2.6.14

"பாமக" - என் விமர்சனம்

பாமக-வின் மீது எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் என் கிராமத்து அரசியலைப் பொறுத்தவரையில் நான் பாமக-வையே ஆதரிக்கிறேன். ஏனெனில் என் கிராமத்தில் அதிமுக, திமுக-விற்கு மாற்றாக வேறு யாரும் இல்லை. முன்னொரு காலத்தில் திமுக மட்டுமே தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. பின்னர் பாமக. 1998-ம் ஆண்டு மிகப்பெரும் சாதிக்கலவரம் வந்து இரு தரப்பிலும் சுமார் 50 பேர் 5 வருடங்களாக வழக்குக்காக அலைந்து கொண்டிருந்தனர். இருப்பது இரண்டு சாதிதான். வழக்கில் சிக்கியவர்கள் எல்லோரும் விவசாயிகள்தான். கடைசியில் வழக்காட முடியாமல் இரு தரப்பினருமே ஒத்துப்போய் வழக்கை கைவிட்டனர். சண்டைக்கு முன்பு எல்லோரும் மாமன் மச்சான்களாய் எந்த பிரச்னைகளுமின்றி உறவுக்காரர்களாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பாமக வந்த பின்புதான் இப்படியானது. அதற்குப்பின்பு இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றது. எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடியது. மேலும் சாதீய அடக்குமுறையும்கூட. ஒப்பீட்டளவில் அதிமுக தரப்பின் வன்னிய சாதி வெறியைக்காட்டிலும் வெளிப்படையான பாமக மேல் என்று தோன்றியது. எவ்வாறெனில் எதிர் தரப்பினரை ஒன்றுபடுத்தவாவது உதவக்கூடும். மேலும் கடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாமக-வை ஆதரிப்பதென எங்கள் நண்பர்கள் கூடி முடிவெடுத்தோம். எப்படியாயின் அதிமுக கிராமத்தில் மீண்டும் வந்துவிடக்கூடாது என உறுதியாக இருந்தோம். இது ஒருவகையில் எங்களுக்கும் ஆபத்துத்தான். ஏனெனில் மீண்டும் ஒரு சாதிப்பிரச்னை வந்தால் அதற்கு நாங்களே எங்கள் தரப்பிற்கு பகையாகிவிடுவோம். இருந்தும் பாமக-வினரை எந்தளவிற்கு நம்ப முடியுமென்ற உறுதியில்லை. 1998-க்குப் பிறகு கிராமத்தின் பெரும்பாலான கிழக்குப்பகுதி இளைஞர்களுடன் நமக்கு பழக்கமில்லை. சைக்கிளிலிருந்து பனியன் சட்டைவரை சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்ளும் இளைஞர்களைத்தான் பார்த்துவருகிறேன். தீவிர தமிழ் பற்றுடன் அதில் யார் இருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தாலும் சந்திக்கும் ஆற்றல் இருக்கிற காரணத்தால் பாமக-வில் இருந்த நம்பிக்கையான சிலருடன் ஓரிரவு நிலா காய்ந்த ஒரு வெட்ட வெளியில் அமர்ந்து பேசினோம். எந்த நிபந்தனையுமின்றி வெளிப்படையாகவே பேசினேன். எதிர் காலத்தில் எந்தவொரு தரப்பிலும் யார் வாழ்வும் சாதியால் சீரழிந்துவிடக்கூடாது என்றே இன்றுவரையிலும் எண்ணுகிறேன். 

தேர்தல் பிரச்சாரத்தில் நண்பர்களுடன் வீடுவீடாய் சென்று பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தோம். இதில் உடன்பாடில்லாத என் சாதித்தரப்பு உறவினர்கள் சிலர் எனக்கு இன்றுவரையிலும் நிரந்தர பகையாகிவிட்டார்கள். என் பங்காளித் தரப்பில் நின்ற ஒருவரை எதிர்த்து கிராம நலனைக் கருத்தில் கொண்டு பாமக சார்பாகவே செயல்பட்டோம். தேர்தல் நாள் நெருங்குவதற்குள் பங்காளித்தரப்பில் உள்கட்ட நெருக்கடி தீவிரமானது. வெறும் ஓரிரு நண்பர்களுடன் தேர்தலன்று காலையிலிருந்து மாலைவரை பாமக-விற்கு ஓட்டு கேட்டேன். தேர்தல் முடிவு வரும்வரையில் பெரிய மன உளைச்சல். மறுநாளே என் சாதியாட்களுக்குள் பெரும் சண்டை. இருந்தும் எல்லாம் தாண்டி பாமக வெற்றி பெற்றது. நிம்மதியாயிருந்தது. நாங்கள் ஆதரித்த அனைவரும் வெற்றி பெற்றனர். பின்பு வேறொரு பிரச்னை. துணைத்தலைவர் பதவி எங்கள் சாதிக்கு தரக்கூடாது என பாமக இளைஞர் தரப்பில் சிலர் பிரச்னை செய்வதாக. மீண்டும் இரு தரப்பிலும் அதே மாதிரி ஒரு இரவு ஏரிக்கரையில் அமர்ந்து பேசினோம். உங்களுக்குள் பிரச்னை என்றால் எந்தப் பதவியும் வேண்டாமென நாகரீகமாகவே மறுத்தோம். ஆனால் எங்கள் தரப்பினருக்கு இதுவொரு கௌரவப் பிரச்னையாகிவிட்டது. இது நடக்காது போனால் மீண்டும் நாங்கள் யாரிடமும் ஓட்டு கேட்க செல்ல முடியாது. முதலிலேயே பதவி வேண்டுமென்று நிபந்தனையும் விதிக்கவில்லை. பின் ஊர் ஒற்றுமைக்காக எங்கள் தரப்பில் துணைத்தலைவர் ஆனார் எனது நண்பர். 

எது எப்படியோ, இன்றுவரையில் மூன்று வருடங்களாக எந்தப் பிரச்னையுமில்லை. ஊர் அமைதியாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளைவிடவும் பல திட்டங்கள் திறமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது கிராமத்திற்கு செல்லும்போது இதை கண்டிருக்கிறேன். யாருக்கு போன் செய்தாலும் ஏதாவது பிரச்னையா எனக் கேட்டுவிட்டுத்தான் அடுத்ததைப் பற்றி பேசுவேன். சுமார் 2500 பேர் மக்கள்தொகைக் கொண்ட என் கிராமத்தில் 100 வன்னியர்கள்கூட எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. ஆனால் எல்லோரைப் பற்றியும் தெரியும். எல்லோரின் செயற்பாடுகளையும் கவனிப்பேன். அதற்கேற்ற வகையில் யாரிடம் விசாரித்தாலும் தற்போதைய தலைவர் பற்றி நல்லவிதமாகவே சொல்கிறார்கள். இது தொடரவேண்டுமெனவே எதிர்பார்க்கிறேன். இதில் எமக்கு தனிப்பட்ட லாபமென ஒன்றுமில்லை. இரு தரப்பில் எல்லோரும் கூடி அமர்ந்து தயாரித்த தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொன்றாய் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய எனது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் "கோகுல கிருஷ்ணா யாதவ இளைஞர் அணி" தம்பிகளுமே பொறுப்பு.

தற்போது குறைவான ஒரு சிலரைத் தவிர எனது கிராமத்து பாமக-வில் அப்படியொன்றும் சாதி வெறியர்கள் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் இளைஞர்களிடத்தில் சாதியுணர்வு தானாய் கொழுந்துவிடுகிறது. எதிர்ப்புணர்வின் விளைவாய் இதேபோல் எதிர் தரப்பு இளைஞர்களிடமும் தீவிரமாய் கொழுந்துவிடுகிறது. பதிலுக்கு எங்கள் சாதிக்கென்று எந்த கட்சியுமில்லை என்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம். இப்போது எம் தரப்பின் சில இளைஞர்கள் பெரியாரை படிப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. சாதீயக் கண்ணோட்டத்தில் எம் இளைஞர்களை துளிகூட சாதிரீதியாக நான் ஒருபோதும் நடத்தியதே இல்லை. எச்சாதியாயினும் தமிழ் இனவெறி உள்ளவர்களோடு என்றைக்குமே நான் ஒத்துப்போய்விடுகிறேன். இப்படியான தீவிர இளைஞர்கள் என் கிராமத்தில் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன். தகுதியுள்ளவர்கள் யார் பதவிக்கு வந்தாலும் எமக்கு எப்போதும் பிரச்னையில்லை. சாதிப்பெருமையை மட்டுமே கொள்கையாய் பேசி ஏமாற்றுபவர்களையே வெறுக்கிறேன்; எதிர்க்கிறேன். 

இதன் பொருட்டே பாமக-வை தொடர்ந்து விமர்சிப்பது எனக்கு அவசியமாகிறது. எல்லாம் கடந்து என் கிராமத்தின் எல்லா மனிதர்களையும் நான் நேசிக்கிறேன். யார் மீதும் எதன் பொருட்டும் எனக்குக் காழ்ப்புணர்வு இல்லை. 

எங்கள் ஊரைப்பற்றி முக்கியமான ஒன்று சொல்ல வேண்டுமானால், ஊருக்கு கிழக்கு நுழைவிலும் மேற்கு நுழைவிலும் ஒரு சக்கிலியர் குடும்பம் இருக்கிறது. அதாவது வன்னியர் பகுதியில் ஒன்றும், யாதவர் பகுதியில் ஒன்றும். இன்றுவரையில் அவர்கள் சாதிரீதியான அடக்குமுறைக்கு பயந்து இடம்பெயர்ந்து போகும்படி எப்போதும் ஆளாகவில்லை. கௌரவமாகவே வாழ்கிறார்கள்.

சாதி அரசியல் கலக்காதவரையில் தமிழர்கள் மிகவும் நல்லவர்களாகவே வாழ்கிறார்கள்...!

No comments:

Post a Comment