9.11.15

வாழ்க்கை

குடை உடைந்த மறுநாள்
மழை ஆரம்பிக்கிறது

வாலிபம் முடிந்த பருவத்தில்
திருமணம் நடக்கிறது

தீர்ந்துபோன பின்னரும்
"சாப்பாடு தயார்" என்றே
பலகை சொல்கிறது

புதுமனை புகுவிழாக்களில்
சுமங்கலியாக நிற்கிறது
வாழாவெட்டி பசுமாடுகள்

உலகில் இன்னும் அதர்மம் நடக்காததால்
அவன் இன்னும் அவதரிக்கவே இல்லை

உயிர்த்தெழுந்த இயேசு
போன இடம் தெரியவில்லை
பிரார்த்தனைகளில் மனமிறங்கி
ஒரு எட்டு வந்துவிட்டும் போகலாம்

வட்டி மட்டும் வாங்கக் கூடாது; ஆனால்
வியாபாரத்தில் பகல்கொள்ளை அடிக்கலாம்

மொஸாட்டுக்கும் சி.ஐ.ஏ-வுக்கும் கட்டுப்பட்டு
எல்லா தேசத்திலும்
அயோக்கியர்களை மட்டுமே தேடிப்பிடித்து
அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள்
நவ கிரகர்கள்

தர்மத்தால்
ஒருபோதும் கவ்வ இயலவில்லை
சூதை

தர்மம் மறுபடியும் வெல்லவே
முதலில் தோற்றுவிடுகிறது

இல்லாதவர்களிடம் பத்தினியாய்
இருப்பவர்களிடம் விபச்சாரியாய்
நீதி தேவதை

அறியாமையும் சுரண்டலும் அற்ற
உலகைப் படைக்க வக்கற்றவர்களாய்
அநேக கடவுள்களும்

கவிதையொன்று எழுத எண்ணி
எதையெதையோ எழுதி

குற்றாலத்திற்குப் போய்
குழாயடியில் குளித்த கதையாக
ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என
அடையாளங்களில் சுருங்கி
வாழ இயலாமலேயே முடிந்துபோகிறது
வாழ்க்கை

No comments:

Post a Comment