29.4.14

நியாயமான தேசபக்தி?

ராணுவ வீரரின் மரணத்திற்கு வருந்துகிறேன். அதேசமயம, இறந்த ராணுவவீரர்களின் மரணத்தைக்கூட கவர்ச்சிகரமான தேசிய உணர்வாக்கும் ஊடகங்களைக் கவனியுங்கள். இந்த கவர்ச்சிகரமான தேசிய உணர்வு பீறிட்டு அஞ்சலி செலுத்தும் மாணவ மாணவிகளை கவனியுங்கள். இன்றைக்கு ஹிந்தியாவில் அதிகமாக ஊழல் நடக்கும் துறையென்றால் ஒன்று ராணுவத்துறையும் இரண்டாவது நீதித்துறையும். இவற்றில் நடக்கும் ஊழல்களைப் பற்றி அவ்வளவாக யாரும் சாதாரணமாக வெளிப்படுத்திவிட முடியாது. ராணுவ ஊழல்களை ராணுவமேதான் விசாரிக்கும். நமது ராணுவம் பலசாதிப்பெயர்களில் வெளிப்படையாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பது எத்தனை அறிவாளிகளுக்குத் தெரியும்? வரைமுறையற்ற அதிகாரமும் எதிர்த்துக் கேள்விகேட்டு கட்டுப்படுத்தவியலா ஊழல் நடைமுறையும் இவ்விரண்டு துறையிலும் கொடிகட்டிப் பறக்கிறது. 

மனிதத்தன்மை சிறிதுமற்று இருந்தாலும் எவனோ ஒருத்தனின் காலைப்பிடித்து லஞ்சம் வாங்கி அரசு வழக்கறிஞர் ஆனவனெல்லாம் பிற்காலத்தில் மேதகு நீதிபதி ஆகிவிடமுடியும். அவரை யாரும் எதற்கும் விமர்சிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நடந்தேறும் எல்லா அக்கிரமங்களுக்கும் நீதிமன்றத்தில் ஒவ்வொரு பேரம் பேசப்படுகிறது என்பது ஊருக்கே வெளிச்சம். எதற்கும் வலுவில்லாத எளியவர்கள்தான் நீதிதேவதையை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நீதிதேவதை வலுத்தவர்களுக்கு விபச்சாரியாய் எப்போதோ மாறிவிட்டாள். ஆனால் நாமெல்லாரும் அதன் புனிதத்தன்மையை கட்டிக்காத்து கடைப்பிடிக்கவேண்டும். காஞ்சி சங்கரராமனை கோயிலில் வைத்து கொன்றது யாரென்றும், ராஜீவை திட்டம்போட்டு கொன்றது யாரென்றும் உலகத்துக்கேத் தெரியும். ஆனால் குற்றவாளிகளை தப்பிக்கவைக்கவும், அப்பாவிகளை 23 வருட தண்டனையையும் நம் நீதிதேவதைகள்தான் வழங்குகிறார்கள். 

ராணுவ வீரர்கள்மீது நாம் வைத்திருக்கும் மரியாதைக்கு காரணமென்றால் அவர்களுக்கு நினைத்தமாத்திரத்தில் எதிலும் மிரட்டி எப்போதும் லஞ்சம் வாங்கும் ஒரு போலிசுக்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால்தான். அதனால்தான் ஒவ்வொரு ராணுவவீரனும் நேரடியாக ஒரு குடிமகனை சுரண்ட முடிவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது கற்பழிப்பதிலும், கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் அவர்கள் ஈவிரக்கமற்றவர்கள் என்பது வடகிழக்கு மாநில மற்றும் காச்மீர் மாநில மற்றும் ஈழ விவகாரங்களில் கண்கூடாக அறியலாம். எந்நேரமும் சண்டைக்காகத் தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் அடியாட்கள் கூட்டம்தான் ராணுவம் என்பது. வடகிழக்கு மாநில பழங்குடிப் பெண்களும் காச்மீர் அப்பாவி முச்லீம் பெண்களும் ஈழத்து தமிழ்ப் பெண்களும் ஹிந்திய ராணுவத்தால் சீரழிக்கப்பட்டார்கள். சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். போலிசும் ராணுவமும் சொந்தநாட்டுப் பெண்களை நாசப்படுத்துவதில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. விவரம் தெரியாமல் மாதச்சம்பளத்திற்காய் ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து மனம்புழுங்கி வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஏராளம்பேர். சாதாரண காவலர்களை தன் வீட்டு ஏவலாளியாகவும் தன் எடுபிடியாகவும் நடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல ராணுவ அதிகாரிகளும். தன் சக ராணுவ வீரனையும் காவலர்களையும் மேலதிகாரிகள் நடத்தும் விதத்தை தாராளமாக கீழ்ச்சாதியை ஒடுக்கும் மேல்சாதி தன்மையோடு ஒப்பிடலாம். சுருட்ட வாய்ப்பும் அதிகாரமும் உள்ள இவர்கள்தான் கேட்பாரற்று ஊழலில் கரைந்து கொட்டமடிக்கிறார்கள். ஆனால் சாதாரண ராணுவ வீரன் நிலை மிகவும் மோசமானது. அதிகாரிகளின் பெரும் வசதியான வாழ்நிலையுடன் இவர்களை ஒப்பிடவே முடியாது. தேசபக்தியெனும்பேரில் மக்களை ஆட்படுத்தி வைக்க அடிக்கடி அண்டை நாட்டுடன் பகை பாராட்டி அரசியல் ஆதயத்திற்காக போர் என்ற பேரில் நடத்தப்படும் ஆளுங்கட்சிகளின் வியாபாரத்திற்கு இவர்களே அதிகம் பலியாக்கப்படுபவர்கள். 

ஒரு ராணுவவீரன் தேசப்பற்றுக்காக மட்டுமா ராணுவத்தில் சேருகிறான்? மாதச்சம்பளமும் ஓய்வூதியமும் இல்லையென்றால் எத்தனைப் பேருக்கு தேசப்பற்று பொங்கி வழியும்? 

பெரிய லாபம் எதுவுமில்லை எனத்தெரிந்தும், தொழிலை மாற்றாமல் ஊருக்காகவும் உலகத்திற்காகவும் வெய்யிலில் உழைத்து, வாங்கிய கடனை அடைக்கவும் வழியின்றி அவமானப்பட்டு, வாழ்நாள் கடனாளியாக அரைவயிறோடும் கால்வயிறோடும் இன்னமும் ஏராளமான விவசாயிகள் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். விவசாயம் பொய்த்துப்போன காலங்களில் பல பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொள்ளும் அவர்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. ராணுவ அதிகாரிகளுக்காய் தேசப் பற்று பொங்கி வழிந்தோடும் மாணவ மாணவிகளும் விவசாயிகளின் தற்கொலைகளை ஒரு சதவீதம்கூட பொருட்படுத்துவதில்லை. 

தேசப்பற்று என்பது கவர்ச்சிகர வியாபாரமாகி நெடுநாட்களாகிவிட்டது. 

ஒரு ராணுவ அதிகாரியின் மரணத்திற்காக வருத்தப்பட்டு அஞ்சலி செலுத்தும் நம் குழந்தைகளை, கேட்பாரற்று தற்கொலையால் மடியும் விவசாயிகளுக்காகவும் அஞ்சலி செலுத்த தயார்படுத்துவோம். 

நம் குழந்தைகளின் தேசபக்தியை நியாயமானதாக்கச்செய்வோம்...!

No comments:

Post a Comment