17.4.14

சிறுத்தைகளிடம் ஒரு சந்தேகம்...



இப்படத்தை முகநூலில் கண்டேன். சிறு மகிழ்ச்சி, கூடவே ஒரு சந்தேகம் எழுந்தது. சிதம்பரம் தொகுதியின் நடப்பு மக்களவை உறுப்பினராக இருப்பவர் திருமா அவர்கள். 'ஆறுமுக அடியார்' என்பவர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குள் சென்று தமிழில் தேவாரம் பாட முயன்றபோது பலதடவை அக்கோயில் தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். பட்டையும் நாமமும் போட்டுக்கொண்டு முகநூலிலும் வெளியிலும், ஹிந்து மதத்துக்கும் ஹிந்து கடவுள்களுக்கும் ஆதரவாக உதார் விட்டுக்கொண்டிருப்பவர்கள் யாரும் அவர் தேவாரம் பாட துணை நிற்கவில்லை. மாறாக 'கடவுள் இல்லை' என்ற கொள்கையுள்ள மகஇக, மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம் போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்களே அவருக்கு துணை நின்றது. வழக்காடியது. மேலும் திருமாவின் காலத்தில்தான் நடராசர் கோயில் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக தீட்சிதர்களின் கைக்குப் போனது. அரசுத்தரப்பு வழக்காடியவர்களின் மறைமுக துணையே அதற்குக் காரணம். இருந்தும், திருமா ஒரு முற்போக்காளராக... அம்பேத்கரிஸ்ட்டாக... இதற்காக ஏதேனும் செயலாற்றினாரா எனத்தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். இத்தனைக்கும் "நந்தனார்" என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிவனடியார் ஒருவரை அக்கோயிலினுள் நுழையவிடாமல் தீட்சிதர்களால் உயிருடன் கொளுத்தப்பட்டார் என்ற வரலாறு யாவரும் அறிந்ததே. திருமா அவர்கள் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட்டிருந்தால் நிச்சயம் தீட்சிதர்கள் இம்மாதிரியான மரியாதையை எவருக்குமே தரமாட்டார்கள். அவர்களின் வரலாறு அப்படி. 

லட்சக்கணக்கான ரூபாயை ஆண்டு வருமானமாகக் கொண்ட கோயில் நிர்வாகத்தை கைப்பற்றி ஆயிரக்கணக்கில் மட்டுமே வருமானமாகக் கணக்கு காட்டி, "சிவன் சொத்து குல நாசம்" என்று ஊருக்கு பயம்காட்டும் பாரம்பரியம் அவர்களுடையது. அப்பேர்ப்பட்டவர்கள் திருமா அவர்களுக்கு மரியாதைசெய்கிறார்கள் என்றால்....? 

சொல்லொணா அடக்குமுறைகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளானபோதும் எவருக்கும் குனியாமல் செயலாற்றிய அம்பேத்கரின் வரலாறு மறந்துபோக வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். தீட்சிதர்களுக்கு எதிராய் எதிர்காலத்திலும் 'திருமா' செயல்பட்டுவிடக் கூடாது என்ற அவர்களின் சாணக்கியத்தனத்தை புரியாமல் பலர் இதனால் திருமாவை மெச்சுவதைக் கண்டு வியப்படைகிறேன். 

தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லையென முன்னாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி அரசு மீது மத்திய தலித் ஆணையம் குற்றம் சாட்டியபோது, அதே ஆண்டு அவருக்கு "அம்பேத்கர் சுடர்" விருது அளித்தவர்தான் இந்தத் 'திருமா' அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இம்மாதிரியான தலித் இயக்க செயற்பாடுகளை மேற்கொண்டு "அம்பேத்கரை" அடையாளத்திற்கு மட்டும் பயன்படுத்துவதால் பயன்கள் யாருக்கு?

No comments:

Post a Comment