8.9.16

ஊருக்கு ஊர் "வெட்டி வீரம்"

சுய சிந்தனையை; அறிவை வளர்த்துக் கொள்ள எள்ளளவும் முயற்சிக்காமல் ஜாதியின் பேரால் மட்டும் சக உழைக்கும் மக்களிடம் "வீரனைப்போல" ஆண்டு முழுதும் பாவ்லா காட்டிக்கொண்டு ஏனைய கிராமங்களைப் போலவே சில இளைஞர்கள் எங்கள் ஊரிலும் இருந்துகொண்டிருக்கிறார்கள். 

தான் உண்டு தன் வேலையுண்டு என்றுதான் தமிழக கிராம மக்களில் 98% பேர் வாழ்கிறார்கள். இந்த ஜாதியை தூக்கி வைத்துக்கொண்டு 2% ஆட்கள் செய்யும் அலப்பறைகளால்தான் எல்லா கிராமங்களின் வளர்ச்சியும் மட்டுப்படுகிறது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுக்கால்வாய்கள், வளைக்கப்பட்ட புறம்போக்கு பொது இடங்கள், பரவிக்கிடக்கும் கருவேல மரங்கள், பஞ்சாயத்து நிர்வாக விவரம், மக்களை மோதவிட்டுப் பகையாக்கும் ஜாதி அரசியல், அறிவையும் வளர்ச்சியையும் கெடுக்கும் ஜாதி உணர்வு, முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்குவதில் நடக்கும் கையாடல்கள், ஊர்ப் பொருளாதாரத்தை போண்டியாக்கும் கோயில் திருவிழாக்கள், மற்றும் அத்திருவிழாக்களின் வரவு செலவு கையாடல்கள்... இப்படி எதுவுமே எந்த "வீரனுக்கும்" கடைசி வரைக்கும் தெரியாமலே போய்விடுகிறது. 

கர்நாடக எல்லைகளில் தமிழகப் பேருந்துகளை மறித்து கன்னடர்கள் செய்த அட்டூழியம் மற்ற ஊர் வீரர்களைப்போலவே எங்கள் ஊர் "வீரர்களுக்கும்" தெரியாது. தெரியாதவரையில் கன்னடர்களுக்கு நல்லகாலம். தெரிந்திருந்தால் கர்நாடகாவே கதிகலங்கிப் போயிருக்கும். இத்தனைக்கும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1 கீ.மீ தூரம்தான் எங்கள் ஊர். 

ஊர் எல்லையைத் தாண்டினால் "வீரம்" செல்லுபடியாகாது என்ற அறிவில் மட்டும் எப்போதுமே எல்லா ஊர் "வீரன்களும்" தெளிவாக இருக்கிறார்கள். 

நமக்கெதுக்கு வம்பு என்று ஓராயிரம் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி பயந்து அடங்கி வாழ்ந்துகொண்டு; ஊருக்குள் மட்டும், அதுவும் ஜாதி என்றால் மட்டும் வீரனைப்போல வேசங்கட்டி படம் காட்டியே தாத்தா காலத்திலிருந்து பழகிவிட்டிருக்கிறார்கள்.

அநியாயத்தை எதிர்த்து நியாயத்திற்காகப் போராடுவதுதான் "வீரம்" என்பது தமிழகம் முழுதுமுள்ள "வீரன்களுக்கு" எப்போது புரியவரும் என்பது தெரியவில்லை.

ஊருக்கு ஊர் "வீரம்" வேறுபடுகிறது.

திருவிழா நடத்துவதில் சீன் போடுவதும், பட்டாசு வெடிப்பதில் சீன் போடுவதும்தான் பொதுவாக கிராமங்களில் "வீரம்" என்றாகிவிட்டது. 

இதில் பக்தியாவது... மண்ணாங்கட்டியாவது...

பிற ஊர்களில் எப்படியோ...?

No comments:

Post a Comment