22.12.16

"கீதாரி" - சு. தமிழ்ச்செல்வி

ஊரூராய் நாடோடியாய் திரிந்து ஆடுகளை மேய்த்து கிடைபோட்டு பிழைப்பவர் இராமு கீதாரி. அவருக்கு இருளாயி என்ற மனைவியும் முத்தம்மா என்ற மகளும் இருக்கின்றனர். ஒரு பண்ணையில் அடிமையாக விடப்பட்ட வெள்ளைச்சாமி என்ற சிறுவன் மீது பரிதாபப்பட்டு தன்னுடன் அழைத்து வந்து மகனைப் போல் வளர்த்து ஆளாக்குகிறார். தன்னுடன் உண்டு உறங்கி அவன் ஆடு மேய்த்தாலும் அவனுக்கென தினசரி கூலி கணக்கு போட்டு சேர்த்து வைக்கிறார். ஒருநாள் இரவில் கடும் மழை பெய்யும் நேரத்தில், அவரது கிடைக்கு அருகே மனநிலை பாதித்த நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி கரிச்சா, வெள்ளச்சி எனும் இரட்டைப் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள். அடுத்த நாள் காலையில் ஊராரிடம் இத்தகவலை தெரிவிக்கிறார் ராமு கீதாரி. குழந்தைகளை நாம் வளர்க்கவேண்டி வருமோ என்று எண்ணி ஊராட்கள் தயங்கி நழுவ முயல, கஷ்டத்தோடு கஷ்டமாக தானே ஒரு குழந்தையை வளர்த்துக் கொள்வதாக சபையில் தெரிவிக்கிறார். அதன்பிறகு ஊரின் பெரும் புள்ளியான சாம்பசிவம் என்பவர் தானும் இன்னொரு பெண் குழந்தையை எடுத்து வளர்ப்பதாக சொல்கிறார். ஆனால் இப்போது தன்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது என்றும், சில வருடங்கள் கழித்து வந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்கிறார்.

கரிச்சாவும் வெள்ளச்சியும் பாசமாக இராமு கீதாரியின் வீட்டில் வளர்கிறார்கள். சொன்னபடியே சிறிது வருடங்கள் கழித்து ‘வெள்ளச்சி’ என்ற பெண் பிள்ளையை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் சாம்பசிவம். சாம்பசிவத்திற்கு இரண்டு மனைவிகள், நல்ல வசதியிருந்தும் வெள்ளச்சியைப் படிக்க வைக்காமல் வீட்டில் மீதமாகும் உணவுகளைத் தந்தும் மோசமாய் நடத்தியும் போட்டி போட்டுக்கொண்டு வீட்டு வேலை வாங்குகிறார்கள்.

கரிச்சா, இராமு கீதாரிக்கும் அவரது வளர்ப்பு மகன் வெள்ளைச்சாமிக்கும் உதவியாக வளசையில் இருக்கிறாள். கரிச்சா தான் வயதுக்கு வந்ததை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தன் சகோதரியைப் பார்க்க ஓடுகிறாள். அவள் இருக்கும் நிலையறிந்து வருத்தப்படுகிறாள். கரிச்சாவைப் பெண் பார்க்க வரும் கூட்டத்தினர் வெள்ளைச்சாமியையும் அவளையும் இணைத்து தவறாகப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். இருவருக்கும் ஏதாவது வழிகாட்ட எண்ணும் ராமு கீதாரி, கரிச்சாவை வெள்ளைச்சாமிக்கே திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்தின்போது வெள்ளைச்சாமி ஆடு மேய்த்துக்கொண்டிருக்க ஆடு மேய்க்கும் கோலையே மணமகனாய் வைத்து திருமணம் செய்கிறார். இதுநாள் வரையில் தன் கிடையில் வேலைசெய்த அவனுக்கு கூலியாய் வந்த ஆடுகளை ஒதுக்கி இருவருக்கும் தனி வளசை போட்டுக் கொண்டு பிழைக்குமாறு சொல்லிவிட்டு, தன்னுடைய மகள் மருமகனோடு சேர்ந்து வாழ்கிறார். 

கரிச்சா, வெள்ளைச்சாமி திருமணத்தை அறிந்து, ‘அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கும்போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று சாம்பசிவம் வெள்ளச்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்த அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். சகோதரியின் ஈரப்பு கரிச்சாவை பெரிதும் பாதிக்கிறது. அடிக்கடி மனநிலை பாதித்த தன் அம்மாவை நினைத்துக் கொள்கிறாள் அவள். 
 
ஆரம்பத்தில் சுணக்கம் இருந்தாலும் கரிச்சாவும் வெள்ளைச்சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையை தவிர்த்து எவ்வித சிக்கலுமின்றி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். சரியான மேய்ச்சல் நிலமின்மையால் இன்னொரு பகுதிக்கு கிடைகளுடன் நகர்ந்து செல்கிறார்கள். அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணனை சந்திக்கிறான் வெள்ளைச்சாமி. அதன்பிறகு குழந்தையின்மையை காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவி முடிவு செய்து அதன்படியே காய் நகர்த்த, தன்மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளைச்சாமி இப்படி மனம் மாறிவிட்டானே என்று வருந்தி அவனைப் பிரிந்து ராமு கீதாரியிடம் மீண்டும் வந்து சேர்கிறாள் கரிச்சா. 

ராமு கீதாரியோ அப்போது பயங்கர பண நெருக்கடியில் மருமகனுடன் வாழ்ந்து வருகிறார். வெள்ளைச்சாமியிடம் தானே நேரில் தனியே சென்று எடுத்துச் சொல்லியும் அவன் அவரது வேண்டுகோளை உதாசீனம் செய்கிறான். அதில் மிகவும் வருத்தமடையும் ராமு கீதாரி, அவனை சபித்துவிட்டு வந்துவிடுகிறார். வெள்ளைச்சாமியின் இரண்டாவது திருமணம் ஏதோவொரு காரணத்தினால் நின்று விட்டாலும்கூட அவன் கரிச்சாவை அழைத்துச் செல்ல வராமல் போகிறான்.

வெள்ளைச்சாமியை பிரிந்து வந்த சில நாட்களிலே தான் கருவுற்றிருப்பதை அறிகிறாள் கரிச்சா. ராமு கீதாரியின் குடும்பத்திற்கு தொந்தரவாக இருக்க கூடாது என்று தனியாக கூலிக்கு ஆடு மேய்க்கிறாள். மகன் பிறந்த பிறகும் அவளது கணவன் அவளை வந்து பார்க்கவில்லை. என்ன கஷ்டம் நேர்ந்தாலும் வெள்ளைச்சாமியுடன் மீண்டும் செல்லவே கூடாது என்று வைராக்கியமாக இருக்கிறாள். மகனை வளர்த்து நன்றாக படிக்கவைக்க ஆசைப்படுகிறாள். ஆடுகளை கிடைபோட்டு தனியாக தங்கியிருக்கும் ஒருநாள் இரவு தொடர்ந்து மழை பெய்ய, ஒரு விஷக்கடியால் இறந்துபோகிறாள். செய்தியறிந்து செல்லும் இராமு கீதாரி அவளை அடக்கம் செய்துவிட்டு அவளது குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைச் சுமக்கிறார். 

வாழ்நாளெல்லாம் நாடோடிகளாய் அலைந்து திரிந்து கடும் உழைப்பையும் தியாகத்தையும் தவிர ஒரு சுகமும் அறியாத கீதாரி சமூகத்தின் வலி மிகுந்த வாழ்வின் பதிவே இந்நாவல். 

துளியும் ஒப்பனையற்ற யதார்த்தமான எளியநடை எழுத்துக்களால் ஒவ்வொரு வரிகளிலும் கண்ணீரை வரவழைக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி. அவரது எழுத்து ஆளுமையைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளில்லை.

எல்லா ஊரிலும் இன்னமும் இராமு கீதாரிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். காலம்தான் அவர்களுக்கு விடிவு தரவேண்டும். அவர்களின் விடிவுக்கு நம் வாழ்க்கை எவ்வகையிலாவது பயன்பட வேண்டும் என்ற வலியுடனே மனதின் ஓரமாய் இக்கதை உயிர்த்துக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment