29.4.14

எது ஆதிக்கம்?

ஆதிக்கம் என்பதை நீங்கள் ஒன்றாக கருதுவீர்கள். நான் அதை வேறாக கருதுவேன். ஒவ்வொருவரும் ஒன்றாக கருதுவார்கள். பொதுவாக ஒரு இடத்தில் எவரைக்காட்டிலும் அடர்த்தியாக வாழ்பவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். இது பொதுவிதி. இது எந்த சாதி என்பது இடத்துக்கு இடம் வேறுபடும். நாடு முழுதும் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சில இடங்களில் பிறரிடம் கைகட்டி வாழ்வதும் இருக்கத்தானே செய்கிறது. என் குறிப்பீடு வேறானது சகோ. பெரும்பான்மை சாதிகள் எல்லா இடத்திலும் ஆதிக்கம் செலுத்திவிட முடியாது.

பெரும்பான்மையாக வசித்துவிட்டாலே ஆதிக்க சாதியா?

// ஒரு மக்கள் பெரும்பான்மையாக வசித்து விட்டாலே ஆதிக்க சாதி என்று அர்த்தமா? ஆதிக்கம் செலுத்துவது என்பதற்கு பொருளே இல்லையா? //

சகோதரர்களே...!

பெரும்பான்மையாக இருக்கிறோம் என்பதைச் சொல்லிச்சொல்லியே எளிய மக்களை கொம்புசீவுவது நியாயமில்லை. ஆதிக்கம் செலுத்த முனைவதற்கு இந்த ஒற்றை வார்த்தைதான் யாவருக்கும் அடித்தளமாக தேவைப்படுகிறது. பெரும்பான்மை சாதிக்காரர்களிடம் பொருளியல் அரசியல் ஆதிக்கம் இல்லாமற்போனதற்கு அவர்களின் பொதுஅறிவை வளர்த்து வழிகாட்ட முற்படாமல் வெட்டி சாதிப்பெருமைகளை பேசிப்பேசியே அவர்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் சாதித் தலைமைகளே காரணம். எல்லா சாதிக்குமே இது பொருந்தும். 

மேலும் சிறுபான்மையாக இருப்பதாலேயே அவர்களுக்கு ஆளத்தகுதியில்லை என்பது தவறானது. பலரையும் அரவணைத்து செல்லாமல் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. பெரும்பான்மையாக இருக்கிறோம் என்பதாலேயே பிறரை அடக்கியாள நினைப்பதையே ஆதிக்கம் என குறிப்பிடுகிறேன்.

இதுவும் சாதிவெறியா?

சாதி அடையாளத்தைத் தவிர்த்துவிட்டு பொதுவாழ்வில் ஒருவன் வளரும் அளவுக்கு இச்சமூகம் ஆரோக்கியமாக உள்ளதா? 

எவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும் தன் சாதியையும் சாதிக்கட்சியையும் சாதித்தலைவனையும் விட்டுக்கொடுக்காமல் பொது நியாயம் பேசும் பெரும்பான்மை ஆதிக்க சாதி தமிழர்களுக்கு மத்தியில் எனது சமூகத்து உழைக்கும் எளிய மக்களுக்கான அவலங்களைப்பற்றி நான் கண்டுகொள்ளாமல் பேசாமல் விடுவதால் யாருக்கேனும் பயனுண்டா? 

சிறிதும் அரசியல் சக்தியற்ற ஒரு பழமை சமூகமான எனது சமூக அவலங்களைப் பேசினால் அது சாதிவெறிப் பட்டியலில் வருமா?

இவனன்றோ தேசியக்கவி...! (பாரதிதாசன்)

இவனன்றோ தேசியக்கவி..!
தமிழர்கள் பற்றிய இக்கவிஞனின் கனவை ஆழ்ந்து வாசித்துப் பாருங்கள். 

# என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இம மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல் எந்நாளோ?

கைத்திறச் சித்தி ரங்கள்,
கணிதங்கள், வான நூற்கள்,
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவி யங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தக சாலை எங்கும்
புதுக்குநாள் எந்த நாளோ?

தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?

பார்த்தொழில் அனைத்தும் கொண்ட
பயன்தரும் ஆலைக் கூட்டம்
ஆர்த்திடக் கேட்ப தென்றோ?
அணிபெறத் தமிழர் கூட்டம்
போர்த்தொழில் பயில்வ தெண்ணிப்
புவியெலாம் நடுங்கிற் றென்ற
வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்;
கள்ளத்தால் நெருங் கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும்நாள் எந்த நாளோ?

தறுக்கினாற் பிறதே சத்தார்
தமிழன்பால் என்நாட் டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தா
ராதலால் விரைந் தன்னாரை
நொறுக்கினார் முது கெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்தசொல் கேட்டின் பத்திற்
குதிக்கும்நாள் எந்த நாளோ?

நாட்டும்சீர்த் தமிழன் இந்த
நானில மாயம் கண்டு
காட்டிய வழியிற் சென்று
கதிபெற வேண்டும் என்றே
ஆட்டும்சுட் டுவிரல் கண்டே
ஆடிற்று வையம் என்று
கேட்டுநான் இன்ப ஊற்றுக்
கேணியிற் குளிப்ப தெந்நாள்?

விண்ணிடை இரதம் ஊர்ந்து
மேதினி கலக்கு தற்கும்
பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
பாரினை மயக்கு தற்கும்
மண்ணிடை வாளை யேந்திப்
பகைப்புலம் மாய்ப்ப தற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்ப தென்றோ?

கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்,
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்த நாளோ?

நியாயமான தேசபக்தி?

ராணுவ வீரரின் மரணத்திற்கு வருந்துகிறேன். அதேசமயம, இறந்த ராணுவவீரர்களின் மரணத்தைக்கூட கவர்ச்சிகரமான தேசிய உணர்வாக்கும் ஊடகங்களைக் கவனியுங்கள். இந்த கவர்ச்சிகரமான தேசிய உணர்வு பீறிட்டு அஞ்சலி செலுத்தும் மாணவ மாணவிகளை கவனியுங்கள். இன்றைக்கு ஹிந்தியாவில் அதிகமாக ஊழல் நடக்கும் துறையென்றால் ஒன்று ராணுவத்துறையும் இரண்டாவது நீதித்துறையும். இவற்றில் நடக்கும் ஊழல்களைப் பற்றி அவ்வளவாக யாரும் சாதாரணமாக வெளிப்படுத்திவிட முடியாது. ராணுவ ஊழல்களை ராணுவமேதான் விசாரிக்கும். நமது ராணுவம் பலசாதிப்பெயர்களில் வெளிப்படையாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பது எத்தனை அறிவாளிகளுக்குத் தெரியும்? வரைமுறையற்ற அதிகாரமும் எதிர்த்துக் கேள்விகேட்டு கட்டுப்படுத்தவியலா ஊழல் நடைமுறையும் இவ்விரண்டு துறையிலும் கொடிகட்டிப் பறக்கிறது. 

மனிதத்தன்மை சிறிதுமற்று இருந்தாலும் எவனோ ஒருத்தனின் காலைப்பிடித்து லஞ்சம் வாங்கி அரசு வழக்கறிஞர் ஆனவனெல்லாம் பிற்காலத்தில் மேதகு நீதிபதி ஆகிவிடமுடியும். அவரை யாரும் எதற்கும் விமர்சிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நடந்தேறும் எல்லா அக்கிரமங்களுக்கும் நீதிமன்றத்தில் ஒவ்வொரு பேரம் பேசப்படுகிறது என்பது ஊருக்கே வெளிச்சம். எதற்கும் வலுவில்லாத எளியவர்கள்தான் நீதிதேவதையை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நீதிதேவதை வலுத்தவர்களுக்கு விபச்சாரியாய் எப்போதோ மாறிவிட்டாள். ஆனால் நாமெல்லாரும் அதன் புனிதத்தன்மையை கட்டிக்காத்து கடைப்பிடிக்கவேண்டும். காஞ்சி சங்கரராமனை கோயிலில் வைத்து கொன்றது யாரென்றும், ராஜீவை திட்டம்போட்டு கொன்றது யாரென்றும் உலகத்துக்கேத் தெரியும். ஆனால் குற்றவாளிகளை தப்பிக்கவைக்கவும், அப்பாவிகளை 23 வருட தண்டனையையும் நம் நீதிதேவதைகள்தான் வழங்குகிறார்கள். 

ராணுவ வீரர்கள்மீது நாம் வைத்திருக்கும் மரியாதைக்கு காரணமென்றால் அவர்களுக்கு நினைத்தமாத்திரத்தில் எதிலும் மிரட்டி எப்போதும் லஞ்சம் வாங்கும் ஒரு போலிசுக்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால்தான். அதனால்தான் ஒவ்வொரு ராணுவவீரனும் நேரடியாக ஒரு குடிமகனை சுரண்ட முடிவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது கற்பழிப்பதிலும், கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் அவர்கள் ஈவிரக்கமற்றவர்கள் என்பது வடகிழக்கு மாநில மற்றும் காச்மீர் மாநில மற்றும் ஈழ விவகாரங்களில் கண்கூடாக அறியலாம். எந்நேரமும் சண்டைக்காகத் தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் அடியாட்கள் கூட்டம்தான் ராணுவம் என்பது. வடகிழக்கு மாநில பழங்குடிப் பெண்களும் காச்மீர் அப்பாவி முச்லீம் பெண்களும் ஈழத்து தமிழ்ப் பெண்களும் ஹிந்திய ராணுவத்தால் சீரழிக்கப்பட்டார்கள். சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். போலிசும் ராணுவமும் சொந்தநாட்டுப் பெண்களை நாசப்படுத்துவதில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. விவரம் தெரியாமல் மாதச்சம்பளத்திற்காய் ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து மனம்புழுங்கி வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஏராளம்பேர். சாதாரண காவலர்களை தன் வீட்டு ஏவலாளியாகவும் தன் எடுபிடியாகவும் நடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல ராணுவ அதிகாரிகளும். தன் சக ராணுவ வீரனையும் காவலர்களையும் மேலதிகாரிகள் நடத்தும் விதத்தை தாராளமாக கீழ்ச்சாதியை ஒடுக்கும் மேல்சாதி தன்மையோடு ஒப்பிடலாம். சுருட்ட வாய்ப்பும் அதிகாரமும் உள்ள இவர்கள்தான் கேட்பாரற்று ஊழலில் கரைந்து கொட்டமடிக்கிறார்கள். ஆனால் சாதாரண ராணுவ வீரன் நிலை மிகவும் மோசமானது. அதிகாரிகளின் பெரும் வசதியான வாழ்நிலையுடன் இவர்களை ஒப்பிடவே முடியாது. தேசபக்தியெனும்பேரில் மக்களை ஆட்படுத்தி வைக்க அடிக்கடி அண்டை நாட்டுடன் பகை பாராட்டி அரசியல் ஆதயத்திற்காக போர் என்ற பேரில் நடத்தப்படும் ஆளுங்கட்சிகளின் வியாபாரத்திற்கு இவர்களே அதிகம் பலியாக்கப்படுபவர்கள். 

ஒரு ராணுவவீரன் தேசப்பற்றுக்காக மட்டுமா ராணுவத்தில் சேருகிறான்? மாதச்சம்பளமும் ஓய்வூதியமும் இல்லையென்றால் எத்தனைப் பேருக்கு தேசப்பற்று பொங்கி வழியும்? 

பெரிய லாபம் எதுவுமில்லை எனத்தெரிந்தும், தொழிலை மாற்றாமல் ஊருக்காகவும் உலகத்திற்காகவும் வெய்யிலில் உழைத்து, வாங்கிய கடனை அடைக்கவும் வழியின்றி அவமானப்பட்டு, வாழ்நாள் கடனாளியாக அரைவயிறோடும் கால்வயிறோடும் இன்னமும் ஏராளமான விவசாயிகள் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். விவசாயம் பொய்த்துப்போன காலங்களில் பல பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொள்ளும் அவர்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. ராணுவ அதிகாரிகளுக்காய் தேசப் பற்று பொங்கி வழிந்தோடும் மாணவ மாணவிகளும் விவசாயிகளின் தற்கொலைகளை ஒரு சதவீதம்கூட பொருட்படுத்துவதில்லை. 

தேசப்பற்று என்பது கவர்ச்சிகர வியாபாரமாகி நெடுநாட்களாகிவிட்டது. 

ஒரு ராணுவ அதிகாரியின் மரணத்திற்காக வருத்தப்பட்டு அஞ்சலி செலுத்தும் நம் குழந்தைகளை, கேட்பாரற்று தற்கொலையால் மடியும் விவசாயிகளுக்காகவும் அஞ்சலி செலுத்த தயார்படுத்துவோம். 

நம் குழந்தைகளின் தேசபக்தியை நியாயமானதாக்கச்செய்வோம்...!

"தேசிய" அரைவேக்காட்டுத்தன்மை மாறவேண்டும்

தாய்மொழி வேறாக இருந்தாலும்கூட கர்நாடகாவில் பிறந்து வளரும் எந்தவொரு குழந்தையும் கன்னடம் எழுதப்படிக்கத் தெரியாமல் வளரமுடியாது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் குழந்தைகள்கூட தமிழை எழுதப்படிக்கத் தெரியாமல் வளரும் நிலை உள்ளது. 

இதைக்கூட மாற்ற வக்கில்லாமல் எதற்கெடுத்தாலும் தமிழுக்காக மயிரைப் பிடுங்கினேன் மட்டையைப் பிடுங்கினேன் என்று போலியாய் தமிழ்ப்பற்றை வெளிக்காட்டும் நரிகளையெல்லாம் ஓட ஓட இம்மண்ணைவிட்டு விரட்டியடிக்கும் ஒரு தீவிர தமிழ் வெறி இளைஞர் கூட்டம் இனி வரவேண்டும். இதுவே இனி இங்கு அரசியலாக்கப்பட வேண்டும். வலுவின்றி கிடக்கும் சொந்தத்தாயை பலப்படுத்த நினையாமல் ஹிந்திய தேசியம் பேசி மயங்கும் அரைவேக்காட்டுத்தன்மை இனியாவது நம் சகோதரர்களுக்கு மாறவேண்டும்.

21.4.14

மதம் / மதச்சார்பின்மை

"மதம்" என்பது எப்படி சிலருக்கு அரசியல் வியாபாரமோ அதேபோல் "மதச்சார்பின்மை"யும் சிலருக்கு அரசியல் வியாபாரம்தான்.

சீமான், அதிமுக-வை ஆதரித்தால் ஈழம் கிடைத்துவிடுமா?

வைகோ, எந்த விதத்தில் பிஜேபி வந்தால் ஈழத்தை ஆதரிக்கும் என கூறுகிறார்? வரலாறைப் புரட்டிப்பாருங்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களொன்றும் முட்டாள்களில்லை. இஸ்ரேல் என்ற தனிநாடு அமைய 2ம் உலகப்போர் நடக்கும்வரையில் 1% கூட வாய்ப்பில்லாமல் இருந்ததுதான். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வருடங்களாக நாடில்லாமல் இருந்தவர்கள். எப்படி நிலைமை தலைகீழாக மாறியது என்பதைப் பாருங்கள். சீமானாலும் வைகோவாலும் மட்டும் கிழித்துவிட முடியாது என்பது யாவருக்கும் தெரிந்த விஷயம்தான். தலைவரே சொல்லியிருக்கிறார், ஈழம் என்னால் பெற முடியுமா எனத்தெரியாது ஆனால் போராட்டத்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டிருக்கிறேன் என்று. தொடர் போராட்டங்களால் எதையும் சாதிக்கமுடியும். அதற்குத்தான் வைகோ, சீமான் போன்றவர்களின் பேச்சுக்கள் அவசியம். இதுவும் இங்கே இருக்கக்கூடாது என்றுதான் சிங்களவன் எதிர்பார்க்கிறான். இதுவும் இங்கே இல்லாமல்போனால் எல்லாம் மறந்துபோய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஈழத்தைப்பற்றி சாதுரியமாக எதுவும்பேசாத பிஜேபி யைவிட அதிமுக மேல்தான். எதை செய்தாலும் விமர்சனம் வரும்தான். ஆனால் தனக்குத் திருமணமே ஆகவில்லை என்று மறைத்தவனெல்லாம் பிரதமாக நீங்கள் கொடிபிடிப்பதைவிட இது நிச்சயம் கேவலமே இல்லை. சீமான், கிறித்தவர் என்பதுதான் பலருக்கு பிரச்னையாக இருக்கிறது. பிஜேபிக்காரர்களின் இந்தப்பார்வை தேசியத்தைப் பற்றியும் ஒருமைப்பாட்டையும் பேச அருகதையற்றது.

19.4.14

எஸ்.ஜெகத்ரட்சகன் (தீமூகா)

எங்கள் பாராளுமன்ற தொகுதி அரக்கோணம். திமுக சார்பில் கடந்த முறை தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு போனவர் எஸ். ஜெகத்ரட்சகன். ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட வாய்த்திறந்து பாராளுமன்றத்தில் பேசாதவர் என்று மிகவும் நல்ல பேர் எடுத்தவர். தொகுதிக்காக என்ன செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். இவரையெல்லாம் எதற்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்பது திமுக-வுக்கே வெளிச்சம். மீண்டும் திமுக சார்பாக திருபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் இவருக்கு எதற்கு சீட்டு கொடுத்தார்கள் என்பதும் திமுக-வுக்கே வெளிச்சம். ஏன் இவர் தேர்தலில் நிற்கிறார் என்பது இவருக்கே வெளிச்சம். இப்பேர்ப்பட்டவர்களாலேயே ஏன் பாராளுமன்றம் நிரம்பி வழிகின்றது என்பது பாராளுமன்றத்துக்கே வெளிச்சம். 

திருபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...!

"திரைப்பட விமர்சனம்" எழுதும் நண்பர்களுக்கு...

ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு உணர்வில் படம் எடுக்கிறார்கள். அதில் உங்களால் என்ன ரசிக்க முடியுமோ அதை மட்டும் ரசியுங்கள். யார் எப்படி படம் எடுத்தாலும் யாராவது ஒரு சிலருக்குப் பிடிக்காமல்தான் இருக்கும். ஆனால் மோசமாக விமர்சனம் எழுதுவது மிக்க வருத்தம் நண்பர்களே. நீங்கள் உடுத்தும் உடைகள் எல்லோருக்கும் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறதா? சினிமா என்பது பலகோடிகளில் நடக்கும் வணிகம். உங்கள் ஒருவரின் ரசனைக்கேற்றபடி மட்டும்தான் இந்த வணிகம் நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா? சிறு சிறு குறைகளும் கலந்ததுதான் எல்லா படங்களும். பலலட்சக்கணக்கான பார்வையாளனின் பார்வையை ஒரே புள்ளிக்கு கொண்டுவரும் ஒரு கலைஞன் பார்வை எல்லா நேரங்களிலும், எல்லா படைப்புகளிலும் சாத்தியமில்லை. உலகம் பல்லாயிரம் கோடிப்பேர்களின் அனுபவங்களின் கூட்டுத் தொகுப்பு. வாழ்க்கையும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அப்படித்தான். பெரிதாய் வெற்றி பெற்ற கலைஞர்களும் தோல்விப் படைப்பைக் கொடுத்துள்ளார்கள். அனுபவங்கள்கூட நிலையானதல்ல. இதேமாதிரிதான் ரசனைத்தன்மையும் நிலையானதல்ல. ஒரு படைப்பாளிக்கும் பார்வையாளனுக்குமான ரசனைத்தன்மை எல்லா சமயத்திலும் ஒத்துப்போக வாய்ப்பில்லை. அப்படி ஒத்துப்போனால் அவன் பெரும் மக்கள் கலைஞன்தான். ஒவ்வொரு படைப்புக் கலைஞனும் இந்த அங்கீகாரத்திற்காகத்தான் பெரும் வலியோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு உன்னதமான கலைப்படைப்பையும் அக்கலைஞனையும் சமூகம் அடையாளப்படுத்தத் தவறும்போதும், அல்லது தரமற்றவைகளை மக்கள் கொண்டாடும்போதும், நுகர்வு கலை ரசனையின் பக்கம்தான் அடுத்த தலைமுறை கலைஞர்களை இழுத்துச்செல்லும். இது இயல்பு. எவ்வளவோ சரியான, நல்ல, அவசியமான படங்கள் தமிழிலும் வந்துள்ளது. வந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் கவனிக்காத பலரின் பொதுப்புத்திதான் ஒட்டுமொத்தமாக சினிமாவையே குறைசொல்கிறது. ஏதோ ஒருநேரம் ஏதோ ஒரு படம் உங்களை லயிக்கச் செய்யும். அந்தப் படத்தில் அந்த உணர்வில் உங்களை லயிக்கச்செய்து உங்கள் கவலைகளை அதில் மறக்கச்செய்ய ஒரு கலைஞன் தன் ஆயுளை அர்ப்பணித்திருப்பான் என்பதை நினைவுகூறுங்கள். எக்காலத்திலோ ரசிக்கப்போகும் யாரோ ஒருவரின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்வை வறுமையோடும் வலியோடும் முடித்துக்கொள்ளும் ஒரு கலைஞனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் இச்சமூகம் கொடுக்கும் கைமாறு என்ன? 

பிடித்த படங்களை ரசியுங்கள், கொண்டாடுங்கள். பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடுங்கள். அதன் வியாபாரத்தைக் கெடுக்கும் விதமாக விமர்சனம் செய்யாதீர்கள். ஒவ்வொரு படத்திலும் அஸ்தமிக்கப்போகிறவர்களின் வாழ்க்கையும் மலரப்போகிறவர்களின் வாழ்க்கையும் ஏராளம். உங்கள் விமர்சனத்தால் கிடைக்கப்போகும் நன்மைதான் என்ன? விமர்சனம் செய்தே ஆகவேண்டுமென்றால் அரசியலை, அநியாய அரசியல்வாதிகளை விமர்சியுங்கள். வேண்டுமானால் அடித்து நொறுக்குங்கள். அதுதான் எல்லோருக்கும் நல்லது....

மதிமுக Vs நாம் தமிழர் = ?


ஏன்? எதற்காக? இதனால் யாருக்கு லாபம்?

நீங்கள் தமிழின உணர்வாளராகவும், மதிமுக ஆதரவாளராகவும் இருக்கும்போது ஏன் சீமானையே தாக்கி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? நீதி மறுக்கப்பட்டு அநீதியால் வாடும் கவனிப்பாரற்றவர்களுக்காக யார் வேண்டுமானாலும் பேசலாம். வைகோ மட்டுமே தமிழினத்தை காக்க பிறந்தவர் என எண்ணுகிறீர்களா? நான் தீவிர தமிழ் உணர்வாளன். சீமான், வைகோ இருவரையுமே ஆதரிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்காக பேசும் எவரையும் ஆதரிக்கிறேன். ஆனால் பலரும் தங்கள் தெலுகு முகமூடியை மறைத்துக்கொண்டு, வைகோ-வின் பேரை அடையாளப்படுத்திக்கொண்டு தொடர்ந்து சீமான் மீது வன்மமாக எழுதுகிறார்கள். வைகோ-வை தன் தெலுகின சாதித்தலைவராக எண்ணும்போக்கு முகநூலில் அதிகரிக்கிறது. கூட்டணியில்லாமல் ஒரு தொகுதி வெல்லும் நிலையில்கூட மதிமுக-வை மக்கள் வளரவிடவில்லை. தமிழினத்தின்மீது வைகோவிற்கு இருக்கும் அக்கறை வேறொருவருக்கு இருக்காதா? அவரவர்களுக்கு சரியென்று தெரிந்த நிலையிலிருந்து செயல்பட நினைக்கிறார்கள். சீமான்மீது இவ்வளவு வன்மம் தேவையற்றதென எண்ணுகிறேன். சீமான் ஜெயாவை தூக்கிப் பிடிப்பதும் வைகோ மோடியை, ராமதாசை, விஜயகாந்த்தை தூக்கிப்பிடிப்பதும் தமிழினத்திற்கு பேராபத்துக்கள்தான். இப்படி இருந்தால் திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக மக்கள் வைகோவை எப்படிப் பார்ப்பார்கள்? ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே வளர்ந்துவிடாதபடி செய்துகொள்கிறார் வைகோ. மாற்று கூட்டணிக்கு அடித்தளம் போட்டவரை கூட்டணிக்கட்சிகள் மதித்த நிலைமையைப் பாருங்கள். கொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கையைப் பாருங்கள். விஜயகாந்த்தை வளர்த்துவிட்டு தமிழினத்திற்காக ராமதாசும் வைகோவும் செய்யப்போகும் நன்மைகள்தான் என்ன? நிற்கும் தொகுதிகளில் வெற்றிபெற முனைப்பு காட்டுவதை விடுத்து சீமான் எழுத்துக்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு தீவிர உடனடி எதிர்ப்பு மதிமுக-விடமிருந்து? அது தமிழினத்தின் மீதான தெலுகு இன குரோதமெனில் அதை வெளிப்படையாகவே தெரிவிக்கலாம். இது உண்மையெனில் இரண்டுதரப்புக்கிடையிலுமான இந்த எதிர்ப்புத் தன்மை அவசியமான ஆரோக்கியம்தான், எதிர்கால தமிழர்களுக்கு.

18.4.14

சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு...

(ஒரு நண்பருக்கான பதில் இது)

நீங்கள் வன்னிய சாதி அரசியல் சார்புடையவர் என்பதால் ஒன்றைச்சொல்கிறேன். ம.சோ.விக்டர் என்ற தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிட்டத்தட்ட உலக மொழிகள் அத்தனைக்கும் வேர் தமிழே என்றும், சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே என்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஏறக்குறைய 40 புத்தகங்களுக்கு மேல். அவரது 2 புத்தகங்களைப் படித்து மிரண்டு போனேன். எல்லாமே தமிழுக்கான பொக்கிஷங்கள். படிக்க ஆழ்ந்த தேடலும் பொறுமையும் ஓரளவு பழைய வரலாறுகளும் தெரிந்திருத்தல் நல்லது. ஆழ்ந்த தெளிவான வலுவான கருத்தியலாளர். அவர் பிறப்பால் வன்னியர் என அறிகிறேன். உங்கள் இன உணர்வு தமிழ் வளர்ச்சிக்காய் உதவினால் மிக மகிழ்ச்சி. அவரது கருத்துக்கள் அத்தனையும் படித்து யோசிக்க ஒரு ஆயுள் போதாது என்றே உணர்ந்தேன். படியுங்கள்... பலருக்கும் பரப்புங்கள். என் www.edhir.blogspot.in என்ற பக்கத்தில் உங்கள் இந்த சமஸ்கிருத சார்பான கருத்துக்களுக்கு மாற்றான உண்மை செய்திகளை அவர்வழி பார்வையை பதிந்திருக்கிறேன். பாருங்கள்... தயவுசெய்து பரப்புங்கள். இந்த துர்பாக்கிய தமிழ்ச்சமூகம் தகுதியான பலரையும் கொண்டாடாமல் விட்ட மனிதர்களில் இவர் மிக முக்கியமானவர். தன் எழுத்துக்களை விளம்பரம் செய்ய தெரியாதவர். என் நண்பர் ஒருவர் அவரது எல்லா படைப்புக்களையும் தற்போது புத்தகமாக கொண்டுவந்துள்ளார். உங்கள் சாதிப்பற்று அவரது படைப்புக்கள் பலரைச்சேர உதவுமென்றால் மிக நல்லது. உங்கள் சமூகத்தைச் சார்ந்த இம்மாதிரியானவர்களை நீங்கள் எல்லோரும் தூக்கிப்பிடித்தால் நல்ல விஷயம்தான்.

கடவுள்....?


ஒருவன் எவ்ளோ பெரிய பக்தி பலாப்பழமாக இருந்தாலும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது உண்மையில் இந்த கடவுள் இருக்கா இல்லையா என யோசிப்பான். அப்படி யோசிப்பவனை திரும்ப இழுத்துப்போட்டு மதத்திற்குள் வைத்திருப்பதே மதத்தின் வெற்றி!

கடவுள் இல்லையென்றால் மதம் இல்லை. மதம் இல்லையென்றால் பிரிவினை இல்லை. பிரிவினை இல்லையென்றால் சண்டை இல்லை. இவ்வுலகில் நில ஆக்கிரமிப்பிற்காக நடந்த போர்களை விட அதிக மக்கள் மதசண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என்றால் நீங்கள் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.

கிறிஸ்தவனிடம் பேசினால் சிலுவையை பற்றிய உபதேசம் பிறருக்கு பைத்தியமாய் இருக்கிறது என்பான். இஸ்லாமியனுக்கு முஸ்லீம்கள் தவிர மற்ற அனைவரும் காஃபீர்கள். இந்துவிடம் பேசினால் நீ கடவுளை மறுத்தாலும் இந்துதான்னு பெரிய குண்டாத்தூக்கி போடுவான். ஆனா கடைசி வரை ஏன் கடவுள் எதற்கு கடவுள்னு யோசிக்க மட்டும் மாட்டான்.

ஆதியில் இருந்தே மக்கள் குழுமத்தை ஒரு தலைவன் நிர்வாகிக்கும் பழக்கம் மனித இனத்திற்கு உண்டு, அவன் என்ன சொன்னாலும் கேட்கனும் அப்பொழுது கடவுள் என்ற பதம் இல்லையேயொழிய அரசன் கடவுள் மாதிரி தான் நடத்தப்பட்டான். அவன் சிறப்பு பிறப்பு அவன் வம்சாவழிகளே மீண்டும் நம்மை நிர்வாகிக்க தகுதியானவர்கள் என்ற கட்டம் வரும்பொழுது அதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க அவனை முன்னிறூத்தி பல வழிபாட்டு துதிகளையும் பாடச்சொன்னேன். காலம் காலமாக அது தொடர்ந்து வருகிறது.

ஆதிகாலத்துக்கு மனிதனுக்கு இயற்கையின் மேல் இருந்த பயத்தை விட மரணத்தின் மேல் அதிக பயம் இருந்தது. அதுவரை அனுபவித்ததை அப்படியே விட்டு செல்லவேண்டும் என்பதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. இறப்பிற்கு பின் என்ன என்ற குழப்பத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட கனவே மறுஜென்மத்திற்கான முதல் விதையை விதைத்தது. ஆம் ஒருவனது கனவில் வந்த இறந்தவன் அவனை குழப்பினான். அவன் எங்கே இருக்கிறான் எப்படி வந்தான் என யோசித்தவன் முடிவில் இதுவல்லாது எதோ ஒரு உலகம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான்.

தகவல் தொடர்பே ஒன்றை தொட்டு அடுத்ததற்கு நம்மை யோசிக்க வைத்தது, அன்றிருந்த குறைந்தபட்ச தகவல் தொடர்பிற்கு அதற்கு மேல் மனிதனால் சிந்திக்கமுடியவில்லை. எதோ ஒன்று இருக்கிறது என்று முடிவுக்கு வந்தவன் நாளடைவில் அதற்கு உருவம் கொடுத்தான். குழுக்கள் பிரிந்தது ஒவ்வொருவரும் அவர்கள் வசதிகேற்ப வழிபாடுகளை வைத்துக்கொண்டனர். ஆபிரஹாம மதத்தின் தோற்றம் வரை உலகில் உருவ வழிபாடு மட்டுமே இருந்தது.

ஆபிரஹாம மதத்தின் தோற்றத்தின் போதே இந்தியசுற்று வட்டார பகுதிகளில் த்வைதம், அத்வைதம் என்ற உருவ மற்றும் உருவமற்ற வழிபாட்டு சிக்கல்கள் உருவாகின. கடவுளை மனிதனைப்போல் காது, மூக்கெல்லாம் வச்சு, தினம் காலையில் மனிதனைப்போலவே கக்கா போக வைப்பதெல்லாம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாததே அதற்கு காரணம். நன்றாக சிந்தித்தி பார்த்தீர்களேயானால் உலகில் உள்ள மதம் அனைத்திற்கும் ஒன்றிற்கொன்று தொடர்பிருப்பது தெரியும்.

இன்று பகுத்தறிவு இல்லாத மனிதனே இல்லை M370 விமானம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கே விழுந்து விட்டதாம் என்றால் தெக்கால போக வேண்டிய விமானம் ஏண்டா வடக்கால வந்துச்சு என உலக வரைபடம் தெரிந்த ஒவ்வொருவனும் கேப்பான். ஒருவிசயத்தின் அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய்வதே பகுத்தறிவு. கடவுள் விசயத்தில் மட்டும் ஏன் பலருக்கு பகுத்தறிவு வேலை செய்வதில்லை என தெரியவில்லை.

சிலரால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது கடவுள் செயல் என கன்னத்தில் போட்டுகொண்டு ஒதுங்கி சென்று விடுகிறான். அதை புரிந்து கொள்ள சிரத்தையே மேற்கொள்ளாதவன் கலைக்டர் போறார் கோயிலுக்கு, முதலமைச்சர் போறார் கோவிலுக்கு அவங்க என்ன முட்டாளா அதுனால நானும் போவேன் என்கிறான். சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.

காலம் காலமாக தொன்று தொட்டு வந்த வழக்கம் என்பதால் உளவியல் ரீதியாக கடவுள் வழிபாடு சிறிது மன அழுத்ததை குறைக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அதுவே தீர்வாகாது. எதாவது ஒருகட்டத்தில் அதுவே உங்களுக்கு அதிக மன அழுத்தத்தைக்கொடுக்கலாம். உங்களது இயற்கை கடமைகளிலிருந்து நீங்கள் விடபட நினைக்கத்தோன்றும் அளவிற்கு கடவுள் பக்தி உங்களை இழுத்துச்செல்லும். பயந்து ஓடுபவர்கள் என அதை கடவுள் மறுப்பாளன் சொல்லுவான்

இவ்வுலகை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?
கடவுள் சுயம்பு என்றால் ஏன் இவ்வுலகம் சுயம்பாக இருக்கக்கூடாது. இந்த பிரபஞ்சத்தை என்றேனும் பார்த்துள்ளீர்களா? அதற்கு முன் நாம் அணுவிலும் ஆயிரம் கோடி மடங்கு சிறியவர்கள். ஆனால் அந்த பிரபஞ்சத்தை அறியும் அறிவை பெற்றுள்ளோம். கற்றதை தகவல் தொடர்பு மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றால் மட்டுமே இதற்கொரு தீர்வு கிடைக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதால் எந்தவித பயனும் இல்லை. எத்தனையோ கோடி பேர் பிறந்தது போல் நீயும் பிறந்தாய் செத்தாய் அவ்ளோதான்.

(முகநூல் நண்பர் திரு.வால்பையன் அவர்களின் பக்கத்திலிருந்து)

17.4.14

சிறுத்தைகளிடம் ஒரு சந்தேகம்...



இப்படத்தை முகநூலில் கண்டேன். சிறு மகிழ்ச்சி, கூடவே ஒரு சந்தேகம் எழுந்தது. சிதம்பரம் தொகுதியின் நடப்பு மக்களவை உறுப்பினராக இருப்பவர் திருமா அவர்கள். 'ஆறுமுக அடியார்' என்பவர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குள் சென்று தமிழில் தேவாரம் பாட முயன்றபோது பலதடவை அக்கோயில் தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். பட்டையும் நாமமும் போட்டுக்கொண்டு முகநூலிலும் வெளியிலும், ஹிந்து மதத்துக்கும் ஹிந்து கடவுள்களுக்கும் ஆதரவாக உதார் விட்டுக்கொண்டிருப்பவர்கள் யாரும் அவர் தேவாரம் பாட துணை நிற்கவில்லை. மாறாக 'கடவுள் இல்லை' என்ற கொள்கையுள்ள மகஇக, மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம் போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்களே அவருக்கு துணை நின்றது. வழக்காடியது. மேலும் திருமாவின் காலத்தில்தான் நடராசர் கோயில் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக தீட்சிதர்களின் கைக்குப் போனது. அரசுத்தரப்பு வழக்காடியவர்களின் மறைமுக துணையே அதற்குக் காரணம். இருந்தும், திருமா ஒரு முற்போக்காளராக... அம்பேத்கரிஸ்ட்டாக... இதற்காக ஏதேனும் செயலாற்றினாரா எனத்தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். இத்தனைக்கும் "நந்தனார்" என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிவனடியார் ஒருவரை அக்கோயிலினுள் நுழையவிடாமல் தீட்சிதர்களால் உயிருடன் கொளுத்தப்பட்டார் என்ற வரலாறு யாவரும் அறிந்ததே. திருமா அவர்கள் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட்டிருந்தால் நிச்சயம் தீட்சிதர்கள் இம்மாதிரியான மரியாதையை எவருக்குமே தரமாட்டார்கள். அவர்களின் வரலாறு அப்படி. 

லட்சக்கணக்கான ரூபாயை ஆண்டு வருமானமாகக் கொண்ட கோயில் நிர்வாகத்தை கைப்பற்றி ஆயிரக்கணக்கில் மட்டுமே வருமானமாகக் கணக்கு காட்டி, "சிவன் சொத்து குல நாசம்" என்று ஊருக்கு பயம்காட்டும் பாரம்பரியம் அவர்களுடையது. அப்பேர்ப்பட்டவர்கள் திருமா அவர்களுக்கு மரியாதைசெய்கிறார்கள் என்றால்....? 

சொல்லொணா அடக்குமுறைகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளானபோதும் எவருக்கும் குனியாமல் செயலாற்றிய அம்பேத்கரின் வரலாறு மறந்துபோக வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். தீட்சிதர்களுக்கு எதிராய் எதிர்காலத்திலும் 'திருமா' செயல்பட்டுவிடக் கூடாது என்ற அவர்களின் சாணக்கியத்தனத்தை புரியாமல் பலர் இதனால் திருமாவை மெச்சுவதைக் கண்டு வியப்படைகிறேன். 

தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லையென முன்னாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி அரசு மீது மத்திய தலித் ஆணையம் குற்றம் சாட்டியபோது, அதே ஆண்டு அவருக்கு "அம்பேத்கர் சுடர்" விருது அளித்தவர்தான் இந்தத் 'திருமா' அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இம்மாதிரியான தலித் இயக்க செயற்பாடுகளை மேற்கொண்டு "அம்பேத்கரை" அடையாளத்திற்கு மட்டும் பயன்படுத்துவதால் பயன்கள் யாருக்கு?

சிவன், காளி, பிஜேபி...

500 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டது தேசபக்தி பேசும் பிஜேபி-க்கு அவமானமில்லையா? எதிர்க்கட்சியாக இருந்து என்ன செய்தார்கள்? இலங்கையில் கொத்துகொத்தாக இந்துக்களும்தானே கொல்லப்பட்டார்கள்? சிவன் & காளி கோயில்கள் இடிக்கப்பட்டதே? 

சிவன், காளி, பிஜேபி இம்மூன்றுதரப்புமே தமிழர்களைக் கைவிட்டது ஏன்?

யார் துரோகிகள்? எதிரிகள்? நண்பர்கள்?

ராணுவ பலத்தால் மட்டும் நாடு பெற்றுவிட முடியாது என்பது தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் தெரியும். அமைதிப்பேச்சுக்குப்பின் ஈழத்தை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கும்படியான செயல்வடிவத்தை முன்னெடுக்கும் வேளையில் ஹிந்தியாவின் தூண்டுதலினாலேயே தமிழர்கள்மீது போரைத்திணித்தது இலங்கை. மத்தியில் ஆளுங்கட்சியாய் இருந்த காங்கிரசுக்கு எவ்வகையிலும் இதனால் பிரச்சனை வராதபடி துணை நின்றது மத்திய எதிர்க்கட்சியான பிஜேபி-யும் தமிழக ஆளுங்கட்சியான திமுக-வும். அதேமாதிரி திமுக-விற்கு எந்த பிரச்சனையும் வராதபடி துணை நின்றது தமிழக எதிர்க்கட்சியான அதிமுக.

அந்த மத்திய ஆளுங்கட்சியான காங்கிரஸைவிட்டு கடைசிவரையில் வெளிவராமல், கூட்டணியில் ஒட்டிக்கொண்டு பதவி சுகத்துக்காக சாமரம் வீசியவர்கள்தான் பாமக-வும் மதிமுக-வும். 

இவர்களில் யார் துரோகிகள்? நண்பர்கள்? எதிரிகள்? 

மாநிலக் கட்சிகளா? தேசியக் கட்சிகளா?

கொஞ்சம் வடக்கு மாநிலங்களுக்கு பயணப்பட்டு பார்த்து வாருங்கள், இங்கே மாநிலக்கட்சிகள் என்ன கிழித்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள. தேசிய கட்சிகள் வளர்ந்தால்தான் நல்லது என்று நினைத்தால் வைகோவும், ராமதாசும், விஜயகாந்த்தும் தன் கட்சியை தேசியக்கட்சி ஒன்றில் அல்லவா இணைத்திருக்க வேண்டும். தேசிய கட்சிகள் வளர்வதால் நாடெங்கும் ஹிந்திக்காரர்களுக்கே லாபம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மயிரளவுக்கும் மதிக்காத கேரள, கர்நாடக அரசுகளை அப்போது ஆண்டுகொண்டிருந்தது தேசிய கட்சிகள்தான். தேசியக்கட்சிகளுக்கு அப்போதைக்கு கொஞ்சமாவது யோக்கியதை இருந்திருக்க வேண்டாமா? இப்போதும்கூட. தேசியக் கட்சிகள் வளர்ந்தால் நல்லதுதான், நமக்கல்ல டெல்லிக்காரர்களுக்கு.

மாநிலக்கட்சிகளின் ஆட்சியில் நடக்கும் அநியாயங்களாவது மக்களிடம் வெளிச்சத்திற்கு வரும். தேசிய கட்சிகளின் ஆட்சியில் எல்லாம் கமுக்கமாக செயல்படுத்தப்படும் என்பதே நிதர்சனம்.

சாதிகளை ஒழிக்க முடியுமா?

சாதி மறுப்புத் திருமணம் புரிபவர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முதல் முன்னுரிமை என்று சட்டமியற்றப்பட வேண்டும். அதாவது, ஒரு வேலைக்கான தகுந்த தகுதி இருப்பவர்களுள் இவ்வாறான திருமணம் முடித்தவர்களுக்கே முதல் முன்னுரிமை என்றாக்கப்பட வேண்டும். ஒரு 50 வருடங்களில் இதனால் சாதி அடையாளங்கள் மற்றும் வெட்டிப்பெருமைகளை கட்டிக்காக்கும் தலைமுறைகள் மாறிவிடும். ஆனால் அதன் பின்னர் சாதி தொடர்பான அரசின் சான்றிதழ்கள் அறவே இருக்கக்கூடாது.

சாதிகள் இருக்கிறதா இல்லையா?

சாதிகள் இல்லை என யார் சொன்னது? சாதிகள் இருக்கிறது. இருப்பதால்தான் இப்படிப் பல சிக்கல்கள். சாதிகள் இல்லை என நாம் சொல்லும் பார்வை, ஆதியில் சாதி இல்லை என்பதுதான். அதாவது ஹிந்து மதம் என்ற ஒன்று ஏற்படும்வரையில்.

"இட ஒதுக்கீடு" என்பது அநியாயமா?

பலரும் இன்று 'இட ஒதுக்கீடு' என்பது தேவையற்றது என்றும் இதனால்  'திறமைக்கு வாய்ப்பில்லை' என்றும் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். 

இது மிகவும் விசமத்தனமானது. என்றைக்கு நாமெல்லோரும் வேலை கிடைக்காமல் பீ அள்ளவும் குப்பை பொறுக்கவும் சாக்கடை சுத்தம் செய்யவும் வேலை கேட்டு அரசுக்கு விண்ணப்பிக்க தயாராகிறோமோ அதுவரைக்கும் இடஒதுக்கீடு அவர்களுக்கு அவசியம்தான். அதாவது இதையெல்லாம் அவர்கள்தான் செய்யவேண்டும் என்ற நிலையும், பிறப்பால் அவர்கள்மீது சுமத்தப்பட்டு இழிவும் இல்லாமல் மாறும்வரையில். 

கீழ்ச்சாதி என்று ஒதுக்கப்படும் ஆண்களும் பெண்களும் சர்வசாதாரணமாய் பிற சாதிக் குடும்பங்களில் மருமகன்களாகவும், மருமகள்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் இந்நாட்டில் இடப்பங்கீடு அனைவருக்கும் கட்டாயம் தேவை.

பூணூல் / குடுமி சிந்தனாவாதிகளின் மூளைச்சலவைக்கு பலியாகாதீர். வரலாற்றை மனிதாபிமானத்தோடு புரட்டிப்பாருங்கள்.

16.4.14

பிரபலமாகவேண்டுமென்றால்....

சமூகத்தைப்பற்றின அக்கறையின்மையும், குறையறிவும், பிறரைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதல் சுயநலமும், எல்லாவகையிலும் பணமே குறியென்றும் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே மக்களுள் நீங்கள் பிரபலமானவர்களாக விரைவில் அறியப்படுவீர்கள்.

"தி ஹிந்து" வின் சைவ உத்தரவு...

செய்தி: "தங்கள் பத்திரிகையில் பணிபுரிபவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது" - ஹிந்து பத்திரிகை உத்தரவு.

# அசைவம் சாப்பிடுகிறவர்கள் "தி ஹிந்து" பத்திரிகையை வாங்கவோ படிக்கவோ கூடாதுன்னு சொல்லுவானுங்களா?

12.4.14

நேபாளம் ஒரு ஹிந்து நாடு... (?)

வருடத்திற்கு 50,000 இளம் சிறுமிகள் நேபாளத்திலிருந்து ஹிந்தியாவின் அனைத்து பகுதிக்கும் விபச்சாரத்திற்காக கடத்தப்படுகிறார்கள். உலகிலேயே மிகவும் மலிவான கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் நேபாளிகள்தான். ஹிந்திய நாடெங்கும் உள்ள சிறு / பெரு முதலாளிகள் யாவரும் தம் மண்ணின் மைந்தர்களைவிடவும் நேபாளிகளின் உழைப்பைத்தான் அதிகப்படியாக சுரண்டுகிறார்கள். இதையெல்லாம் மாற்றும் எண்ணமின்றி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையே லட்சியமாகக் கொண்ட "பூணூல் ஹிந்துக்கள்" மற்றும் "ஹிந்து கோஷ்டிகள்" நேபாளம் ஒரு ஹிந்து நாடு என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதில் யாருக்கு பயன்? 

சேட்டு, பனியா, மார்வாடிகள் அனைவரும் மும்முரமாக பிஜேபி-யை தூக்கிப்பிடிப்பதன் நோக்கமென்ன பொதுசேவைக்காகவா?

புரட்சியும் புரட்சிக்காரர்களும்...

மாற்றத்தை மக்கள் மீது திணித்தால் அம்மக்களே புரட்சிக்காரர்களையும் புரட்சியையும் தூக்கி எறிந்துவிடுவார்கள். மாற்றம் எதற்கு வரவேண்டும் என்று மக்களுக்கு விளக்கி அணிப்படுத்த தவறி வெறும் எதிர்ப்பை மட்டுமே எல்லோர்மீதும் உமிழ்ந்துகொண்டே இருந்தால் கடைசியில் எஞ்சி நின்று தனிமைப்பட்டுப்போவதைத் தவிர புரட்சிகரவாதிகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எதிர்கருத்து கொண்டோரை தோழமையோடு வென்றெடுக்கும் போக்கு இல்லையேல் புரட்சி கற்பனையில் மட்டுமே சாத்தியம். எந்த மக்களுக்காக போராடுவதாக புரட்சி பேசுபவர்கள் தங்களை காட்டிக்கொள்கிறார்களோ அம்மக்கள் முதலில் இவர்களை ஏற்கவேண்டும். சக சனநாயக சக்திகளோடு ஒன்றிணைந்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அதைவிடுத்து எவரையும் குறை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் பார்வை தேவையற்றது. பல வருடங்களாய் கேட்பாரின்றி சிறையில் கிடக்கும் பழைய புரட்சிக்காரர்களுக்கு உதவ வேண்டியது அவசிய கடமை. இங்கு குவிந்துகிடக்கும் கோடானு கோடி சிக்கல்களை தீர்க்க முதல் வழி எதிர்மறை அணுகலின்றி கருத்தியல் ரீதியாக மாற்று கருத்தாளர்களையும் வென்றெடுப்பதே. இல்லாவிடில் எல்லா புரட்சி செயல்பாடுகளும் அதை மேற்கொள்பவரின் தனிப்பட்ட தற்கொலை முயற்சிக்கு ஒப்பாகவே முடியும்.