27.6.14

"பெரியாரை எதிர்ப்போம்"

உண்மையான அக்கறையுடன் தமிழ்த்தேசியம் பேசுபவர்களை நான் விமர்சிப்பதில்லை. ஆதரிக்கிறேன். பாராட்டுகிறேன். ஆனால் "தமிழர்களிலும் நாங்கள்தான் ஆளத் தகுதியுடையவர்கள்" என்ற சாதீய மனோபாவத்தோடு "தமிழ்த்தேசியத்தின்" பின்னால் ஒளிந்துகொண்டு பெரியாரை சகட்டுமேனிக்கு தவறாய் விமர்சிக்கும் அறிவாளிகளைத்தான் விமர்சிக்க நினைக்கிறேன். 

பெரியாருக்கு மாற்றாக அவர்களது சாதியில் யாரேனும் ஒரு சிந்தனைச் சிற்பி இருந்தால் ஆதரிக்காமலேயா இருப்போம் நாங்கள். 

அப்படியானவர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் குறிப்பிடும் உங்கள் தலைவரின் சிந்தனையை (?) சொல்லுங்கள். விவாதிப்போம். இந்த காட்சியைப் பாருங்கள். உங்கள் சாதியில் இப்படி யாராவது (பெரியாரியத்திற்கு நிகராக) மக்களை சிந்திக்க வைத்தவர்கள் தோன்றியிருந்தால் சொல்லுங்கள்.

பிறகு நாம் சேர்ந்தே 'பெரியாரை எதிர்ப்போம்'

http://www.youtube.com/watch?v=ZTVPK9tSY6g#t=376&hd=1

நன்றி: தோழர் வே.மதிமாறன் அவர்களுக்கு

நம் நோய்களுக்கான தீர்வு, நம் பாதங்களிலேயே...

நம் பாதங்களிலேயே நம் நோய்களுக்கா தீர்வு இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றுடன் அந்தந்த இடத்தில் ஒவ்வொரு கால்களிலும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் நாள்பட நாள்பட எல்லா நோய்களும் கீனமடையும்.

 

26.6.14

சகோதரர்களே ஒன்றுபடுங்கள்...!

இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இருந்து இணைந்து செயல்படவேண்டிய பெரியாரியவாதிகளும் தமிழ்த்தேசியவாதிகளும் பரஸ்பரம் ஒருவரையொருவர் தேவையில்லாமல் விமர்சித்துக்கொள்வது வருத்தமாக இருக்கிறது.

தமிழர் என்ற ஓர்மைக்குள் வராமல் அதனிலும் சாதீய உணர்வில் சுகம் காண விழையும் அறிவாளர்கள் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாகவும், தமிழரல்லாத தமிழர்தம் இனத்தின்மீது விருப்பற்ற வேற்று மொழி பகுத்தறிவாளர்கள் பெரியாரியவாதிகளாகவும்  சந்தடிசாக்கில் எதிரெதிர் முகாம்களில் இணைவதுமே இதற்குக்காரணமாக இருக்கலாம். 

சகோதரர்களே ஒன்றுபடுங்கள்...!

“இனியவன் இறந்துவிட்டான்” – ஜீ.முருகன்

இன்று இக்கதையைப் படித்தேன்.

இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது தத்துவங்கள், கொள்கைகள், நடைமுறைகளிலிலிருந்து மெல்ல மெல்ல விலகி பூர்ஷ்வாக்களாக மாறிப்போனதையும், தொழில் வளர்ச்சி என்ற பேரில் சிங்கூர் பிரச்னையில் மார்க்சிஸ்ட்கள் பின்பற்றிய வழிமுறைகளையும், ஆயுதங்களால் விவசாயிகளை ஒடுக்க முனைந்த விதத்தையும் கவனிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் போராளியின் மனப்பதிவை இக்கதையில் அருமையாகப் பதிந்துள்ளார் எழுத்தாளர் ஜீ.முருகன்.

‘புரட்சி’ மற்றும் ‘இனியவன்’ என்ற இருவரும் கம்யூனிஸ்ட் தோழர்கள். ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள். சுய வாழ்வைப் பற்றின எவ்வொரு தேடலும் திட்டமுமின்றி தன் இளமைக்காலங்களை கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்காக நாடகம் நடத்துவதிலும் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்துவதிலும், கட்சியின் முடிவுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வதிலும் அர்ப்பணித்து செயல்படுகிறார்கள். கிராமத்திலிருந்த நிலங்களை விற்றதில் இனியவனுக்கு நகரத்தில் ஒரு வீடு மட்டும் இருக்கிறது. கட்சி தவிர வேறு எந்தத் தொழிலுமில்லை. கடன் பிரச்னையில் வீடு மூழ்கும் நிலையிலிருக்க, தற்போது பலவாறான பிரச்னைகளிலும் ஏனைய கட்சிகளைப் போல முடிவெடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கு, இவர்களுக்கு ஏமாற்றமும் வெறுப்பாகவும் மாற கட்சியிலிருந்து வெளியேறுகிறார்கள். மாற்றத்திற்கான முழு நம்பிக்கையாக கட்சியை மட்டுமே நினைத்துக்கொண்டு வீரியமாய் திரிந்தவர்களுக்கு இந்த ஏமாற்றம் பெரும் விரக்தியைத் தருகிறது. போலிசு சித்ரவதை, கைது, காட்டிக்கொடுப்பு, வழக்கு, சிறை என்று ஏற்கெனவே பலர் வெளியேறியிருக்க, கட்சியின் தற்போதைய செயற்பாடுகள் ஏற்படுத்திய இந்த விரக்தியில் தோழர் இனியவன் தற்கொலை செய்து கொள்கிறார். அவரது இறப்புக்கு வெறும் 25 பேர்கள்தான் வருகிறார்கள். வெயிலின் கடும் உக்கிரத்தால் சிவப்புத்துணி போர்த்தக்கூட அவகாசமில்லாமல் நகரத்திலேயே புதைக்கப்படுகிறது தொழர் இனியவனின் பிணம். இனியவனைப் புதைத்துவிட்டு வரும்போது ‘தோழர் புரட்சிக்கு’ பலவாறாக எண்ணங்கள் ஓடுகிறது.

“நம் குடும்பமே நம்மை வெறுக்கும்போது நமது கொள்கைகளுக்கும் இயக்கத்துக்கும் எப்படி சராசரி மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்? யாருக்காக நாம் போராடுகிறோமோ அவர்களே நம்மை புரிந்துகொள்ளாதபோது நமக்கு என்ன பாதுகாப்பு? எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டுமென்றோ என்ன தேவையென்றோ தெரியாதவர்களுக்கு எதைப் பெற்றுத்தர நாம் போராடுகிறோம்?”

“சினிமா கதாநாயகர்கள் பேசும் புரட்சிகர வசனங்களால் பரவசமடைந்து திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு வெளியுலகின் நடமுறைகளோடு கலந்துவிடுவதைப்போல கம்யூனிஸ்டுகளின் புரட்சிகர நாடகத்தை வேடிக்கை பார்க்கும் மக்களும் கரைந்து போகிறார்கள்.”

கட்சியிலிருந்து வெளியேறியதும் ஒரு “எலக்ட்ரானிக்ஸ்” கடையில் வேலை பார்க்கிறான் புரட்சி. அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரான ஒரு விதவையுடன் அவனுக்கு ரகசிய பழக்கம் இருக்கிறது. அவளுக்கு ஒரு சிறுவன் இருக்கிறான். இனியவனைப்போல, அந்தச் சிறுவனும் ‘மாண்புமிகு மணி’ என்னும் ஒரு நாயும் புரட்சிக்கு நெருங்கிய நண்பர்கள்.

இனியவனைப் புதைத்துவிட்டு வரும் வழியில் ஒரு தெருமுனையில் அரசுக்கு எதிரான ஒரு பிரச்சார நடகத்தை காண்கிறான். புதிதாக அரசாங்கத்தால் தொடங்கப்படயிருக்கும் “ரோபோ டாக்” என்ற தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றி சில இளைஞர்களும் யுவதிகளும் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழில் வளர்ச்சிக்காக அந்தத் தொழிற்சாலையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்து வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்க, தேவையற்ற தவறான அந்த பிரச்சாரத்தை எரிச்சலுடன் கடந்து செல்கிறான். இப்படித் தெருத்தெருவாய் தான் நடத்திய நாடகங்களை எண்ணிப் பார்க்கிறான்.

இரவில் தனியாளாக அவன் போதையில் நடந்து செல்வதை கவனிக்கும் ஒரு காவல்துறை வாகனம் அவனை விசாரணைக்கு அழைத்து வருகிறது. பழக்கமான காவலர் ஒருவரால் அவன் திருப்பி அனுப்பப்பட, அங்கே தெருமுனையில் நாடகம்போட்ட அந்த பிரச்சார இளைஞர்களை ஒரு ஆய்வாளர் கடுமையாக விசாரித்துக் கொண்டிருப்பதை தோழர் புரட்சி கவனிக்கிறான். குடும்பத்தை கவனிக்கச்சொல்லி அந்த இளைஞனுக்கு அறிவுரையையும், முதல்முறை என்பதால் எச்சரிக்கையையும் தருவதாகவும் அந்த அதிகாரி பேசுகிறார். 

வெளியே வந்து தன் நாயைத் தேட அது ஒரு வண்டியில் அடிபட்டு தலை நசுங்கி கோரமாக இறந்து கிடப்பதைக் கவனித்து அதிர்ச்சியடைகிறான் புரட்சி. அதை மிகவும் சிரமப்பட்டு ஒரு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நடந்து வருகையில், ஒரு சைக்கிளில் தன்னைக் கடந்து செல்லும் ‘மதிவாணன்’ என்ற அந்த பிரச்சாரக்குழு தலைவனான இளைஞனை நிறுத்துகிறான். “ஏன் மாற்றத்தை வரவேற்காமல் எதிர்க்கிறீர்கள்? தொழிற்சாலை வந்தால் ஊரே அழிந்துவிடுமென்று உங்களுக்கெல்லாம் யார் சொன்னது? யார் தூண்டுதலால் இப்படி பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்று கடுமையாக தர்க்கம் செய்ய ஆரம்பிக்கிறான். அவன் தனக்குப் பசிக்கிறது என்று சொல்லியும் விடாமல் கேள்விகளால் துளைக்க அவன் பொறுமையாக அந்த தொழிற்சாலை பற்றியும் இதர கேள்விகள் பற்றிய எல்லா விவரமும் கூறுகிறான். இருவரின் தந்தைகளும் கம்யூனிஸ்ட் தோழர்கள். தன் தந்தை இறந்த பின்பு புரட்சியின் தந்தையால்தான் தான் பலவும் அறிந்ததாக சொல்கிறான். ‘அதைவிட அரசாங்கம் ஆளுக்கொரு தூக்குக்கயிறை இலவசமாக வழங்கலாம்’ எனும்படி அவன் சொல்லும் தகவல்கள் தோழர் புரட்சியை யோசிக்க வைக்கின்றன. அவனை மறுநாள் சந்திக்க வரும்படிக் கூறிவிட்டு புரட்சி செல்கிறான்.

வீட்டிற்குச் செல்லும் புரட்சி, நள்ளிரவில் தன் ரகசிய காதலியிடம் ஈடுபாடின்றி கலவி கொள்கிறான். வேறு ஏதேனும் பகுதிக்குச் சென்று குடியேறலாமென அவள் சொல்கிறாள். கலவி முடித்து மொட்டை மாடியில் வந்து தனியாய் படுக்கிறான். உற்சாகம் தராத கலவி, இளைஞனுடன் நடந்த தகராறு, நாயின் நசுங்கிய தலை, காவல் நிலையம், தெருமுனை நாடகம், புதிய தொழிற்சாலை எனப் பலவாறான எண்ணங்களினூடே இறந்துபோன தோழன் இனியவனைப் பற்றியும் தீவிரமாக ஏண்ணுகிறான். விடியற்காலை வரை ஏதேதோ கனவுகள்.

விடிந்ததும் அவனுக்கு வரும் ஒரு கனவில், “வானத்தில் ஒளிக்கோடுகளால் வரையப்பட்ட ஒரு நாயின் உருவன் தெரிகிறது. பிரமாண்டமான அந்த நாய் நகரத்தைப் பார்த்தபடி பிரகாசத்துடன் கால்மடக்கிப் படுத்திருக்கிறது. அதன் கண்களாகப் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிவப்பு நிற ஒளிப்புள்ளிகள் பீதியூட்டும்படி மின்னிக்கொண்டிருக்கின்றன.”

25.6.14

“நூறு நாற்காலிகள்” – ஜெயமோகன்

(ஒரு கலெக்டரின் உண்மைக் கதை)

நேற்று இக்கதையைப் படித்தேன்.

“இட ஒதுக்கீடு” முறையால் இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்கள் பலர் பலவாறான அரசுப் பதவிக்கும் அதிகாரத்திற்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே அந்த அதிகாரத்துக்கு உரிய முறையில் பிற சாதி அரசு அதிகாரிகளால் மரியாதையாக நடத்தப்படுகிறார்களா என்பதைப் பற்றியதே இக்கதை.

“நாயாடிகள்” என்று ஒரு சாதி. நரிக்குறவர்களில் ஒரு பிரிவு. தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் கீழாக நடத்தப்படும் ஒரு பட்டியல் பழங்குடி வகுப்பினர். பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இவர்கள் 50,000 பேர்களுக்கு மேலாக இருந்திருக்கிறார்கள். இவர்களை பகலில் யாரேனும் கண்டால் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்களாம். இவர்களை பார்த்தாலே தீட்டாம். மக்களுக்கு பயந்து இவர்கள் பகல் முழுதும் காடுகளிலேயே மிருகங்களைப்போல ஒளிந்து வாழ்ந்து இரவில் மட்டுமே வெளிவருவார்களாம். கழிவுகளில் கொட்டப்படும் உணவுப்பொருட்களையும் குப்பைகளில் கிடைக்கும் பொருட்களையுமே கொண்டு தம் வாழ்வை நடத்துகிறவர்கள்.

இக்கதை நடந்தகாலத்தை 1988 என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர்.

“நாயாடிகள்” சமூகத்திலிருந்து தர்மபாலன் என்பவர் ஐஏஎஸ் தேர்வெழுதி கலெக்டராக பணியாற்றுகிறார். காணாமல்போன தன் அம்மாவை கழுதைச்சந்தைக்குப் பக்கத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக குஞ்சன் நாயர் என்பவர் வந்து சொல்ல, சாகக்கிடக்கும் வயதான பிச்சைக்காரர்களின் நடுவே தன் அம்மாவை அங்கே காண்கிறார் கலெக்டர். அடிக்கடி இப்படி நிறையபேரை அங்கே பிடித்துவருவார்களென்றும், யாருக்கும் மருத்துவம் பார்ப்பதில்லையென்றும், தீனி மட்டும் போட்டுவிட்டு அவர்களாகவே சாகும்வரைக்கும் வைத்திருந்து அப்புறப்படுத்திவிடுவதாகவும் தேவைப்பட்டால் பொதுவான ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றும் மருத்துவர் மாணிக்கம் சொல்கிறார். மேலும் தானொரு தாழ்த்தப்பட்டவன் என்பதால் மருத்துவராக இருந்தும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்றும் போதுமான வசதிகள் செய்துத் தருவதில்லையென்றும் சீனியரான தன்னை போஸ்ட் மார்டம் செய்வதற்கே நியமித்ததாகவும் தானொரு “டிபார்ட்மென்ட் தோட்டி” என்பதாக நடத்தப்படுவதாகவும் சொல்கிறார். மருத்துவமனைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால் பக்கத்திலிருக்கும் கால்நடை மருத்துவமனையிலிருந்துதான் இந்த ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொண்டுவரப்படுகிறது என்றும் சொல்கிறார். அவர் சொல்வது தனக்கும் நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதை ஆழமாய் உணரும் தர்மபாலன், சிறுநீர் வெளியேறாமல் சுய நினைவின்றி அசுத்தமாய் கிடக்கும் தன் தாயை சீர்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல உத்தரவிடுகிறார்.

மேலாடையின்றி திறந்த மார்போடு தன்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு குப்பைகளைப் பொறுக்கியபடி போகுமிடமெல்லாம் உடன் இழுத்துச்சென்ற தன் தாயை எண்ணிப்பார்க்கிறார். காலரா வந்து தங்கள் கூட்டம் கொத்துக்கொத்தாய் மடிந்தபோது தன் குடும்பத்து 10 உருப்படிகளில் தான் ஒருவர் மட்டுமே தப்பிக்கிறார். ஏழு வயதிலும் இடுப்பில் துணியில்லாமல் உடலெங்கும் சொறி சிரங்குகளோடு ஒரு நாள் சோறு வேண்டி சுவாமி பிரஜானந்தரின் ஆசிரமத்தை (நாராயணகுருவின் சீடரான சுவாமி ஏர்னஸ்ட் கிளார்க்-ன் சீடர்தான் சுவாமி பிரஜானந்தர்) தேடிப்போனபோது அங்கே இவனை தேங்காய் நார்போட்டு தேய்த்து குளிப்பாட்டி சோறு போடுகிறார்கள். தொடர்ந்து சோறு வேண்டுமானால் இங்கேயே தங்கி படித்தால்தான் என்று சொல்ல, அவனும் அவ்வாறே தங்கிவிடுகிறான். ஆனால் அம்மாவுக்கோ பிறரைக் கண்டால் பயம். தன் பிள்ளையை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறாள். தன்னுடன் அனுப்பிவிடவேண்டும் என்று பலமுறை ஆசிரமத்தின் வாசலில் அமர்ந்து அழுது அநாகரிகமாக நடந்துகொள்கிறாள். அவளிடமிருந்து விடுவிக்க இவனை தூரத்தில் வேறொரு ஆசிரமத்தில் சேர்த்து படிக்கவைக்கிறார்கள். ஆர்வத்துடன் படிப்பில் அக்கறை காட்டி வளரும் தர்மபாலனை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதச் சொல்கிறார் சுவாமி பிரஜானந்தர். அவ்வாறே தேர்வெழுதி அரசு அதிகாரியாகிறார் தர்மபாலன்.

தர்மபாலனின் சாதிப் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் அரசு ஊழியர்கள் யாரும் அவரை மதிப்பதேயில்லை. அவரால் யாரையும் உத்தரவிடமுடியவில்லை. சக ஊழியர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் ஒரு சமயம் அவரது தாயை அழைத்து வந்து அலுவலக வளாகத்திலிருக்கும் குப்பையில் கிடக்கும் உணவை அவர் பார்க்க ஊண்ணும்படிச் செய்கின்றனர். “எங்களின் கருணையால், எங்களின் நீதியுணர்ச்சியால், நீ இங்கு அமர வைக்கப்பட்டிருக்கிறாய். ஆகவே நீ எங்களிடம் நன்றியுடன் இரு. எங்களுக்கு விசுவாசமானவனாக இரு. நீ வேறு. உன் உண்மையான தகுதி இதுவல்ல” என்று இட ஒதுக்கீட்டால் பதவிக்கு வந்தவர்களை சக அலுவலர்கள் நடத்துவதை புரிந்துகொள்கிறார்.

தர்மபாலனின் நேர்முகத் தேர்வன்றுதான் பிரஜானந்தர் இறந்த செய்தி அவருக்குத் தெரிகிறது. “உன் தாய்க்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்” என்ற பிரஜானந்தரின் வாக்குப்படி நெடுநாட்கள் பிரிந்திருந்த தன் தாயை எங்கெங்கோ தேடி கண்டுபிடிக்கிறார். தன்னுடன் தங்க வைக்கிறார். குப்பைமேட்டில் அலைந்து திரிந்து பழகிய தாய்க்கோ அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. கண்ட எச்சில் உணவுகளை தின்பதுமாக தோட்டங்களில் ஆங்காங்கே மலம் கழிப்பதுமாக அந்தத் தாய் அநாகரிகமாக நடந்துகொள்வது அவரது மனைவி சுபாவுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் குழந்தை ‘பிரேம்’-ஐ தூக்கிக்கொண்டுபோய் ஒரு உணவகத்தின் குப்பைத்தொட்டி எச்சில் உணவுகளை தன் தாய் ஊட்டிவிடுவதைக் கண்டு கடுமையாக அடித்துவிடுகிறார் தர்மபாலன்.

எல்லாவற்றையும் கண்டு பயந்து, ‘தன்னுடன் வந்துவிடும்படி’ தர்மபாலனிடம் அவளுக்குத் தெரிந்த “குறவர்” மொழியில் பேசி அழும் தன் தாயை நிர்கதியாய் கைவிடவும் முடியாமல், உடன்வைத்துக்கொள்ளவும் முடியாமல், அதே சமயம் அரசு அதிகாரியான தன் மனைவியின் நியாயமான உணர்வுகளையும் புறக்கணிக்கமுடியாமல் தர்மபாலன் திண்டாடும் ஒரு சமயம் அவள் காணாமல் போகிறாள். எங்கெங்கோ தேடித்தான் தற்போது கண்டுபிடித்து தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

அரசு ஆஸ்பத்திரியின் நிலையைக் கண்டித்து உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்லி தர்மபாலன் உத்தரவிட, அடுத்த நிலை அதிகாரிகளால் டாக்டர் மாணிக்கம் பணிநீக்கம் செய்யப்படுகிறார். எவ்வளவோ தியாக மனப்பான்மையுடன் பணிபுரிந்தும் தனக்குக் கிடைத்தது அவமானமும் பதவி நீக்கமும்தான் என டாக்டர் மாணிக்கம் சொல்ல தர்மபாலன் வருத்தப்படுகிறார். தாழ்த்தப்பட்ட அதிகாரிகளிடம் மரியாதை காட்டுவதை யாரும் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை எனவும் அவர் சொல்ல தனக்கு நேர்ந்த தொடர் அவமானங்களையும் நினைத்து வேதனைப்படுகிறார் தர்மபாலன்.

தன்னுடன் வந்துவிட்டால் குப்பை மேடுகளில் “ராஜா” மாதிரி வைத்துக்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்த தன் தாயின் உயிர் ஒடுங்கும் வேளையில், சாதியின்பேராலும் இட ஒடுக்கீட்டின் பேராலும் தன்னை அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த போலியான “டிபார்ட்மெண்ட் தோட்டி” அதிகார பதவியை விட்டுவிட்டு செல்வதும் மேல்தான் என தீர்மானிக்கும் வேளை ‘தன் தாயைப் போன்ற பல பிச்சைக்கார கிழவிகளை புதைத்து அவர்களின் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாக்க வேண்டுமென்றால் எனக்கு இன்னும் “நூறு நாற்காலிகள்” வேண்டும்’ என்று உணர்கிறார் தர்மபாலன். ‘பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கீழே இருந்தவர்கள் எழ வேண்டும்’ என சுவாமி பிரஜானந்தர் சொன்னதை எண்ணிப் பார்க்கிறார்.

ஒரு கீழான சாதியிலிருந்து உயர் பதவிக்கு வந்த ஒருவர் தன் அதிகார மட்டத்தில் எதிர்கொள்ளும் சாதீய அடையாள ரீதியான / இட ஒதுக்கீட்டின் மீதான பிற சாதிக்காரர்களின் வெறுப்பை ஆழமாய் நேர்மையாய் பதிவுசெய்வதாய் நீளூம் இக்கதையின் பின் இணைப்பில் இட ஒதுக்கீட்டு முறையின் மீதான ஜெயமோகனின் வெறுப்பையும் சாதுரியமான எதிர்ப்பையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். அதாவது இட ஒதுக்கீட்டில் பதவி கிடைத்தாலும் அவர்களுக்கு போதுமான தகுதிகளை வளர்த்துக்கொள்ள அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்கிறார் எழுத்தாளர். இதனாலேயே பலர் அவமானங்களை சந்திக்க நேர்வதாக பல “கோட்டா” அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார் ஜெயமோகன். (?)



23.6.14

பெரியாரை குறை சொல்லும் அறிவாளிகளே, உங்களுக்குத் தெரியுமா?

இரயில் நிலையங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் "பிராமணர்கள் மட்டும்" என்ற அறிவிப்புப் பலகையோடு ஒரு அறை இருந்தது. அதைக் கண்டித்து "ஆளுகின்ற அரசுக்கு ஒரு மாதம் கெடு, வாய்தா தருகிறேன். அதற்குள் அந்த அறிவிப்புப் பலகையை எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் நான் கடுமையான போராட்டம் நடத்துவேன்" என்று டவுன்ஹால் பொதுக்கூட்டத்தில் அய்யா பெரியார் பேசினார். அவர் பேசி ஒருவாரத்திற்குள் அந்தப் பலகைகள் அகற்றப்பட்டன. 

- "பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ.பழனி" என்ற நூலிலிருந்து...

இதுதான் பெரியார் வழியா?

தனக்கு சிலை வைப்பதை பெரியார் மறுத்தார். தொண்டர்கள் விடாப்பிடியாக உறுதியாக வற்புறுத்த அப்படி சிலை வைக்கவேண்டுமானால் அதன் கீழே கட்டாயம் கடவுள் மறுப்பு வாசகங்களை எழுதி வைக்கும்படிச் சொன்னார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தஞ்சாவூரில் அய்யா பெரியாரின் சிலை திறப்பு விழாவுக்கு வர சம்மதித்தார். சிலை வைக்கப்பட்டிருந்ததை அவருடைய செயலாளர் வந்து பார்த்துவிட்டுப் போனவுடன், சிலைக்குக் கீழே கடவுள் மறுப்புக் கல்வெட்டு இருப்பதை நீக்கினால்தான் திறப்பேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் கல்வெட்டை அகற்றிவிட்டு அவர் சிலையைத் திறந்துவிட்டுப் போன இரண்டு மூன்று நாட்கள் கழித்துத்தான் மறுபடியும் கல்வெட்டை வைத்தார்கள்.

இதுதான் பெரியார் வழியா? 

- "பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ.பழனி" என்ற நூலிலிருந்து...

20.6.14

“பால்யகால சகி” – வைக்கம் முகமது பஷீர்

இன்று காலை இக்கதையைப் படித்தேன்.

மஜீத்துக்கு 9 வயது. சுகறாவுக்கு 7 வயது. இருவரும் பரம எதிரிகள். இந்த விரோதத்திற்குக் காரணம் மாம்பழக் காலங்களில் அந்த மாம்பழங்கள் சுகறாவுக்குக் கிடைக்காமல் மஜீத்துக்கு மட்டுமே கிடைப்பதும்தான். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்த சிறுவர்கள். இவர்களின் இரண்டு இசுலாமிய குடும்பங்களும் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள். மஜீத்தின் வீட்டிலிருந்து பார்த்தால் சுகறாவின் வீடு தூரத்தில் தெரியும். மஜீத்தின் தந்தையோ அவ்வூரில் பெரும் பணக்காரர். வீடு வீடாய் பாக்குகளை வாங்கிவந்து சந்தையில் விற்று பிழைப்பு நடத்தும் ஒரு ஏழையின் மகள் சுகறா. மஜீத்தும் சுகறாவும் எப்போதும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

சுகறாவின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் மாமரங்களிலிருந்து விழும் ஒரு மாம்பழமும் சுகறாவுக்கு கிடைப்பதில்லை. எப்போதும் மஜீத்து அவைகளை முன்கூட்டியே எடுத்துவிடுவான். சுகறா பார்க்கும்போது எச்சிலுடன் மாம்பழத்தை நீட்டி பரிகாசம் செய்வான். ஒருமுறை ஒரு மாமரத்தினடியில் விழுந்து கிடக்கும் மாங்காய் ஒன்றை எடுத்த சுகறா பின்னர் அது தேங்காய் சிரட்டை என்று அறிந்து அவமானப் படுகிறாள். மஜீத்து இதைப் பார்த்து சத்தமிட்டு சிரிக்கிறான். பதிலுக்கு சுகறாவும் கிண்டலாக சத்தமிட்டு அவமானப் படுத்திவிட “டி” என அழைத்து பேசுகிறான். அதனால் பெரிதும் அவமானம் அடைந்த சுகறா அவனை நகங்களால் பிராய்ந்துவிடுகிறாள். அவமானப்படும் மஜீத்து, ‘என்னால் மரம் ஏற முடியும். உன்னால் முடியாது’ என்று அவளைப் பார்த்து பரிகாசம் செய்கிறான். மேலும் அவளது வைக்கோல் வேய்ந்த குடிசையையும் தன் ஓட்டு வீட்டையும் ஒப்பிட்டு பரிகாசம் செய்கிறான். அவளது அப்பா பாக்கு வியாபாரி என்பதையும் தன் அப்பா மர வியாபாரி என்பதையும் சொல்லி கிண்டல் செய்கிறான். அவள் எதற்கும் கண்டுகொள்ளாமல் அன்றைக்கு அவன் பறித்த இரண்டு மாம்பழங்களை முதலில் பார்த்தது நான்தான் என வாதிடுகிறாள். அவள் மீண்டும் பிராண்டிவிடுவாளோ என்ற பயத்திலும் சற்று இரக்கத்திலும் அவளிடம் இரண்டு பழங்களையும் தருகிறான். அவள் ஒன்று மட்டும் போதுமென எடுத்துக்கொள்கிறாள். இருவருக்கிடையிலும் சமாதானம் துளிர்க்கிறது. ஒன்றும் ஒன்றும் எவ்வளவு என வாத்தியார் கேட்ட கேள்விக்கு “கொஞ்சம் பெரிய ஒண்ணு” என பதில் சொல்லும் மஜீத்தை அன்று முதல் அவள் அப்படியே அழைக்கிறாள். இப்படிச் சொல்லி அவன் கிண்டல் செய்யும்போதெல்லாம் அவன் சிரித்துக்கொள்வான்.

தான் எதிர்காலத்தில் பெரும் செல்வந்தனாக வாழ்வதுபோலவும் வானத்துக்கும் பூமிக்குமான ஒரு தங்க மாளிகையில் ஒரு ராஜகுமாரியுடன் வசிக்கப்போவதாகவும் அவன் அடிக்கடி கற்பனையில் கனவு காண்பான். அந்த ராஜகுமாரி நீதான் என் சுகறாவிடம் ஒருசமயம் அவன் சொன்னதைக் கேட்டு அவள் சந்தோஷப்படுகிறாள்.

அவனுக்கு வெகுவிமரிசையாக சுன்னத் கல்யாணம் நடக்கிறது. 1000 பேருக்கு பிரியாணி விருந்தளிக்கப்படுகிறது. முதலில் என்னவோ ஏதோவென அதைக்கண்டு பயந்து நடுங்கும் மஜீத்து சுகறாவிடம் அதைப்பற்றி சொல்லும்போது சற்றுகூட பயப்படவில்லையென நடந்ததை விவரமாக சொல்கிறான். அவளுக்கு காதுகுத்து நடக்கவிருப்பதை அவள் சொல்ல அந்த நாளில் யாருக்கும் தெரியாமல் அவள் வீட்டுக்கு செல்கிறான். காதுகுத்து எப்படியிருக்கும் என காணவந்ததாய் அவன் சொல்ல, சுன்னத் செய்யப்பட்ட நிலையுடன் வந்திருக்கும் அவனை உறவினர்கள் தூக்கிச்செல்கிறார்கள்.

உள்ளூர் படிப்பை முடித்து வெளியூர் சென்று படிக்கச் செல்கிறான் மஜீத். சுகறா பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள். அவளுடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட, வருமானத்துக்கு வழியின்றி அம்மாவும் இரு தங்கைகளுடனும் சிரமப்படுகிறது சுகறாவின் குடும்பம். சுகறாவின்றி தான் மட்டும் படிக்கச் செல்வதும் அவளது குடும்ப நிலையும் அவனுக்கு பெரிதும் இரக்கத்தை ஏற்படுத்துகிறது. தன் பணக்கார அப்பாவின் மேல் எப்போதும் அவனுக்கு பயம் என்றபடியால் ஒருமுறை தன் அம்மாவிடம் சுகறாவையும் படிக்கவைக்கச் சொல்லி கேட்கிறான். சமயம் பார்த்து அவனது அப்பாவிடம் ‘இசுலாமியர்களின் கடமைகளை’ எடுத்துக்காட்டி அவனது அம்மா கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் எழுகிறது. ஏற்கெனவே தம்பி தங்கைகளின் குழந்தைகளென்று நமது குடும்பத்திலேயே 67 பேர் இருப்பதால் எல்லோரையும் காப்பாற்றுவது கடினம் என கறாராகச் சொல்லிவிடுகிறார் அவர். சுகறாவுக்கு எதுவும் செய்ய முடியாமல் மஜீத்து கவலைப்படுகிறான். பள்ளிக்கு செல்லும் வழியில் மஜீத்தின் காலில் பொத்தும் ஒரு முள்ளினால் அவனது கால் ஏகத்துக்கும் வீங்கிவிட ‘தான் விரைவில் செத்துப்போய்விடுவேன்’ என அவளிடம் சொல்கிறான். யாருமற்ற சமயத்தில் வரும் அவளுக்கும் அவனுக்கும் மெல்லியதான மோகம் அரும்ப உடல் அணைப்பில் நெருக்கம் ஏற்படுகிறது. பின் கட்டி உடைந்து கால் சரியாகிவிடுகிறது.

ஒருநாள், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது வயலுக்கு வரச்சொல்லி அப்பா சொன்னதை மறந்து விளையாடச் சென்றுவிடும் மஜீத்தை நையப் புடைக்கிறார் அப்பா. அப்பாவிடம் ஏற்கெனவே இருந்த வெறுப்பாலும், தற்போது அடிவாங்கிய அவமானத்தாலும் அவன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு கண்காணாத இடத்திற்குப்போக தீர்மானிக்கிறான். கிளம்பும்முன் சுகறாவைப் பார்த்துச் செல்ல எண்ணி பின்னர் வேண்டாமென்று முடிவுசெய்து புறப்படுகிறான்.

சுமார் 10 வருடகாலம் சொந்த ஊருக்குப் போகாமல் தேசாந்திரியாக எங்கெங்கோ அலைகிறான். யாருடனும் எவ்வித தொடர்புமில்லை.  வாழ்க்கை அலுத்துப்போக பலவருடங்களுக்குப் பிறகு பின்னொருநாள் ஊருக்குப்போக முடிவுசெய்கிறான்.

அவன் ஊரில் எல்லாமே மாறியிருக்கிறது. யாருக்கோ ஜாமீன் நின்றதற்காகவும் யோசிக்காமல் கையெழுத்து போட்டதற்காகவும் அவனது அப்பா தன் சொத்தையெல்லாம் இழந்துவிட்டிருக்கிறார். நெடுநாட்களுக்குப் பிறகு அவனைக் காணும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அவனை எப்படியெல்லாம் வளர்த்தோம் என எண்ணிப்பார்க்கிறாள் அம்மா. வறுமையின் பெரும்பிடியில் வயதுக்கு வந்த இரு மகள்களோடு கஷ்டப்படும் அவனது தாயை எண்ணிக் கலங்குகிறான். சுகறாவுக்கு எப்போதோ கல்யாணம் ஆகிவிட்டதை அறிகிறான். ஒருமுறை அவளைப் பார்த்துவிட வேண்டுமென நினைத்து அவள் வருவாளா என எதிர்பார்க்கிறான்.

அவன் ஊருக்கு வந்த செய்தியறிந்து சுகறா அவனைப் பார்க்க வருகிறாள். உடல் மெலிந்து முகம் வற்றி ஒரு பல் விழுந்து அந்த மாமரத்து அருகில் நின்று இருவரும் பால்யகால நினைவுகளோடு பேசிக்கொள்கிறார்கள். நான் வரவே மாட்டேனென்று நினைத்தாயா என இவன் கேட்க, தனக்கு நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால் ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தின் இரண்டு தங்கைகளின் அக்காவால் இந்த சமூகத்தில் எதுவும் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள். தன் கணவனுக்கு ஏற்கெனவே ஒரு குடும்பம் இருப்பதையும் அவன்  ஒரு பயங்கரமான கோபக்காரன் என்பதையும் அடிக்கடி அடிப்பான் என்பதையும் அதனால் பல் விழுந்த கதையையும் சொல்லி தான் அங்கே ஒரு கூலிக்காரியாகவே இருப்பதாகவும் சொல்கிறாள். தன் ராஜகுமாரியின் கதையைக் கேட்டு கலங்குகிறான். இனி சுகறா அங்கே போகவேண்டாமென தன் அம்மாவிடம் சொல்கிறான் மஜீத். ஊர் பழியாகப் பேசுமென அம்மா சொல்ல, தான் அவளை கல்யாணம் செய்துகொள்வதாகச் சொல்கிறான். தங்கைகளுக்கு கல்யாணம் செய்துகொடுத்துவிட்டு பிறகு அவளைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி அம்மா கேட்டுக்கொள்கிறாள்.

செல்வந்தராக வாழ்ந்த தன் அப்பா தற்போது கௌரவம் பார்க்காமல் கடைத்தெருவுக்குப்போய் தேங்காய் நார் விற்பதைக் காண்கிறான். தனக்குத் தற்சமயம் பெருமளவிலான பணம்தான் தேவை என்பதை காலம்கடந்து உணர்கிறான். தன் அனுபவங்கள் அறிவு அனைத்தையும் பணமாக்குவது எப்படி என சிந்திக்கிறான். எந்த வழியும் புலப்படவில்லை. வெளியூர்களில் செல்வந்தர்களாக இருக்கும் முஸ்லீம்களிடம் உதவி கேட்கச் சொல்கிறாள் அம்மா. அதைப் பொருட்படுத்தாமல் எல்லோரிடமும் சொல்லிவிட்டு வெளியூருக்கு வேலைக்குக் கிளம்புகிறான். இருப்பதை விற்று அம்மா கொடுத்ததை வாங்கிக்கொண்டு சுமார் 1500 மைலுக்கு அப்பால் ஒரு நகரத்திற்குச் சென்று வேலை தேடுகிறான். எங்கே தேடினும் வேலை கிடைத்தபாடில்லை. கடும் அலைச்சலுக்குப் பின் ஒரு தோல் கம்பெனியில் ஆர்டர் எடுக்கும் வேலையொன்று கிடைக்க மாதம் 100 ரூபாய் அனுப்புகிறான்.

சீக்கிரம் தங்கைகளைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு சுகறாவை கல்யாணம் செய்துகொள்ள எண்ணி கடுமையாக உழைக்கிறான். இந்நிலையில் எதிர்பாராமல் நடக்கும் விபத்தொன்றில் ஒரு காலை இழக்கிறான் மஜீத். அந்த கம்பெனியில் இனி அவனுக்கு அந்த வேலை இல்லையென சொல்லும் முதலாளி, வேண்டுமானால் குமாஸ்தாவாக இருக்கச் சொல்கிறார். தனக்கு கணக்கு பலவீனம் என்பதால் மறுத்து வேறு வேலை தேட ஆரம்பிக்கிறான். முதலாளி கொடுத்த பணம் முழுவதையும் வீட்டுக்கு அனுப்பி, தான் அடுத்த கடிதம் எழுதும்வரை பதில் போடவேண்டாமென கடிதம் எழுதுகிறான். தனக்கு கால் போனதை மறைக்கிறான். ஒரு முஸ்லீம் பணக்காரரை சந்தித்து உதவி கேட்கிறான். அவர் ஏற்கெனவே 4 பள்ளிவாசல் கட்ட உதவிவிட்டதாகச் சொல்லி ஒரு ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அதை வாங்காமல் வெளியேறுகிறான். பின் ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவும் வேலை கிடைக்கிறது. கடுமையாக உழைக்கிறான். ஊரில் எல்லோரும் சுகமென்றும் அவனைப் பார்க்கவேண்டும்போல் இருப்பதாகவும் சுகறாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. ஊருக்குப்போனால் தன்னை எல்லோரும் “ஒற்றைக்கால் மஜீத்” என அழைப்பார்கள் என எண்ணி போவதைப்பற்றி யோசிக்க மறுக்கிறான். என்ன இருந்தாலும் “கொஞ்சம் பெரிய ஒண்ணு” என்றுதான் தன் ராஜகுமாரி அழைப்பாள் என மகிழ்கிறான். தினசரி வேலைகளினூடே வானத்து நட்சத்திரங்களோடும் மனதோடும் சுகறாவுடன் பேசிக்கொள்வான்.

சிலநாள் கழித்து அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் சுகறா இறந்துவிட்டதாகவும், அவனை ஒருமுறைப் பார்க்க எதிர்பார்த்திருந்ததாகவும் அவள் இருக்கும்வரை தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும், வீட்டைவிட்டு கடன்காரர்கள் உடனடியாக வெளியேறச் சொல்லிவிட்டதாகவும்   முஸ்லீம் செல்வந்தர்களிடம் உதவி கேட்குமாறும் அம்மா எழுதியிருப்பதைப் படித்து கலங்குகிறான். 

தன் வாழ்க்கை சூனியம் ஆகிப்போனதாக உணர்கிறான். துயரமும் மகிழ்ச்சியும் கலந்த இந்த வாழ்வைப் பற்றியும் கணநேரத்தில் கடந்துபோன காலம் பற்றியும் யோசிக்கிறான். “தன் தாயும் தந்தையும் எங்கே போவார்கள்? யார் உதவி செய்வார்கள்? வாழ்க்கை அர்த்தமிழந்துப் போனதா யா அல்லா? கருணைமயமான இறைவனின் கரங்கள் எங்கே?  என பலவாறான எண்ணங்களோடு பாத்திரங்களை கழுவி வைத்தபடி சுகறாவுக்கும் தனக்குமான பழைய நினைவுகளை அசைபோடுகிறான். முன்னம் வேலைதேடி ஊரைவிட்டு கிளம்பும்போது செம்பருத்தி மரத்தைப் பிடித்தபடி சுகறா தன் காதருகே எதையோ சொன்னாள். ஒரு வண்டியின் ஹார்ன் சத்தத்தால் அது அப்போது கேட்காமல் போனது. இப்போது கண்ணீருடன் யோசிக்கிறான், “அவள் கடைசியாகச் சொல்ல நினைத்தது என்னவாக இருக்கும்?”

12.6.14

சிறுவயதில் எழாத கேள்வி

இன்று மதியம் படப்பிடிப்பின் இடைவெளியின்போது ஒரு பாறையின் மீது சிவப்புநிற ஓணாண் ஒன்றைப் பார்த்தேன். சிறுவயது நினைவுகள் சிலநொடி திரும்பியது. 

தாகத்திற்கு தண்ணீர் கேட்ட ராமனுக்கு தண்ணீரைத் தராமல் "சிறுநீர்" கொடுத்ததாக தூக்கிலிடப்பட்ட; அடித்துக்கொல்லப்பட்ட ஓணாண்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா?

இந்தப்பாவம் ராமனைச் சேருமா? ராமன் கதையை எழுதியவனைச் சேருமா? ராமனையும் ஓணாணையும் இணைத்து கதை சொன்னவனைச் சேருமா? இக்கதையை சிறுவர்களிடம் பரப்பியவர்களைச் சேருமா? ஓணாணைக் கொன்றவர்களைச் சேருமா? 

சிறுவயதில் எழாத கேள்வி இப்போது எழுகிறது. "தாகத்திற்கு யாரிடம் தண்ணீர் கேட்க வேண்டும் என்ற இங்கிதம்கூட தெரியாமல், ஓணாணிடமாபோய் தண்ணீர் கேட்கவேண்டும் ராமன்? ஓணாணிடம் தண்ணீர் கேட்டால் அதனால் வேறெதைத்தான் தரமுடியும்?"

சிறுவயதில் கொல்லப்பட்ட ஓணாண்கள் அவ்வப்போது இப்போதும் நினைவுக்கு வருகிறது. மனம் சலனப்படுகிறது. 

"ராமன், ஓணாண்களுக்கும் வில்லனாக இருப்பதன் காரணம்தான் என்னவோ?"

9.6.14

"இயற்கைக்கு யாவரும் சமமே"

இதோ... இவர்களது இனத்திற்கும் கடவுளுடன் இணைக்கப்பட்ட ஒரு கதையிருக்கலாம். அதில் போதையேறி தங்கள் குழுவின் பெருமைகளைப் பேசி பேசி இவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் யதார்த்தம் இதுதான். கடவுள் என்ற ஒருவன் எந்த காலத்திலும் தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை... 

"இயற்கைக்கு யாவரும் சமமே"

8.6.14

மாற்றுக்கருத்தாளர்கள் என்றால் எதிரிகளா?

மாற்றுக்கருத்து / எதிர்கருத்து என்பது வேறு. நட்பு கொள்வது என்பது வேறு. இதை பலரும் குழப்பிக்கொள்கிறார்கள். எல்லோருமே எல்லாவற்றிற்கும் சண்டைபோட வேண்டுமென்பது அவசியமா? கருத்துக்களை பரிமாற்றிக்கொள்ளக்கூட தெளிவில்லாதவர்கள் அப்படி என்னதான் சாதிக்கப்போகிறார்கள்?

5.6.14

மாநில பிரிவினை

வடதமிழ்நாடு ஏன் வேணும்னு அவரு ஒற்றை வார்த்தையில தெளிவா சொல்லிட்டாரு. ஆனா பாருங்க அதுக்கு என்னென்னமோ பொதுப்பிரச்னையை எல்லாம் துணையா இழுத்துக்கிட்டு நியாயப்படுத்த தீயா வேலை செய்றாங்க கட்சிக்காரங்க.

சங்கம் ஆரம்பிச்சு கட்சி ஆரம்பிச்சும் முன்னேற்ற முடியாததையெல்லாம் மாநிலத்தை பிரிச்சாத்தான் முன்னேற்ற முடியும்னா...
ஒரு பேருந்து விபத்தில் செத்துப்போனவர்களில் எங்கள் சாதிதான் அதிகம்னு அறிக்கைவிட்டு அக்கறைப்படும் கட்சி, அதிகாரத்திற்கு வந்து எல்லோருக்காகவும் என்ன சாதிக்கப்போகிறது?
ஒரே மொழி பேசும் மக்களுக்குள் பிரிவினை வருவது என்பது முன்னேற்றமா? ஏற்கெனவே பிராந்திய, சாதீய, குழு மனப்பான்மையில் வாழும் தமிழினத்திற்கு இது ஆரோக்கியமானதா? ஹிந்திக்காரனுக்கு கூடுதலான விசுவாச அடிமைகளாக மாற இத்தனை பிரச்சாரமா?

முதல்வராகி எல்லா சாதியையும் ஆள்வது இருக்கட்டும்; முதலில் எதிர்க்கட்சியாகக்கூட வராமல்போவது ஏன்?

4.6.14

ஏலகிரியில் பார்த்த ஒரு சிறு கோயில்




இன்று காலை படப்பிடிப்புக்காக ஏலகிரி வந்தேன். காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு போகும் வழியில் ஒரு மாரியம்மன் கோயிலைப்பார்த்தேன். கழுமரங்களைப் போன்ற அமைப்புடன் 6 தூண்கள் மற்றும் கோயில் கோபுரத்தின் முன்புறம் உள்ள சாமி சிலைகளினூடே ராணுவ உடை தரித்த இரண்டு சிப்பாய்களின் சிலையும் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வேலூர் மாவட்ட மேற்குப் பகுதிகளில் முன்னம் ஏற்காடு சென்றபோது வழியெல்லாம் இப்படி சற்று வித்யாசமான சிலைகள் அமைந்த பல குலசாமிக்கோயில்களை பார்த்திருக்கிறேன். நான் வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவன்.

நிச்சயம் இவை எல்லாவற்றின் பின்னணியிலும் இந்த மண்ணின்; மக்களின் சுவாராஸ்யமான கதைகள் இருக்கக்கூடும். ஆனால் இந்த பெருதெய்வங்களைப்போல அல்லாமல் அதன் கதைகளில் நேர்மைத்தனம் இருக்கலாம் என்பதே நிதர்சனம்.

2.6.14

"பாமக" - என் விமர்சனம்

பாமக-வின் மீது எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் என் கிராமத்து அரசியலைப் பொறுத்தவரையில் நான் பாமக-வையே ஆதரிக்கிறேன். ஏனெனில் என் கிராமத்தில் அதிமுக, திமுக-விற்கு மாற்றாக வேறு யாரும் இல்லை. முன்னொரு காலத்தில் திமுக மட்டுமே தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. பின்னர் பாமக. 1998-ம் ஆண்டு மிகப்பெரும் சாதிக்கலவரம் வந்து இரு தரப்பிலும் சுமார் 50 பேர் 5 வருடங்களாக வழக்குக்காக அலைந்து கொண்டிருந்தனர். இருப்பது இரண்டு சாதிதான். வழக்கில் சிக்கியவர்கள் எல்லோரும் விவசாயிகள்தான். கடைசியில் வழக்காட முடியாமல் இரு தரப்பினருமே ஒத்துப்போய் வழக்கை கைவிட்டனர். சண்டைக்கு முன்பு எல்லோரும் மாமன் மச்சான்களாய் எந்த பிரச்னைகளுமின்றி உறவுக்காரர்களாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பாமக வந்த பின்புதான் இப்படியானது. அதற்குப்பின்பு இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றது. எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடியது. மேலும் சாதீய அடக்குமுறையும்கூட. ஒப்பீட்டளவில் அதிமுக தரப்பின் வன்னிய சாதி வெறியைக்காட்டிலும் வெளிப்படையான பாமக மேல் என்று தோன்றியது. எவ்வாறெனில் எதிர் தரப்பினரை ஒன்றுபடுத்தவாவது உதவக்கூடும். மேலும் கடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாமக-வை ஆதரிப்பதென எங்கள் நண்பர்கள் கூடி முடிவெடுத்தோம். எப்படியாயின் அதிமுக கிராமத்தில் மீண்டும் வந்துவிடக்கூடாது என உறுதியாக இருந்தோம். இது ஒருவகையில் எங்களுக்கும் ஆபத்துத்தான். ஏனெனில் மீண்டும் ஒரு சாதிப்பிரச்னை வந்தால் அதற்கு நாங்களே எங்கள் தரப்பிற்கு பகையாகிவிடுவோம். இருந்தும் பாமக-வினரை எந்தளவிற்கு நம்ப முடியுமென்ற உறுதியில்லை. 1998-க்குப் பிறகு கிராமத்தின் பெரும்பாலான கிழக்குப்பகுதி இளைஞர்களுடன் நமக்கு பழக்கமில்லை. சைக்கிளிலிருந்து பனியன் சட்டைவரை சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்ளும் இளைஞர்களைத்தான் பார்த்துவருகிறேன். தீவிர தமிழ் பற்றுடன் அதில் யார் இருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தாலும் சந்திக்கும் ஆற்றல் இருக்கிற காரணத்தால் பாமக-வில் இருந்த நம்பிக்கையான சிலருடன் ஓரிரவு நிலா காய்ந்த ஒரு வெட்ட வெளியில் அமர்ந்து பேசினோம். எந்த நிபந்தனையுமின்றி வெளிப்படையாகவே பேசினேன். எதிர் காலத்தில் எந்தவொரு தரப்பிலும் யார் வாழ்வும் சாதியால் சீரழிந்துவிடக்கூடாது என்றே இன்றுவரையிலும் எண்ணுகிறேன். 

தேர்தல் பிரச்சாரத்தில் நண்பர்களுடன் வீடுவீடாய் சென்று பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தோம். இதில் உடன்பாடில்லாத என் சாதித்தரப்பு உறவினர்கள் சிலர் எனக்கு இன்றுவரையிலும் நிரந்தர பகையாகிவிட்டார்கள். என் பங்காளித் தரப்பில் நின்ற ஒருவரை எதிர்த்து கிராம நலனைக் கருத்தில் கொண்டு பாமக சார்பாகவே செயல்பட்டோம். தேர்தல் நாள் நெருங்குவதற்குள் பங்காளித்தரப்பில் உள்கட்ட நெருக்கடி தீவிரமானது. வெறும் ஓரிரு நண்பர்களுடன் தேர்தலன்று காலையிலிருந்து மாலைவரை பாமக-விற்கு ஓட்டு கேட்டேன். தேர்தல் முடிவு வரும்வரையில் பெரிய மன உளைச்சல். மறுநாளே என் சாதியாட்களுக்குள் பெரும் சண்டை. இருந்தும் எல்லாம் தாண்டி பாமக வெற்றி பெற்றது. நிம்மதியாயிருந்தது. நாங்கள் ஆதரித்த அனைவரும் வெற்றி பெற்றனர். பின்பு வேறொரு பிரச்னை. துணைத்தலைவர் பதவி எங்கள் சாதிக்கு தரக்கூடாது என பாமக இளைஞர் தரப்பில் சிலர் பிரச்னை செய்வதாக. மீண்டும் இரு தரப்பிலும் அதே மாதிரி ஒரு இரவு ஏரிக்கரையில் அமர்ந்து பேசினோம். உங்களுக்குள் பிரச்னை என்றால் எந்தப் பதவியும் வேண்டாமென நாகரீகமாகவே மறுத்தோம். ஆனால் எங்கள் தரப்பினருக்கு இதுவொரு கௌரவப் பிரச்னையாகிவிட்டது. இது நடக்காது போனால் மீண்டும் நாங்கள் யாரிடமும் ஓட்டு கேட்க செல்ல முடியாது. முதலிலேயே பதவி வேண்டுமென்று நிபந்தனையும் விதிக்கவில்லை. பின் ஊர் ஒற்றுமைக்காக எங்கள் தரப்பில் துணைத்தலைவர் ஆனார் எனது நண்பர். 

எது எப்படியோ, இன்றுவரையில் மூன்று வருடங்களாக எந்தப் பிரச்னையுமில்லை. ஊர் அமைதியாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளைவிடவும் பல திட்டங்கள் திறமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது கிராமத்திற்கு செல்லும்போது இதை கண்டிருக்கிறேன். யாருக்கு போன் செய்தாலும் ஏதாவது பிரச்னையா எனக் கேட்டுவிட்டுத்தான் அடுத்ததைப் பற்றி பேசுவேன். சுமார் 2500 பேர் மக்கள்தொகைக் கொண்ட என் கிராமத்தில் 100 வன்னியர்கள்கூட எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. ஆனால் எல்லோரைப் பற்றியும் தெரியும். எல்லோரின் செயற்பாடுகளையும் கவனிப்பேன். அதற்கேற்ற வகையில் யாரிடம் விசாரித்தாலும் தற்போதைய தலைவர் பற்றி நல்லவிதமாகவே சொல்கிறார்கள். இது தொடரவேண்டுமெனவே எதிர்பார்க்கிறேன். இதில் எமக்கு தனிப்பட்ட லாபமென ஒன்றுமில்லை. இரு தரப்பில் எல்லோரும் கூடி அமர்ந்து தயாரித்த தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொன்றாய் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய எனது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் "கோகுல கிருஷ்ணா யாதவ இளைஞர் அணி" தம்பிகளுமே பொறுப்பு.

தற்போது குறைவான ஒரு சிலரைத் தவிர எனது கிராமத்து பாமக-வில் அப்படியொன்றும் சாதி வெறியர்கள் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் இளைஞர்களிடத்தில் சாதியுணர்வு தானாய் கொழுந்துவிடுகிறது. எதிர்ப்புணர்வின் விளைவாய் இதேபோல் எதிர் தரப்பு இளைஞர்களிடமும் தீவிரமாய் கொழுந்துவிடுகிறது. பதிலுக்கு எங்கள் சாதிக்கென்று எந்த கட்சியுமில்லை என்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம். இப்போது எம் தரப்பின் சில இளைஞர்கள் பெரியாரை படிப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. சாதீயக் கண்ணோட்டத்தில் எம் இளைஞர்களை துளிகூட சாதிரீதியாக நான் ஒருபோதும் நடத்தியதே இல்லை. எச்சாதியாயினும் தமிழ் இனவெறி உள்ளவர்களோடு என்றைக்குமே நான் ஒத்துப்போய்விடுகிறேன். இப்படியான தீவிர இளைஞர்கள் என் கிராமத்தில் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன். தகுதியுள்ளவர்கள் யார் பதவிக்கு வந்தாலும் எமக்கு எப்போதும் பிரச்னையில்லை. சாதிப்பெருமையை மட்டுமே கொள்கையாய் பேசி ஏமாற்றுபவர்களையே வெறுக்கிறேன்; எதிர்க்கிறேன். 

இதன் பொருட்டே பாமக-வை தொடர்ந்து விமர்சிப்பது எனக்கு அவசியமாகிறது. எல்லாம் கடந்து என் கிராமத்தின் எல்லா மனிதர்களையும் நான் நேசிக்கிறேன். யார் மீதும் எதன் பொருட்டும் எனக்குக் காழ்ப்புணர்வு இல்லை. 

எங்கள் ஊரைப்பற்றி முக்கியமான ஒன்று சொல்ல வேண்டுமானால், ஊருக்கு கிழக்கு நுழைவிலும் மேற்கு நுழைவிலும் ஒரு சக்கிலியர் குடும்பம் இருக்கிறது. அதாவது வன்னியர் பகுதியில் ஒன்றும், யாதவர் பகுதியில் ஒன்றும். இன்றுவரையில் அவர்கள் சாதிரீதியான அடக்குமுறைக்கு பயந்து இடம்பெயர்ந்து போகும்படி எப்போதும் ஆளாகவில்லை. கௌரவமாகவே வாழ்கிறார்கள்.

சாதி அரசியல் கலக்காதவரையில் தமிழர்கள் மிகவும் நல்லவர்களாகவே வாழ்கிறார்கள்...!

1.6.14

"ஓட்டுப்பிச்சைக்கு அடுத்த சாதி, ஆளறதுக்கு உங்க சாதி..!"

எந்தப் பக்கம் பார்த்தாலும் எல்லா சாதியிலயும் "என் சாதிக்காரந்தான் ஆளனும்... என் சாதிக்காரந்தான் ஆளனும்"னு ஆளாளுக்கு பதிவு போட்டுக்கிட்டு இருக்கீங்களே, உங்க சாதிக்காரன் ஆளாத இப்ப என்ன செத்தா போய்ட்டிங்க? உருப்படியா கொள்கைய பேசி ஓட்டு வாங்க துப்பில்லாம எப்பப்பார்த்தாலும் சாதிவெறிய கிளப்பி அடுத்த தலைமுறையவும் கெடுத்துக்கிட்டு. தமிழனா வாங்கப்பா...

பெரியார் என்ன கிழித்தார் இங்கே?

ஊர் சாதிக்காரர்களின் வீடுகளைவிடவும் கீழ்ச்சாதிக்காரர்கள் உயரமான வீடுகளை கிராமங்களில் கட்டமுடியாது என்பதும், பெரும்பாலான கிராமங்களில் இன்றும் தலித்துகள் தைரியமாக வெளியில் நடமாட முடியாது என்பதுமே ஏறக்குறைய வட இந்தியாவின் (உபி) நிலைமை. ஏனைய இடங்களில் நடக்கவில்லை என்பதல்ல, வெளிச்சத்திற்கு வராமலே பல கொடுமைகள் கேட்பாரின்றி அடங்கிப்போகிறது என்பதே உண்மை. கீழ்ச்சாதிக்காரர்கள் கறந்து விற்கும் பால் மேல்சாதிக்காரர்களின் பகுதிக்கு கொண்டு சென்று விற்க முடியாத உன்னத நிலை இன்னமும் குஜராத்திலும் நடப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

மீண்டுமொருமுறை யோசித்தேன்

நேற்று இரவு 12 மணிக்கு எனது அறைக்கு வந்தபோது வழியில் தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளைப் பார்த்தேன். அலுவலகம் கிளம்பும்முன் நேற்றுகாலை அவரை நான் உயிருடன் பார்த்தேன். நடுத்தர வயதுக்காரர்தான். பக்கத்தில் மரண கானா பாட்டும் பறைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருக்க, நேற்றிரவு மீண்டுமொருமுறை மரணத்துக்குப்பின்னரான நிலை பற்றியும் நான் இல்லாமல் இருக்கப்போகிற இந்த பூமியைப் பற்றியும் யோசித்தேன்.