அரசியல் சாசனம் 25-ல் உட்பிரிவாக, இந்து மத உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று சங்கரமடத்தின் பலத்தால் எப்போதோ சட்டம் இயற்றிவிட்டார்கள். இன்றுவரையில் இதைக் காட்டித்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் ஆணைக்கு தடை பெறுகிறார்கள். கருவறைக்குள் வரக்கூடாது என்பதே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதுதான். அரசியல் சாசனம் 17 தீண்டாமையை எதிர்க்கிறது. ஆனால் உண்மை என்ன?
பொதுசிவில் சட்டத்திற்காக முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பது தேவையற்றது. முற்போக்குவாதிகள் எல்லா மத அடிப்படையிலிருந்து விலகி நிற்பதுதான் சரியானது.
பொதுசிவில் சட்டம் வேண்டும் என்போர், ஹிந்து மக்கள் அனைவரும் சமம்... நான் ஜாதிய வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை... அனைத்து ஜாதியினரும் பெண் கொடுத்து பெண் எடுப்பதை ஆதரிக்கிறேன்... கோயில்களில் யாவருக்கும் பூஜை செய்யும் உரிமை... ஆணவக்கொலைகளுக்கு கடும் தண்டனைச் சட்டம்... வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜாதி மத அமைப்புக்கள் இயங்கத் தடை... இப்படி இதையெல்லாம் கொண்டுவருவர கோருவார்களா? இதற்காகவெல்லாம் போராடுவார்களா? இதுநாள்வரையில் ஏன் போராடவில்லை?
ஹிந்து மத உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க அதிகாரமற்ற சட்டத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இன்னொரு மத விவகாரங்களில் மட்டும் மூக்கை நுழைக்க நினைப்பது சரியா?
பொதுசிவில் சட்ட எதிர்ப்பாளர்கள் இதற்கு வலுவாக குரல் கொடுப்பதை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்களுக்காக என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தால் படிப்படியாக ஆதரவு நீர்த்துப்போகவே செய்யும். சாமானிய இந்துகூட பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கத் தொடங்குவான்.
எனவே, இந்து மதத்துக்குள் Uniform code கொண்டுவரத் தயாரா என்று கேள்வி பரவலாக்கப்பட்டால் உண்மையான பூனைக்குட்டி அம்பலப்பட்டுவிடும். அல்லது அமைதியாகப் பதுங்கிவிடும்.
அதேபோல், தமக்கு ஆபத்து வரும்போது மட்டும் குரல் கொடுக்காமல் இஸ்லாமிய உரிமை பேசுவோர் வெகுஜன பிரச்சினைகளுக்காக எல்லா அமைப்புகளோடும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மதத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு மத அடையாளமற்று மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு எதிராக வலுவான கட்டமைப்புக்கு உழைக்க வேண்டும். இதுவே நிரந்தர நன்மை தரவல்லது.
முற்போக்காளர்கள் எல்லா மத அடையாளங்களிலிருந்தும் விலகி நின்று தங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதே நிகழ்காலத்திற்கு மிக அவசியமானது.
No comments:
Post a Comment