30.11.15

கடவுள் இருக்கிறார்

இப்படத்தில் உள்ள இச்செய்தியை நீங்கள் கவனித்திருப்பீர்கள். கடந்த சில நாட்களாக முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. 

இச்செய்தியை பலரும் மகிழ்ச்சியுடன் "கடவுள் இருக்கிறார்" என்று குறிப்பிட்டு பதிவிடுகின்றனர். பகிர்கின்றனர். ஆனால் அவர் 'ஏன் கடவுளை அவமதித்தார்?' என்பது பற்றி யாரும் பேசவில்லை.

இச்செய்தியால் சுய இன்பம் அடைந்துகொள்ளும் அளவிற்குத்தான் கடவுள் தம் பக்தர்களை வைத்துள்ளார் என்பது நகைப்பாய் இருக்கிறது. கடவுள் என்ற கருத்தின்மீது அவரவர் தம் புத்தியைக் கற்பித்து காலங்காலமாகவே மகிழ்ச்சியடைவதின் நீட்சிதான் இது. கடவுள் என்ன சினிமா கதாநாயகனா, தன்னை அவமதித்தோரை பழிவாங்க. அது மனிதனிலும் கீழ்மைப் புத்தியல்லவா? அப்படியே அது இருந்தாலும் இவ்வாறான கீழ்மை குணம் எப்படி கடவுளுக்கு இருக்க முடியும்? முழுநேரம் தன்னை எண்ணி பிரார்த்தனை செய்வதற்காக மனிதர்களை அவன் படைக்கிறானெனில், அதனால் பக்தர்களுக்கு பலன் கொடுக்கிறானெனில் அவனும் ஒரு மனநோயாளிதான். சாத்தான்களுக்குக்கூட இவ்வாறான சக்தியிருக்கிறதென் அவர்களேதான் சொல்கிறார்கள்.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் உலகம் படிப்படியாய் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. கோடிக்கணக்கான பேர்கள் வாழ்ந்துவிட்டு செத்துப்போய்விட்டார்கள். இன்னும் கோடிக்கணக்கான பேர்கள் பிறப்பார்கள். இயற்கை தன்போக்கில் எல்லோருக்கும் ஒரே மாதிரி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், நிறம், ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள், நல்லவன், கெட்டவன், நீதி, அநீதி, கோபம், சாந்தம் என்று எதுவுமே அதற்குக் கிடையாது. எல்லாமே மனிதர்களே வகுத்துக்கொண்ட கற்பிதங்கள்.

"வலியது வெல்லும்" என்பதைத்தவிர வரலாறுகள் வேறெதையும் உணர்த்தவில்லை. நியாய தர்மங்கள் என்பது நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம் மாறுகிறது. எதுவும் பொதுவாயில்லை. பெரும்பாலும் வெவ்வேறுதான்.

வரலாறு, பூகோளம், உலக அரசியல், அறிவியல் எல்லாவற்றையும் கோயில்களில் சொல்லிக்கொடுக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டேதான் எல்லா அக்கிரமங்களையும் பெரும்பாலோனோர் செய்துகொண்டிருக்கிறார்கள். மக்களைவிட கோயில்களும் அதை நடத்துபவர்களும் செழிப்பாய் இருக்கிறார்கள் காலங்காலமாய். "லஞ்சம், ஊழல், சுரண்டல், சூழ்ச்சி" இதில் சுழன்றுகொண்டிருக்கிறது கடவுள் படைத்த உலகம்.

அடிமை முறையை ஒழிக்க ஆபிரகாம் லிங்கனும், கறுப்பர்களுக்காக மார்டின் லூதரும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக பூலேவும் அம்பேத்கரும் பெரியாரும், உலக உழைப்பாளிகளுக்காக மார்க்சும்தான் பயன்பட்டார்களே தவிர எந்தச் சாமியின் சிஷ்யகோடிகளும் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவில்லை. அநீதிகளுக்கெதிராக போராட முன்வரவில்லை.

கடைசியாக செய்தி என்னவெனில், இப்படி கடவுளை அவமதித்த அந்தத் தோழர் மிக நல்ல முறையில் ஆரோக்கியமாக இருக்கிறார். இது வதந்தியாகப் பரவும் செய்தி.

பக்தர்கள் என்பவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் அல்ல என்பதையும், அவர்களும் விபத்தில் சிக்கி, கோயில் நெரிசலில் சிக்கி இறந்துபோய்விடுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சாகாவரம் பெற்ற மார்கண்டேயன் இப்போது எந்த நாட்டில்; ஊரில்  வாழ்ந்து வருகிறான் என்பது பற்றி நாம் யாரும் கேள்வி எழுப்புவதேயில்லை என்பதும் சிந்திக்கத்தக்கது.

"தன்னை அவமதித்தவரை மிக ஆரோக்கியமாக வைத்திருக்கும் கடவுளின் கருணையைப் பாருங்கள்" என்று யாரேனும் இதற்குக் கருத்து சொல்ல நினைக்கிறீர்கள் என்றால்... கடவுள் எதற்காக கொசுக்களைப் படைத்தார் என்ற பதிலையும் சேர்த்து எழுதினால் மிக்க நன்றியாய் இருக்கும்.

23.11.15

பாகவெளி கிராமமும் மகேந்திர வர்ம பல்லவனும்

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் எப்பேர்ப்பட்டவன் என்பதை எழுத்தாளர் கல்கி அவர்களின் "சிவகாமியின் சபதம்" வரலாற்றுப் புதினத்தை படித்தவர்கள் அறிவார்கள். பெரும் சதியோடு தன் நாட்டின் மீது படையெடுக்க வந்து வேங்கி நாட்டில் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் புலிகேசியின் படைத்தளத்திற்குள் ஒற்றனாய் நுழைந்து, சாதுரியத்துடன் சூழ்ச்சியை அறிந்து வரும் மகேந்திர வர்மனை அறிமுகப்படுத்தும் கல்கியின் இப்புதினம்; கற்பனை கலந்திருப்பினும் வரலாற்றைத் தழுவிச் செல்லும் புதினம்தான்.

பல்லவர்கள் கிட்டத்தட்ட 650 ஆண்டுகள் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள். இவர்கள் தமிழர்கள் அல்லவென்றே பல ஆராய்ச்சியாளர்களும், தமிழர்தாம் என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால் எதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை.

மகேந்திர வர்மன் வடமொழியில் ஒரு காவியமே இயற்றியுள்ளான்.

மகேந்திர வர்மன் என்ற பெயரில் இருவரும், நரசிம்ம வர்மன் என்ற பெயரில் இருவரும் இருந்துள்ளனர். கல்கி, முதலாம் மகேந்திர வர்மன்; நரசிம்ம வர்மன் பற்றித்தான் எழுதியுள்ளார்.

காதலைவிட இந்த நாட்டையும் மக்களையும் காப்பது பெரிது என்பதை தன் மகன் நரசிம்ம வர்மனுக்கு தம் மரணத்தின் வாயிலாக உணர்த்திச் சென்றவன் மகேந்திர வர்மன். பல்லவர்கால தமிழர் பண்பாட்டுக் கலப்பைப் பற்றிக் கொஞ்சம் தள்ளி வைப்போம்.

கல்கியின் புதினத்தைப் படிக்கும் முன்னரே எனக்கு மகேந்திர வர்மன் ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருந்தான். ஆனால் அவன் முதலாமவனா? இரண்டாமவனா? எனத் தெரியவில்லை.

பல்லவ நாட்டின்; தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான காவேரிப்பாக்கம் ஏரி முழுதும் நிரம்பினால் எங்கள் ஊரின் கிழக்கு வழிச்சாலையில் தண்ணீர் தொட்டு நிற்கும். பாலாற்றில் வெள்ளம் வந்தால் இந்த காவேரிப்பாக்கம் ஏரிக்கென்று தண்ணீர் செல்ல, பெரிய அளவில் வாய்க்கால் ஒன்று உள்ளது. அதனை ஒட்டி இன்னொரு பெரிய வாய்க்கால் ஒன்று எங்கள் ஊருக்கும் பாலாற்றுக்கும் நடுவேயுள்ள பூண்டி என்ற கிராமத்தின் ஏரிக்கு தண்ணீர் சுமந்து வரும். பூண்டி ஏரி நிரம்பி வழிந்தால் அதிலிருந்து வரும் ஒரு பெரிய வாய்க்காலில் அத்தண்ணீர் எங்கள் கிராமத்து ஏரிக்கு வரும். எங்கள் கிராமத்துக்கு இரண்டு ஏரி. இந்த இரண்டு ஏரிகளை நிரப்பிவிட்டு அந்தக் கல்வாய் இன்னும் பல ஊர் ஏரிகளை நிரப்பிவிட்டு கடைசியாக மகேந்திரவாடி என்ற ஊரின் ஏரியில் கலந்துவிடும். அதேபோல் செல்லும் வழியில் நிரம்பி வழியும் எல்லா ஏரிகளின் வெள்ளமும் சிறு சிறு ஓடைகள் வழியாக பல சிற்றேரிகளை நிரப்பிவிட்டு கடைசியில் அதுவும் காவேரிப்பாக்கம் ஏரியில் கலக்கும்.

பாலாற்றிலிருந்து புறப்பட்டு எங்கள் ஊர் வழியாகச் செல்லும் இந்தக் கால்வாய்க்கு "மகேந்திரவாடி கால்வாய்" என்று பெயர். எந்தக் காலத்தில் இது வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் மகேந்திர வர்மன் பெயரால் குறிக்கப்படும் இது பல்லவர் காலத்தில்தான் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கால்வாயின் கரையை ஒட்டித்தான் எங்களுக்கு வானம் பார்த்த விவசாய நிலம் இருக்கிறது. பாறை கிணறான எங்கள் கிணற்றில் இக்கால்வாயில் சிறிதளவு தண்ணீர் வந்தாலே ஊற்று வந்துவிடும்.

பாலாற்றில் வெள்ளம் வந்தால் சிறுவயதில் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் பொடிநடையாக எல்லா மாணவர்களையும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி அழைத்து வருவார்கள் ஆசிரியர்கள். அதேபோல் ஊரிலிருக்கும் மூன்று சிறு மலைக் குன்றுகளுக்கும் அழைத்துச் செல்வார்கள். வெறும் புத்தக அறிவினால் மட்டும் இயற்கையைப் புரிந்துகொள்ள இயலாது என்பது நிதர்சனம் என்பது அப்போதைய ஏதோவொரு ஆசிரியருக்குத் தெரிந்திருந்தது போலும்.

மகேந்திர வர்மனும் அவனது மகன் நரசிம்ம வர்மனையும் ஒருபோதும் யாராலும் அழிக்கவோ மறைக்கவோ இயலாது. அவர்கள் மரணத்தைக் கடந்தவர்கள். இன்றைக்கும் என்றைக்கும் பல்லவ நாட்டில் பல ஏரிகளாய், குளங்களாய், கண்மாய்க்களாய், மதகுகளாய், ஓடைகளாய், கால்வாய்களாய், கற்சிற்பங்களாய் இந்த மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மணல் முழுங்கி, மலை முழுங்கிப் பெருச்சாளிகள் மக்களை ஆளும் இந்தக் காலகட்டத்தில் இவர்களை எண்ணிப் பார்ப்பது பெரும் அதிசயமாகவே இருக்கிறது. இப்படியானவர்கள் எல்லாம் தொலைநோக்கோடு திட்டமிட்டு வாழ்ந்த இந்த மண் தற்காலத்தில் பண வேட்கை கொண்ட மன நோயாளிகளால் நிர்வகிக்கப்படுவது பெரும் சாபக்கேடு.

பெரியாரைத் தெரியாத ஈரோட்டுவாசிகளும், பல்லவர்களையும் அண்ணாவையும் தெரியாத காஞ்சிபுரத்துவாசிகளும் வாழும் இதேத் தலைமுறையில்தான், இத்தொண்டைமாநாட்டில் ஊருக்கு ஒருவராவது இப்பெருமழைக் காலத்தில் பல்லவர்களுக்கு நன்றி சொல்ல இருக்கக்கூடும். அவ்வாறு என் கிராமத்து சார்பாக நான் சொல்லிக்கொள்கிறேன்....

"பல்லவர்களுக்கு பெரும் நன்றி"

17.11.15

குற்றவாளி யார்?

காடுகளை அழித்து
ஊராக்கிக்கொண்டார்கள்
காட்டு மிருகங்கள்
ஊருக்குள் நுழைவதாக
குற்றம் சுமத்திக் கொன்றார்கள்

ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகட்டி
ஊராக்கிக்கொண்டார்கள்
மழை வெள்ளம்
ஊருக்குள் / வீட்டுக்குள் புகுந்ததாக
குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்

12.11.15

குடுமி தெரியும் திராவிட எதிர்ப்பு

01. வந்தேறி எதிர்ப்பு
02. வடுக எதிர்ப்பு

01. வந்தேறி எதிர்ப்பு என்றால் தமிழரல்லாத எல்லா வந்தேறிகளையும் எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் ஹிந்தி இயக்கங்களை பணமூட்டி வளர்க்கும் மேற்குறிப்பிட்ட மார்வாடி, சௌராஷ்டிர, ஹிந்தி, அரேபிய, சமஸ்கிருத, தெலுகு, மலையாள, கன்னட, பார்ப்பன அனைத்து வந்தேறிகளையும் ஒரு சேர எதிர்க்க வேண்டும். இன்றைக்கு மதுரையே சௌராஷ்டிரர் வசம் என்பதை உணர வேண்டும்.

02. வடுக எதிர்ப்பு என்றால், இன்றைக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் அமைப்புகள் உள்ளது. எல்லா அமைப்புகளிலும் வடுகர்கள் இருக்கின்றனர். ஆனால் இதன்பொருட்டு் எல்லா இயக்கங்களையும் எதிர்க்கும் நபர்களைக் காணோம். திமுக, அதிமுக என்று பட்டியலிட்டு வெளிப்படையாகக்கூட அறிவித்து எதிர்க்க தைரியமின்றி திராவிடக் கட்சிகள் என்று பொத்தாம்பொதுவாகக் கூறி பம்மிப் பதுங்கிக்கொள்கின்றனர். இந்தப் பயத்தை மாற்றிக்கொண்டு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரசு, கம்யூனிச்டு தலைமைகளுக்கு பகிரங்க எச்சரிக்கைவிட வேண்டும். சும்மா திராவிட திராவிட என்று மட்டும் பேசுவது போலி நோக்கம்.

வந்தேறிகளுக்கும் வடுகர்களுக்கும் திராவிட இயக்கத்துடன் சிண்டு முடிந்து பேசுவதும் பரப்புவதும் வரலாறு தெரிந்தவர்களின் செயலாக இருக்க முடியாது என்பது என் பணிவான கருத்து.

ஆக திராவிட எதிர்ப்புதான் பல பக்திமான்களுக்கும் பிரதானமாக இருக்கிறது. இதற்கு அவர்களுக்கு தேவைப்படும் காரணம்தான் தமிழ் முகமூடி. அதுகூட தம் ஜாதி பாசத்தை மறைக்க போர்த்தப்படுவதுதான் வேடிக்கை.

வேற்று மொழிக்காரர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது சரிதான். இப்படியெல்லாம் பதில் தருவதால் எனக்கு தமிழ் உணர்வே இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம்.

வீீரமணி ஒரு தமிழர் விரோதி...?

இவ்வளவு பேர் கற்றறிந்தவர்களாக இருக்கும் இக்குழுவில் தமிழ்த்தேசியம் என்று பேசப்படும் கருத்துக்கள் மிகவும் ஆழமற்ற பார்வை கொண்டதாக உள்ளது.

சாஸ்திரங்களை, ஹிந்து மதத்தை ஒழிக்காமல் ஜாதியை ஒழிக்க முடியாது. அது நிழலுடன் போராடுவதைப் போன்றது என்றார் அம்பேத்கர்.

வந்தேறிகள் ஆதிக்கம் என்ற சாக்கில் திராவிடச் சிந்தனைகளும் பெரியாரை சாடுவதுமே பலருக்கு இலக்காய் இருக்கிறது.

வந்தேறிகள் பிரச்சினையென்றால் எல்லா கட்சிகளையும்தான் எதிர்க்க வேண்டுன். இந்து என்று சொல்லிக்கொண்டு சௌராஷ்டிரர், மார்வாடி, பனியா, தெலுகு, மலையாளி, கன்னடன், ஹிந்தி, மராட்டி மொழிக்காரர்களும், இஸ்லாம் எனச் சொல்லிக்கொண்டு அரபு மொழி வெறியர்களும் சமஸ்கிருத அடிமைகளும் திராவிடத்தாலா நுழைந்தார்கள்?

ஜாதி அடையாளங்களால் ஒரு லாபமும் இல்லை. அது மனித ஆற்றலை விரயம் செய்கிறது. இதை ஒழிப்பது கடினம் எனில் தமிழ்த்தேசியம் அமைவதும் கடினமே

வீரமணி எச்சை என்றவர் யாரோ, எச்சையல்லாத தற்போதைய ஒருவரைச் சொல்லுங்கள். தான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒன்றைத்தவிர வீரமணியின் செயல்பாடுகள் சரியே. அவரைப் பற்றி சும்மா மேலோட்டமாக தெரிந்துகொண்டு விமர்சனம் வைப்பது உங்கள் அறிவுநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. வேறெந்த எச்சைகளையும் விமர்சனம் செய்யாமல் வீரமணியிடம் மட்டும் முட்டும்போதுதான் உங்களுக்கு பதில் தருகிறேன்.

ஜாதி என்ற ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஓட்டுப்பிச்சை கேட்டு கிராம மனிதர்களைப் பிரித்து சீரழிக்கும் எச்சைகளைப் பற்றி ஒரு விமர்சனம் செய்யுங்களேன். யார் தடுப்பது? எது தடுக்கிறது?

வீரமணி எழுதிய புத்தகங்களை சிலவாவது முதலில் படியுங்கள்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியாவில் இன்றைக்கு 27% இட ஒதுக்கீடை அமல்படுத்த மண்டல் கமிஷனுக்கு பக்கபலமாய் நின்று அதை செயல்படுத்த ஆதரவு திரட்டியது இதே எச்சை வீரமணிதான்.

சும்மா இங்கே எழுதிக்கொண்டிராமல் களத்தில் இறங்கி பார்ப்பன அதிகார மையங்களை எதிர்த்து பகிரங்க பிரச்சாரம் செய்யச் சொல்லுங்கள் யாரையாவது. போராடச் சொல்லுங்கள். பார்ப்பன ஆதரவு சட்டங்களை எதிர்த்து நீதிமன்றத்திற்கு வழக்குபோடச் சொல்லுங்கள். இயக்கம் நடத்தச் சொல்லுங்கள். வீரமணியைவிட கேவலமான எச்சை ஆகத்தான் மாறவேண்டி இருக்கும்.

எனக்கு ஓட்டுப் போட்டு முதல்வராக்குங்கள், என் மகனுக்கு ஓட்டு போட்டு முதல்வராக்குங்கள் என்று எச்சை வீரமணி கேட்டதுண்டா? அல்லது அப்படி கேட்கும் எச்சைகளைத்தான் நீங்கள் விமர்சிப்பதுண்டா?

திராவிட; பெரியாரிய எதிர்ப்பு என்பது போலித் தமிழ்த்தேசியம். வரலாறும் ஹிந்திய நிலையும் அறியாத; வாயால் வடைசுடும் வீரர்களின் அரைவேக்காட்டுக் கூச்சல் அது.

நீங்கள் இயக்கம் ஆரம்பித்து தினசரி போராட வீரமணியும் பெரியாரும் திராவிடமா தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்?

அப்படியானால், தமிழ் இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவைகள் என்னதான் பிடுங்கிக் கொண்டிருக்கிறது?

புலம்புவதும், வரலாற்றை படித்துணராமல் எப்போதும் பிறர்மேல் பழி சுமத்துவதும்தான் தமிழ்த்தேசியப் பார்வையோ?

நீங்கள் தமிழ்த்தேசியவாதிகள் இல்லை என்பதையும், நீங்கள் பேசுவது தமிழ்த்தேசியம் அல்ல என்பதையுமாவது தயவுசெய்து முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

வந்தேறிகளுக்கு இருக்கும் திறமையும் சூழ்ச்சியும் நமக்கு இல்லாமல் போனது எப்படி?

இன்றைக்கு தமிழ்நாட்டில் திராவிடம் பற்றி பெரியார் பற்றி அறிந்தவர்களின் சதவீதம் எத்தனை?

நாம் ஒரு ஆண்ட ஜாதி, பிறரை விட உயர்ந்த ஜாதி என்ற எண்ணமுள்ளவர்களின் பார்வைதான் ''ஜாதியை ஒழிக்க முடியாது'' என்பது ஊரறிந்த ரகசியம்.

தமிழன் என்பதாலோ, ஒரே மதம் என்பதாலோ ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு பெண் கொடுத்து எடுப்பதில்லை. இங்கு ஜாதிதான் எல்லாம்.

ஜாதியை ஒழிக்க முடியாது என்று ஞானமடைந்த உங்கள் அறிவுக்கண்களுக்கு ஜாதி உணர்வை ஒழிக்காமல் தமிழ்த்தேசியம் அமைக்க இயலாது என்பது எப்படி தெரியாமல் போகிறது?

10.11.15

"தீபாவளி" என்பது திருநாளா?

வருடத்தின் 364 நாட்களும் நம்மாழ்வாரை ஆதரித்துப் பேசி பரப்பி இயற்கை விவசாயம்; சுற்றுச் சூழல் பற்றி அக்கறைப்படும் மெத்தப் படித்தவர்கள்கூட மதத்தின் பேரால்; கொண்டாட்டத்தின் பேரால் திட்டமிட்டு காற்றை மாசுபடுத்தும் தீபாவளி பற்றி எதுவும் எதிர் பிரச்சாரம் செய்து பேசுவதில்லை.

தீபங்களை ஏற்றி வழிபடுவதற்கும் பட்டாசு வெடிப்பதற்கும் முடிச்சு போட்டவன் எவனோ?

தீபாவளி கதை எதைப் பற்றியாவது இருந்து தொலையட்டும். நாம் சுற்றுச்சூழல் என்பதைப் பற்றியாவது அக்கறைப்பட்டுத்தானே ஆகவேண்டும்.

சாயப்பட்டறைகள் ஆற்றுக்கு வேட்டு. மணல்கொள்ளை நிலத்தடி நீருக்கு வேட்டு. சீமைக்கருவேலம் நிலத்துக்கு வேட்டு. பட்டாசு காற்றிலுள்ள ஆக்சிஜனுக்கு வேட்டு.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கென்றே வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடும் ஒருநாடு, எப்பேர்ப்பட்ட புண்ணிய பூமியாக இருக்க வேண்டும் இந்த உலகில்...!!!!

"தீப ஆவளி" என்பது இதுதானா?
"தீபாவளி" என்பது திருநாளா?

9.11.15

சென்னை என்பது...

"சென்னை மாநகரம்" ஒரு விவசாய நிலம் என்பதை மழைக்காலங்கள் ஞாபகப்படுத்திவிட்டுச் செல்கின்றன.

மழை முன்மொழிய, ஆட்சியாளர்கள் அதனை வழிமொழிய, அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் இதை வருடந்தோறும் உறுதிப்படுத்துகிறார்கள்.

வாழ்க்கை

குடை உடைந்த மறுநாள்
மழை ஆரம்பிக்கிறது

வாலிபம் முடிந்த பருவத்தில்
திருமணம் நடக்கிறது

தீர்ந்துபோன பின்னரும்
"சாப்பாடு தயார்" என்றே
பலகை சொல்கிறது

புதுமனை புகுவிழாக்களில்
சுமங்கலியாக நிற்கிறது
வாழாவெட்டி பசுமாடுகள்

உலகில் இன்னும் அதர்மம் நடக்காததால்
அவன் இன்னும் அவதரிக்கவே இல்லை

உயிர்த்தெழுந்த இயேசு
போன இடம் தெரியவில்லை
பிரார்த்தனைகளில் மனமிறங்கி
ஒரு எட்டு வந்துவிட்டும் போகலாம்

வட்டி மட்டும் வாங்கக் கூடாது; ஆனால்
வியாபாரத்தில் பகல்கொள்ளை அடிக்கலாம்

மொஸாட்டுக்கும் சி.ஐ.ஏ-வுக்கும் கட்டுப்பட்டு
எல்லா தேசத்திலும்
அயோக்கியர்களை மட்டுமே தேடிப்பிடித்து
அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள்
நவ கிரகர்கள்

தர்மத்தால்
ஒருபோதும் கவ்வ இயலவில்லை
சூதை

தர்மம் மறுபடியும் வெல்லவே
முதலில் தோற்றுவிடுகிறது

இல்லாதவர்களிடம் பத்தினியாய்
இருப்பவர்களிடம் விபச்சாரியாய்
நீதி தேவதை

அறியாமையும் சுரண்டலும் அற்ற
உலகைப் படைக்க வக்கற்றவர்களாய்
அநேக கடவுள்களும்

கவிதையொன்று எழுத எண்ணி
எதையெதையோ எழுதி

குற்றாலத்திற்குப் போய்
குழாயடியில் குளித்த கதையாக
ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என
அடையாளங்களில் சுருங்கி
வாழ இயலாமலேயே முடிந்துபோகிறது
வாழ்க்கை

3.11.15

திராவிடனா? தமிழனா?

இது என்னவிதமான புரிதல்? வெளிநாடு  போனால் உங்களை இந்தியனாகப் பார்ப்பார்கள். வெளி மாநிலம் போனால் உங்களைத் தமிழனாகப் பார்ப்பார்கள். உள்ளூரில் உங்களை வேறு ஜாதிக்காரனாகப் பார்ப்பார்கள். ஜாதியிலேயும் பங்காளி வகையறா பார்ப்பார்கள். இது இப்போது நடைமுறையில் இருக்கும் முறை. இதில் பார்ப்பான் முன்னாடி நாம் திராவிடன். ஏனெனில் அவன் தன்னை ஆரியன் என்கிறான். அவன் தமிழனாகவோ கன்னடனாகவோ மலையாளியாகவோ தெலுகனாகவோ இல்லை. தன் மொழி சமஸ்கிருதம் என்பதில் தெளிவாக இருக்கிறான்.

நான் திராவிடன் இல்லை தமிழன்தான் என்பதும், நான் தமிழன் இல்லை திராவிடன்தான் என்பதும் குழப்பமான மனநிலைதான்.

நாத்திகத்தை எதிர்க்க தமிழ் வேடம் அணிபவனின் கேள்விதான் நீ திராவிடனா? தமிழனா?

நம் அடையாளங்கள் இடத்தைப் பொறுத்து மாறுகிறது.

நாம் எப்போதும் தமிழன் தான். அதில் ஐயம் இல்லை. குழப்பம் இல்லை. எவனாவது உங்களைத் தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று சொல்லுங்கள் என்றானா?

திராவிடனா? தமிழனா? என்று யாரேனும் கேட்டால் அவன் முட்டாள்.
நான் வேலூர். என்னைப் பார்த்து ஒருவன் நீ வேலூர்க்காரனா? தமிழ்நாட்டுக்காரனா என்று கேட்டால் அது முட்டாள்த்தனம்தானே? இதற்கு என்ன பதில் சொல்வது?

தமிழ்த்தேசியவாதிகளுடன் திராவிடச் சிந்தனையாளர்கள் சண்டையிடுவதால் அதில் அவர்களுக்கு என்ன ஆதாயம்? ஆதாயம் பார்க்கவா கருப்புச் சட்டை அணிகிறார்கள்?

நாங்கள் சண்டையிடுவது தனிழ்த்தேசியவாதிகளிடம் இல்லை.

தமிழ்ச்சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் பிற்போக்குவாதிகளையும்; இனவாதம் கிளப்பி சாமானியர்களை மோதவிட்டு பணக்கார அதிகார முதலைகளின் முன்னால் பம்மி பிழைப்புவாத அரசியல் செய்ய நினைக்கும் குட்டி முதலாளி மனப்பான்மைவாதிகளையும் எதிர்த்தும்தான்.

இப்படி இருப்பவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்று யாரேனும் எண்ணினால் அது எண்ணுபவர்களின் பிழை.

ஏன் ஜாதியை ஒழிக்க வேண்டும் எனச் சொல்லுகிறீர்கள்? சண்டை போடுபவனிடம்   சென்று நாம் எல்லோரும் தமிழன் என்று சொல்லிவிடலாமே. நாம் எல்லோரும் தமிழன் என்று தெரியாமலா மோதல் நடக்கிறது?

தமிழன் என்பதற்காகவோ அல்லது ஹிந்து என்பதற்காகவோ ஒருவன் தன் பெண்ணை இன்னொருவனுக்கு கட்டிக்கொடுக்கிறானா?

இங்கு ஜாதிதான் எல்லாமே. இது ஒழிய; இதைக் காப்பாற்றி வளர்த்துக்கொண்டிருக்கும் பார்ப்பனீயத்தை நாம் எதிர்த்துதான் ஆக வேண்டும். தலைமுறைதோறும் தன் ஆற்றலில் ஒரு பங்கை ஜாதி காப்பாற்றவே செலவிடுகிறான் ஒவ்வொரு தமிழனும்; பார்ப்பனர் அல்லாதவனும். இது மாறக்கூடாதா? ஆணிவேர் அங்கே இருக்கிறது. அதை எதிர்க்க ஒரு அடையாளம் தேவை. அதுதான் திராவிடம்.

இதில் திராவிடம் எங்கே தமிழுக்கு எதிராய் நிற்கிறது?

தமிழ்த்தேசியத்தின் பேரால் யாரெல்லாம் தற்போது திராவிடத்தை எதிர்க்கிறார்களோ, அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஒரு பெரிய உண்மை கடவுள் நம்பிக்கை. நாத்திகத்தின் மீதான வெறுப்பு. பெரியாரை எதிர்க்கிறவரில் 90% பேர் அவரை படிக்காமலும் தெரிந்துகொள்ளாமலும்தான் எதிர்க்கிறார்கள்.

தமிழ்ச்சமூகத்துக்காக அக்கறைப்படுவதாய்க் காட்டிக்கொள்ளும் இந்த நவீன தமிழார்வ அறிவாளர்களால் நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டு; தமிழர்களின் வரலாற்றைப் படிக்க ஆர்வமில்லாமலும் தெரிந்துகொள்ள இயலாமலும் போவது மட்டும் எப்படி? என்ன ரகசியம்?

ராஜபக்சே செய்த காட்டாட்சியை; ஊழலை; எதேச்சதிகாரத்தை; அவன் செய்த எந்தவொரு அநியாயத்தையும் எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத ஒரு கோழைத்தனமான வீரியமில்லாத முட்டாள்த்தனமான மக்கள் கூட்டத்தைத்தான் உருவாக்கி வளர்த்தெடுத்து காப்பாற்றி மனிதத்தன்மையற்ற முதலைகளைத்தான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது சிங்கள இனவாதம் அங்கே.

அப்படி இங்கேயும் உருவாவதுதான் தமிழ்த்தேசியமா?

தமிழ்த்தேசியம் என்பது மொழி வெறியோ; இனவெறியோ அல்ல. மக்களை அறியாமைகளிலிருந்து விடுவித்து அறிவியல் பார்வைக்கு அழைத்துச் சென்று வேறுபாடுகளற்ற; பிறப்பாலும் சுரண்டலாலும் ஏற்றத்தாழ்வற்ற ஒரு அறிவார்ந்த விஞ்ஞான சமூகமாக தமிழ்ச்சமூகத்தை கட்டியமைப்பது.

பெரியாரின் பார்வை அதன் தொடக்கப்புள்ளி. சமதர்மம் அதன் இலக்காய் இருக்கவேண்டும். இதுவே எனது பார்வை.

நன்றி...