1.11.15

அம்மாவின் நினைவுநாள் இன்று

01.11.2009

பிறந்த இடத்திலும் புகுந்த இடத்திலும்; வாழ்நாள் முழுதும் வறுமையோடும் வெயிலோடும் மாடுகள் மேய்த்து எங்களைப் படிக்க வைத்து ஆளாக்கிய என் அம்மா ஆதிலட்சுமி அவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் கொள்ளி வைத்த நாள் இன்று.

அம்மாவின் படத்தைப் பார்க்கிறபோதெல்லாம் ஏதோவொரு குற்ற உணர்ச்சி என்னைக் கொல்வதால், பெரும் அச்சத்துடன்தான் அவளை நினைவுகொள்ள வேண்டியுள்ளது.

நான் சந்தித்த; கவனித்த முதல் நெருக்கமான மரணம் என் அம்மாவினுடையது. என் தோளில் சாய்ந்து உயிர் நீத்த என் அம்மாவை எரிக்கும்போது என் ஞாபகத்தில் வந்த பட்டினத்தாரின் அந்தப் பாடல்கள் இன்னமும் அவள் எரிவதை காட்சிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

ஊருக்குப் போய் அம்மாவைப் பார்த்தபோதெல்லாமும்; அவள் பிணமாய் இருக்கையிலும் மனதுக்குள்ளாக என்ன நினைத்தேனோ அதையேதான் இப்போதும் எண்ணுகிறேன்.

'அம்மா என்னை மன்னித்துவிடு'

கண்ணீரைத்தவிர உனக்காக வேறொன்றுமில்லை என்னிடம்.
***

"ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யவிரு
கைப்புறத்திலேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி?"

"அள்ளியிடுவது அரிசியோ தாய்தலை மேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம் வைத்து முத்தாடியென்று என்
மகனே என அழைத்த வாய்க்கு"

- பட்டினத்தார்.

No comments:

Post a Comment