எப்போதும் அரசியல் பற்றி முகநூலில் எழுதுவதும் விவாதிப்பதும் வெட்டி வேலை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மை இதுவல்ல. முதலில் பேசுவதற்கான; எழுதுவதற்கான; கருத்து சொல்வதற்கான பயத்தை மக்களிடமிருந்து போக்கினால்தான் அவரவர் பிரச்சினைக்கு அவரவர்களே போராட முனைவார்கள்.
ஆட்சி செய்யும் பலரையும் இப்படித்தான் கடந்த காலத்தில் பயந்து பேசாமல் இருந்ததால்தான் திருடர்கள் எல்லாம்கூட இரும்பு தலைவர்களாய் காட்சி அளித்தார்கள்.
அடுத்தவர்களுக்கு பிரச்சினை வரும்போது நாம் குரல் கொடுக்கத் தவறினால் நமக்கு பிரச்சினை வரும்போதும் இதே நிலைதான் நீடிக்கும்.
நீங்கள் ஏதோவொரு போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றாலும்கூட பரவாயில்லை. எதுபற்றியும் கருத்து சொல்ல பயப்படாதீர்கள்.
யாரைக்கண்டு எதைக்கண்டு மக்கள் பயப்படுகிறார்களோ, எது அல்லது யார் மக்களை அச்சமூட்டுகிறார்களோ அதை கருத்துக்களால் உடையுங்கள். இது வேறு யாருக்கோ நீங்கள் செய்யும் உதவி மட்டும் அல்ல, இந்த நாட்டிலே உங்களுக்குப் பின் வாழப்போகும் உங்கள்வீட்டு பிள்ளைகளுக்குமான ஒரு பாதுகாப்பான சுதந்திர ஏற்பாடுதான்.
விமர்சனமே ஒரு போராட்டம்தான். தினசரி உங்களுக்கு நியாயமாகத் தோன்றும் ஒரு 4 சம்பவங்களையாவது விமர்சியுங்கள். இதற்கும்கூட உங்கள் கல்வியும் அறிவும் பயன்படவோ தைரியமூட்டவோ உதவவில்லை எனில் போராடுகிறவனையோ விமர்சிக்கிறவனையோ கண்டு முகம் சுளிக்காதீர்கள். குறைந்தபட்சம் ஊக்கமாவது படுத்துங்கள். அவர்கள் உங்களுக்காகவுமே அதை செய்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம், வசதிகள் எல்லாம்கூட இப்படி கண்ணுக்குத்தெரியாத பல பேர்களின் உழைப்பிலிருந்து கிடைத்ததுதான்.
இதன்மூலமே போராட ஒன்று கூடுவதற்கான அரசின் தடைகளை உடைக்க முடியும். மக்களின் போராட்ட உணர்வை தக்கவைக்க முடியும்.
மக்கள் "ஒன்றுகூடி போராடும்" சுதந்திரத்தை தொடர்ந்து பாதுகாத்தால் எல்லோரும் இனி தனித்தனியாக போராட வேண்டிய அவசியமில்லை.
99% வீதம் உள்ள பொதுமக்கள், வெறும் 05% வீதம் உள்ள பணக்காரர்களையும் 01% வீத எண்ணிக்கை உள்ள ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கண்டு பயப்படத் தேவையில்லை. அவர்கள்தான் மக்களைக் கண்டு பயப்பட வேண்டும். நமக்கு ஒத்துவராத சட்டங்களை எதிர்க்கவோ மாற்றவோ தடுப்பதற்கு அவர்கள் யார்?
பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அடங்கிப் போகும் ஊடகங்கள் உள்ள நாட்டிலே எளிய மக்களின் பலம் "விமர்சிக்கும் உரிமை" ஒன்று மட்டும்தான். இதையும் நாம் பயன்படுத்தாது போனால் நாளை நம் பிள்ளைகளும் அடிமைகளாகத்தான் வாழ முடியும்.
எனவே...
மௌனத்தை கலையுங்கள்...!
அநீதிகளை தொடர்ந்து விமர்சியுங்கள்...!!
போராடுபவர்களை ஊக்கப்படுத்துங்கள்...!!!
No comments:
Post a Comment