31.10.15

பெரியாரும் தமிழ்த் தேசியமும் - சிற்றுளி வெளியீடு

தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை அவர்கள் நேற்று இப்புத்தகத்தை படிக்கக் கொடுத்தார். "Save Tamils" என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் தற்போது தங்கள் அமைப்பின் பெயரை "இளந்தமிழகம்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். இவ்வமைப்பின் சார்பாக கடந்த செப்டம்பர் மாதம் தங்களின் "சிற்றுளி" பதிப்பகத்தின் வெளியீடாக இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.

50 ரூ விலைகொண்ட இச்சிறு புத்தகத்தில் செறிவான; தற்கால தமிழ்ச் சூழலுக்குத் தேவையான தெளிவான கருத்துக்கள் பதிவாகியுள்ளது.

தேசியம் என்றால் என்ன? எது உண்மையான தமிழ்த்தேசியமாக இருக்க வேண்டும்? பெரியார் தமிழ்த்தேசியத்தின் எதிரியா? வழிகாட்டியா? திராவிடம், தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது என்று கூறப்படுவது உண்மையா? தேசியங்களால் மக்களுக்கு ஆகப்போவது என்ன? தமிழகத்தின் இன்றைய உண்மையான நிலை, தமிழ்த்தேசியம் என்று பேசுபவர்களில் யார் சரியானவர்கள்? இனவாதம் / தமிழ்த்தேசியம் இரண்டிற்குமான வேறுபாடு என்று சகலவிதமான கேள்விகளும் தெளிவான கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

01. திராவிடம் என்றாலும் தமிழ்த்தேசியம் என்றாலும் சாரத்தில் ஒன்றே - தோழர் தமிழேந்தி

02. பெரியாரின் செயல்வடிவத் தமிழ்த்தேசியம் - தோழர் கொளத்தூர் மணி

03. பெரியார்; விடுதலைச் சிந்தையின் விளைநிலம் - தோழர் தியாகு

04. சனநாயகத் தமிழ்த் தேசியம் - தோழர் செந்தில்

"இளந்தமிழகம்" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்களின் கட்டுரை மிக மிக செறிவான கருத்துக்கள் கொண்டது. தோழர் தியாகுவும் பெரியாரை சரியாக விமர்சனம் செய்துள்ளார். தமிழ்த்தேசியக் கண்ணோட்டத்தில் பெரியாரைப் புரிந்துகொள்ள தோழர் தமிழேந்தி, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் கட்டுரைகள் உதவுகிறது. மேலும், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகப் பேராசிரியர் து.மூர்த்தி அவர்களின் அணிந்துரை ஆழமான வரவேற்புரை.

தேசியம் என்பது மக்களை நவீனத்திற்கு அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். அது சொந்த மொழி பேசும் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் எழும்பக்கூடும். இனவுணர்வு அடிப்படையில் மட்டும் கட்டியமைக்கப்படும் தேசியம் சாமானிய உழைக்கும் மக்களுக்கானதல்ல. அது சமூகத்தை பின்னோக்கியே நகர்த்தும்.

ஜாதிதான் தமிழர்களின் அடையாளம் என்பதும், ஜாதிப் பெருமைகளே தமிழ்ச் சமூகத்தின் பெருமைகள் என்றும் வண்ணம் பூசும் ஏகப்பட்ட சிறு சிறு தமிழ் அமைப்புகள் தமிழகத்தை ஏனைய நவீன உலக சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவே பயன்படும் என்பது இப்புத்தகத்தை படித்து முடிக்கையில் தெளிவாக உணர முடிகிறது.

"இனவாதம்" என்பதற்கும் "தமிழ்த்தேசியம்" என்பதற்குமான தெளிவான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள இப்புத்தகம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆகச்சிறந்த தெளிவான தொலைநோக்குப் பார்வைகொண்ட தமிழ் தலைமைகள் உருவாகவும், இத்தமிழ்ச் சமூகம் தழைத்து செழிக்கவும் இவ்வாறான புத்தகங்களை வாங்கிப் படித்து பலருக்கும் பகிர்வோமாக...!!!

30.10.15

ஞானத்தில் பெரிய ஞானம் எது?

கடன் கொடுத்தவன் கண்டபடி திட்டி பணத்தை திருப்பிக் கேட்கும் கையறுநிலையின்போது உள்ளத்தில் எழும் உணர்வுப் பேரலையே ஞானத்தில் பெரிய ஞானம்.

வாழ்வில் ஒருமுறையாவது இந்த ஞானத்தை அனைவரும் அடையும் பாக்கியம் பெற வேண்டுமாய் இயற்கை அருளட்டுமாக.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதும் சில சமயங்களில் வன்முறைதானோ...!!

27.10.15

அறிவுரைகள் யாருக்காக?

"வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?"

இது பட்டினத்தார் பாடிய ஒரு பாடலின் கருத்துச் சுருக்கம். இதை திரைப்பாடலாக எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

தன் மகன் காணாமல் போனபோதுதான் பட்டினத்தாருக்கு ஞானம் வந்தது. அவருக்கு நேர்ந்ததைப் போன்று அல்லாமல், பிள்ளை இருக்கும் ஒருவன் அவரது ஞானத்தை எங்ஙனம் உணர்வது? அவரது அறிவுரையை எப்படி கடைப்பிடிக்க இயலும்? இப்படி எழுதிய கண்ணதாசனோ, அப்படி பாடி நடித்த சிவாஜி கணேசனோ தங்கள் பிள்ளைகளுக்காக சொத்து சேர்க்காமல் செல்லவில்லை.

பின், "அறிவுரைகள் யாருக்காகவோ?"

26.10.15

மீண்டும் புலிகள் தாக்குவார்களா?

புலிகள் மீண்டும் தாக்குதல் தொடுப்பார்கள் என்பது அப்பாவி மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த புனையப்படும் கட்டுக்கதை. வடக்கில் ராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட உளவுத்துறையால் பரப்பப்படும் செய்தி இது. சர்வதேச அளவில் தம்மீதான பார்வையை மாற்ற ஆயுதங்களை மவுனித்த புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இப்போதைக்கு போர் சாத்தியமே இல்லை. இனி போர் இல்லாத அரசியல் போராட்டம்தான் தீர்வுக்கு வழி. மக்கள் எண்ணிக்கை பெருத இன்னும் 3 தலைமுறைகளுக்காவது அமைதி வாழ்க்கை வேண்டும்.

கருணா, பிள்ளையான், இனியபாரதி மூவரும் இலங்கையால் காட்டிக் கொடுக்கப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டு கொல்லப்படவும் வேண்டும். இனி துரோகம் செய்ய விழைபவர்களுக்கு அதுவொரு பாடமாக இருத்தல் வேண்டும்.

உலகத் தமிழர்கள் மத்தியில் தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பை ஐ.நா.வையே நடத்தக்கோரும் செயல்வடிவத்திற்கு காய்கள் நகர்த்தப்பட வேண்டும்.

14.10.15

வெட்டப்படுவதால் மாடுகள் அழிந்துவிடுமா?

இந்துத்வாவை ஒழிக்க வேண்டும் என்றால் எல்லா இந்துக்களையும் கொல்ல வேண்டும் என்பது அல்ல. மாடுகளைக் காப்பாற்ற வேண்டும் எனக் குரல் கொடுப்பவர்கள் வளர்க்கிறார்களா? வழக்கம்போல எல்லா தலைமுறையிலும் மாடுகள் வெட்டப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மாட்டினம் அழிந்துவிட்டதா? மாடுகள் வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்பதைவிட மாடுகள் உற்பத்தியை வளர்ப்பை அதிகரிக்க வேண்டும். மாடு வளர்ப்போருக்கு நல்ல வருமானம் கிடைத்தால் ஏராளமாக வளர்க்கத்தான் செய்வார்கள். யார் பிரச்சாரமும் அவர்களுக்குத் தேவையில்லை. தேவை என்ற ஒன்று வலுவாய் உருவாகிவிட்டால் எதுவும் அழிய வாய்ப்பில்லை. டைனோசர்கள் ஒருவேளை மனித உணவுக்கு பயன்பட்டிருந்தால் இன்றைக்கு அது காப்பாற்றப்பட்டிருக்கும். அந்த இனம் அழிந்திருக்காது.

விவசாயிகளின் தொடர் தற்கொலைகளை கண்டுகொள்ளாத நாட்டில், விவசாயிகளுக்கான போராட்டங்களில் பங்கெடுக்காமல், விவசாயிகளுக்காக எதுவும் போராடாமல் வெறுமனே விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பரப்புரை மட்டும் செய்வது என்பது பச்சை அயோக்கியத்தனம்.

காலங்காலமாக ஒருசாரார் மட்டும் தொடர்ந்து விவசாயம் செய்து கடனில் அழிவதில் அப்படியென்ன நேர்த்திக்கடன் பலருக்கும்? மணியக்காரன், தாசில்தார், காவல் நிலையம், வேளாண்மை அதிகாரிகள், சர்க்கரை ஆலை, வங்கிகள் இப்படி எங்காவது விவசாயி கவுரவமாக நடத்தப்படுகிறானா?

விவசாயிகள் அல்லாதோரால் விவசாயிகளுக்காக ஒரு போராட்டம் நடத்தப்பட்டுள்ளதா இந்த நாட்டில்?

மாடுகளை புனிதம் என்று பேசுகிறவன் அம்மாடுகள் வளர்ப்போரை மேய்ப்போரை எவ்வாறு மதிக்கிறான்? அவர்களின் வருமானத்திற்கு மாற்று வழி என்ன சொல்கிறான்? அக்கறைப்படும் எவனாவது தன் வீடுகளில் மாடு வளர்க்கிறானா? அம்மாடுகளுக்காக தன் வாழ்வை ஒதுக்குகிறானா?

பெரும் சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு விவசாயத்தையும் மாட்டையும் பாதுகாக்க பிரச்சாரம் செய்வது மோசடி.

ஒரு விவசாயி தான் செய்யும் விவசாயத்தைக் கைவிடுவதும், ஒரு இடையன் தன் மாட்டை வெட்டுக்கு அனுப்புவதும் அவன் வாழ்வியல் உரிமை.

"நீ மாடு வளர்த்துக்கொள், விற்காதே" இது மட்டும்தான் கோமாதா பக்தர்களின் உரிமை.

Fandry - மராத்தி மொழி திரைப்படம்

இன்று Fandry (தமிழில் பன்றி என்று பொருள்) என்ற மராத்தி மொழிப் படம் பார்த்தேன். இப்படத்தைப் பற்றிய தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் விமர்சனத்தை கீழே இணைத்துள்ளேன்.

பிறவியிலேயே ஜாதியின் பேரால் அவமானத்திற்கு உள்ளாகும் தலித் சிறுவர்களின் உளவியலை இந்தளவுக்கு பதிவு செய்திருப்பது பெரும் வியப்பு.

அந்த வம்சம் இந்த வம்சம் என கட்டுக்கதைகளால் புனையப்பட்ட ஜாதிப் பெருமைகளை ஆராய்ந்து பார்த்து உண்மை தெளிந்துகொள்ளும் அறிவு இல்லாமல் அதை ஒரு மூலதனமாக்கி பரப்பி அடுத்த தலைமுறை சமூகத்தையும் ஊனப்படுத்தும் அரைவேக்காடுகளுக்கு இந்த தலித் சிறுவனின் அவமானம் புரிவது கடினம்தான்.

இப்படத்தின் கடைசிக் காட்சியில் ஜப்யா என்ற அந்த தலித் சிறுவன் ஒரு கல்லை எடுத்து திரைக்கு நடுவே நம்மைப் பார்த்து எறிகிறான். அத்துடன் படம் நிறைவு பெறுகிறது.

படத்தின் கடைசிக் காட்சியில் இவ்வாறான எல்லா "மயிரு" வம்ச ஜாதி உணர்வின் மீதுதான் அச்சிறுவன் கல்லெறிகிறான். அவனுக்கு நேரும் அவமானமும், அவன் எறியும் கல்லும் கொஞ்சம்கூட நம்மை யோசிக்கவைக்கவில்லை என்றால் நாமும் அந்த "மயிரு" வம்சத்தினர்தான்.

13.10.15

கற்காலம் இங்கு முடியவில்லை

இவ்வளவு பேர்கள் படித்திருந்தும் வேட்பாளர்களின் தகுதியை ஆராயாமல் ஜாதியையும் பணத்தையும் பார்த்து இன்னமும் ஓட்டு போடும் மக்களைக் கொண்ட நாமெல்லாம், நம் நாட்டைப் பற்றி; முன்னோர்களைப் பற்றி அதீத பெருமையாகப் பேசிக்கொண்டு இன்னமும் மக்களை மயக்கத்திலேயே ஆழ்த்தி வைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. பூனை கண்ணை மூடிக்கொண்ட பழமொழிக்கு ஒப்பானதுதான் இது.

அற சிந்தனையும் தனிநபர் ஒழுக்கமுமற்ற கூடாரமாக கிடக்கிறது இந்த புண்ணியநாடு (?...)

பன்றியை சாத்தானாகப் பார்க்கும்; மதச் சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்படும்
அரேபிய நாடுகளிலேயும்கூட பன்றிக்கறி விற்கவோ வாங்கவோ தடையில்லை. இங்கே மாட்டுக்கறி வைத்திருந்ததற்காகவும், கோயிலுக்குள் நுழைந்ததற்காகவும் மனிதன் அடித்துக் கொல்லப்படவும் எரிக்கப்படவும் உள்ளாகிறான். ஆட்பலமற்ற சிறுமிகள் தொடர்ந்து கற்பிழந்து உயிருமிழக்கிறார்கள்.

இங்கு இன்னும் கற்காலமே முடிந்தமாதிரி தெரியவில்லை. சந்தேகமேயில்லை, இது இன்னமும் பாம்பாட்டிகளின் தேசம்தான். பண்டாரங்களின் நாடுதான்.

இந்த வாரம் பார்த்த படங்கள்

குற்றம் கடிதல்
மசாலா படம்
கத்துக்குட்டி
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
The Walk (3D)

இப்படங்களைப் பார்த்தேன்.

சற்று நீட்டி சொல்லியிருந்தாலும் "குற்றம் கடிதல்" திரைப்படத்தின் திரை மொழி பிடித்திருந்தது. நல்லதொரு படம்.

மசாலா படத்தில் வசன கர்த்தா விஜி அவர்களின் வசனம் அருமை. படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால் பின்பாதியில் அதை பூர்த்தி செய்ய தடுமாறுகிறது. இறுதிக்காட்சியில் சொல்வது சரியான செய்திதான்.

கத்துக்குட்டியில் விவசாயத்தைப் பற்றிய செய்தியை நம்பியதைவிடவும் சூரியின் காமெடியை அதிகம் நம்பியிருப்பதாகத் தோன்றுகிறது. சிரிப்பு காட்டுவதைக் குறைத்து இன்னும் விவசாயப் பிரச்சினைகளையும் முதன்மைப்படுத்தியிருக்கலாம். கண்டிப்பாகப் பார்ப்பார்கள்.

சென்னையின் அறைவாசிகளைப் பற்றியும் அறை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களின்; திரைப்பட உதவி இயக்குநர்களின் கஷ்டங்களைப் பற்றி நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள். பல இடங்களில் படம் யதார்த்தமாக கவித்துவமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினையே தெரியாத மக்களின் மனதை படம் எப்படி தொடும் என்று தெரியவில்லை.

The Walk, இப்படத்தைப் பார்த்த அக்கணம்வரை என்னை நான் ஒரு நியூயார்க்வாசியாகவே உணர்ந்தேன். எந்தவொரு கலைஞனுக்கும் பிற எதையும்விட தன் பிரியமான கனவுகளும் லட்சியமுமே உலகில் எல்லா சந்தோஷங்களையும்விட மேலானது. அப்படி கயிற்றில் நடக்கும் ஒரு சாகசக்காரனின் பால்யமும் அவனது கனவு நிறைவேற்றமும்தான் படம். படத்தின் இறுதிக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. நாம் எவ்வளவுதான் பழம்பெருமை என்று நம்மைப்பற்றி நாமே சிலாகித்துக்கொண்டாலும் சிலவற்றில் மட்டுமல்ல பலவற்றிலும் மேலை நாட்டுக்குப் பின்னாடிதான் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு மக்களாட்சி என்பதைக்கூட நம்மால் சரிவர நடத்த இயலவில்லை. நாம் இன்னும் நெடுங்காலம் பயணித்தாக வேண்டும். இப்படம் ஒரு நிறைவான அனுபவம்.

7.10.15

உல்டா ஜனநாயகம்

அநியாயத்தை அதட்டிக் கேட்கத்தான் எல்லாரும் இங்க அச்சப்படுறாங்க. ஆனா, அநியாயத்தை செய்ய யாரும் அச்சப்படல. நாம ஒரு உல்டாவான ஜனநாயகத்துல வாழறோம். இதுதான் இங்க எதார்த்தமா ஆயிப்போச்சி ரொம்பநாளா.

சண்டி வீரன்

"சண்டி வீரன்" படத்தில் கடைசிக் காட்சியில் வரும் பாடல் இது.

தாய்ப்பாலும் தண்ணீரும்
ஒண்ணாத்தான் இருந்துச்சி...

இப்பாடலின் வரிகள் செம. சமீபத்திய பாடல்களில் இவ்வளவு எளிமையான வரிகளும் சுருக்கென்ற கருத்துடனும் பாடல்களை கவனித்த ஞாபகம் இல்லை.

இப்பாடலை எழுதியவர் மோகன் ராஜன் அல்லது மணி அமுதவன், இருவரில் யார் எனத் தெரியவில்லை.

"நெலாவுல தண்ணீரு இருக்கான்னு தேடுறோம்
ராக்கெட்ட ஏவுறோம்
குடிநீர பூமியில வியாபாரம் பண்ணுறோம்"

பாடல் முழுமையும் செம...!!!

5.10.15

36 வயதினிலே - வாடி ராசாத்தி

பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார்

"36 வயதினிலே - வாடி ராசாத்தி"

இப்படத்தை இத்தனை நாள் பார்க்கத் தவறியதற்காக வருந்துகிறேன். மலையாளத்திலே பார்த்திருந்தாலும்கூட தமிழில் பார்த்தபோதுதான் வசனங்கள் தெளிவாய் புரிந்தது. வசந்தி, குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும் கடைசிக் காட்சியில் பின்னணியாக "எல்லாத்தும் அழுதுக்கிட்டிருக்குற பெண்கள் இந்தத் தலைமுறையோட அழியனும்" என்ற வசனம் வரும்போது உண்மையிலேயே கண்ணீர் வந்துவிட்டது.

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். வசனங்களும் காட்சிகளும் அருமை. இப்படியொரு படம் எடுக்க முனைந்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பத்து குழந்தைகளைப் பெற்றுப்போட்டு அது அத்தனையையும் வளர்த்து ஆளாக்குவதுதான் பெற்றவர்களுக்கான இவ்வுலக வாழ்க்கையா? அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை எதுவும் இல்லையா? மற்றவர்களுக்காக வாழ்ந்து வாழ்ந்தே பெண் அடிமையாகிப் போனாள். தியாகம் என்ற பேரில் அவளது கனவுகள் சுரண்டப்படுகிறது. பிற்போக்குத்தனம் தலைவிரித்தாடும் சமூகத்தில் இன்னமும் மாறா நிலைகள் சொல்லி மாளாது.

தாலி இருந்தால் சுமங்கலி. இல்லாவிட்டால் அமங்கலி, மூளி, அபாக்கியவதி, தரித்திரி, விதவை, அபசகுனி... இப்படி இயல்பாய் வரும் ஆணின் மரணத்திற்குக்கூட பெண் கேவலப்படுத்தப் படுகிறாள்.

தன் வீட்டுப் பெண்களும் இப்படி ஒருநாள் பிறரால் ஏசப்படுவாள் என்பதை உணர்ந்து இந்தத் தாலி மறுப்பைக்கூட சரிவர புரிந்துகொள்ள இயலாத அறிவு ஊன சமூகத்தில் முன்னோடிச் சிந்தனையாளன் "தந்தை பெரியார்" அவர்களின் பெண்ணியக் கருத்துக்கள் இன்னும் மலைக்க வைக்கிறது. இப்போதுகூட எண்ண முடியாததை எப்போதோ பேசியிருக்கிறார்.

இப்படத்தை பாராட்டும் அத்துனை பெண்களும், பெண்களை உளமாற மதிக்கும் அத்துனை ஆண்களும் அப்படியே ஒருமுறை "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற பெரியாரின் சிறு புத்தகத்தை தவறாமல் வாசியுங்கள்.

3.10.15

கவித...

அதர்மம் எவ்வளவு பெருகினாலும்
அவர் அவதரிக்கப் போவதில்லை
ஏனெனில்
அதர்மம் பெருகிக்கொண்டிருப்பதற்கு
அவரும் காரணம்

கவித...

இனி
கவிதையே எழுதக்கூடாது
என்று முடிவெடுத்த நாளில்
எனைப் பார்த்து ஏன் சிரித்தாய்?

இன்று ஒருநாள் மட்டும்தான்
நாளை முதல் எழுத மாட்டேன்