19.9.15

பெரியார் தேவையா?

பெரியார் தேவையா? என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்கு எழுதியது இது.

எனது அறியாமை அவரைப் படித்ததாலேயே விலகியது. இன்னும் 95% மக்களுக்கு திராவிடத்தைப் பற்றி தெரியாது.

பெரும்பாலோனோர் அவரை சற்றும் படிக்காமலே விமர்சனம் செய்கின்றனர்.

எனக்கு அவரிடம் முரண்பாடுகள் உண்டு. வெறுமனே குறை கூறிக்கொண்டிராமல் மக்களுக்காக அவருக்கு நிகராகப் போராடி மாற்றம் கொண்டுவந்தவர்கள் இருப்பின் ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை.

மாற்றம் என்பது ஒரு சித்தாந்தத்தால் மட்டும் கொண்டுவர முடியாது. அது ஒரு தொடர்ச்சியான பயணம். திராவிடக் கருத்துக்கள் இல்லாமல் இந்த மக்களை ஆரிய மனோபாவத்திலிருந்து விடுவிக்க இயலாது என்பது என் கருத்து.

ஏதோ எதையும் படிக்காமல் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லா சித்தாந்தங்களையும் புரிந்துகொண்டுதான் படித்து அறிந்துதான் ஆதரிக்கிறேன்.

அவராம் ஏற்பட்ட மாற்றங்களைக் கொஞ்சமேனும் படிக்காமல் பலரும் விமர்சிப்பது அறிவீனமாகத் தோன்றுகிறது.

எல்லா சித்தாந்தங்களிலும் குறைகள் உண்டு. ஒரே சித்தாந்தம் மட்டுமே உலக மக்களுக்கு பயன் தரும் என்பது குறுகிய பார்வை.

ஒரே மருந்து எல்லா நோய்க்கும் தீர்வாகாது. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்து.

பெரியாரை எதிர்க்கிறவர்களிடம் ஆழ்ந்து கவனித்தால் ஆத்திகம் மறைந்திருக்கும். அதற்குப் பிற்பாடுதான் எதுவும்.

நாத்திகத்தை மார்க்சிய அறிவுடன் புரிந்துகொண்டால் மட்டுமே சாத்தியம்.

பெரியாரை எதிர்க்கும் எவரிடத்திலும் மக்களுக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் தியாகத்தையும் நான் காணவில்லை. யாரேனும் இருந்தால் சொல்லுங்கள்.

பெரியார் மீதான அனைத்து அவதூறுகளுக்கும் பதில் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அதை யாரும் தேடிப் படிப்பதாய் தெரியவில்லை. இருப்பினும் அவரை கேவலப்படுத்தும் மன நிலையிலேயே பலரும் இருக்கின்றனர். ஒன்றைப் படித்து புரிந்து பின்னர் விமர்சனம் செய்வதே அறிவுக்கு உகந்தது. இந்த அடிப்படை நாகரீகமே பலரிடம் இல்லை. பின்னர் இவர்கள் பேசும் பின்பற்றுவதம் யோக்கியதை எப்படி இருக்கும். பெரும்பாலோனோருக்கு தான் மட்டுமே அறிவாளி மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற எண்ணம்தான் மேலோங்கியுள்ளது வெளிப்படுகிறது. நான் தீவிர தமிழ் இன உணர்வாளன். ஆனால் தமிழனுக்கான அடிப்படை நாகரிகத்துடன் அதை வெளிப்படுத்துகிறேன். வெறும் இனவெறி உணர்வு மக்களுக்கு பயன் தராது. அது ஒரு இனத்தை தனிமைப்படுத்தும்.

நான் சொல்வதே சரி என்ற எண்ணம் எனக்குக் கிடையாது.  ஆனால் எல்லா கருத்துக்களையும் மரியாதையுடன் கவனிக்கிறேன்.

பலரும் மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள். கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் என்றால் என்னவென்பதை எத்தனைப்பேர் புரிந்துள்ளார்கள்? அதற்கு எதிர்ப்பாளர்களின் பதில் என்ன? வெறுமனே எதிர்ப்பு என்பதன் நோக்கம் என்ன?

மார்க்சை எத்தனைப்பேர் படித்துள்ளார்கள்? எங்கே எதனால் எதற்காக முரண்பாடு வந்தது என்று யாராவது கூறுகிறார்கள்? அதற்கு அவர்களின் பதில் என்ன?

ஒரு கருத்தை வெளிப்படுத்துமுன்னர் அதை ஏற்றுள்ளவர்களின் தனிப்பட்ட உளவியலைத் தாக்குவதே பெரும்பாலான அறிவுஜீவிகளின் தன்மையாக உள்ளது. இதனால் இம்மியளவும் கருத்துக்கள் பரவாது. முதலில் இந்த அடிப்படைத் தன்மையில் மாறுதலான அணுகுமுறை வேண்டும். மக்களின்பால் இயற்கையின்பால் ஆழ்ந்த அக்கறையுள்ள ஒருவரால் எப்படி ஒருவரைக் கேவலப்படுத்தும் மனநிலைக்குச் செல்ல முடியும்? அவர் காலத்தில் அவரால் முடிந்ததைச் செய்தார். நம்மால் இயன்றதை நாம் செய்வோம். உலகம் எல்லோருக்கும் பொதுவானது. மக்கள் முட்டாள்கள் இல்லை. தமக்குச் சரியெனப்பட்டால் மட்டுமே எதையும் ஏற்றுக்கொள்வார்கள். இன்னும் 95% பேருக்கு திராவிடச் சிந்தனைகளோ பெரியாரோ தெரியாது என்பதைக் கவனிக்கவும்.

திராவிடக் கட்சிகளின் மேல் எனக்குத் துளியும் அபிமானம் கிடையாது. கட்டாயம் இவைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

No comments:

Post a Comment