20.9.15

சங்ககாலம் - ஒரு மறுமதிப்பீடு

அய்யா தொ.பரமசிவம் அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரையை இன்று வாசித்தேன். 7 பக்கத்திற்குள் சங்க காலத்தையே 4 காலகட்டங்களாப் பிரித்து சுருக்கித் தந்துவிட்டார். இப்படியொரு தெளிந்த ஆழ்ந்த கட்டுரையைப் படித்ததில் பெரு மகிழ்ச்சி. இதைப் படிக்கும்வரையிலும் சங்க இலக்கிய காலம் பற்றி கருத்தில் பதிந்து கிடந்தவைகள் மறைந்துபோயின.

சங்க இலக்கிய கால வரிசை

01. பசியோடே போராடுபவர்களாக புலவர்கள்; பாணர்கள் வாழ்ந்த காலம்.

02. நிலவுடைமை வளர்ச்சிக்குப் பின்னர் அரசர்களுக்கும் குறுநிலத் தலைவர்களுக்கும் நெருங்கியவர்களாகவும் நிலக்கிழார்களாகவும் புலவர்கள் வாழ்ந்த காலம்.

03. வாணிகர்களின் செல்வாக்கில் வளர்ந்த மதங்களான சமணமும் பவுத்தமும் செல்வாக்குப் பெற்றிருந்த காலம்.

04. சமணத்தையும் பவுத்தத்தையும் வீழ்த்தி வேதப் பெருமை வேதியர் உயர்வு கூறிய செய்யுள்கள் இயற்றப்பட்ட காலம்.

இதன்படி இலக்கியங்களை கால வரிசைப் படுத்துவதே பல குழப்பங்களைத் தீர்க்கும் என்று கூறுகிறார்.

வேதச் சடங்குகளை மறுத்தும் எதிர்த்துமே பவுத்தமும் சமணமும் தோன்றியது. பவுத்த சமண வீழ்ச்சிக்குப் பின்னரும் மீண்டும் அதுவே மேலோங்குகிறது.

கி.மு. 4ம் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பெற்ற புத்தரின் தம்மபதப் பாடல்களின் தாக்கம் பல புறநானூற்றுப் பாடல்களில் உள்ளதாக மு.கு.ஜெகந்நாதராஜா என்பவர் "புறநானூற்றில் தம்மபதம்" என்றொரு நூலை வெளியிட்டுள்ளார்.

நமக்கு முன்னர் லட்சக்கணக்கான ஆண்டுகளாய் இந்த பூமியும், லட்சக்கணக்கான மனிதர்களும் இதில் வாழ்ந்து சென்றுள்ளனர். நமக்குப் பின்னரும் ஒரு நாள் லட்சக்கணக்கான வருடங்களைத் தாண்டியும் இந்த பூமி இருக்கும். நாம் வாழ்ந்துவிட்டுப் போனதற்கான தடயங்கள் அப்போது ஏதேனும் இருக்குமோ?

சங்க இலக்கியப் பாடல்களை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான உணர்வு எனக்கு வருகிறது. இன்று நான் வாழும் இதே கிராமம் முன்னர் எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன மாதிரி இருந்ததோ? யாரார் வசித்தார்களோ? எப்போது முதல் குடியேற்றம் நிகழ்ந்ததோ?

பாலாற்றிலிருந்து எங்கள் ஊர் ஏரிக்கு தண்ணீர் வர மகேந்திர வர்மப் பல்லவன் வெட்டிய அகன்ற கால்வாய் ஒன்று எங்கள் நிலத்தை ஒட்டியபடி மேற்காக இருக்கிறது. எங்கள் கிராமத்து முகப்பே அவ்வாய்க்காலின் கரையிலிருந்துதான் துவங்குகிறது. அந்த வாய்க்காலைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த மன்னன் இதை வந்து பார்வையிட்டிருப்பானா? அக்காலம் எப்படி இருந்திருக்கும்? கல்கி எழுதியதைவிட அவன் சாதுரியம் மிகுந்தவனாக இருந்திருப்பானா?

இதெல்லாம் இக்கட்டுரையில் இல்லை. ஆனால் ஒரு 7 பக்க சிறிய கட்டுரை இப்படியெல்லாம் நினைக்கத் தூண்டியது.

சமீபத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையைப் புரட்டிப் படித்தபோது தலை சுற்றியது. பொருளுரை படிக்காமல் புரிந்துகொள்ள வேண்டும் என எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. பழங்காலத்து தமிழர்களுடன் நிகழ்காலத்தை ஒப்பிடவே முடியவில்லை எதிலும்.

வசதிகள் எதுவுமற்ற அந்தக் காலத்தில் அவர்கள் அசாத்திய வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள். அதற்கு சாட்சியாய் இன்றைக்கு கிடைத்துள்ள; எஞ்சியுள்ள சான்றுகள் பலவும் ஒவ்வொருமுறையும் புருவத்தை உயர்த்துகிறது.

எல்லா வசதிகளும் நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்த நாளில் வாழ்க்கை எவ்வளவு போலியாய் நடந்துகொண்டிருக்கிறது..? ஏதாவது ஒன்றின்பேரால் தொடர்ந்து வன்மம் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது..?

அகத்திணைப் பாடல்களை வாசிக்கிறபோதெல்லாம் நாமும் இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாமோ என்ற எண்ணமும் வரத்தான் செய்கிறது.

வேறெந்த மொழியிலும் இப்படி இருக்கிறதா? தெரிந்தவர்கள் குறிப்பிட்டால் அறிய ஆவல்.

No comments:

Post a Comment