சிறைகள், நீதிபதிகள் எதற்கு? போலிசே எல்லோரையும் கொன்றுவிடலாமே...
இது ராம்குமார் என்ற தனிநபருக்காக பொங்குவதல்ல, அப்படி நினைத்தால் அது அவரவர் பார்வை. நீதிமன்றம் உறுதியாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படாத ஒருவருக்கு நேரும் முடிவு. நாளை இது யாருக்கும் நேரலாம். இந்த நாட்டிலே ஒருவன் தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கவே பல போராட்டங்கள் நடத்தவேண்டி உள்ளது. அதற்கு பல வழக்குகள் சாட்சி. ராம்குமார் தற்கொலை என்பது முதன்முதலாய் நடப்பது அல்ல. பொங்குபவர்கள் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை கண்டுதான் பொங்குகிறார்கள். நீங்கள் கவனிப்பது வேண்டுமானால் புதிதாய் இருக்கலாம். இன்னொன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். அது, இப்படி சந்தர்ப்பவசத்துக்காகவாவது பொங்கும் சிலரால்தான் பல நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டிருக்கிறது. மேலும் விசாரணக் காலத்திலும் ஒருவரை சிறையில் அடைக்க உத்தரவிடலாம். ஆனால் அது தீர்ப்பாகிவிடாது. இறுதியென்று அர்த்தமல்ல. பாவம், வலுவில்லாத மக்கள் கூட்டமும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ராம்குமார் கைது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதில் விசாரணைக்கு உள்ளான ஒருவர் காவல்துறைக்கு பயந்து வெளிநாடு தப்பித்து சென்றது தொடர்பாகவும் கவனித்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.
நீதிபதியையே தொலைபேசியில் பகிரங்கமாக மிரட்டிய சங்கராச்சாரி நிரபராதியாக வெளியே வந்தார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
நாளை எந்தவொரு அப்பாவிக்கும் அநீதி நடந்துவிடக்கூடாது என்றே பல சந்தர்ப்பவாதிகள் பொங்குகிறார்கள். வலுவான உங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. வலுவில்லாத என் போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு நீதியும், நிரூபிக்க ஒரு வலுவான வாய்ப்பும் பாதுகாப்பும் தேவைபடுகிறது.
நாளை ஏதேனும் உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் நிரூபிக்க வாய்ப்பு தராமல் உங்களைக் கொன்றுவிடலாமா? இதுதான் சரியான பார்வையா?
அவன் தன்னை நிரூபித்துக்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டதா? இன்னும் வழக்கு முடியவில்லை. வீடியோ காட்சி தொடர்பான குளறுபடிகளை படிக்கவில்லையா? காவற்துறை நடைமுறைகள் தெரிந்துதான் பேசுகிறீர்களா? காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட நான் இரவு 9:30 க்கு FIR போடப்பட்டேன். அதுவும் வேறொரு இடத்தில் பிடிக்கப்பட்டதாக. போலிஸ் சொல்வதையெல்லாம் நம்பும் அளவுக்கு இருப்பீர்களென்றால் உங்கள் பார்வையில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
சிறைகள், நீதிபதிகள் எதற்கு? போலிசே எல்லோரையும் கொன்றுவிடலாமே...
No comments:
Post a Comment