19.11.16

கனவு...

சரியோ... தவறோ... ஒரு நாடு சிக்கலில் அகப்படும்போது கோடானு கோடி தொண்டர்களை வைத்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

வெறுமனே விமர்சனம் செய்வதையா? அல்லது அடுத்த தேர்தல் வரும் வரை அரசியல் செய்ய காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதையா? அல்லது மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்வதையா?

பதவியில் இல்லாத கட்சிகளால் நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன லாபம்?

அரசியலில் இருப்பவர்களுக்கெல்லாம் வருமானம் எங்கிருந்துதான் வருகிறது?

சரியும் அரசு நிர்வாகத்தை சீர் செய்ய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் சொல்லி மக்களை நெருக்கடிகளிலிருந்து மீட்க துணை நிற்பதை தவிர்த்துவிட்டு வெறும் காட்டுக்கூச்சல் போடுவது மட்டும் ஏன்?

இவர்கள் எல்லாரும் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் மட்டும் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிடுமா?

ஜாதியின் பேரால் மதத்தின் பேரால் இனத்தின் பேரால் மூளைச் சலவை செய்யும் மேடைப்பேச்சின் பேரால் ஆளாளுக்கு லட்சக் கணக்கான முட்டாள்களைப் பிடித்து வைத்துக்கொண்டு செயல் வடிவம் இல்லாமல் போடும் கூச்சலால் மட்டும் என்ன நன்மை?

எவ்வளவு நெருக்கடியிலும் மக்கள் சகிப்புத் தன்மையுடன் அரசிடம் பணிந்து போகக் காரணம் எதிர்க்கட்சிகளின் மீதுள்ள வெறுப்பினாலும்தான். 

அந்தந்த பகுதியிலுள்ள எல்லா கட்சி பொறுப்பாளர்களும் குறைந்தபட்சம் வங்கிகளின் வரிசைகளையாவது நெறிப்படுத்த முனையலாம். அல்லது ஆளுங்கட்சியைவிட தாங்கள் எப்படி சிறந்தவர்கள் என்பதை இயன்ற வழியில் செயலில் நிரூபித்துக் காட்டலாமே.

அடுத்த தேர்தல் எப்போது வரும்?, இருப்பவனை தள்ளிவிட்டு மடத்தை எப்போது பிடிக்கலாம்? என்பதே எல்லாக் கட்சிகளுக்கும் நோக்கமாயிருக்கிறது. 

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 05% பேர் நேரடியாக முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார்கள். இவர்கள்தான் அரசுப் பணத்தை கொள்ளையடிப்பதும் சுரண்டிப் பிழைப்பதும். அல்லது பொதுவாழ்க்கை என்ற பேரில் டெண்டர் எடுப்பதும் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் செய்வதும் இவர்கள்தான். 

ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இவர்களேதான் மாறிமாறி வருகிறார்கள். 

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களாட்சிக்கு இரு கண்கள். ஆனால் இரண்டும் நம் நாட்டுக்கு எப்படி இருக்கிறது?

நாட்டில் குழப்பம் நீடிக்க வேண்டும், ஒன்று சேர்ந்து போராடினால் எவனாவது பேரெடுத்துவிடுவான் என்பதே எல்லா கட்சிகளின் எதிர்பார்ப்பாய் தெரிகிறது. 

தேர்தல் முடிவு தெரிந்ததிலிருந்து அடுத்தத் தேர்தல் தேதி அறிவிக்கும் வரையில் எல்லா கட்சிகளையும் தடை செய்துவிட வேண்டும். கொடிக்கம்பங்களை இல்லாதொழிக்க  வேண்டும். பொதுப்பிரச்சினைகளுக்காக மட்டும் மக்கள் இணைந்து போராட உரிமை இருக்க வேண்டும். நிரந்தர தேர்தல் சின்னங்கள் ஒழிக்கப்பட வேண்டும். பதவிகளை திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். 

திருடர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்கள். அல்லது அதிகாரத்திற்கு வந்ததும் திருடர்களாகிவிடுகிறார்கள். 

சுயமாய் சிந்தித்து வாக்களிக்கும் மக்கள் உருவாகுமளவுக்கு அறிவியல் கல்வியை பரவலாக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் மக்களை பிளவுபடுத்தி பகை வளர்க்கும் ஜாதி மத இன அமைப்புகள் இயங்குவதையாவது முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

No comments:

Post a Comment