15.9.12

புரட்சிக்கவி...!

நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க ஒருமுறை அவ்வை துரைசாமி அவர்கள் புதுவைக்கு வந்திருந்தார். கூட்டத்தில் புரட்சிக் கவிஞர் அமர்ந்திருந்தார். புரட்சி கவிஞர் அவ்வைக்கு முன் அறிமுகம் ஆனவர் அல்ல. புரட்சிக் கவிஞரின் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அவர் பேசும்போது,

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி

காகிதம் போட்டாண்டி வெள்ளைக்காரன்

என்ற பாடலைக் குறிப்பிட்டுவிட்டு, இதைப்போன்ற டப்பாங்கூத்துப் பாடலைத் தானே பாரதிதாசன் எழுதுகிறார் என்று புரட்சிக் கவிஞரைச் சாடினார். உடனே புரட்சிக் கவிஞர் கூட்டத் தலைவருக்கு ஒரு துண்டுச் சீட்டு அனுப்பினார். சிறிது விளக்கம் அளிப்பதற்கு என்னை அனுமதியுங்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. தலைவர் அனுமதித்தார். புரட்சிக் கவிஞர் பேசத் தொடங்கினார். அவ்வை தன்னைத் தாக்கி பேசியதற்குப் பதில் சொல்லவில்லை கவிஞர். ஆனால் அவர் கூறிய பாடலுக்கு விளக்கம் தந்தார்.

சிறிது நேரத்திற்கு முன் இவர் கூறிய பாடல் சாதாரணப் பாடல் அன்று. பாமரர்கள் நெஞ்சினிலே விடுதலை வேட்கையைக் கிளறச் செய்கின்ற பாடல். இங்கேயுள்ள ஒருவன் வெள்ளரிக்காய் பயிரிடுகிறான். எங்கோ இருக்கும் வெள்ளைக்காரன் அதற்கு விலை கட்டுப்பாடு செய்கின்றான் என்ற மனக் கொதிப்பை வெளியிடும் பாடலென்ன நையாண்டிப் பாடலா? கவிதையைத் திறனாய்வு செய்வதற்குத் தனி மனப் பான்மை வேண்டும். அதை விட்டுவிட்டு ஒன்றும் புரியாத நிலையில் உரிமை உணர்வைப் பாய்ச்சுகின்ற இதைப்போன்ற பாடல்களைக் கொச்சைப்படுத்துவது அடாத செயல்.

No comments:

Post a Comment