இப்படத்தில் உள்ள இச்செய்தியை நீங்கள் கவனித்திருப்பீர்கள். கடந்த சில நாட்களாக முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
இச்செய்தியை பலரும் மகிழ்ச்சியுடன் "கடவுள் இருக்கிறார்" என்று குறிப்பிட்டு பதிவிடுகின்றனர். பகிர்கின்றனர். ஆனால் அவர் 'ஏன் கடவுளை அவமதித்தார்?' என்பது பற்றி யாரும் பேசவில்லை.
இச்செய்தியால் சுய இன்பம் அடைந்துகொள்ளும் அளவிற்குத்தான் கடவுள் தம் பக்தர்களை வைத்துள்ளார் என்பது நகைப்பாய் இருக்கிறது. கடவுள் என்ற கருத்தின்மீது அவரவர் தம் புத்தியைக் கற்பித்து காலங்காலமாகவே மகிழ்ச்சியடைவதின் நீட்சிதான் இது. கடவுள் என்ன சினிமா கதாநாயகனா, தன்னை அவமதித்தோரை பழிவாங்க. அது மனிதனிலும் கீழ்மைப் புத்தியல்லவா? அப்படியே அது இருந்தாலும் இவ்வாறான கீழ்மை குணம் எப்படி கடவுளுக்கு இருக்க முடியும்? முழுநேரம் தன்னை எண்ணி பிரார்த்தனை செய்வதற்காக மனிதர்களை அவன் படைக்கிறானெனில், அதனால் பக்தர்களுக்கு பலன் கொடுக்கிறானெனில் அவனும் ஒரு மனநோயாளிதான். சாத்தான்களுக்குக்கூட இவ்வாறான சக்தியிருக்கிறதென் அவர்களேதான் சொல்கிறார்கள்.
கோடிக்கணக்கான ஆண்டுகளாய் உலகம் படிப்படியாய் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. கோடிக்கணக்கான பேர்கள் வாழ்ந்துவிட்டு செத்துப்போய்விட்டார்கள். இன்னும் கோடிக்கணக்கான பேர்கள் பிறப்பார்கள். இயற்கை தன்போக்கில் எல்லோருக்கும் ஒரே மாதிரி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், நிறம், ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள், நல்லவன், கெட்டவன், நீதி, அநீதி, கோபம், சாந்தம் என்று எதுவுமே அதற்குக் கிடையாது. எல்லாமே மனிதர்களே வகுத்துக்கொண்ட கற்பிதங்கள்.
"வலியது வெல்லும்" என்பதைத்தவிர வரலாறுகள் வேறெதையும் உணர்த்தவில்லை. நியாய தர்மங்கள் என்பது நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம் மாறுகிறது. எதுவும் பொதுவாயில்லை. பெரும்பாலும் வெவ்வேறுதான்.
வரலாறு, பூகோளம், உலக அரசியல், அறிவியல் எல்லாவற்றையும் கோயில்களில் சொல்லிக்கொடுக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டேதான் எல்லா அக்கிரமங்களையும் பெரும்பாலோனோர் செய்துகொண்டிருக்கிறார்கள். மக்களைவிட கோயில்களும் அதை நடத்துபவர்களும் செழிப்பாய் இருக்கிறார்கள் காலங்காலமாய். "லஞ்சம், ஊழல், சுரண்டல், சூழ்ச்சி" இதில் சுழன்றுகொண்டிருக்கிறது கடவுள் படைத்த உலகம்.
அடிமை முறையை ஒழிக்க ஆபிரகாம் லிங்கனும், கறுப்பர்களுக்காக மார்டின் லூதரும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக பூலேவும் அம்பேத்கரும் பெரியாரும், உலக உழைப்பாளிகளுக்காக மார்க்சும்தான் பயன்பட்டார்களே தவிர எந்தச் சாமியின் சிஷ்யகோடிகளும் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவில்லை. அநீதிகளுக்கெதிராக போராட முன்வரவில்லை.
கடைசியாக செய்தி என்னவெனில், இப்படி கடவுளை அவமதித்த அந்தத் தோழர் மிக நல்ல முறையில் ஆரோக்கியமாக இருக்கிறார். இது வதந்தியாகப் பரவும் செய்தி.
பக்தர்கள் என்பவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் அல்ல என்பதையும், அவர்களும் விபத்தில் சிக்கி, கோயில் நெரிசலில் சிக்கி இறந்துபோய்விடுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சாகாவரம் பெற்ற மார்கண்டேயன் இப்போது எந்த நாட்டில்; ஊரில் வாழ்ந்து வருகிறான் என்பது பற்றி நாம் யாரும் கேள்வி எழுப்புவதேயில்லை என்பதும் சிந்திக்கத்தக்கது.
"தன்னை அவமதித்தவரை மிக ஆரோக்கியமாக வைத்திருக்கும் கடவுளின் கருணையைப் பாருங்கள்" என்று யாரேனும் இதற்குக் கருத்து சொல்ல நினைக்கிறீர்கள் என்றால்... கடவுள் எதற்காக கொசுக்களைப் படைத்தார் என்ற பதிலையும் சேர்த்து எழுதினால் மிக்க நன்றியாய் இருக்கும்.
No comments:
Post a Comment