19.4.14

"திரைப்பட விமர்சனம்" எழுதும் நண்பர்களுக்கு...

ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு உணர்வில் படம் எடுக்கிறார்கள். அதில் உங்களால் என்ன ரசிக்க முடியுமோ அதை மட்டும் ரசியுங்கள். யார் எப்படி படம் எடுத்தாலும் யாராவது ஒரு சிலருக்குப் பிடிக்காமல்தான் இருக்கும். ஆனால் மோசமாக விமர்சனம் எழுதுவது மிக்க வருத்தம் நண்பர்களே. நீங்கள் உடுத்தும் உடைகள் எல்லோருக்கும் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறதா? சினிமா என்பது பலகோடிகளில் நடக்கும் வணிகம். உங்கள் ஒருவரின் ரசனைக்கேற்றபடி மட்டும்தான் இந்த வணிகம் நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா? சிறு சிறு குறைகளும் கலந்ததுதான் எல்லா படங்களும். பலலட்சக்கணக்கான பார்வையாளனின் பார்வையை ஒரே புள்ளிக்கு கொண்டுவரும் ஒரு கலைஞன் பார்வை எல்லா நேரங்களிலும், எல்லா படைப்புகளிலும் சாத்தியமில்லை. உலகம் பல்லாயிரம் கோடிப்பேர்களின் அனுபவங்களின் கூட்டுத் தொகுப்பு. வாழ்க்கையும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அப்படித்தான். பெரிதாய் வெற்றி பெற்ற கலைஞர்களும் தோல்விப் படைப்பைக் கொடுத்துள்ளார்கள். அனுபவங்கள்கூட நிலையானதல்ல. இதேமாதிரிதான் ரசனைத்தன்மையும் நிலையானதல்ல. ஒரு படைப்பாளிக்கும் பார்வையாளனுக்குமான ரசனைத்தன்மை எல்லா சமயத்திலும் ஒத்துப்போக வாய்ப்பில்லை. அப்படி ஒத்துப்போனால் அவன் பெரும் மக்கள் கலைஞன்தான். ஒவ்வொரு படைப்புக் கலைஞனும் இந்த அங்கீகாரத்திற்காகத்தான் பெரும் வலியோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு உன்னதமான கலைப்படைப்பையும் அக்கலைஞனையும் சமூகம் அடையாளப்படுத்தத் தவறும்போதும், அல்லது தரமற்றவைகளை மக்கள் கொண்டாடும்போதும், நுகர்வு கலை ரசனையின் பக்கம்தான் அடுத்த தலைமுறை கலைஞர்களை இழுத்துச்செல்லும். இது இயல்பு. எவ்வளவோ சரியான, நல்ல, அவசியமான படங்கள் தமிழிலும் வந்துள்ளது. வந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் கவனிக்காத பலரின் பொதுப்புத்திதான் ஒட்டுமொத்தமாக சினிமாவையே குறைசொல்கிறது. ஏதோ ஒருநேரம் ஏதோ ஒரு படம் உங்களை லயிக்கச் செய்யும். அந்தப் படத்தில் அந்த உணர்வில் உங்களை லயிக்கச்செய்து உங்கள் கவலைகளை அதில் மறக்கச்செய்ய ஒரு கலைஞன் தன் ஆயுளை அர்ப்பணித்திருப்பான் என்பதை நினைவுகூறுங்கள். எக்காலத்திலோ ரசிக்கப்போகும் யாரோ ஒருவரின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்வை வறுமையோடும் வலியோடும் முடித்துக்கொள்ளும் ஒரு கலைஞனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் இச்சமூகம் கொடுக்கும் கைமாறு என்ன? 

பிடித்த படங்களை ரசியுங்கள், கொண்டாடுங்கள். பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடுங்கள். அதன் வியாபாரத்தைக் கெடுக்கும் விதமாக விமர்சனம் செய்யாதீர்கள். ஒவ்வொரு படத்திலும் அஸ்தமிக்கப்போகிறவர்களின் வாழ்க்கையும் மலரப்போகிறவர்களின் வாழ்க்கையும் ஏராளம். உங்கள் விமர்சனத்தால் கிடைக்கப்போகும் நன்மைதான் என்ன? விமர்சனம் செய்தே ஆகவேண்டுமென்றால் அரசியலை, அநியாய அரசியல்வாதிகளை விமர்சியுங்கள். வேண்டுமானால் அடித்து நொறுக்குங்கள். அதுதான் எல்லோருக்கும் நல்லது....

No comments:

Post a Comment