கடந்த 14ம் தேதி எனது பெரியப்பா ஒருவர் இயற்கை எய்தினார். அவரை எரியூட்டிய மறுநாள் அவரது சாம்பலை எடுத்துவைக்க புதுப் பானை ஒன்றை வாங்க பக்கத்து கிராமமான சுமைதாங்கிக்கு அவரது மகனும் நானும் சென்றோம். அப்போதுதான் ஒரு பானையை எப்படி செய்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.
எந்தவொரு பெரிய எந்திரங்களின் துணையும் மெத்தப் படிப்பின் தொழில்நுட்ப அறிவின் துணையுமின்றி ஏரி மண்ணும் சக்கரத்தையுமே கொண்டு எளிமையாக செய்கிறார்கள்.
முன்னொரு காலத்தில் எங்கள் ஊரிலும் பானை செய்யும் ஒரு குடும்பம் இருந்தது. ஊரில் நடக்கும் திருவிழாக்களுக்கான சாமி சிலைகளை இவர்கள்தான் மண்ணிலேயே செய்வார்கள். குறிப்பாக மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா நாளில் அம்மன் முகத்தை மட்டும் செய்திருப்பார்கள். பொழுது சாய்ந்ததும் ஊர் இளம்பெண்கள் கும்மியடித்து கொண்டாடுவார்கள். அந்தக் காலம் மலையேறிவிட்டது. நவீனம், எல்லா சமூகத்தின் சிறு சிறு அடையாளங்களையும் மகிழ்ச்சியையும் காவு வாங்கிக்கொண்டது.
எங்கள் குல தெய்வம் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி. ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா நடத்தி எல்லா சிறுவர்களுக்கும் காது குத்துவார்கள். தரையில் மல்லார்ந்து படுத்திருக்கும்படியாக ஒரு பெரிய பிரமாண்டமான அம்மன் உருவத்தை மண்ணிலேயே செய்வார்கள். பக்கத்து கிராமமான சுமைதாங்கியில் நாங்கள் பானை வாங்க வந்திருக்கும் இந்தக் குடும்பத்தின் முன்னோர்கள்தான் இதை தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறார்கள். அவர்கள் மண்ணைக்கூட்டிக் குழைத்து செய்யும்போது சிறுவர்களான நாங்கள் அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருப்போம்.
கிராமத்து தெய்வங்களின் வாகனங்களான யானை, குதிரை, நாய் போன்றவற்றை மண்ணால் செய்து கொண்டுவருவதும் இவர்கள்தான்.
வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களும் இளம்பிராயங்களிலேயே முடிந்துவிடுகிறது போலும். பெரும்பாலும் கடந்த கால நினைவுகளில்தான் எல்லோரும் மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி எதிர்காலத்தில் தன் தந்தையுடன் பானை செய்ய தான் உதவிய நினைவுகளை நினைத்துப் பார்க்கும் ஒரு சிறுவனின் படத்தையும் இதில் இணைத்துள்ளேன். மண்ணைக்குழைத்து அப்பா பானை செய்ய இந்த சிறுவன் அந்த சக்கரத்தை சுற்றிக்கொண்டிருந்தான். அருகில், விநாயகர் சதுர்த்திக்காக அவன் விளையாட செய்த சிறிய மண் பொம்மை சிலையும் அவனும்.
வாழ்க்கை மகிழ்ச்சியானது. மனம் மகிழ்ச்சிகளில் நிறைகிறது. வாழ்க்கை அப்போது மட்டுமே அர்த்தப்படுகிறது. மகிழ்ச்சி என்பது யாருக்கும் தொந்தரவு இல்லாதது.
சிறுவர்களின் உலகம் மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கிறது. உலகம் அவர்கள் மீது எதையெதையோ திணிக்கிறது.
ஈழத்துக் குழந்தைகளின் மீதும், சிரியாவின் குழந்தைகளின் மீதும் உலகம் பெரும் வன்முறையை நடத்தியது. எல்லாக் கடவுள்களின் அயோக்கியத்தனமும் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
உலகின் எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு தம்மால் இயன்ற ஒரு சிறிய உதவியாவது செய்பவர்கள், எதிர்கால வரலாற்றில் நிற்கிறார்கள்.
No comments:
Post a Comment