உள்ளது. அதற்கு பல வழக்குகள் சாட்சி. ராம்குமார் தற்கொலை என்பது முதன்முதலாய் நடப்பது அல்ல. பொங்குபவர்கள் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை கண்டுதான் பொங்குகிறார்கள். நீங்கள் கவனிப்பது வேண்டுமானால் புதிதாய் இருக்கலாம். இன்னொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். அது, இப்படி சந்தர்ப்பவசத்துக்காகவாவது பொங்கும் சிலரால்தான் பல நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டிருக்கிறது. மேலும் விசாரணக் காலத்திலும் ஒருவரை சிறையில் அடைக்க உத்தரவிடலாம். ஆனால் அது தீர்ப்பாகிவிடாது. இறுதியென்று அர்த்தமல்ல. பாவம், வலுவில்லாத மக்கள் கூட்டமும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

ராம்குமார் கைது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதில் விசாரணைக்கு உள்ளான ஒருவர் காவல்துறைக்கு பயந்து வெளிநாடு தப்பித்து சென்றது தொடர்பாகவும் கவனித்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். 

நீதிபதியையே தொலைபேசியில் பகிரங்கமாக மிரட்டிய சங்கராச்சாரி நிரபராதியாக வெளியே வந்தார் என்பதையும் அறிந்திருப்பீர்கள். 

நாளை எந்தவொரு அப்பாவிக்கும் அநீதி நடந்துவிடக்கூடாது என்றே பல சந்தர்ப்பவாதிகள் பொங்குகிறார்கள். வலுவான உங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. வலுவில்லாத என் போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு நீதியும், நிரூபிக்க ஒரு வலுவான வாய்ப்பும் பாதுகாப்பும் தேவைபடுகிறது.

நாளை ஏதேனும் உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் நிரூபிக்க வாய்ப்பு தராமல் உங்களைக் கொன்றுவிடலாமா? இதுதான் சரியான பார்வையா?

அவன் தன்னை நிரூபித்துக்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டதா? இன்னும் வழக்கு முடியவில்லை. வீடியோ காட்சி தொடர்பான குளறுபடிகளை படிக்கவில்லையா? காவற்துறை நடைமுறைகள் தெரிந்துதான் பேசுகிறீர்களா? காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட நான் இரவு 9:30 க்கு FIR போடப்பட்டேன். அதுவும் வேறொரு இடத்தில் பிடிக்கப்பட்டதாக. போலிஸ் சொல்வதையெல்லாம் நம்பும் அளவுக்கு இருப்பீர்களென்றால் உங்கள் பார்வையில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

சிறைகள், நீதிபதிகள் எதற்கு? போலிசே எல்லோரையும் கொன்றுவிடலாமே...

18.9.16

அரசு மக்களுக்கானதாக இருக்கிறதா?

* 11 நாட்களாக கர்நாடகாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஊருக்குப்போய் சிக்கியவர்களின் நிலை என்ன?

* பல ஓட்டுனர்கள் இன்னும் காணவில்லை என்று வந்த செய்தியின் உண்மை என்ன? 

* என் தந்தை ஓட்டி வந்த லாரியுடன் உயிருடன் கொளுத்தப்பட்டார் என்று ஒருவரின் செய்தி நாளிதழில் வந்தது. தமிழக அரசு இதற்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன?

* உச்சநீதி மன்றம் கட்டளை பிறப்பித்த அளவிற்கு உண்மையிலேயே காவிரியிலிருந்து தண்ணீர் வருகிறதா?

* கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணமாய் தமிழக அரசு என்ன செய்தது?

* கடந்த ஆண்டு இதே நாளில் மரணித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் குற்றச்சாட்டின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

* 570 கோடி என்ன ஆனது?

* காவிரிப் பிரச்சினையின்போது பேரறிவாளன் சிறையில் தாக்கப்பட்டதன் பின்னணி என்ன?

* 20 ஆண்டுகளுக்கு மேல் யாரையும் சிறையில் வைத்திருக்கக் கூடாது, விடுவிக்கலாம் என்ற சட்டம் ராஜீவ் கொலை வழக்கில் பின்பற்றப்படாதது ஏன்?

* ஆந்திராவில் மீண்டும் தமிழர்கள் சுடப்பட்டதாக சமீபத்தில் வெளியான செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

* ஸ்வாதி கொலை பற்றி சமூக ஊடகங்களில் வெளியான பல கேள்விகளுக்கான விடை என்ன?

* குற்றவாளி, கொலையாளி என்பதெல்லாம் கோர்ட் விசாரணை செய்த பின் தீர்ப்பில் சொல்லப்பட வேண்டும்.அதுவரை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் என்றுதானே பத்திரிக்கைகள் குறிப்பிட வேண்டும்? கொலையாளி என்று தீர்ப்பு வரும் முன்பே மீடியாக்கள் கொலையாளி என்று குறிப்பிட்டு எழுதுவது சரிதானா?

* நாளை ஜாமீனுக்கு வழக்கு வரும் நிலையில் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம்?

* பிளேடால் தன் கழுத்தை ராம்குமார் கீறிக்கொண்டதாக படம் வெளியானதுபோல், மின் வயரைக் கடிக்கும் படம் வெளியானாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

இனி இந்த நாட்டில் வாழும் வலுவற்ற சாமானியர்களின் கதி...?

17.9.16

பட்டா மாறுதல்...

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.

பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984.

ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது? இல்லவே இல்லை!

நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, 'பட்டா பெயர் மாறுதலுக்காக' வி.ஏ.ஓ., -விடம் போகிறோம்.

அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர்பார்க்கிறார். 
வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ 'சல்லிக்காசு' கூட கட்டணமில்லை. ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்துதான் பட்டா பெற முடியும் என்பதாக நம்மிடம் 'அளந்து', நம்மிடம் எதிர்பார்க்கும் தொகைக்கான 'பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை' விரிக்கிறார்.

இந்தக் கொள்ளையை எதிர்த்து,  சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.

மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

இதோ நண்பர்களே, அந்தத் தீர்ப்பின் நகல் கிடைத்துவிட்டது!

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CBwQFjAA&url=http%3A%2F%2Findiankanoon.org%2Fdoc%2F102996905%2F&ei=hi6dVYOlL4K4uATehKKgDA&usg=AFQjCNGHQb5xxpWfQJ4g8RRdl3TO6_sR5Q

தாசில்தார் தொடங்கி, வி.ஏ.ஒ வரை அடிக்கும் பகற்கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்.

பெரியார் எனும் பெருநெருப்பு

விமர்சனங்களைப் புறந்தள்ளவும், எதிர்ப்புகளைக் கண்டு; எதிரிகளைக் கண்டு சிரிக்கவும், தமிழனாய் மானுடனாய் எனை சிந்திக்கவும் தூண்டிய சிந்தனையாளர் "அய்யா பெரியார் ஈ.வெ.ரா" அவர்களின் 138-வது பிறந்தநாள் இன்று...

"எதிர்ப்புகள் எத்தனை வந்தாலும் அணையாமல் எரியும் பெருநெருப்பு"

பெருமை கொள்கிறேன் அவரைப் படித்ததற்காய்...

16.9.16

கதறும் கன்னட சிங்கம்

கூட்டத்தில் வீரம் காட்டி தமிழ் இளைஞனை அடித்து அவமானப்படுத்திய AC Venkatesh என்ற அந்த கன்னட சிங்கத்தின் கதறலைப் பாருங்கள்.

"என்னை வாழவிடுங்கள்" என்று கெஞ்சும் அளவுக்கு நம்மாட்கள் கதற விட்டிருக்கிறார்கள்.

படியுங்கள்... ரசியுங்கள்...

15.9.16

அக்னி சாட்சி (1982)

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1982-ல் வெளியான திரைப்படம். சரிதாவின் கதாபாத்திரமும் நடிப்பும் வசனமும் வியக்க வைக்கிறது. மனநிலை பிறழ்ந்தவள் என்று தெரியாமல் காதலித்து மணந்த மனைவியுடன் வாழவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் பெற்றோர்களை சமாளித்து தவிக்கும் சிவக்குமாரின் நடிப்பு அபாரம். 

34 வருடங்கள் கழித்தும் பாலச்சந்தரின் புதுமையான திரைப்படம்...!!!

தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட காரணம் என்ன?

கர்நாடகாவை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்துவதைக் காட்டிலும், எல்லோரும் கூடி சட்டரீதியாக போராட முனையலாம். 

சட்டரீதியான கட்டமைப்பு இல்லாமையாலே எல்லா இடங்களிலும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.

அதாவது, தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்புகளுக்கும் கர்நாடக அரசே பொறுப்பு என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் பெற்றுத்தர போராடலாம். ஒருமுறை இழப்பீடு பெற்று வழக்கில் வெற்றி பெற்றால் இனி கலவரம் செய்யக் கன்னடர்களே தயங்குவார்கள். அரசும் வேடிக்கை பார்க்க முயற்சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க முன் கூட்டி நடவடிக்கை எடுக்கும். 

கேரள, ஆந்திர, கர்நாடக சிறைகளில் என்ன வழக்கென்றே தெரியாமல் ஏராளம்பேர் இன்னமும் சிறையில்தான் இருக்கின்றனர். இவர்களுக்காகப் போராடவும்; தமிழ் உணர்வுப் போராட்டங்களுக்காக வழக்கில் சிக்குபவர்களை காப்பாற்றவும் ஒரு வலுவான சட்ட ரீதியிலான வலுவான கட்டமைப்பு தேவை. 

இவ்வாறான கட்டமைப்பு உருவாகாத வரையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை யாராலும் தடுக்க இயலாது. 

உடனடியான தேவை என்னவெனில், ஜாதி அரசியல்; உணர்ச்சி அரசியலில் ஈடுபடாத ஒரு "அறிவார்ந்த செயற்திறனுடைய" தமிழர் தலைமைத்துவம்.

எப்போது நடக்கும்..?

13.9.16

கற்பனையும் யதார்த்தமும்

ஜாதகம், விதி, பூர்வ ஜென்மம், சொர்கம், நரகம், கிரகம் என்பதெல்லாம் கற்பனையே.

"சுரண்டலே" யதார்த்தம்.

12.9.16

ஆண்டஜாதி / வீரஜாதி ஆட்களுக்கு...

மீசை முறுக்கிக்கொண்டு, அரிவாள் மற்றும் சிங்கம் படம் போட்டு சுவரொட்டி அடித்துக்கொண்டு, "மாவீரன், மயிரு வீரன்" என்று அடைமொழி வைத்துக்கொண்டு, தேர்தல் வரும்போதும் திருவிழாக்கள் வரும்போது நாங்கதான் "ஆண்டஜாதி; வீர ஜாதி" என்று தமிழ்நாடு முழுதும் ஆங்காங்கே எல்லா பகுதிகளிலும் உதார் விட்டுக்கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் பெங்களூர் வரைக்கும் போய் ஒரு கை பார்த்துவிட்டு வரலாம். தமிழனுக்கு இன்னல் நேரும் இவ்வாறான இக்கட்டான சமயத்தில்கூட வீரத்தை பயன்படுத்தாமல் இருப்பது நியாயமா?


மகிழ்ச்சி

01. கோவையில் கன்னட இலக்கிய அமைப்பின் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டு பலகைகள் உடைக்கப்பட்டது.

02. உயர்தர கன்னட விடுதி ஒன்று பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது.

03. ராமேஸ்வரத்தில் கன்னடர் ஒருவருக்கு பலத்த அடி. வீடியோ காட்சி வெளியிடப்பட்டது.

தீர்வு இது இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இப்போதைக்கு இதுதான் பாதுகாப்பு. 

தமிழ்நாட்டில் கன்னடர்களை அடிக்க வேண்டிய அவசியமில்லை. ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் நாய்களை உதைக்க ஆரம்பித்தாலே நல்ல காலத்திற்கான அறிகுறி அரும்பும்.

குழந்தைகள்...

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"

குழந்தைகளுடன் பேசும்போது ஊறும் மகிழ்ச்சியை வேறெதைக்காட்டிலும் ஒருபடி மேலாய் உணர்கிறேன்.

அண்ணனின் மகன், அக்காள் மகள் மற்றும் தம்பியின் மகளுடன்...

கன்னடர்கள் போராட்டத்தை அடக்க...

"போராட்டம் நடக்கும் இடங்களில் பிரதமரே நேரடியாக JIO சிம் கார்ட் விற்பனை மையங்களைத் திறக்கலாம். தன் கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்ட பிரதமருக்கு இதுதான் நல்லதொரு சந்தர்ப்பம்"

"முட்டாள்" நாகராஜ்

"நதியை அவிழ்த்துவிடக் கேட்டால்
நாய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்"

( படித்ததில் பிடித்தது )

கர்நாடக தேர்தலில் பிணைத்தொகையையும் பெற வழியில்லாமல் போய் தொடர்ந்து தமிழர்களுக்கெதிராய் ஊளையிட்டுக்கொண்டிருக்கும் "முட்டாள் நாகராஜ்"

3016-லாவது...

நாட்ல இருக்கிற எல்லா பிரச்சினையும் தீரனும்னா மறுபடியும் மோடி பிரதமராகனும்னு ஒரு கூட்டமும், மறுபடியும் ஜெயலலிதா முதல்வராகனும்னு ஒரு கூட்டமும், மறுபடியும் கருணாநிதி முதல்வராகனும்னு ஒரு கூட்டமும் இன்னும் பேசிக்கிட்டுதான் இருக்குது. 

3016-ல் ஆவது இந்த நாடு ஜாதி ஒழிந்து சிந்திக்கிறவங்க வாழுற நாடா மாறியிருக்கனும்னு விரும்புறேன். ஆனா அவங்களும் இவங்களும் விடமாட்டாங்க போல...

9.9.16

"BEKAS" - குர்திஷ் திரைப்படம் (2012

BEKAS - குர்திஷ் திரைப்படம் (2012)

போரில் பெற்றோரை இழந்த இரண்டு குர்திஷ் சகோதர சிறுவர்கள், அமெரிக்கா சென்று சூப்பர்மேனை பார்த்துவிட்டு அழைத்து வந்து அவரது சக்தியால் தங்கள் பெற்றோர்களை உயிர்ப்பிக்கவும், குர்திஷ்களுக்கு கொடுமை செய்யும் சதாம் உசேனை கொல்லவும் விருப்பம் கொள்கின்றனர். அதற்காக சிறு சிறு வேலை செய்து பணம் சேர்க்கின்றனர். ஒரு கழுதையை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு பயணம் தொடங்குகின்றனர். 

எந்த ஆவணங்களுமின்றி எப்படி அந்நாட்டு எல்லையைக் கடக்கிறார்கள்? சூப்பர் மேனை சந்தித்தார்களா? என்பதே படம்.

சதாமை வீழ்த்த அமெரிக்காவை எதிர் பார்த்த குர்திஷ் மக்களின் விருப்பத்தையும், குர்திஷ் சிறுவர்களே சூப்பர்மேன்கள்தான் என்று உணர்த்தும் அரசியலையும் இப்படம் பேசுகிறது.

"காக்கா முட்டை" மாதிரியான படங்களை எதிர்பார்க்கும்; ரசிக்கும் மக்களுக்கு இப்படம் நல்ல நிறைவானதாக இருக்கும்.

அருமையான படம்...!!!








8.9.16

"நீதியை நிலை நிறுத்தப் போராடுவோம்" - கா.தமிழ்வேங்கை

"நீதியை நிலை நிறுத்தப் போராடுவோம்" - கா.தமிழ்வேங்கை

அற்பக் காரணங்களுக்காக மனித உரிமைகளை மீறுவது தொடங்கி, காசு வாங்கிக்கொண்டு "என்கவுண்டர்" செய்வது வரை காவல்துறையின் அத்துமீறல்கள் ஏராளம். கண்முன் நடக்கும் இத்தகைய அத்துமீறல்களை நாம் யாரும் கேட்பதில்லை. அச்சம்தான் காரணம்.

ஒரு குழந்தைத் தொழிலாளியிடம் காவலர் ஒருவர் அநியாயமாக நடந்துகொண்டபோது விழுப்புரத்தைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான தமிழ்வேங்கை அப்படி ஒதுங்கவில்லை. தட்டிக் கேட்கிறார். காவல்துறை அலட்சியம் செய்கிறது. அவர் ஓயவில்லை. பிரச்சினையை மனித உரிமை ஆணையத்திற்கு இட்டுச் செல்கிறார். வழக்காடி வெற்றியும் பெறுகிறார். அந்தக் காவலருக்கும் அவரது புகார் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகளுக்கும் 50,000/- ரூபாய் தண்டத்தொகை விதித்து ஆணை இடுகிறது ஆணையம்.

இந்தச் சுவையான வழக்கை ஒரு நாவலைவிட விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறது இக்குறு நூல்.

கண்முன்னே நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அனுபவ நூல் இது.

விலை : 70,
வெளியீடு : ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம்.












ஊருக்கு ஊர் "வெட்டி வீரம்"

சுய சிந்தனையை; அறிவை வளர்த்துக் கொள்ள எள்ளளவும் முயற்சிக்காமல் ஜாதியின் பேரால் மட்டும் சக உழைக்கும் மக்களிடம் "வீரனைப்போல" ஆண்டு முழுதும் பாவ்லா காட்டிக்கொண்டு ஏனைய கிராமங்களைப் போலவே சில இளைஞர்கள் எங்கள் ஊரிலும் இருந்துகொண்டிருக்கிறார்கள். 

தான் உண்டு தன் வேலையுண்டு என்றுதான் தமிழக கிராம மக்களில் 98% பேர் வாழ்கிறார்கள். இந்த ஜாதியை தூக்கி வைத்துக்கொண்டு 2% ஆட்கள் செய்யும் அலப்பறைகளால்தான் எல்லா கிராமங்களின் வளர்ச்சியும் மட்டுப்படுகிறது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுக்கால்வாய்கள், வளைக்கப்பட்ட புறம்போக்கு பொது இடங்கள், பரவிக்கிடக்கும் கருவேல மரங்கள், பஞ்சாயத்து நிர்வாக விவரம், மக்களை மோதவிட்டுப் பகையாக்கும் ஜாதி அரசியல், அறிவையும் வளர்ச்சியையும் கெடுக்கும் ஜாதி உணர்வு, முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்குவதில் நடக்கும் கையாடல்கள், ஊர்ப் பொருளாதாரத்தை போண்டியாக்கும் கோயில் திருவிழாக்கள், மற்றும் அத்திருவிழாக்களின் வரவு செலவு கையாடல்கள்... இப்படி எதுவுமே எந்த "வீரனுக்கும்" கடைசி வரைக்கும் தெரியாமலே போய்விடுகிறது. 

கர்நாடக எல்லைகளில் தமிழகப் பேருந்துகளை மறித்து கன்னடர்கள் செய்த அட்டூழியம் மற்ற ஊர் வீரர்களைப்போலவே எங்கள் ஊர் "வீரர்களுக்கும்" தெரியாது. தெரியாதவரையில் கன்னடர்களுக்கு நல்லகாலம். தெரிந்திருந்தால் கர்நாடகாவே கதிகலங்கிப் போயிருக்கும். இத்தனைக்கும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1 கீ.மீ தூரம்தான் எங்கள் ஊர். 

ஊர் எல்லையைத் தாண்டினால் "வீரம்" செல்லுபடியாகாது என்ற அறிவில் மட்டும் எப்போதுமே எல்லா ஊர் "வீரன்களும்" தெளிவாக இருக்கிறார்கள். 

நமக்கெதுக்கு வம்பு என்று ஓராயிரம் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி பயந்து அடங்கி வாழ்ந்துகொண்டு; ஊருக்குள் மட்டும், அதுவும் ஜாதி என்றால் மட்டும் வீரனைப்போல வேசங்கட்டி படம் காட்டியே தாத்தா காலத்திலிருந்து பழகிவிட்டிருக்கிறார்கள்.

அநியாயத்தை எதிர்த்து நியாயத்திற்காகப் போராடுவதுதான் "வீரம்" என்பது தமிழகம் முழுதுமுள்ள "வீரன்களுக்கு" எப்போது புரியவரும் என்பது தெரியவில்லை.

ஊருக்கு ஊர் "வீரம்" வேறுபடுகிறது.

திருவிழா நடத்துவதில் சீன் போடுவதும், பட்டாசு வெடிப்பதில் சீன் போடுவதும்தான் பொதுவாக கிராமங்களில் "வீரம்" என்றாகிவிட்டது. 

இதில் பக்தியாவது... மண்ணாங்கட்டியாவது...

பிற ஊர்களில் எப்படியோ...?

6.9.16

வேண்டுதல்...

"குப்பை அள்ளுபவர்களின் துயரத்தை இன்றாவது உணர்ந்து மக்கள் திருந்த அருள் பாலிக்கட்டும் மூத்திர சந்து பிள்ளையார்கள்"

சிந்திக்க வைத்த வரிகள்

மதுரையிலிருந்து சென்னை திரும்பியபோது திருச்சி அருகே ஒரு உணவகத்தில் எழுதியிருந்ததைக் கவனித்தேன்...

"நாம் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமென்றால் 
சூரியனைப் போல எரிய வேண்டும்"

3.9.16

போராளி ஒருவருக்காக...

தோழர்...

எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளிக்காதீர்கள். விமர்சனத்தை அறவே பொருட்படுத்தாதீர்கள். பதிவுகளை மட்டும் பதிந்துவிட்டு நகர்ந்துவிடுங்கள். தேவைப்பட்டாலொழிய கமெண்ட்களுக்கு வராதீர்கள். 

உலகமும் மக்களும் பிரச்சினைகளும் மிகப்பெரிது. இன்னொருவருக்காக நீங்கள் போராடினால் வாழ்நாளில் எத்தனைப் பேருக்காக போராட இயலும். அவரவர் பிரச்சினைகளை அவரவர்களே எதிர்கொள்ள மட்டும் துணை நில்லுங்கள். அதற்கான வலுவான கட்டமைப்பை மட்டும் நிறுவ முயலுங்கள். எல்லோருக்காகவும் நாமே போராடிக்கொண்டிருந்தால் எதிரி நம்மை சுலபத்தில் வீழ்த்தி விடுவான். மீண்டும் அதே சூழல்தான் தொடரும். தனிநபர்களை வீழ்த்துவதும் விரக்திக்கு ஆளாக்குவதும் எதிரிக்கு சுலபம். எல்லா விமர்சனத்திற்கும் எதிர்வினை ஆற்றுவதுதான் போராளிகளின் பலவீனம். சிரித்தபடி செல்லுங்கள். 

நீங்கள் இல்லையாயினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறவும் நீர்த்துப் போகாமல் இருக்கவும் கட்டமைப்பு ஏற்படுத்துங்கள். 

நேரடியாக களத்தில் இறங்கிப் போராடுவதைக் குறைத்துகொண்டு பாதிக்கப்படுபவர்களுக்கு போராட்ட அறிவையும் சட்டரீதியான வழிகாட்டலும் தைரியமும் கொடுங்கள். நிரந்தரமாக அதை எதிர்த்தும் போராடும் களப்போராளிகளை உருவாக்க மட்டும் குறி வையுங்கள்.

வாழ்நாளில் 100 பேருக்காக போராடுவதைக் காட்டிலும் 1000 போராளிகளை உருவாக்கி விடுவதே மிக அவசியமானது.

யார் வேண்டுமானாலும் போராடலாம், எல்லோரையும் போராடச் சொல்லி வீதிக்கு அழைப்பது சிலரால் மட்டுமே முடியும்.

பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனை தேடி உங்களைச் சந்திக்க வரும் பொறிமுறைதான் நிரந்தரத் தீர்வு. 

இதுதான் சரியென்று நான் இறுதியாக சொல்லவில்லை. எனது சிறிய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

2.9.16

ஞானிகள் நடந்த வழி

"எளிமையாக செய்து முடிக்கக்கூடிய செயலுக்கு ஒருவர் காரணம் சொல்லிக் கொண்டிருந்தாலோ அல்லது காலம் தாழ்த்திக் கொண்டிருந்தாலோ அவருக்கு உதவி செய்ய விருப்பவில்லை என்பதே தெளிவான உண்மையாகும்"

- "ஞானிகள் நடந்த வழி", பக்கம் - 24.