3.9.17

கற்காலம் முடிந்துவிடவில்லை

மக்கள் பொதுவாக பரிணாம வளர்ச்சி அடைந்தபடி இருந்தாலும் இதில் மிகவும் சொற்பமான சிலர் மட்டும்தான் தன் அனுபவ அறிவால் சிந்தனையிலும் பேச்சிலும் நடத்தையிலும் தொடர்ந்து தங்களை முதிர்ச்சியாக வழிநடத்திக்கொண்டு சமூகத்தையும் அடுத்த பரிணாமத்திற்கு இழுத்து செல்கிறார்கள். காட்டுமிராண்டி காலம்தொட்டு வளர்ந்து வந்த எல்லா நிலையிலும் இன்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு புள்ளியிலும் நின்றுகொண்டு மேற்படி நகர்ந்து வராமல் வாழ்கிறார்கள்.

நகரத்தில் ஒரு 4 பேர் முன்னேறிவிட்டு உலகம் முன்னேறிவிட்டதாய் எண்ணிக்கொள்கிறார்கள். நம்புகிறார்கள்.

டெல்லியிலும் நகரங்களிலும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் தேர்தலில் வென்று அதிகாரத்தை அடைந்ததும் இந்த நாடும் முன்னேறிவிட்டதாகத்தான் எண்ணிக்கொள்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் இந்தியா விளம்பரமும் இவ்வகைதான். ஒரு விவசாயி தன் நகையை 26000 க்கு அடமானம் வைத்து ATM ல் பணம் எடுத்தபோது வராமல் போன 8000 ரூபாயைத் திரும்ப பெற 30 நாட்களாக அலைந்தும் பயனின்றி தவித்ததற்காய், இன்று ஒரு நகர வங்கியொன்றின் மேலாளரை சந்தித்து முறையிட்டும் பொறுப்பான பதில் இல்லை. மேற்படி நியாயம் கிடைக்க ஒரு புகார் மனு எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன்.

சொல்ல வருவது என்னவென்றால், கற்கால வாழ்க்கையிலிருந்து மனிதன் முன்னேறிய ஒவ்வொரு முறையான வாழ்க்கை முறையிலும் இன்னமும் ஒரு கூட்டமும் அல்லது பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சமூகம் சீரான வளர்ச்சி பெறவில்லை.

ஜாதி மதச் சண்டைகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஊழல், அதிகார மீறல், ஏமாற்றுதல் என்ற எல்லாமும் இன்னமும் பரிணாம வளர்ச்சி பெறாத மக்களின் உதாரணங்கள்தான்.

எல்லாவிதமான நிறை குறை கொண்ட மனிதர்களுடன்தான் நாம் வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியுள்ளது.

மனிதர்களை வெறுக்காதீர்; ஒதுக்காதீர். அவர்கள் மாறுவதற்கான வாய்ப்புக்கு, ஒரு மாற்று ஏற்பாட்டுக்கு துணையாய் இருங்கள்.

இயன்றவரையில் இயற்கையை கொண்டாடுங்கள்...!

No comments:

Post a Comment