இந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சு அடைக்கிறது. நான் எத்தனையோ புத்தகங்களையும் படங்களையும் பார்த்து உறங்காமல் தவித்திருக்கிறேன். இந்தப் புத்தகம் என்னைப் பாதித்தது கொஞ்சநஞ்சமல்ல. பொதுவாக சமீப காலங்களில் நான் எந்தப் புத்தகங்களைப் படித்தாலும் அதன் சுருக்கத்தை எனது www.edhir.blogspot.in என்ற வலைப்பக்கத்தில் பதிந்துவிடுவேன். ஆனால் ஒருவழியாக கண்ணீருடன் படித்து முடித்து இந்தக் கதைச் சுருக்கத்தை எழுத எண்ணியபோதெல்லாம், கரிச்சாவை ஆளாக்கியதுபோல் அவள் விட்டுவிட்டுப்போன அவளது பிள்ளையையும் ஆளாக்க தன் உடல் தளர்ந்த காலத்திலும் மனம் தளராமல் ஆடு மேய்க்கும் இராமு கீதாரியின் துயர வாழ்வு என்னையும் சுட்டுக் கொண்டிருந்தது. சுருக்கமாய் எதை எழுதுவது எதை தவிர்ப்பது என்று அவ்வப்போது ஏதோ எழுதியும் திருப்தியின்றி தவிர்த்துவிட்டேன்.
இந்நாவலைப்பற்றி தன் வலைப்பக்கத்தில் சுருக்கி எழுதியிருந்த காயத்ரி என்பவரின் பதிவை எடுத்து இங்கே பதிகிறேன்.
இலக்கிய ஆர்வமும் தேடலும் உள்ளவர்கள் கட்டாயமாக இந்நாவலை ஒருமுறை வாசியுங்கள்.
*
கீதாரி - இயற்கையின் மாற்றங்களையும் சீற்றங்களையும் ஒன்றேபோல வெட்ட வெளியில் எதிர்கொள்ளும் ஆட்டிடையர்களின் துயர்நிரம்பிய வாழ்க்கையைப் பேசுகிறது.
ராமு கீதாரி, கரிச்சா என்று இரண்டு கதாபாத்திரங்கள். பூவிடைப்பட்ட நார் போல கதை முழுக்க விரவி நிற்கும் இவர்கள் இருவரையும் உருவி எடுத்துவிட்டால் நாவல் பொலபொலவென வெறும் சொற்களாய்க் கொட்டிவிடுமோவென பிரமை தட்டியது எனக்கு.
அதிலும்.. அந்தப் பெண்... அந்த கரிச்சா.. என்னவொரு மனோதிடம் அவளுக்கு! ஒரே பேற்றில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு இறந்து போகும் புத்திசுவாதீனமற்ற தாயொருத்தியின் மகள் அவள். ராமு கீதாரியின் பாதுகாப்பில் வளர்கிறாள். உடன்பிறந்தவளை வேறொருவருக்கு தத்து கொடுக்கையில் பிரிவில் உருகுகிறாள்.. பூப்படையும் போது பக்கத்தில் பெண் துணையின்றி முதன்முறையாய் இறந்து போன தாயை நினைத்து கொண்டு தவிக்கிறாள்... சந்தர்ப்ப சூழ்நிலையால் அதுவரை தனக்கு 'சித்தப்பா'வாயிருந்த கீதாரியின் வளர்ப்பு மகனையே மணக்கிறாள்... தத்து கொடுக்கப்பட்ட உடன்பிறந்தவள், வளர்ப்புத் தந்தையாலேயே கற்பழித்துக் கொல்லப்பட்டாளென அறிந்து கதறுகிறாள்... குழந்தையில்லை என கணவனின் வெறுப்பிற்கு ஆளாகிறாள்... தாங்க முடியாத கணத்தில் துணிந்து அவனைப் பிரிந்து வருகிறாள்.. 5 வருடங்களாய் வாய்க்காத பிள்ளை வரம் வாய்த்தும் மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள்... முதிர்ந்து தளர்ந்த கீதாரியை தன் பொறுப்பில் பராமரிக்கிறாள்.. தன் மகனை படிக்க வைக்க விரும்புகிறாள்... எதிர்பாராத நாளொன்றில் பாம்பு கடித்து இறந்து போகிறாள்.
கரிச்சாவையும் அவள் தமக்கை சிவப்பியையும் அவள் கணவன் வெள்ளைச்சாமியையும் எதிர்பார்ப்புகளற்ற அன்போடு வளர்த்து ஆளாக்கிய கீதாரி.. கரிச்சாவின் மகனோடு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!
'இன்னமும் எவ்வளவு துன்புறுத்திவிடுவாய் நீ?' என வாழ்க்கையிடம் பந்தயம் கட்டிக் கொண்டது போலிருக்கிறார்கள் இருவரும்.
முளைவிதையின் உயிர்த்துடிப்பும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழ்தலுக்கான வேட்கையும் நிரம்பிய நாவல் மனதின் இருள் மூலைகளில் வெளிச்சமாய்க் கசிகிறது!
என்றாலும் கதை முழுக்க அறியாமையின் கோரப்பற்கள் ஒவ்வொருவரையும் குரூரமாய்க் கிழித்தெறிவது பரிதாபமாயிருக்கிறது.
"ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போல பிழைப்பு நடத்தும் ஆட்டுக்காரர்கள் ஊமைகளாகவே எங்குமிருந்தார்கள். ரோஷம், அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒரு போதும் நினைப்பதேயில்லை. இவர்களை வலிய கூப்பிட்டு யாரேனும் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள். இவர்களின் இந்த பரிதாபமான நிலை கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாய் இருக்கும். ' யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக..போன வருஷம் மொத வருஷத்துல அவுக கொல்ல பயிறு பச்சயில எங்க ஆடுக மேஞ்சிருக்கும்.. அந்த கோவத்துல அடிக்கறாக.. அவுக அடிக்கறது ஞாயந்தான ?. நம்ம மேல தப்பிருக்கு.. பட்டுகிட்டுதான் போகனும்' என்று மிக இயல்பாக சொல்வார்கள்"
இந்த மனிதர்களை என்ன சொல்ல?
படித்து முடிக்கையில்....
குறைந்தபட்ச நியதிகள், ஒழுக்கங்கள், தேவைகள் ஆகியவற்றோடு அதிகபட்ச துயரங்களை எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை, படிக்கும்போதும் படித்தபின்னும் 'அய்யோ' வென்ற பதைபதைப்பையும் 'எத்துணை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு நம்முடையது' என்ற ஆசுவாசத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.
No comments:
Post a Comment