பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் எப்பேர்ப்பட்டவன் என்பதை எழுத்தாளர் கல்கி அவர்களின் "சிவகாமியின் சபதம்" வரலாற்றுப் புதினத்தை படித்தவர்கள் அறிவார்கள். பெரும் சதியோடு தன் நாட்டின் மீது படையெடுக்க வந்து வேங்கி நாட்டில் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் புலிகேசியின் படைத்தளத்திற்குள் ஒற்றனாய் நுழைந்து, சாதுரியத்துடன் சூழ்ச்சியை அறிந்து வரும் மகேந்திர வர்மனை அறிமுகப்படுத்தும் கல்கியின் இப்புதினம்; கற்பனை கலந்திருப்பினும் வரலாற்றைத் தழுவிச் செல்லும் புதினம்தான்.
பல்லவர்கள் கிட்டத்தட்ட 650 ஆண்டுகள் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள். இவர்கள் தமிழர்கள் அல்லவென்றே பல ஆராய்ச்சியாளர்களும், தமிழர்தாம் என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால் எதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை.
மகேந்திர வர்மன் வடமொழியில் ஒரு காவியமே இயற்றியுள்ளான்.
மகேந்திர வர்மன் என்ற பெயரில் இருவரும், நரசிம்ம வர்மன் என்ற பெயரில் இருவரும் இருந்துள்ளனர். கல்கி, முதலாம் மகேந்திர வர்மன்; நரசிம்ம வர்மன் பற்றித்தான் எழுதியுள்ளார்.
காதலைவிட இந்த நாட்டையும் மக்களையும் காப்பது பெரிது என்பதை தன் மகன் நரசிம்ம வர்மனுக்கு தம் மரணத்தின் வாயிலாக உணர்த்திச் சென்றவன் மகேந்திர வர்மன். பல்லவர்கால தமிழர் பண்பாட்டுக் கலப்பைப் பற்றிக் கொஞ்சம் தள்ளி வைப்போம்.
கல்கியின் புதினத்தைப் படிக்கும் முன்னரே எனக்கு மகேந்திர வர்மன் ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருந்தான். ஆனால் அவன் முதலாமவனா? இரண்டாமவனா? எனத் தெரியவில்லை.
பல்லவ நாட்டின்; தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான காவேரிப்பாக்கம் ஏரி முழுதும் நிரம்பினால் எங்கள் ஊரின் கிழக்கு வழிச்சாலையில் தண்ணீர் தொட்டு நிற்கும். பாலாற்றில் வெள்ளம் வந்தால் இந்த காவேரிப்பாக்கம் ஏரிக்கென்று தண்ணீர் செல்ல, பெரிய அளவில் வாய்க்கால் ஒன்று உள்ளது. அதனை ஒட்டி இன்னொரு பெரிய வாய்க்கால் ஒன்று எங்கள் ஊருக்கும் பாலாற்றுக்கும் நடுவேயுள்ள பூண்டி என்ற கிராமத்தின் ஏரிக்கு தண்ணீர் சுமந்து வரும். பூண்டி ஏரி நிரம்பி வழிந்தால் அதிலிருந்து வரும் ஒரு பெரிய வாய்க்காலில் அத்தண்ணீர் எங்கள் கிராமத்து ஏரிக்கு வரும். எங்கள் கிராமத்துக்கு இரண்டு ஏரி. இந்த இரண்டு ஏரிகளை நிரப்பிவிட்டு அந்தக் கல்வாய் இன்னும் பல ஊர் ஏரிகளை நிரப்பிவிட்டு கடைசியாக மகேந்திரவாடி என்ற ஊரின் ஏரியில் கலந்துவிடும். அதேபோல் செல்லும் வழியில் நிரம்பி வழியும் எல்லா ஏரிகளின் வெள்ளமும் சிறு சிறு ஓடைகள் வழியாக பல சிற்றேரிகளை நிரப்பிவிட்டு கடைசியில் அதுவும் காவேரிப்பாக்கம் ஏரியில் கலக்கும்.
பாலாற்றிலிருந்து புறப்பட்டு எங்கள் ஊர் வழியாகச் செல்லும் இந்தக் கால்வாய்க்கு "மகேந்திரவாடி கால்வாய்" என்று பெயர். எந்தக் காலத்தில் இது வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் மகேந்திர வர்மன் பெயரால் குறிக்கப்படும் இது பல்லவர் காலத்தில்தான் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கால்வாயின் கரையை ஒட்டித்தான் எங்களுக்கு வானம் பார்த்த விவசாய நிலம் இருக்கிறது. பாறை கிணறான எங்கள் கிணற்றில் இக்கால்வாயில் சிறிதளவு தண்ணீர் வந்தாலே ஊற்று வந்துவிடும்.
பாலாற்றில் வெள்ளம் வந்தால் சிறுவயதில் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் பொடிநடையாக எல்லா மாணவர்களையும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி அழைத்து வருவார்கள் ஆசிரியர்கள். அதேபோல் ஊரிலிருக்கும் மூன்று சிறு மலைக் குன்றுகளுக்கும் அழைத்துச் செல்வார்கள். வெறும் புத்தக அறிவினால் மட்டும் இயற்கையைப் புரிந்துகொள்ள இயலாது என்பது நிதர்சனம் என்பது அப்போதைய ஏதோவொரு ஆசிரியருக்குத் தெரிந்திருந்தது போலும்.
மகேந்திர வர்மனும் அவனது மகன் நரசிம்ம வர்மனையும் ஒருபோதும் யாராலும் அழிக்கவோ மறைக்கவோ இயலாது. அவர்கள் மரணத்தைக் கடந்தவர்கள். இன்றைக்கும் என்றைக்கும் பல்லவ நாட்டில் பல ஏரிகளாய், குளங்களாய், கண்மாய்க்களாய், மதகுகளாய், ஓடைகளாய், கால்வாய்களாய், கற்சிற்பங்களாய் இந்த மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மணல் முழுங்கி, மலை முழுங்கிப் பெருச்சாளிகள் மக்களை ஆளும் இந்தக் காலகட்டத்தில் இவர்களை எண்ணிப் பார்ப்பது பெரும் அதிசயமாகவே இருக்கிறது. இப்படியானவர்கள் எல்லாம் தொலைநோக்கோடு திட்டமிட்டு வாழ்ந்த இந்த மண் தற்காலத்தில் பண வேட்கை கொண்ட மன நோயாளிகளால் நிர்வகிக்கப்படுவது பெரும் சாபக்கேடு.
பெரியாரைத் தெரியாத ஈரோட்டுவாசிகளும், பல்லவர்களையும் அண்ணாவையும் தெரியாத காஞ்சிபுரத்துவாசிகளும் வாழும் இதேத் தலைமுறையில்தான், இத்தொண்டைமாநாட்டில் ஊருக்கு ஒருவராவது இப்பெருமழைக் காலத்தில் பல்லவர்களுக்கு நன்றி சொல்ல இருக்கக்கூடும். அவ்வாறு என் கிராமத்து சார்பாக நான் சொல்லிக்கொள்கிறேன்....
"பல்லவர்களுக்கு பெரும் நன்றி"
No comments:
Post a Comment