28.11.16

குழப்பம் ஏன்?

🙇
புதிய ரூபாய் தாள்களை அச்சடித்ததில் ஏன் இவ்வளவு குழப்பம்?

01. ஆக்சுவலி எங்க திட்டம் என்னன்னா..., இப்டி அடிச்சாதான் "இது செல்லுமா செல்லாதா? மறுபடியும் எப்ப செல்லாதுன்னு அறிவிச்சிடுவாங்களோ"ன்ற பயத்தால இனிமே யாரும் பதுக்கிவைக்க மாட்டாங்கல்ல. அதான்...

02. ஆக்சுவலி எங்க திட்டம் என்னன்னா..., கள்ள நோட்டு எது நல்ல நோட்டு எதுன்னு எப்பவுமே அரசேதான் கண்டுபுடிக்கனுமா? அரசாங்கத்துக்கு வேற வேலையே இல்லையா? இப்டி குறையா அச்சடிச்சாதான் ஜனங்க எப்பவுமே உஷாரா சோதிச்சிப் பார்த்து வாங்குவாங்க.

இந்த தொலைநோக்கு பார்வை இல்லாதவங்கதான் குறை சொல்றாங்க.

🏃🏻🏃🏻🏃🏻......


மாவீரர் தினம்

இன்று நவ. 27 மாவீரர் நாள்

தம் மக்களுக்காகப் போராடி தங்களை தியாகம் செய்த அத்தனை தமிழ் போராளிகளுக்கும் #_வீர_வணக்கங்கள். 

புலிகளின் தியாக உணர்வை உலகத்திற்கு தெரிவித்த நிழற்படங்களுள் ஒன்று...

Chitchor - இதயத் திருடன் (ஹிந்தி)

இந்தப் படப் பாடல்களுக்காக கே.ஜெ.யேசுதாஸ் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது. பிரபலமான பாடல் "கோரிதரா" ஹிந்தி பாடலை மறக்க முடியுமா?

மிகவும் எளிமையான கதைதான். 

ஒரு கிராமத்தில் பாலம் அமைப்பதற்காக ஒரு இஞ்ஜினியர் (அமோல் பலேகர்) வருகிறார். அவரைத் தன் மகளுடன் (ஜரீனா வகாப்) பழகவிடுகிறார் மகளின் பெற்றோர். இருவருக்கிடையேயும் காதல் மெல்ல மலர்கிறது. போகப்போகத்தான் தெரிகிறது அமோல் எஞ்ஜினியர் இல்லை, சூப்பர்வைசர்தான் என்று. ஒருகட்டத்தில் இஞ்ஜினியரே (விஜயேந்திர காட்கே) வரும்போது, தன் மகளிற்கு அவரை மணம் முடித்துவைக்க விழைகின்றனர் பெற்றோர். அமோலும், ஜரீனாவும்கடைசியில் சேர்கிறார்களா அல்லது ஜரீனா, விஜயேந்திர காட்கேயைக் கைப்பிடிக்கிறாரா என்பதுதான் கதையின் க்ளைமாக்ஸ்.

பாசு சட்டர்ஜியின் இயக்கத்தில் இப்படம் 1975-ல் வெளிவந்தது.

இழி பிறவிகள்

இன்றைக்கு குறிப்பிட்ட சில கூடாரங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் முகநூலில் தலைவர் பிரபாகரன் அவர்களையும் புலிகளையும் கேவலமாக எழுதியிருப்பதைக் கவனிக்கிறேன்.

என்ன எழுதினாலும் இந்தக் "கேவலமான இழிபிறவிகளுக்கு" ஒரு மயிரும் புரியப்போவதில்லை என்பதால் அப்பதிவுகளை அமைதியாகக் கடக்கிறேன்.

தோழர் அஜிதா

மக்களையும் மண்ணையும் ஆழமாய் நேசிக்கும் உண்மையான மானுட / தேசப் பற்றாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மேடைகளில் நடிப்பவர்கள் மரியாதை செய்யப்படுகிறார்கள்.

"அரசு என்பது ஆளும் வர்க்கத்தினருக்கான அடியாட்படை - மார்க்ஸ்"

பிடல் காஸ்ட்ரோ மறைவு

638 முறை அமெரிக்காவின் கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் தலைவலியாய் இருந்த புரட்சிக்காரன். கியூபாவில், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம். பள்ளிகள் மருத்துவமனைகள் நடத்த தனியார்களுக்கு அனுமதியில்லை. 

உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பதே எங்களின் பெருமை .

"வாழ்க அவர்தம் வரலாறும் புகழும்..."

2016 தலைவன் பிறந்தநாள்

காவல்துறை கெடுபிடிகளை மீறி 25 நள்ளிரவு 12 மணிக்கு "தலைவன் பிரபாகரன்" அவர்களின் பிறந்தநாள் விழா.

தற்போது ராயப்பேட்டையில் "தந்தை பெரியார் திராவிடர் கழக" தோழர்களுடன்...


25.11.16

பலே பலே சர்தார் ஜீ...

🤓... 
தன் 10 ஆண்டு பதவிக்காலத்தில்கூட பேசாத மன்மோகன் சிங் இப்போது இப்படி பேசிய காரணம் என்ன? ஏதோ மக்கள் மீதிருக்கும் அக்கறை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். 

தேர்தலிலே நிற்காமல் புறவாசல் வழியாக உலகவங்கியின் செல்வாக்கினால் பதவிக்கு வந்தவர் அவர். முன்னாள் உலக வங்கி ஊழியரும்கூட. பதவிக்காலத்திலும் ஓய்வூதியம் பெற்றாராம். மேலும் காங்கிரஸ் மீதான சீக்கியர்களின் கோபத்தைத் தணிக்கவும் வாய்த்த பனம்பழம். 

சரி ஏன் மக்களுக்காக இப்போது மட்டும் திடீரென அக்கறைப் படுகிறார்? முதலில் இந்தியாவை உலக அரங்கில் பல ஒப்பந்தங்களின் பேரில் விற்பனை செய்ய ஆரம்பித்ததே அவர்தான். அதன் தொடர்ச்சிதான் திருவாளர் நரேந்திர மோடி ஜீ. இன்னும் சில மாதங்களில் மக்கள் என்ன நிலைமைக்கு ஆளாகப் போகிறார்கள் என்ற உண்மை அவருக்குப் புரிந்திருப்பதால் எல்லாவற்றுக்கும் காரணம் என்ற "உதைபந்து" தன்மீது திரும்பிவிடக் கூடாது என்ற உஷார் முன்னேற்பாடுதான் இது.

சுருக்கமாக சொன்னால்,
மோடி சிக்கிக்கொண்டார்...
மன்மோகன் தப்பித்துக்கொண்டார்...

23.11.16

இசுலாமிய எதிர்ப்பு தேவையற்றதா?

இசுலாமிய மதவெறியை நாம் கண்டிக்கத் தவறினால் அது இயல்பாக எல்லோரையும் இந்துத்வத்தின் பக்கம் செல்ல வைக்கும். நாமும் தனிமைப்படுவோம். இந்து மதவெறி, இசுலாமிய மதவெறி இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியதே. இசுலாமியர்கள் பெரியாரிஸ்டுகளுடன் இணைவதெல்லாம் பொதுநலத்திற்காக அல்ல. அவர்களுக்கு இந்து எதிர்ப்பு பேசுபவர்கள் வேண்டும். அவ்வளவுதான். எதையுமே எதிர்க்கத் தேவையில்லாத அளவுக்குத்தான் இஸ்லாம் இருக்கிறதா? 

வேலூரில் மேல் விஷாரம் என்றொரு பகுதி. நகராட்சியில்கூட உருதுவில்தான் தீர்மானம் போடுகிறார்களாம். இங்கு அரபுமொழி மட்டுமென்ன அறிவியலையா வளர்க்கிறது? தமிழ் இசுலாமியர்களைத் தவிர யாரும் தமிழை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

இந்துமத எதிர்ப்பு வேசம் கட்டும் இவர்களில் பெரும்பாலோனோர் மத வெறியர்கள்தான். அவர்களை விமர்சிக்கும்போது பூனைக்குட்டி வெளியே வருவதைக் கவனிக்கலாம். 

விமர்சனங்கள் எதன் மீதானாலும் வரவேற்பதே அறிவுடைமை.

வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதுதான் பெரியாரியத்தின் முதன்மைப் பணி. 

இசுலாமியனோ இந்துவோ யாருடனும் நட்பாக இருக்கலாம். ஆனால் விமர்சனம் என்றால் விமர்சனம்தான்... இரு மத நம்பிக்கையுமே இங்கு தேவையில்லாத ஆணிகள்தான்...

தஸ்லிமா நசுரீனின் "லஜ்ஜா" நாவலைப் படியுங்கள். உலகெங்கும் மதவெறிக்கு ஒரே முகங்கள்தான். அது சிறுபான்மையாக இருக்கும்போது தன்னை மறைத்துக் கொள்கிறது. 

உலகில் நாத்திகர்களைக் கொல்லச் சொல்லும் மதங்கள் எதெது?

பெரியாரிஸ்டுகளுடன் இருக்கும் இசுலாமியர்கள் தஸ்லிமாவை அழைத்து வந்து தமிழ்நாட்டில் கூட்டம் போட்டால் ஆதரிப்பார்களா? 

இஸ்லாம் சரியான மார்க்கமென்றால் நாம் ஏன் எல்லோரையும் இஸ்லாமியராக மாறச்சொல்லி பிரச்சாரம் செய்யக்கூடாது? ஏன் இந்த எழவெடுத்த இந்து மதத்திலேயே எல்லாரையும் இருக்க வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருப்பது ஏன்? 

இந்த 50 ஆண்டுகளில் தீண்டாமைக்குள்ளான அனைவரையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியிருக்கலாமே. 

பெரியார் ஏன் அதைச் செய்யவில்லை? 

(எனக்கு பாடம் எடுக்க வேண்டாம், யாரேனும் இதற்கு பதில் மட்டும் தெரிவித்தால் போதும்)

19.11.16

கனவு...

சரியோ... தவறோ... ஒரு நாடு சிக்கலில் அகப்படும்போது கோடானு கோடி தொண்டர்களை வைத்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

வெறுமனே விமர்சனம் செய்வதையா? அல்லது அடுத்த தேர்தல் வரும் வரை அரசியல் செய்ய காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதையா? அல்லது மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்வதையா?

பதவியில் இல்லாத கட்சிகளால் நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன லாபம்?

அரசியலில் இருப்பவர்களுக்கெல்லாம் வருமானம் எங்கிருந்துதான் வருகிறது?

சரியும் அரசு நிர்வாகத்தை சீர் செய்ய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் சொல்லி மக்களை நெருக்கடிகளிலிருந்து மீட்க துணை நிற்பதை தவிர்த்துவிட்டு வெறும் காட்டுக்கூச்சல் போடுவது மட்டும் ஏன்?

இவர்கள் எல்லாரும் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் மட்டும் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிடுமா?

ஜாதியின் பேரால் மதத்தின் பேரால் இனத்தின் பேரால் மூளைச் சலவை செய்யும் மேடைப்பேச்சின் பேரால் ஆளாளுக்கு லட்சக் கணக்கான முட்டாள்களைப் பிடித்து வைத்துக்கொண்டு செயல் வடிவம் இல்லாமல் போடும் கூச்சலால் மட்டும் என்ன நன்மை?

எவ்வளவு நெருக்கடியிலும் மக்கள் சகிப்புத் தன்மையுடன் அரசிடம் பணிந்து போகக் காரணம் எதிர்க்கட்சிகளின் மீதுள்ள வெறுப்பினாலும்தான். 

அந்தந்த பகுதியிலுள்ள எல்லா கட்சி பொறுப்பாளர்களும் குறைந்தபட்சம் வங்கிகளின் வரிசைகளையாவது நெறிப்படுத்த முனையலாம். அல்லது ஆளுங்கட்சியைவிட தாங்கள் எப்படி சிறந்தவர்கள் என்பதை இயன்ற வழியில் செயலில் நிரூபித்துக் காட்டலாமே.

அடுத்த தேர்தல் எப்போது வரும்?, இருப்பவனை தள்ளிவிட்டு மடத்தை எப்போது பிடிக்கலாம்? என்பதே எல்லாக் கட்சிகளுக்கும் நோக்கமாயிருக்கிறது. 

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 05% பேர் நேரடியாக முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார்கள். இவர்கள்தான் அரசுப் பணத்தை கொள்ளையடிப்பதும் சுரண்டிப் பிழைப்பதும். அல்லது பொதுவாழ்க்கை என்ற பேரில் டெண்டர் எடுப்பதும் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் செய்வதும் இவர்கள்தான். 

ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இவர்களேதான் மாறிமாறி வருகிறார்கள். 

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களாட்சிக்கு இரு கண்கள். ஆனால் இரண்டும் நம் நாட்டுக்கு எப்படி இருக்கிறது?

நாட்டில் குழப்பம் நீடிக்க வேண்டும், ஒன்று சேர்ந்து போராடினால் எவனாவது பேரெடுத்துவிடுவான் என்பதே எல்லா கட்சிகளின் எதிர்பார்ப்பாய் தெரிகிறது. 

தேர்தல் முடிவு தெரிந்ததிலிருந்து அடுத்தத் தேர்தல் தேதி அறிவிக்கும் வரையில் எல்லா கட்சிகளையும் தடை செய்துவிட வேண்டும். கொடிக்கம்பங்களை இல்லாதொழிக்க  வேண்டும். பொதுப்பிரச்சினைகளுக்காக மட்டும் மக்கள் இணைந்து போராட உரிமை இருக்க வேண்டும். நிரந்தர தேர்தல் சின்னங்கள் ஒழிக்கப்பட வேண்டும். பதவிகளை திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். 

திருடர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்கள். அல்லது அதிகாரத்திற்கு வந்ததும் திருடர்களாகிவிடுகிறார்கள். 

சுயமாய் சிந்தித்து வாக்களிக்கும் மக்கள் உருவாகுமளவுக்கு அறிவியல் கல்வியை பரவலாக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் மக்களை பிளவுபடுத்தி பகை வளர்க்கும் ஜாதி மத இன அமைப்புகள் இயங்குவதையாவது முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

17.11.16

சந்தர்ப்பவாதிகள் யார்?

😇😇...
ராணுவத்தை சுய லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதிகள் யார்?

சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒரு ஆன்மீக மாநாடு நடத்தினார். அதில் இந்திய இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு பாலம் அமைத்தல், பந்தல் அமைத்தல் போன்ற வேலைகளை செய்தார்கள்.  தனிநபர்களுக்கு  இந்திய இராணுவத்தை பயன்படுத்தலாமா? என்று கேட்டபோது, இந்திய இராணுவம் ஒன்றும் சும்மா வேலை செய்யவில்லை. சம்பளம் வாங்கிக்கொண்டுதான் வேலை செய்கிறார்கள், அதிலொன்றும் தவறில்லையே என்றார்கள் பிஜேபி பக்தர்கள். அப்போது யாரும் இதுகுறித்து கண்டிக்கவே இல்லை. ஆனால் இப்போது...

"ராணுவ வீரர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தனிப்பட்ட பகையா? அதுபோல் நாட்டுக்காக பணக் கஷ்டத்தை சகித்துக்கொள்ள முடியாதா?" என்கிறார்கள்.

தமிழ் மீனவர்களை சுடும்போது இலங்கைக்கு எதிராகவும்; அருணாச்சல மாநிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த சீனத்துக்கு எதிராகவும் அமைதி காத்துவிட்டு பாகிஸ்தான் எல்லையில் மட்டும் ராணுவத்தை தியாகம் செய்யவைத்து தேசபக்தியை பரப்புகிறார்களே ஏன்?

உறுப்பு இழந்த, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை வெட்டியது யார்? ஏன்?

இவர்களின் செயற்திறனற்ற திட்டங்களுக்கு ராணுவத்தை இழுப்பது ஏன்? 

மீண்டும் எந்தவொரு கார்ப்பரேட் சாமியார்களின் மார்க்கெட்டிங்கிற்கும் ராணுவம் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதி உண்டா?

உலகிலேயே ஒரு நாட்டின் ராணுவத்தை தனியாருக்கு சேவகம் செய்ய வைத்தவர்கள் இன்று தங்களை நிறுத்திக்கொள்ள "ராணுவ வீரர்களை" இழுப்பது கீழ்த்தரமான அரசியல் விளம்பரம் அல்லவா?

43 ஆண்டுகாலமாக நீளும் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்" திட்டத்தை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை? சமீபத்தில்கூட இதற்காக போராடி டெல்லியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் உயிர் துறந்தார். கார்ப்பரேட் முதலாளிகளின் தள்ளுபடி கடன்களைவிடவும் இதற்கான தொகை குறைவுதான். 

ராணுவத்தை, சாமியார்களுக்கு சேவகம் பார்க்க வைத்ததைக் கண்டிக்காத பிஜேபி ஆட்களுக்கு இப்போது மட்டும் ராணுவத்தின் மீது ஏனிந்த திடீர் அக்கறையோ?

கடவுள் மறுப்பு தேவையா?

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா, ஏன் கடவுளையும், மதத்தையும் தொடர்ந்து  விமர்சிக்க வேண்டும் , அவமானப்படுத்த வேண்டும் ? எங்கள் நம்பிக்கைகளில் ஏன் குறுக்கிட வேண்டும் ? 

இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் பலரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  உண்மையில் பெரும்பாலான மக்களுக்கு இது பற்றியெல்லாம்  கவலையில்லை. பக்தியை லாபமாக , வாக்காக , அதிகாரமாக  மாற்ற நினைக்கிறவர்களுக்குத்தான் இது எப்போதும் தலையாயப் பிரச்சனை.

கடவுளை, பக்தியை, வழிபாடுகளை, உங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்பதென்பது பகுத்தறிவு என்கிற திமிரிலோ, தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவோ , உங்களை சங்கடபடுத்தி அதன்வழி குரூர மகிழ்ச்சி கொள்ளவோ இல்லை. பகுத்தறிவின் அடிப்படையே மானுட நலனும் சமத்துவமும்தான்.

உங்கள் பக்தி எல்லோருக்குமானதாகவும்  அன்பை, சமத்துவத்தை பரப்புவதாகவும் இருக்குமானால் அது குறித்து கவலையில்லை . ஆனால் மதங்கள் அப்படித்தான் இருக்கிறதா?

* பெரும்பாலான ஆண்களும் , ஒட்டுமொத்த பெண்களும் கடவுள் இருக்கும் கருவறைக்கு போக தகுதியில்லாததாக உங்களை ஒரு மதம் சொல்லுமானால், அதை ஏனென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. 

* உலகின் சரிபாதி இருக்கும் பெண்களை ஆலய குருக்களாகவோ , ஒரு பெண்ணை போப்பாண்டவராகவோ தேர்ந்தெடுக்க பெண்களுக்கு தகுதியில்லை என்று ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏனென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* ஒற்றை வார்த்தையில் திருமணத்தை முறிக்க கூடிய அதிகாரத்தை ஆணுக்கு கொடுக்கும் பாகுபாடு , பெண்களை தங்களின் விருப்ப வாழ்கையை தேர்ந்தெடுக்க உரிமை தராத ஒரு கட்டமைப்பு ,கடவுளை தொழும் மசூதிகள் , தர்காக்களில் எல்லாம் பெண்களை அனுமதிக்க முடியாது, நீங்கள் தனியே தொழுது கொள்ளுங்கள என்றெல்லாம் ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏன் என்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. 

அன்பையும்  சமத்துவத்தையும் தான் உங்கள் மதங்கள் போதிக்கிறதென்றால், வரலாற்றின் சிலுவைப்போர்கள் தொடங்கி , இஸ்லாமிய அடிப்படைவாத தற்போதைய வன்முறைகள் , இந்தியாவில் நடைபெற்று வரும் 
இந்து – இஸ்லாம், இந்து - கிறிஸ்தவ வன்முறைகள் வரை தொடர்வதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா காரணம் ? மூடநம்பிக்கைகளில் சிக்க வைத்து,  மனிதனை உருத் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கும் கருவி மதம் தவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?

மதம், பக்தி, நம்பிக்கை இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருக்குமானால் , அது நான்கு சுவர்களுக்குள் இருக்குமானால் அதில் தலையிட நிச்சயம் யாருக்கும் உரிமையில்லை . 

ஆனால் பிரம்மாண்ட மேடைகள் போட்டு  முடமான கால்களை கடவுள் நடக்க வைக்கிறார் என பிரசங்கம் என்றபெயரில் மூளைச் சலவை  செய்வதும்,
கடவுளின் சிலைகளை ஊர் முழுக்க சுற்றிசுற்றி வலம் வருவதன் வாயிலாக பெருமைப்படுவதும், 
மார்க்க விளக்க கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்துவதும் , 
பள்ளி, கல்லூரி ஒன்று விடாமல் எல்லா கடவுளர்களுக்கும் வாழ்த்து பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் , 
அடிப்படைவசதிகளான கழிப்பிடங்கள், மருத்துவமனைகள் , கல்வி நிலையங்கள்  எல்லாவற்றையும் விட வழிபாட்டுதலங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருக்குமானால் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. ஏனெனில் இதெல்லாம் நான்கு சுவர்களுக்குள் இல்லை; நாம் வாழும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

"இல்லை இல்லை இவையெல்லாம் எங்கள் உரிமை, நாங்கள் பின்பற்றியே தீருவோம் என்று சொன்னால் , உங்கள் தவறுகளை உங்கள் நலனுக்காக சுட்டிக் காட்டுவதும் எங்கள் உரிமையென்றே சொல்ல வேண்டி வரும் . "

" இல்லை இல்லை மதம் அப்படி எல்லாம் சொல்லவில்லை நீங்கள் தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்வீர்களானால் , 
வன்முறைகளில் ரத்தம் பார்க்க ஆயுதம் ஏந்திய ஏந்தும் மதவாதிகளுக்கு,
கருத்து சொன்னதற்காக உயிர் பறிக்கும் அடிப்படைவாதிகளுக்கு முதலில் ஒழுங்காக உங்கள் மதத்தைப் பற்றி  புரியவையுங்கள். அதற்குப் பிறகு கடவுள் மறுப்பாளர்கள் பற்றி கேள்வி எழுப்பலாம்." 
ஒரே கேள்வி மீதமிருக்கிறது.

சகமனிதனைக் கொன்று தீர்ப்பதன் மூலம்தான் உங்கள் கடவுள்களை மகிழ்விக்க முடியும் என்றால் அவரென்ன கடவுளா இல்லை கொள்ளைக் கூட்டத் தலைவனா ?

- யாரோ

மார்க்சிய இயங்கியல்

"பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. இந்தப் பிரபஞ்சத் தொடர்பு சம்பந்தப்பட்ட விஞ்ஞானமே இயக்கவியல். மேலும் மனித சிந்தனை, மனித சிந்தனைக்கு வெளியே உள்ள புற உலகம் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய பொதுவான விதிகளைக் கொண்ட விஞ்ஞானமே இயக்கவியல்" - ஏங்கெல்ஸ்

மார்க்சிய இயங்கியல் விதிகளில் மிக முக்கியமானவை...

01. தனித்து இருப்பது என்று எதுவும் இல்லை. அனைத்தும் சார்பு தன்மை உள்ளவையே. இறுதியானது என்று எதுவுமில்லை. மாறாதது எதுவுமில்லை.

02. எதிர்மறைகள் ஒன்றுபடுகின்றன. போராடுகின்றன. தீவிர நிலைகளில் ஒன்று ம்ற்றொன்றாக மாறுகின்றது.

03. அளவு மாற்றம் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பண்பு மாற்றம் அளவு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

04. ஒரு நிலையை மறுத்து எதிரான மற்றொரு நிலை எழுகின்றது. குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு நிலைகளும் ஒன்றிக் கலந்து புதிய நிலை ஏற்படுகின்றது.

05. வளர்ச்சி என்பதில் பழைய நிலையின் அம்சமே மீண்டும் திரும்ப வருவது போலத் தோன்றும். ஆனால் அந்த அம்சம் மேம்பட்ட அம்சமாக இருக்கும். அதாவது வளர்ச்சி என்பது ஒரு வட்டம் போல புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்புவதில்லை. திருகு சுற்றுப் போல மேலேமேலே ஏறிச் சுழன்று செல்லும்.

06. மனதில் உள்ள கருத்துதான் அனைத்துப் பொருட்களையும் படைத்தது அல்லது கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்பது தவறான கருத்து. பொருள் என்பது படைக்கப்படவே இல்லை. அது எப்போதும் இருந்து வருகின்றது. எனவே பொருளைக் கருத்தும் படைக்கவில்லை, கடவுளும் படைக்கவில்லை. கடவுள் இல்லை.

07. கருத்தைப் படைப்பதே மூளை என்ற பொருள்தான். கடவுள் என்ற கருத்தையும் கற்பனையையும் கூட மனித மூளைதான் படைத்தது. என்வே முதன்மையானது பொருளா அல்லது கருத்தா என்றால் பொருள்தான் முதன்மையானது. கருத்து இரண்டாம் பட்சமானது.

08. சமூகம் உட்பட எல்லாமே இயங்குகின்றன. மாறுகின்றன. மாறாதது எதுவுமில்லை. மாறுவதே மாறாதது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சில விதிகளின்படியே மாறுகின்றன.

இவ்வாறு "பொருளே முதன்மையானது. அனைத்துமே இயங்குகின்றன; மாறுகின்றன" என்று பகரும் தத்துவமே "இயக்கவியல் பொருள்முதல்வாதம்" என்ற மார்க்சிய கோட்பாடாகும்.

“கம்யூனிசம்” ஓர் எளிய அறிமுகம் – இரா.பாரதிநாதன்

பொதுவாக கம்யூனிசம் என்றாலே “சாத்தியமற்ற கற்பனை” என்று சட்டென பகடி செய்யும் பலரையும் நான் சிறுவயது முதலே கண்டிருக்கிறேன். அப்படி பகடி செய்யும் அவர்களெல்லாம் அதைப் படித்து உள்வாங்கி அலசி ஆராய்ந்துவிட்டு பின்னர்தான் விமர்சனம் செய்கிறார்களோ என்றும் நினைத்ததுண்டு. ஆனால், அப்படியெதுவும் இல்லை என்று பின் வளர்ந்த நாட்களில் புரிந்துகொண்டேன். 

மார்க்சியத்தை புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது, சமூக மாற்றத்தை விரும்பும் உள்ளார்ந்த ஆழ்ந்த தேடல் இருக்க வேண்டும் என்பதே முக்கியமான அடிப்படையாக நான் உணர்கிறேன். உலகில் எந்தவொரு அரசியல் தத்துவமும் இந்தளவுக்கு அறிவியல் பூர்வமான சமூகப் பார்வையை மக்களுக்குக் கொடுக்கிறதா எனத் தெரியவில்லை. இயற்கையையும் சமூக வரலாறையும் கட்டுக்கதைகளின்றி சொல்லும் சமூக அறிவியல் கல்வியான மார்க்சியத்தை நியாயப்படி பள்ளிகளில் பாடமாக்கியிருக்க வேண்டும். ஆனால் ஏறக்குறைய உலகின் எல்லா குழந்தைகளையுமே ஆளும் வர்க்க கருத்துக்களின் ஒற்றைச் சார்பாக தயாரித்து ஆளாக்கி மதம் தோய்த்து சகல வழிகளிலும் அவர்களை சுரண்டவே வழிவழியாய் முனைப்பு காட்டுபவர்கள் இதற்கு எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லைதான். 
 
சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் ஒருமுறை மார்க்சிய அடிப்படையை படிப்பது நல்லது. அப்படியான தேடலுடன் என் நட்பு வட்டத்தில் யாரேனும் இருந்தால் இந்த எளிமையான புத்தகம் அவர்களுக்கு துணை செய்யும். மிக அருமையான இந்தப் புத்தகத்தைப் பற்றி; எழுத்து நடை பற்றி; உள்ளடக்கம் பற்றி சுருக்கமாய் சொன்னால் “மிக மிக அருமை”.

புத்தகத்தின் விலை : ரூபாய் 150/- 
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்,
வெளியீடு : புலம் பதிப்பகம், 98406 03499.

புத்தகத்தின் பின்குறிப்பு…

"துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்டதாக இருக்கிறது? பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முடங்கிவிடுவதா? இல்லை அறிவியல்பபூர்வமான விடையைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை. அத்தத்துவத்தை எளிய மொழியில் யாவருக்கும் புரியும் வகையில் தொழர் பாரதிநாதன் அவர்கள் தந்திருக்கிறார். 

மார்க்சியத்தை புரிந்துகொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்"
x

16.11.16

திடீர் பொருளாதார நிபுணர்கள்...

😍😍....
"2020 க்கு முன்னாடியே இந்தியா வல்லரசாவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது" என்ற வேகத்தில் பலரும் எழுதுவதைக் கவனித்தால்.., தன் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒரே வாரத்தில் "திடீர்" பொருளாதார நிபுணர்களாக மாற்றிவிட்டிருக்கிறார் மோடி. போகிற போக்கைப் பார்த்தால் அநேகமாக "மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாரும் தேச விரோதிகள்" என்ற பிரச்சரத்திற்கு வந்துவிடுவார்கள் போலத் தெரிகிறது. 

01. வரி ஏய்ப்பு & வரி மோசடி என்பது இந்தியாவில் கிரிமினல் குற்றமாக்கப்படவில்லை.

02. பணத்தை பணமாகவே பதுக்கி வைத்திருப்பதும் இந்தியாவில் கிரிமினல் குற்றமாக்கப்படவில்லை. 

03. வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்குவதும் இந்தியாவில் கிரிமினல் குற்றமாக்கப்படவில்லை.

(எல்லாமே "CIVIL" குற்றம்தான். அதாவது அபராதம் மட்டும் உண்டு) 

04. கறுப்புப் பணத்தை ஒழிக்க 1947-லிருந்து 60-க்கும் மேலான ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  பெரும்புள்ளிகள் யாரும் இதுவரையில் தண்டிக்கப்பட்டதில்லை. அப்போதுமட்டுமல்ல, இப்போதும்கூட.

05. இந்திய உளவுத்துறையே சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ளது. உலகெங்கும் நடக்கும் வெளிநாட்டு ஒற்று வேலைக்கான பணம் இதன் மூலமாகவே இயக்கப்படுகிறது.

06. மோடியின் இந்த நடவடிக்கையின் மூலம் கள்ள நோட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படலாம். அதுகூட மீண்டும் வரும். மீண்டும் வராமல் தடுக்க வலுவான தடுப்புச் செயல்முறை வேண்டும். (100 ரூ கள்ள நோட்டுகள் தற்சமயத்தில் எளிமையாக மாற்றும் சூழல்)

07. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை சுழற்சிக்கு கொண்டுவரலாம். ஆனால் வங்கிகளில் குவியும் இந்தப் பணம் மீண்டும் மல்லையா, அம்பானி, அதானி போன்ற ஏழைகளுக்கு கடனாகக் கொடுக்கப்பட்டால் எந்தப் பயனுமில்லை.

08. தவறு செய்தால் எவனாயிருந்தாலும் தப்பிக்க முடியாது, தண்டனை உறுதி என்ற பய உனர்வு "MP, MLA, IAS, IPS, சாமியார்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள்" என்று அனைவருக்கும் ஏற்படுத்தாத வரையில் கறுப்புப் பணத்தின் வாலை அசைக்கவே முடியாது.

09. "நாட்டுக்காக இதைக்கூட சகிக்க முடியாதா?" என பல சிரிப்பு தரும் மொக்கை உதாரணங்களையெல்லாம் சொல்லி மோடி செயலை ஆதரிப்பவர்கள் முதலில் பதவியேற்றதும் கறுப்புப் பணத்தை ஒழிக்க மோடி அரசு அமைத்த ஆணையம் உச்சநீதி மன்றத்தில் என்ன கோரிக்கை வைத்தது என்பதை அறிந்துகொள்ளவும். 

10. லஞ்சமும் ஊழலும்தான் கறுப்புப் பணத்தின் வேர். தேர்தல்தான் கறுப்புப் பணத் திருவிழா. இதில் கடும் தண்டனை முறைகள் செயற்படுத்தப்பட வேண்டும்.

ஒரு அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது, அந்த அரசின் கடந்த கால செயல்பாடுகளைக் கொண்டுதான் என்ற பார்வையிலேயே இந்தப் பதிவு.

"சோத்த ஆக்கிட்டு அப்புறம் எலையைப் போடனும், எலையப் போட்டுட்டு இப்பதான் ஒலைய வெக்கிறோம், நேரமாவும்னு" சொல்றது நல்ல நிர்வாகமா நியாயமாரே?...

"கறுப்புப் பணம்" - ரமணன்

"கறுப்புப் பணம்" – ரமணன்
 
“லஞ்சமும் ஊழலும் கறுப்புப் பணம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்” 

• எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு?

• ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு கறுப்புப் பணம் மிகப் பெரிய பிரச்சினையா?

• கறுப்புப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் அவர்களே ஆளுங்கட்சியாக மாறும்போது எதுவும் செய்வதில்லை. ஏன் இந்த முரண்?
 
• சுவிஸ் வங்கிகளில் ஏராளமான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்து வருகின்றன. அரசாங்கம் தலையிட்டு இதை மீட்டெடுக்க முடியாதா? 

• நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாதா? 

• சில பெரிய வங்கிகள் மற்றும் பெரும்புள்ளிகள் ஹவாலா முறையில் பணம் ஈட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை என்னாயிற்று? இதுவரை யாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா?

• வெளிநாடுகளில் இந்தப் பிரச்சினை இல்லையா? அங்கெல்லாம் எப்படி கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்துகிறார்கள்?

• ஏன் இந்திய அரசால் கறுப்புப் பான புள்ளிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட முடியவில்லை? 

இவ்வாறான பல கேள்விகளுக்கான பதிலை இந்தச் சிறிய புத்தகம் உங்களுக்குத் தெரிவிக்கிறது. தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கவும்.

புத்தகத்தின் விலை ரூபாய் 80/-
 .
புத்தகம் கிடைக்க தொடர்புக்கு : 9940448599, Guhan Kannan,
https://www.facebook.com/wecanbook.distributors (வீ கேன் புக்ஸ்)

15.11.16

பொதுசிவில் சட்டம் (UNIFORM CIVIL CODE)

அரசியல் சாசனம் 25-ல் உட்பிரிவாக, இந்து மத உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று சங்கரமடத்தின் பலத்தால் எப்போதோ சட்டம் இயற்றிவிட்டார்கள். இன்றுவரையில் இதைக் காட்டித்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் ஆணைக்கு தடை பெறுகிறார்கள். கருவறைக்குள் வரக்கூடாது என்பதே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதுதான். அரசியல் சாசனம் 17 தீண்டாமையை எதிர்க்கிறது. ஆனால் உண்மை என்ன? 

பொதுசிவில் சட்டத்திற்காக முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பது தேவையற்றது. முற்போக்குவாதிகள் எல்லா மத அடிப்படையிலிருந்து விலகி நிற்பதுதான் சரியானது. 

பொதுசிவில் சட்டம் வேண்டும் என்போர், ஹிந்து மக்கள் அனைவரும் சமம்... நான் ஜாதிய வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை... அனைத்து ஜாதியினரும் பெண் கொடுத்து பெண் எடுப்பதை ஆதரிக்கிறேன்... கோயில்களில் யாவருக்கும் பூஜை செய்யும் உரிமை... ஆணவக்கொலைகளுக்கு கடும் தண்டனைச் சட்டம்... வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜாதி மத அமைப்புக்கள் இயங்கத் தடை... இப்படி இதையெல்லாம் கொண்டுவருவர கோருவார்களா? இதற்காகவெல்லாம் போராடுவார்களா? இதுநாள்வரையில் ஏன் போராடவில்லை? 

ஹிந்து மத உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க அதிகாரமற்ற சட்டத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இன்னொரு மத விவகாரங்களில் மட்டும் மூக்கை நுழைக்க நினைப்பது சரியா?

பொதுசிவில் சட்ட எதிர்ப்பாளர்கள் இதற்கு வலுவாக குரல் கொடுப்பதை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்களுக்காக என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தால் படிப்படியாக ஆதரவு நீர்த்துப்போகவே செய்யும். சாமானிய இந்துகூட பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கத் தொடங்குவான். 

எனவே, இந்து மதத்துக்குள் Uniform code கொண்டுவரத் தயாரா என்று கேள்வி பரவலாக்கப்பட்டால் உண்மையான பூனைக்குட்டி அம்பலப்பட்டுவிடும். அல்லது அமைதியாகப் பதுங்கிவிடும். 

அதேபோல், தமக்கு ஆபத்து வரும்போது மட்டும் குரல் கொடுக்காமல் இஸ்லாமிய உரிமை பேசுவோர் வெகுஜன பிரச்சினைகளுக்காக எல்லா அமைப்புகளோடும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மதத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு மத அடையாளமற்று மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு எதிராக வலுவான கட்டமைப்புக்கு உழைக்க வேண்டும். இதுவே நிரந்தர நன்மை தரவல்லது.

முற்போக்காளர்கள் எல்லா மத அடையாளங்களிலிருந்தும் விலகி நின்று தங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதே நிகழ்காலத்திற்கு மிக அவசியமானது.

13.11.16

புது வணிகம்

🏹

"பணத்துக்காக பணத்தையே விற்கும் வாங்கும் புதுவிதமான வணிக முறை தற்போது இந்தியாவில்"

ரூபாய் நோட்டு மாற்றம் பின்னணி என்ன?

🏹
பெரிய முதலைகளிடம் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் வாராக்கடன் என்று அறிவித்த வங்கிகள் மேற்படி தொடர்ந்து இயங்க மூலதனமின்றி திவாலாகும் நிலைக்கு வர இதை சமாளிக்கத்தான் இந்தக் கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம் என்றும் வெளிநாட்டு வங்கிகள் வெளியிட்ட பதுக்கல் முதலைகளின் பெயர்ப் பட்டியல் & உள்நாட்டு வங்கிகள் அறிவித்த வாராக்கடன்களின் விவரங்களை ஏன் மோடி அரசு இதுவரையில் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுகிறது.

12.11.16

2000 ரூ தாளில் எழுத்துப் பிழை

☹️☹️☹️
ஹிந்தி & மராத்தியில் எழுதியிருப்பதைக் கவனிக்கவும்.

"தோ ஹஜார் ரூப்யா"
"தோ ஹஜார் ரூப்யே" 
என்பதற்குப் பதிலாக 

"தோன் ஹஜார் ரூப்யா"
"தோன் ஹஜார் ரூப்யே" என்று எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

 (உருதுவிலும் தவறாக இருக்கிறது என்று பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்)

சங்கதி தெரியுமா?

புதிய 2000 ரூபாய் தாளில் ஏதோ ப்ளூடூத் மெமரி கார்ட் எல்லாம் இயங்கும் வசதி இருக்கிறதாம். எஸ்.வி.சேகர் ரசிகர் மன்றத்து ஆட்கள் பலர் அதில் இயர்செட் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். சேட்டிலைட் மூலமா இயங்கும் டிவி / ரேடியோ சேனல் வசதியும் இருக்கிறதாம். 

🤔🤔 ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் வங்கிகளில் வாங்கியிருப்பார்களோ...?

ரூபாய் நோட்டுகள் மாற்றம்

😇....

இனிமே யாராவது கருப்புப் பணத்தை ஒழிக்கனும்னு கேப்பீங்க...?
பிச்சுப்புடுவேன் பிச்சு...

டாஸ்மாக் - மீண்டும் வருவோம்...

"டாஸ்மாக்ல கூட்டம் கொறஞ்சிடுச்சி" என்று எங்களை குறைத்து மதிப்பிட்டு அவமானப்படுத்தும் ஊடகங்களே உங்களைப்பார்த்து ஒன்றை எச்சரிக்கையுடன் சொல்லிக் கொள்கிறோம்....!!!

"நாங்கள் பேங்க் முன்னால் வரிசையில் நிற்பது தற்காலிகமாகத்தான்; நிரந்தரமாக இல்லை. நோட்டை மாற்றிக்கொண்டு விரைவில் வருவோம்... வருவோம்... 

பாட்டிலுக்கு 5/- ரூ கருப்பு பணத்தைத் தருவோம். சாராய ஆலை முதலாளிகளை... அதிகாரிகளை... விற்பனையாளர்களை... அரசியல்வாதிகளை... கைவிடமாட்டோம்"

10.11.16

இது தேவைதான்...

அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையே ஆட்டம் காணுவதால் நாட்டில் ஜாதி வெறி, மத வெறி, இன வெறி எல்லாம் தற்போது அடக்கி வாசிக்கப்படுகிறது. வழக்கமான நிலைக்கு நாடு திரும்பியதும் மீண்டும் ஆங்காங்கே இந்த வெறிகளும் துளிர்விடும். வாழ்வதற்கு இவை எதுவுமே அவசியமில்லை. ஆக மனிதன் ஆபத்தில்லாத சூழலில்தான் வெட்டிப் பிரச்சினைகளில் ஈடுபடுகிறான்.

எப்போதும் நாடு ஒருவிதமான அபாய சூழலில் இருந்தால்தான் பிரச்சினையில்லாமல் வாழ்வதைப் பற்றி இங்கே மனிதன் நினைக்கிறான். மக்களுக்கிடையிலான பேதங்கள் தற்காலிகமாக மறக்கப்படுகிறது. பெரிய பிரச்சினை வரும்போது இதெல்லாம் தேவையற்ற சிறிய பிரச்சினை ஆகிவிடுகிறது.

எனவே தயவுகூர்ந்து மாதாமாதம் அடுத்தடுத்து அதிரடியான உத்தரவுகளால் மக்களை பயமுறுத்திக் கொண்டே இருக்குமாறு மாநில அரசையும் மைய அரசையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படித்தான் இலைமறை காயாக தற்போதுவரையில் ஆட்சி செய்துகொண்டிருந்தாலும் இதை சற்று வெளிப்படையாக இம்மாதிரி ஒரே சமயத்தில் எல்லோரையும் அச்சுறுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்

👇👇👇 கவனிக்க...

கிராமங்களில் பலரும் தம் இறந்துபோன முன்னோர்களின் படங்களை பூஜையறையில் வைத்து வணங்குவார்கள். அப்படங்களில் பெரும்பாலும் 500 ரூ, 1000 ரூ தாள்களை வைத்திருப்பார்கள். யாரேனும் கவனக்குறைவால் அந்த நோட்டுக்களை மாற்ற மறந்துவிடலாம். 

விவரம் தெரிந்தவர்கள் அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்...

9.11.16

ரூ 500, 1000...... ஒழிப்பு. இதனால் என்ன நன்மை?

01. இதனால் கருப்புப் பணம் ஒழியும் என்பது அறியாமை.

02. கள்ள நோட்டுக்கள் மட்டுமே முழுமையாய் ஒழியும்.

03. இதை எளிமையாகவே திட்டமிட்டு செயற்படுத்த வழி இருக்க, இந்தத் திடீர் அறிவிப்பு ஒரு அரசியல் யுக்தியே. நாட்டில் அனைவரும் இன்று மோடி பற்றி பேசுவார்கள். அவ்வளவுதான். 

04. வருமானத்தை மீறி செல்வத்தைக் குவித்திருக்கும் நீதிபதிகள், அரசியல்வாதிகள் & அடிப்பொடிகள், காவல்துறை & ராணுவ உயர் அதிகாரிகள், இன்னபிற திருடர்கள் கொள்ளையர்கள் யாருக்கும் இதனால் ஒரு பிரச்சினையுமில்லை. 

05. ஏனெனில், கருப்பு பணம் பதுக்குவோர் அரசைவிட அறிவாளிகள், அல்லது அவர்கள்தான் இங்கே அதிகார மையங்கள்.

06. பணம் கையில் வைத்திருக்கக் கூடாது. எல்லாமே அவரவர் வங்கிக் கணக்கு மூலம்தான் பணப் பரிமாற்றம் என்று தீவிர கட்டுப்பாடு வந்தால் மட்டுமே மீண்டும் கருப்புப் பணம், லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்த இயலும். இதை பாமர மக்கள் பாதித்துவிடாத வண்ணம் செயற்படுத்த வேண்டும்.

07. 10% வீத அதிகார கொள்ளையர்களைப் பிடிக்க 90% மக்கள் பாதிப்படைய வைப்பது செயற்திறனற்ற முறையே. பாராட்ட ஒன்றுமில்லை. 

08. பாராட்டுகிறோம் எனில், பாதுகாப்பு குறைபாட்டால் இந்தியாவில் இருக்கும் கார்கில் பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை துரத்திவிட்டு "போரில் வெற்றி" என்று மடைமாற்றியதைப் போன்ற இன்னொரு விளம்பரம்தான் இது. 

09. சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எதற்கெடுத்தாலும் எதிர்ப்பது மாற்றத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.

8.11.16

கம்யூனிசம்...

"இந்தப் பூவுலகம் உருவானது மனித குலம் சுதந்திரமாய் உலவிக்கொண்டும் ஆணும் பெண்ணும் சந்தோஷமாய் இணை சேர்ந்து வாழத்தானே! பிறகு ஏனிந்தத் தடைகள்? இதையெல்லாம் கொண்டுவந்தவர்கள் யார்? அவர்கள் அப்படிச் செய்வதற்கான காரணங்கள் என்ன?"

- தோழர் பாரதி நாதன்,
"கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்" நூலின் முகப்புரையில்...

ரூ 500, 1000 தாள்கள் ஒழிப்பு

ரூ 500 / 1000

இந்தியாவில் முதல் முறையாக
"இருப்பவர்களுக்கு கவலை
இல்லாதவர்களுக்கு சிரிப்பு"

ரூ 500, 1000 தாள்கள் ஒழிப்பு

😇
நியாயமா பார்த்தா கள்ள நோட்டு வெச்சிருக்கிறவந்தான் கவலப்படனும், ஆனா நல்ல நோட்டு வெச்சிருக்கிறவனையும் கவலப்பட வெச்சிட்டிங்களே ஆபிசர்...

ரூ 500, 1000 தாள்கள் ஒழிப்பு

மறுபடியும் லஞ்சம், ஊழல், சொத்துக் குவிப்பு தொடராதபடி, கருப்பு பணம் பெருகாதபடி, கள்ள நோட்டு வெளிவராதபடி... நிரந்தரமான தீர்வை செயல்படுத்தனும். 

முக்கியமா, இது "வெட்டி வேலை"யா ஆகாம இருக்கனும்.

ரஷ்யப் புரட்சி நூற்றாண்டு

வரலாற்றில் ஒரு மகத்தான நாள் - நவ. 07

1917 நவம்பர்-7 புரட்சி வெற்றி பெற்றது. நவம்பர்-8 தோழர் லெனின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டவுடன் போட்ட முதல் உத்தரவு இதுதான்.

" மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் வேறு எதையும்விட மிகப் பெரிய குற்றம் போர் ஆகும்! எனவே புதிய ரஷ்ய அரசு அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளது.

அனைத்து நாட்டு மக்களுக்கும் நியாயமான வகையில் இந்த அமைதி ஒப்பந்தம் அமைய வேண்டும். எந்த நாட்டையும் வேறு எந்த நாடும் ஆக்கிரமிக்காத வகையிலும், எந்த நாடும் தனது நாட்டை இழக்காத வகையிலும் இந்த அமைதி ஒப்பந்தம் அமைய வேண்டும்.

ரஷ்யாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முன் வருமாறு சம்பந்தப்பட்ட அரசுகளையும், மக்களையும் அழைக்கிறோம்"

இதுதான் அவர் வெளியிட்ட முதல் உத்தரவும், அறிக்கையும்.

ஏன் இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டார் எனில் மண்ணின் மைந்தர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்து, அவர்களது ரத்தத்தை உணவாகக் குடித்ததில் தான் நவீன முதலாளித்துவத்தின் வரலாறு தொடங்குகிறது. ஏனெனில் அதன் வரலாற்றின் துவக்கமே நாடுகளை ஆக்கிரமிப்பதே.

நவம்பர் புரட்சி
1917-2017

பெரிது

"கையில் இருக்கும் 500 ரூபாயைவிட
நேற்று தொலைத்த 100 ரூபாய்
பெரிதாகவே இருக்கிறது"