(ஒரு கலெக்டரின் உண்மைக் கதை)
நேற்று இக்கதையைப் படித்தேன்.
“இட ஒதுக்கீடு” முறையால் இன்றைக்கு
தாழ்த்தப்பட்டவர்கள் பலர் பலவாறான அரசுப் பதவிக்கும் அதிகாரத்திற்கும்
வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே அந்த அதிகாரத்துக்கு உரிய முறையில்
பிற சாதி அரசு அதிகாரிகளால் மரியாதையாக நடத்தப்படுகிறார்களா என்பதைப் பற்றியதே
இக்கதை.
“நாயாடிகள்” என்று ஒரு சாதி. நரிக்குறவர்களில் ஒரு
பிரிவு. தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் கீழாக நடத்தப்படும் ஒரு பட்டியல் பழங்குடி
வகுப்பினர். பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இவர்கள் 50,000 பேர்களுக்கு மேலாக இருந்திருக்கிறார்கள்.
இவர்களை பகலில் யாரேனும் கண்டால் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்களாம். இவர்களை
பார்த்தாலே தீட்டாம். மக்களுக்கு பயந்து இவர்கள் பகல் முழுதும் காடுகளிலேயே
மிருகங்களைப்போல ஒளிந்து வாழ்ந்து இரவில் மட்டுமே வெளிவருவார்களாம். கழிவுகளில்
கொட்டப்படும் உணவுப்பொருட்களையும் குப்பைகளில் கிடைக்கும் பொருட்களையுமே கொண்டு
தம் வாழ்வை நடத்துகிறவர்கள்.
இக்கதை நடந்தகாலத்தை 1988 என்று குறிப்பிடுகிறார்
எழுத்தாளர்.
“நாயாடிகள்” சமூகத்திலிருந்து தர்மபாலன் என்பவர்
ஐஏஎஸ் தேர்வெழுதி கலெக்டராக பணியாற்றுகிறார். காணாமல்போன தன் அம்மாவை
கழுதைச்சந்தைக்குப் பக்கத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக குஞ்சன்
நாயர் என்பவர் வந்து சொல்ல, சாகக்கிடக்கும்
வயதான பிச்சைக்காரர்களின் நடுவே தன் அம்மாவை அங்கே காண்கிறார் கலெக்டர். அடிக்கடி
இப்படி நிறையபேரை அங்கே பிடித்துவருவார்களென்றும், யாருக்கும் மருத்துவம்
பார்ப்பதில்லையென்றும், தீனி மட்டும் போட்டுவிட்டு அவர்களாகவே சாகும்வரைக்கும்
வைத்திருந்து அப்புறப்படுத்திவிடுவதாகவும் தேவைப்பட்டால் பொதுவான ஆன்டிபயாடிக்
மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றும் மருத்துவர் மாணிக்கம் சொல்கிறார். மேலும்
தானொரு தாழ்த்தப்பட்டவன் என்பதால் மருத்துவராக இருந்தும் தன்னை யாரும்
மதிப்பதில்லை என்றும் போதுமான வசதிகள் செய்துத் தருவதில்லையென்றும் சீனியரான தன்னை
போஸ்ட் மார்டம் செய்வதற்கே நியமித்ததாகவும் தானொரு “டிபார்ட்மென்ட் தோட்டி” என்பதாக
நடத்தப்படுவதாகவும் சொல்கிறார். மருத்துவமனைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால்
பக்கத்திலிருக்கும் கால்நடை மருத்துவமனையிலிருந்துதான் இந்த ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொண்டுவரப்படுகிறது என்றும்
சொல்கிறார். அவர் சொல்வது தனக்கும் நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதை ஆழமாய் உணரும்
தர்மபாலன், சிறுநீர் வெளியேறாமல் சுய நினைவின்றி அசுத்தமாய் கிடக்கும் தன் தாயை சீர்படுத்தி
தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல உத்தரவிடுகிறார்.
மேலாடையின்றி திறந்த மார்போடு தன்னை இடுப்பில்
தூக்கி வைத்துக்கொண்டு குப்பைகளைப் பொறுக்கியபடி போகுமிடமெல்லாம் உடன்
இழுத்துச்சென்ற தன் தாயை எண்ணிப்பார்க்கிறார். காலரா வந்து தங்கள் கூட்டம்
கொத்துக்கொத்தாய் மடிந்தபோது தன் குடும்பத்து 10 உருப்படிகளில் தான் ஒருவர் மட்டுமே
தப்பிக்கிறார். ஏழு வயதிலும் இடுப்பில் துணியில்லாமல் உடலெங்கும் சொறி
சிரங்குகளோடு ஒரு நாள் சோறு வேண்டி சுவாமி பிரஜானந்தரின் ஆசிரமத்தை (நாராயணகுருவின்
சீடரான சுவாமி ஏர்னஸ்ட் கிளார்க்-ன் சீடர்தான் சுவாமி பிரஜானந்தர்) தேடிப்போனபோது
அங்கே இவனை தேங்காய் நார்போட்டு தேய்த்து குளிப்பாட்டி சோறு போடுகிறார்கள்.
தொடர்ந்து சோறு வேண்டுமானால் இங்கேயே தங்கி படித்தால்தான் என்று சொல்ல, அவனும்
அவ்வாறே தங்கிவிடுகிறான். ஆனால் அம்மாவுக்கோ பிறரைக் கண்டால் பயம். தன் பிள்ளையை
அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறாள். தன்னுடன் அனுப்பிவிடவேண்டும்
என்று பலமுறை ஆசிரமத்தின் வாசலில் அமர்ந்து அழுது அநாகரிகமாக நடந்துகொள்கிறாள்.
அவளிடமிருந்து விடுவிக்க இவனை தூரத்தில் வேறொரு ஆசிரமத்தில் சேர்த்து
படிக்கவைக்கிறார்கள். ஆர்வத்துடன் படிப்பில் அக்கறை காட்டி வளரும் தர்மபாலனை
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதச் சொல்கிறார் சுவாமி பிரஜானந்தர். அவ்வாறே தேர்வெழுதி அரசு
அதிகாரியாகிறார் தர்மபாலன்.
தர்மபாலனின் சாதிப் பின்னணியைத் தெரிந்துகொள்ளும்
அரசு ஊழியர்கள் யாரும் அவரை மதிப்பதேயில்லை. அவரால் யாரையும் உத்தரவிடமுடியவில்லை.
சக ஊழியர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் ஒரு சமயம் அவரது தாயை அழைத்து வந்து
அலுவலக வளாகத்திலிருக்கும் குப்பையில் கிடக்கும் உணவை அவர் பார்க்க ஊண்ணும்படிச்
செய்கின்றனர். “எங்களின் கருணையால், எங்களின் நீதியுணர்ச்சியால், நீ இங்கு அமர
வைக்கப்பட்டிருக்கிறாய். ஆகவே நீ எங்களிடம் நன்றியுடன் இரு. எங்களுக்கு
விசுவாசமானவனாக இரு. நீ வேறு. உன் உண்மையான தகுதி இதுவல்ல” என்று இட ஒதுக்கீட்டால்
பதவிக்கு வந்தவர்களை சக அலுவலர்கள் நடத்துவதை புரிந்துகொள்கிறார்.
தர்மபாலனின் நேர்முகத் தேர்வன்றுதான் பிரஜானந்தர்
இறந்த செய்தி அவருக்குத் தெரிகிறது. “உன் தாய்க்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்”
என்ற பிரஜானந்தரின் வாக்குப்படி நெடுநாட்கள் பிரிந்திருந்த தன் தாயை எங்கெங்கோ
தேடி கண்டுபிடிக்கிறார். தன்னுடன் தங்க வைக்கிறார். குப்பைமேட்டில் அலைந்து
திரிந்து பழகிய தாய்க்கோ அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. கண்ட எச்சில் உணவுகளை
தின்பதுமாக தோட்டங்களில் ஆங்காங்கே மலம் கழிப்பதுமாக அந்தத் தாய் அநாகரிகமாக
நடந்துகொள்வது அவரது மனைவி சுபாவுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் குழந்தை
‘பிரேம்’-ஐ தூக்கிக்கொண்டுபோய் ஒரு உணவகத்தின் குப்பைத்தொட்டி எச்சில் உணவுகளை தன்
தாய் ஊட்டிவிடுவதைக் கண்டு கடுமையாக அடித்துவிடுகிறார் தர்மபாலன்.
எல்லாவற்றையும் கண்டு பயந்து, ‘தன்னுடன்
வந்துவிடும்படி’ தர்மபாலனிடம் அவளுக்குத் தெரிந்த “குறவர்” மொழியில் பேசி அழும்
தன் தாயை நிர்கதியாய் கைவிடவும் முடியாமல், உடன்வைத்துக்கொள்ளவும் முடியாமல், அதே
சமயம் அரசு அதிகாரியான தன் மனைவியின் நியாயமான உணர்வுகளையும் புறக்கணிக்கமுடியாமல்
தர்மபாலன் திண்டாடும் ஒரு சமயம் அவள் காணாமல் போகிறாள். எங்கெங்கோ தேடித்தான்
தற்போது கண்டுபிடித்து தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
அரசு ஆஸ்பத்திரியின் நிலையைக் கண்டித்து உடனடி
நடவடிக்கை எடுக்கச் சொல்லி தர்மபாலன் உத்தரவிட, அடுத்த நிலை அதிகாரிகளால் டாக்டர்
மாணிக்கம் பணிநீக்கம் செய்யப்படுகிறார். எவ்வளவோ தியாக மனப்பான்மையுடன்
பணிபுரிந்தும் தனக்குக் கிடைத்தது அவமானமும் பதவி நீக்கமும்தான் என டாக்டர்
மாணிக்கம் சொல்ல தர்மபாலன் வருத்தப்படுகிறார். தாழ்த்தப்பட்ட அதிகாரிகளிடம்
மரியாதை காட்டுவதை யாரும் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை எனவும் அவர் சொல்ல தனக்கு
நேர்ந்த தொடர் அவமானங்களையும் நினைத்து வேதனைப்படுகிறார் தர்மபாலன்.
தன்னுடன் வந்துவிட்டால் குப்பை மேடுகளில் “ராஜா”
மாதிரி வைத்துக்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்த தன் தாயின் உயிர் ஒடுங்கும்
வேளையில், சாதியின்பேராலும் இட ஒடுக்கீட்டின் பேராலும் தன்னை அவமானப்படுத்திக்
கொண்டிருக்கும் இந்த போலியான “டிபார்ட்மெண்ட் தோட்டி” அதிகார பதவியை விட்டுவிட்டு
செல்வதும் மேல்தான் என தீர்மானிக்கும் வேளை ‘தன் தாயைப் போன்ற பல பிச்சைக்கார
கிழவிகளை புதைத்து அவர்களின் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாக்க வேண்டுமென்றால்
எனக்கு இன்னும் “நூறு நாற்காலிகள்” வேண்டும்’ என்று உணர்கிறார் தர்மபாலன். ‘பல
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கீழே இருந்தவர்கள் எழ வேண்டும்’ என சுவாமி பிரஜானந்தர்
சொன்னதை எண்ணிப் பார்க்கிறார்.
ஒரு கீழான சாதியிலிருந்து உயர் பதவிக்கு வந்த
ஒருவர் தன் அதிகார மட்டத்தில் எதிர்கொள்ளும் சாதீய அடையாள ரீதியான / இட
ஒதுக்கீட்டின் மீதான பிற சாதிக்காரர்களின் வெறுப்பை ஆழமாய் நேர்மையாய் பதிவுசெய்வதாய்
நீளூம் இக்கதையின் பின் இணைப்பில் இட ஒதுக்கீட்டு முறையின் மீதான ஜெயமோகனின்
வெறுப்பையும் சாதுரியமான எதிர்ப்பையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். அதாவது இட
ஒதுக்கீட்டில் பதவி கிடைத்தாலும் அவர்களுக்கு போதுமான தகுதிகளை வளர்த்துக்கொள்ள
அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்கிறார் எழுத்தாளர். இதனாலேயே பலர்
அவமானங்களை சந்திக்க நேர்வதாக பல “கோட்டா” அதிகாரிகள் தன்னிடம்
ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார் ஜெயமோகன். (?)
No comments:
Post a Comment