5.10.15

36 வயதினிலே - வாடி ராசாத்தி

பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார்

"36 வயதினிலே - வாடி ராசாத்தி"

இப்படத்தை இத்தனை நாள் பார்க்கத் தவறியதற்காக வருந்துகிறேன். மலையாளத்திலே பார்த்திருந்தாலும்கூட தமிழில் பார்த்தபோதுதான் வசனங்கள் தெளிவாய் புரிந்தது. வசந்தி, குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும் கடைசிக் காட்சியில் பின்னணியாக "எல்லாத்தும் அழுதுக்கிட்டிருக்குற பெண்கள் இந்தத் தலைமுறையோட அழியனும்" என்ற வசனம் வரும்போது உண்மையிலேயே கண்ணீர் வந்துவிட்டது.

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். வசனங்களும் காட்சிகளும் அருமை. இப்படியொரு படம் எடுக்க முனைந்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பத்து குழந்தைகளைப் பெற்றுப்போட்டு அது அத்தனையையும் வளர்த்து ஆளாக்குவதுதான் பெற்றவர்களுக்கான இவ்வுலக வாழ்க்கையா? அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை எதுவும் இல்லையா? மற்றவர்களுக்காக வாழ்ந்து வாழ்ந்தே பெண் அடிமையாகிப் போனாள். தியாகம் என்ற பேரில் அவளது கனவுகள் சுரண்டப்படுகிறது. பிற்போக்குத்தனம் தலைவிரித்தாடும் சமூகத்தில் இன்னமும் மாறா நிலைகள் சொல்லி மாளாது.

தாலி இருந்தால் சுமங்கலி. இல்லாவிட்டால் அமங்கலி, மூளி, அபாக்கியவதி, தரித்திரி, விதவை, அபசகுனி... இப்படி இயல்பாய் வரும் ஆணின் மரணத்திற்குக்கூட பெண் கேவலப்படுத்தப் படுகிறாள்.

தன் வீட்டுப் பெண்களும் இப்படி ஒருநாள் பிறரால் ஏசப்படுவாள் என்பதை உணர்ந்து இந்தத் தாலி மறுப்பைக்கூட சரிவர புரிந்துகொள்ள இயலாத அறிவு ஊன சமூகத்தில் முன்னோடிச் சிந்தனையாளன் "தந்தை பெரியார்" அவர்களின் பெண்ணியக் கருத்துக்கள் இன்னும் மலைக்க வைக்கிறது. இப்போதுகூட எண்ண முடியாததை எப்போதோ பேசியிருக்கிறார்.

இப்படத்தை பாராட்டும் அத்துனை பெண்களும், பெண்களை உளமாற மதிக்கும் அத்துனை ஆண்களும் அப்படியே ஒருமுறை "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற பெரியாரின் சிறு புத்தகத்தை தவறாமல் வாசியுங்கள்.

No comments:

Post a Comment