3.11.15

திராவிடனா? தமிழனா?

இது என்னவிதமான புரிதல்? வெளிநாடு  போனால் உங்களை இந்தியனாகப் பார்ப்பார்கள். வெளி மாநிலம் போனால் உங்களைத் தமிழனாகப் பார்ப்பார்கள். உள்ளூரில் உங்களை வேறு ஜாதிக்காரனாகப் பார்ப்பார்கள். ஜாதியிலேயும் பங்காளி வகையறா பார்ப்பார்கள். இது இப்போது நடைமுறையில் இருக்கும் முறை. இதில் பார்ப்பான் முன்னாடி நாம் திராவிடன். ஏனெனில் அவன் தன்னை ஆரியன் என்கிறான். அவன் தமிழனாகவோ கன்னடனாகவோ மலையாளியாகவோ தெலுகனாகவோ இல்லை. தன் மொழி சமஸ்கிருதம் என்பதில் தெளிவாக இருக்கிறான்.

நான் திராவிடன் இல்லை தமிழன்தான் என்பதும், நான் தமிழன் இல்லை திராவிடன்தான் என்பதும் குழப்பமான மனநிலைதான்.

நாத்திகத்தை எதிர்க்க தமிழ் வேடம் அணிபவனின் கேள்விதான் நீ திராவிடனா? தமிழனா?

நம் அடையாளங்கள் இடத்தைப் பொறுத்து மாறுகிறது.

நாம் எப்போதும் தமிழன் தான். அதில் ஐயம் இல்லை. குழப்பம் இல்லை. எவனாவது உங்களைத் தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று சொல்லுங்கள் என்றானா?

திராவிடனா? தமிழனா? என்று யாரேனும் கேட்டால் அவன் முட்டாள்.
நான் வேலூர். என்னைப் பார்த்து ஒருவன் நீ வேலூர்க்காரனா? தமிழ்நாட்டுக்காரனா என்று கேட்டால் அது முட்டாள்த்தனம்தானே? இதற்கு என்ன பதில் சொல்வது?

தமிழ்த்தேசியவாதிகளுடன் திராவிடச் சிந்தனையாளர்கள் சண்டையிடுவதால் அதில் அவர்களுக்கு என்ன ஆதாயம்? ஆதாயம் பார்க்கவா கருப்புச் சட்டை அணிகிறார்கள்?

நாங்கள் சண்டையிடுவது தனிழ்த்தேசியவாதிகளிடம் இல்லை.

தமிழ்ச்சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் பிற்போக்குவாதிகளையும்; இனவாதம் கிளப்பி சாமானியர்களை மோதவிட்டு பணக்கார அதிகார முதலைகளின் முன்னால் பம்மி பிழைப்புவாத அரசியல் செய்ய நினைக்கும் குட்டி முதலாளி மனப்பான்மைவாதிகளையும் எதிர்த்தும்தான்.

இப்படி இருப்பவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்று யாரேனும் எண்ணினால் அது எண்ணுபவர்களின் பிழை.

ஏன் ஜாதியை ஒழிக்க வேண்டும் எனச் சொல்லுகிறீர்கள்? சண்டை போடுபவனிடம்   சென்று நாம் எல்லோரும் தமிழன் என்று சொல்லிவிடலாமே. நாம் எல்லோரும் தமிழன் என்று தெரியாமலா மோதல் நடக்கிறது?

தமிழன் என்பதற்காகவோ அல்லது ஹிந்து என்பதற்காகவோ ஒருவன் தன் பெண்ணை இன்னொருவனுக்கு கட்டிக்கொடுக்கிறானா?

இங்கு ஜாதிதான் எல்லாமே. இது ஒழிய; இதைக் காப்பாற்றி வளர்த்துக்கொண்டிருக்கும் பார்ப்பனீயத்தை நாம் எதிர்த்துதான் ஆக வேண்டும். தலைமுறைதோறும் தன் ஆற்றலில் ஒரு பங்கை ஜாதி காப்பாற்றவே செலவிடுகிறான் ஒவ்வொரு தமிழனும்; பார்ப்பனர் அல்லாதவனும். இது மாறக்கூடாதா? ஆணிவேர் அங்கே இருக்கிறது. அதை எதிர்க்க ஒரு அடையாளம் தேவை. அதுதான் திராவிடம்.

இதில் திராவிடம் எங்கே தமிழுக்கு எதிராய் நிற்கிறது?

தமிழ்த்தேசியத்தின் பேரால் யாரெல்லாம் தற்போது திராவிடத்தை எதிர்க்கிறார்களோ, அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஒரு பெரிய உண்மை கடவுள் நம்பிக்கை. நாத்திகத்தின் மீதான வெறுப்பு. பெரியாரை எதிர்க்கிறவரில் 90% பேர் அவரை படிக்காமலும் தெரிந்துகொள்ளாமலும்தான் எதிர்க்கிறார்கள்.

தமிழ்ச்சமூகத்துக்காக அக்கறைப்படுவதாய்க் காட்டிக்கொள்ளும் இந்த நவீன தமிழார்வ அறிவாளர்களால் நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டு; தமிழர்களின் வரலாற்றைப் படிக்க ஆர்வமில்லாமலும் தெரிந்துகொள்ள இயலாமலும் போவது மட்டும் எப்படி? என்ன ரகசியம்?

ராஜபக்சே செய்த காட்டாட்சியை; ஊழலை; எதேச்சதிகாரத்தை; அவன் செய்த எந்தவொரு அநியாயத்தையும் எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத ஒரு கோழைத்தனமான வீரியமில்லாத முட்டாள்த்தனமான மக்கள் கூட்டத்தைத்தான் உருவாக்கி வளர்த்தெடுத்து காப்பாற்றி மனிதத்தன்மையற்ற முதலைகளைத்தான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது சிங்கள இனவாதம் அங்கே.

அப்படி இங்கேயும் உருவாவதுதான் தமிழ்த்தேசியமா?

தமிழ்த்தேசியம் என்பது மொழி வெறியோ; இனவெறியோ அல்ல. மக்களை அறியாமைகளிலிருந்து விடுவித்து அறிவியல் பார்வைக்கு அழைத்துச் சென்று வேறுபாடுகளற்ற; பிறப்பாலும் சுரண்டலாலும் ஏற்றத்தாழ்வற்ற ஒரு அறிவார்ந்த விஞ்ஞான சமூகமாக தமிழ்ச்சமூகத்தை கட்டியமைப்பது.

பெரியாரின் பார்வை அதன் தொடக்கப்புள்ளி. சமதர்மம் அதன் இலக்காய் இருக்கவேண்டும். இதுவே எனது பார்வை.

நன்றி...

No comments:

Post a Comment