கமல்ஹாசன் அவர்களின் tweet போல, தெளிவான குழப்பமாக ஒரு கவிதை எழுத நினைத்தேன். அந்தளவுக்கு இயலவில்லை. எனினும் யாருக்கேனும் புரிந்தால் மகிழ்ச்சி.
*ஒரு நாடோடியின் பாடல்*
உலகை; வாழ்வை; இயற்கையை
ரசிக்க வந்ததை அவன் மறந்துவிட்டான்
நிரந்தரமானவன் என்று
நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு
மீண்டும் பிறந்து வரமாட்டோம்
என்பது மட்டும் ஒருநாள் புரிந்தது
ஜாதி மதம் இனம் மொழி
ஆன்மா இறை பண்பாடு
சுற்றம் நட்பு பகை துரோகம்
பாசம் தியாகம் உதவி
இலக்கியம் அறிவு ஆய்வு
பொருள் தேடல் புகழ்
மரியாதை கௌரவம் எல்லாமும்
வாழ்நாளை உறிஞ்சியதாக
உணர்ந்த வேளையில்
வாழ்வை ரசிக்கத் துவங்குகிறான்
அதேவேளை
சாம்பலாகவோ புழுவாகவோ
கூடியவிரைவில் அவன்
மாறியாக வேண்டிய காலம்
அவனை நெருங்கிவிட்டிருந்தது
நிறைவேறாத ஆசைகளுடனே
சவக்குழிக்குள் வைக்கப்படும்
அநேக பிணங்களை கவனிக்கிறான்
ஜாதி மதம் மது மண் பொன்னுக்காய்
வாழ்க்கையை வீணடித்துவிட்டதாய்
எலும்புக்கூடுகள் பேசிக்கொள்வதை
கூர்ந்து கேட்கிறான்
இலக்கற்று பறக்கும் காற்றாடிதான்
வாழ்வை ரசிப்பதாய்
முடிவுக்கு வருகிறான்
மௌனமும் புன்னகையும் பூத்த புத்தனின்
எட்டு பரிந்துரைகளை மட்டும்
மீதமிருக்கும் வாழ்க்கைக்கென
தற்காலிகமாக ஏற்கிறான்
இப்போதெல்லாம் அவன்
தன் புன்னகையைக் கொண்டு மட்டும்
உறுதிப்படுத்திக்கொள்கிறான்
தான் வாழ்ந்துகொண்டிருப்பதை
No comments:
Post a Comment