பொதுவாக கம்யூனிசம் என்றாலே “சாத்தியமற்ற கற்பனை” என்று சட்டென பகடி செய்யும் பலரையும் நான் சிறுவயது முதலே கண்டிருக்கிறேன். அப்படி பகடி செய்யும் அவர்களெல்லாம் அதைப் படித்து உள்வாங்கி அலசி ஆராய்ந்துவிட்டு பின்னர்தான் விமர்சனம் செய்கிறார்களோ என்றும் நினைத்ததுண்டு. ஆனால், அப்படியெதுவும் இல்லை என்று பின் வளர்ந்த நாட்களில் புரிந்துகொண்டேன்.
மார்க்சியத்தை புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது, சமூக மாற்றத்தை விரும்பும் உள்ளார்ந்த ஆழ்ந்த தேடல் இருக்க வேண்டும் என்பதே முக்கியமான அடிப்படையாக நான் உணர்கிறேன். உலகில் எந்தவொரு அரசியல் தத்துவமும் இந்தளவுக்கு அறிவியல் பூர்வமான சமூகப் பார்வையை மக்களுக்குக் கொடுக்கிறதா எனத் தெரியவில்லை. இயற்கையையும் சமூக வரலாறையும் கட்டுக்கதைகளின்றி சொல்லும் சமூக அறிவியல் கல்வியான மார்க்சியத்தை நியாயப்படி பள்ளிகளில் பாடமாக்கியிருக்க வேண்டும். ஆனால் ஏறக்குறைய உலகின் எல்லா குழந்தைகளையுமே ஆளும் வர்க்க கருத்துக்களின் ஒற்றைச் சார்பாக தயாரித்து ஆளாக்கி மதம் தோய்த்து சகல வழிகளிலும் அவர்களை சுரண்டவே வழிவழியாய் முனைப்பு காட்டுபவர்கள் இதற்கு எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லைதான்.
சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் ஒருமுறை மார்க்சிய அடிப்படையை படிப்பது நல்லது. அப்படியான தேடலுடன் என் நட்பு வட்டத்தில் யாரேனும் இருந்தால் இந்த எளிமையான புத்தகம் அவர்களுக்கு துணை செய்யும். மிக அருமையான இந்தப் புத்தகத்தைப் பற்றி; எழுத்து நடை பற்றி; உள்ளடக்கம் பற்றி சுருக்கமாய் சொன்னால் “மிக மிக அருமை”.
புத்தகத்தின் விலை : ரூபாய் 150/-
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்,
வெளியீடு : புலம் பதிப்பகம், 98406 03499.
புத்தகத்தின் பின்குறிப்பு…
"துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்டதாக இருக்கிறது? பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முடங்கிவிடுவதா? இல்லை அறிவியல்பபூர்வமான விடையைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை. அத்தத்துவத்தை எளிய மொழியில் யாவருக்கும் புரியும் வகையில் தொழர் பாரதிநாதன் அவர்கள் தந்திருக்கிறார்.
மார்க்சியத்தை புரிந்துகொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்"
x
No comments:
Post a Comment